
மனம் கொத்திப் பறவை - 25
"என் 'தேகம்' பயங்கரமாம்!"
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்சியா மார்க்கேஸ்தான் மேஜிக்கல் ரியலிசம் என்ற இலக்கிய வகையைக் (genre) கண்டுபிடித்ததாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், லத்தீன் அமெரிக்காவில் மேஜிக்கல் ரியலிசத்தை மார்க்கேஸுக் கும் முன்னால் எழுதியவர்கள் பலர். முக்கிய மாக, கியூபாவைச் சேர்ந்த அலெஹோ கார்பெந்தியர் (Alejo Carpentier). ஆனால், மார்க்கேஸுக்கு நோபல் பரிசு கிடைத்துப் பிரபலமானதால், மேஜிக்கல் ரியலிசப் பெருமை அவருக்குப் போய்விட்டது. ஆனால், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் இந்தியரால் மேஜிக்கல் ரியலிசம் எழுதப்பட்டுவிட்டது என்று உலகுக்குத் தெரியுமா? தெரியாமல் போனதற்குக் காரணம் நாம்தான்!
நமக்கு, நம்முடைய பெருமையை வெள் ளைக்காரன் சொன்னால்தான் தெரிகிறது. அப்படியே நம்மில் யாராவது நமது பெருமை பற்றிச் சொல்லிவிட்டால், சுய தம்பட்டம் என்று சொல்லி, மண்டையில் அடித்து உட்காரவைத்துவிடுவார்கள். இந்தியனுக்குத் தன்னுடைய பெருமை தெரிந்திருந்தால், மேஜிக்கல் ரியலிசம் என்பது வியாசரின் கண்டுபிடிப்பாகவே உலகம் அறிந்திருக்கும். நல்லவேளை... யோகா, தியானம் போன்ற விஷயங்களில் இந்தியர்கள் விழிப்பாக இருந்தனர். இல்லாவிட்டால், அதுவும் ஜப்பானில் தோன்றியது, அமெரிக்கனின் கண்டுபிடிப்பு என்று போயிருக்கும்.

இப்போது மேஜிக்கல் ரியலிசத்தைப்போல் இன்னொரு இலக்கிய வகை உருவாகி உள்ளது. இதை உலகத்துக்கு வழங்கியது தமிழ்நாடு. ஆட்டோஃபிக்ஷன் (Autofiction) என்பது அதன் பெயர். சுயசரிதையை ஆட்டோபயாக்ரஃபி என்கிறோம். அது நிஜத்தை அடிப்படையாகக்கொண்டது. ஃபிக்ஷன் என்பது கற்பனை, புனைவு. ஆக, எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் நிஜம், புனைவு ஆகிய இரண்டையும் இணைத்து எழுதுவது ஆட்டோஃபிக்ஷன். உலக அளவிலேயே இது தமிழில்தான் முதலில் எழுதப்பட்டது. இதுபற்றிய செய்தி எகனாமிக் டைம்ஸின் அகில இந்தியப் பதிப்பில் பெரிய செய்தியாகவும், இதை எழுதியவரின் நீண்ட பேட்டியோடும் வந்தது. சென்னை, கேரள பதிப்புகளில் முதல் பக்கத்திலேயே ஏழு 'காலம்’ வந்தது. ஏழு 'காலம்’ என்பது ஒரு செய்தித்தாளின் இடது மூலையில் இருந்து வலது மூலை வரை. பொதுவாக பிரதம மந்திரி, நிதி மந்திரி போன்றவர்களின் பேட்டிதான் இப்படி வரும். இதே விஷயம், கேரள கௌமுதி என்ற தினசரி யிலும் பெரிய செய்தியாக அந்த எழுத்தாளரின் புகைப்படத்துடன் வந்தது. அமிர்தானந்த மயி எவ்வளவு பிரபலமானவர் என்று நமக்குத் தெரியும். அவருடைய புகைப்படத்தைவிடப் பெரிதாக அதே பக்கத்தில் அந்த எழுத்தாளரின் புகைப்படம் வந்திருந்தது.
அந்தத் தமிழ் எழுத்தாளரைப்போல் ஆட்டோஃபிக்ஷன் எழுதும் இன்னொருவரும் இருக்கிறார். ஃபிரான்ஸைச் சேர்ந்த செர்ஜி டுப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky). ஆனால், அவருடைய நாவல்கள் எதுவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததால், இப்போதைக்கு நான் குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளரின் ஆட்டோஃபிக்ஷன் மட்டும்தான், அந்தப் பெயரில் உலகில் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அதனால்தான், ஆங்கிலப் பத்திரிகைகள் உலகின் முதல் ஆட்டோஃபிக்ஷன் எழுத்தாளர் என்று அவரைப்பற்றி எழுதுகின்றன. அவர் யார் என்று எழுதத் தயங்குகிறேன். காரணம், சிலர் சுய புராணம் என்றுவிமர்சிப் பார்கள். இருந்தாலும், உலக இலக்கியத்துக்கு இது இந்தியாவின் கொடை என்று வட இந்தியர்கள் சொல்வதால், அதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய உரிமையும் பெருமையும் உள்ள தமிழர்களிடம் சொல்லி விடுகிறேன். அது அடியேன்தான்!
எனக்கு இது ஆச்சர்யமாகவே உள்ளது. வட இந்தியாவில் உள்ள அத்தனை ஆங்கில தினசரிகளிலும், வார இதழ்களிலும் என்னுடைய பேட்டி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகைகள் மட்டும் ஏன் கண்டுகொள்வது இல்லை? சென்னையைத் தலைமையகமாகக்கொண்ட ஓர் ஆங்கில தினசரி, சென்ற ஆண்டு ஒரு சர்வே எடுத்தது. இந்தியப் பெண்கள் விரும்பிப் படிக்கும் நாவல்கள் எவை என்பது சர்வே. சல்மான் ருஷ்டியின் 'Midnight's Children’, ஜும்ப்பா லஹரியின் 'Unaccustomed Earth’, உம்பர்த்தோ எக்கோவின் 'The Name of the Rose’. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு பரிச்சயமான பெயர், சாரு நிவேதிதாவின் 'Zero Degree’. நல்லது. ஆனால், இந்தப் பட்டியல் கோவை, பெங்களூரு பதிப் பில்தான் வந்ததே தவிர, சென்னை பதிப்பில் வரவில்லை. இதுதான் எனக்குப் புரியாத புதிர்!
இன்னோர் உதாரணம், என்னைப் பேட்டி காணும் வட இந்திய ஆங்கிலப் பத்திரிகைளின் நிருபர்களிடம், 'நீங்கள் எந்த மாநிலம்?’ என்று நான் கேட்பது வழக்கம். ஒருத்தர் பாக்கி இல்லாமல் கேரளா என்கிறார்கள். அந்தப் பத்திரிகைகளில் தமிழர்கள் யாருமே இல்லையா என்ன? இருக்கிறார்கள். ஆனால், பயன் இல்லை. காரணங்கள் இரண்டு.1.அவர்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களைப்பற்றி எதுவும் தெரியாது. 2.தெரிந்தாலும், 'எதற்கு இவனை எல்லாம் பெரிய ஆளாக ஆக்கிவிடணும்?’ என்ற நினைப்பு.
ஆனால், வங்காளிகளும் மலையாளிகளும் அப்படி இல்லை. சமீபத்தில் ஒரு சம்பவம். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அகில இந்தியச் சிறுகதைத் தொகுப்பு. 15 சிறுகதைகள் இருந்தன. வங்காளமும் கேரளமும் தலா மூன்று சிறுகதைகள். தமிழில் எதுவும் இல்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால், என்னுடைய வங்காளி சகா வருத்தப்பட்டார். 'வங்காளத் துக்கு எட்டு சிறுகதைகள் கொடுத்திருக்க வேண்டும்!’ என்று. 'அடப்பாவி... இது அகில இந்தியத் தொகுப்பு ஐயா!’ என்றேன். 'அதனால் என்ன? எட்டு சிறுகதைகள் வந்திருக்க வேண்டும்!’ என்று திரும்பத் திரும்ப வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தார். ஆனால், தமிழ் எழுத்தாளனுக்கு இதுபோல் பேச யார் இருக்கிறார்கள்?

பாரதியையும் தாகூரையும் ஒப்பிட்டு எழுதி இருந்தேன். பாரதியே தன்னுடைய சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால், அதுபற்றி வெளியே சொன்னவர் யார்? இன்று உலகமே கொண்டாடும் கவிஞனான பாப்லோ நெரூடா தன்னுடைய காதல் கவிதைகளை, தாகூரின் கவிதைகளைத் திருடி எழுதி விட்டார் என்று 1920-களில் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்தியாவில் அல்ல; சிலி தேசத்தில். இதில் இருந்து என்ன தெரிகிறது? இப்படி ஒரு சர்ச்சை எழும் அளவுக்கு தாகூரின் கவிதைகள் ஆங்கிலத்தில் கிடைத்திருக்கின்றன. அதுவும் உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் ஒரு தேசத்தில்!
என்னுடைய சமீபத்திய நாவலின் பெயர் என்ன என்று பல வாசகர்கள் கேட்டுள்ளனர். 'தேகம்’. வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை. பதிப்பாளருக்கு ஒரு வசதி இருக்கிறது. அது வசதியா, உபத்திரவமா என்பது சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் மாறும். எழுத்தாளனின் படைப்பை முதல் ஆளாகப் படிப்பவர் பதிப் பாளர். அதனால், என் பதிப்பாளரான மனுஷ்யபுத்திரனிடம் 'தேகம் எப்படி இருந்தது?’ என்று கேட்டேன். 'பயங்கரமா இருந்தது!’ என்றார். அட! ஆண்டவனே, இப்படியும் ஒரு பதிலா? பாவம் பதிப்பாளர்! புத்தகக் காட்சி வருகிறது. பல எழுத்தாளர்களின் பல்வேறு படைப்புகள் வெளிவரும். இன்னும் ஒரு மாதத்துக்குத் தன்னிடம் அபிப்பிரா யம் கேட்கும் அத்தனை எழுத்தாளர்களிடமும் அவர் இதே பதிலையே சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும்.
என் வீட்டு முகவரிக்கு, நெல்லையப்பன் என்ற வாசகரிடம் இருந்து ஓர் அன்பான கடிதம் வந்தது. அதில் அவருடைய மொபைல் எண் இருந்ததால், நன்றி சொல்லலாம் என்று அவர் கொடுத்திருந்த எண்ணுக்கு போன் செய்து, 'சார், நீங்கள் மிஸ்டர் நெல்லையப்பனா?’ என்று கேட் டேன். பதிலுக்கு, 'டேய், நீ யார்றா பேசுற?’ என்று மிரட்டலான குரல் வந்தது. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்கொண்டவன் என்பதால், 'ஸாரி சார்... மன்னிச்சுக்குங்க. தப்பான நம்பராப் போச்சுபோல இருக்கு. நான் நெல்லையப்பன் என்பவரிடம் பேச போன் செய்தேன்’ என்றேன். 'டேய், என்னடா வா போன்னு பேசுறே? யார்றா நீ? உன் பேர் என்னடா? எங்கே இருந்துடா பேசுற?’ என்று இன்னும் பல கேள்விகள் 'டா’ போட்டு வந்தன. நான் மறுபடியும், 'மன்னிச்சுக்கங்க சார். தப்பான நம்பராப்போச்சுபோல இருக்கு. மன்னிச்சுக்கங்க!’ என்றேன். 'நீ யார்றா. அதைச் சொல்லுடா முதல்ல? எந்த ஊர்டா நீ? நீ என்ன கலெக்டராடா? என்னமோ வா போன்னு மிரட்டுற?’ 'ஐயையோ... நான் மிரட்டலை சார்!’ என்று சொல்லி என் ஊர், பெயர், தொழில் எல்லாம் சொன்னேன். 'டேய், நீ ரைட்டர்னா கதை எளுதிக்கிட்டு போடா. நான் இன்ஸ்பெக்டர்டா. உன் நம்பர் என் போன்ல இருக்கு. உன்னை உள்ள தள்ளிருவேன்டா!’
இப்படியே, இதே தொனியில் தொடர்ந்து அவர் என்னை மிரட்ட, நான் 100 முறை மன்னிப்புக் கேட்டிருப்பேன். 10 நிமிடங்கள் தொடர்ந்தன அந்தப் பரேடு. சினிமாவில் வரும் வில்லன் போலீஸ், ஹீரோவைத் தலைகீழாகக் கட்டி அடிக்கும்போது, 'இதெல்லாம் என்ன நம்ப முடியாத கற்பனை!’ என்று நினைத்திருக்கிறேன். ஆனால், இன்று அதை நிஜத்தில் போனில் அனுபவித்தேன். நான் என்ன தவறு செய்தேன் என்றே புரியவில்லை. நாட்டில் யாருக்கும் ராங் நம்பரே போவதில்லையா என்ன? 10 நிமிடங்கள் தொடர்ந்து மன்னிப்பு கேட்டும், அவர் கடைசி வரை என்னை உள்ளே தள்ளுவதிலேயே இருந் தார். பிறகு, அந்த வாசகர் நெல்லையப்பனின் வீட்டு எண்ணுக்கு போன் செய்தால், அவர் அசால்டாக, 'ஸாரி சார்... என் லெட்டர் பேடில் இருந்த பழைய நம்பரை அடிக்க மறந்துபோனேன்’ என்றார். போலீஸ் துறையில் எப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் உதாரணம். எதிர்முனையில் இருந்து அழைத்தவர் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனாக இல்லாமல், ஒரு டி.ஜி.பி-யாக இருக்கலாம். முதலமைச்சரின் செயலாளராக இருக்கலாம். சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருக்கலாம். யாராகவும் இருக்கலாம் அல்லவா? அவர்கள் போன் செய்து இந்த இன்ஸ்பெக்டரின் எண்ணுக்கு ராங் கால் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறதே? அந்தப் பெயர் தெரியாத போலீஸ் இன்ஸ்பெக்டர், பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது!
புத்தகக் காட்சி வருகிறது. சென்ற ஆண்டு புத்தக விழாவை அவதானித்ததில், சில ஆலோச னைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். முதல் சங்கடம், பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடும் புத்தகக் காட்சி நடக்கும் இடம் குளிரூட் டப்பட்டு இருக்க வேண்டும். பார்வையாளர்கள் அத்தனை பேரும் வியர்வையில் குளிக்கிறார்கள். குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். அங்கு வந்துபோன மறுநாளே ஜுரத்தில் படுத்துவிடும் அளவுக்கு அரங்கம் சூடாக இருக்கிறது. கொல்கத்தாவில் நடக்கும் புத்தகக் காட்சியில் ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
புத்தகக் காட்சிக்கு வெளியே பொதுக் கூட்டத்தைப்போல் மேடைப் பேச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சமயங்களில் பட்டிமன்றமும் நடக்கிறது. வருடம் முழுவதும்தான் மேடைப் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறோமே! புத்தகக் காட்சியிலும் அது தேவையா?
இன்னோர் அக்கிரமமான விஷயம், கழிப்பறை. லட்சக்கணக்கில் மக்கள் வந்து போகும் விழாவில் கழிப்பறை வசதி சரியாக இருப்பது இல்லை. சென்ற ஆண்டு ஒருநாள் இரவு, சரியாகத் தண்ணீர் வசதி இல்லாமல் நாறிக்கொண்டு இருந்த கழிப்பறையில் மின்சாரமும் இல்லை. புத்தகக் காட்சி முழுவதும் மின்சாரம் இருக்க, கழிப்பறை மட்டும் கும்மிருட்டாக இருந்ததால், பலர் கழிப்பறையின் வாசலிலேயே சிறுநீர் கழிக்க, சிலர் அந்த அசிங்கத்திலேயே தட்டுத் தடுமாறி உள்ளே சென்று... கொடுமை!
புத்தகக் காட்சியில்

1,000-க்கு டிக்ஷனரியும், ராசி பலனும், குழந்தைகளின் பள்ளிக்கூடப் புத்தகங்களும் வாங்கிவிட்டு 'அஞ்ஞ்ஞ்சா...யிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கி யதாக’ப் பெருமை அடிக்கக் கூடாது.
நான் சில எழுத்தாளர்களைச் சிபாரிசு செய் கிறேன். சிறுகதை, நாவல்: இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், அசோகமித்திரன், லா.ச.ராமாமிர்தம், கரிச்சான் குஞ்சு, தஞ்சை பிரகாஷ், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ந.முத்துசாமி, அழகிய பெரியவன் (இவர் வசிக்கும் பேர்ணாம்பட்டுக்கு சென்னையில் இருந்து நடந்தே போய்ச் சந்திப்பேன் என்று ஒரு முறை எழுதியிருந்தேன். அந்த அளவு என்னைக்

கவர்ந்த எழுத்தாளர்), எம்.வி.வெங்கட்ராம், நகுலன் (என் குரு), கோபி கிருஷ்ணன், மனோஜ், ப.சிங்காரம், பிரபஞ்சன், கு.அழகிரிசாமி, ஷோபா சக்தி. இந்தப் பட்டியலில் இரண்டு எழுத்தாளர்களின் பெயர் இல்லை. காரணம், அவர்கள் என் சிபாரிசையும் தாண்டி யவர்கள். ஒருவர், சுஜாதா. இன்னொருவர்?
கவிதை: ஞானக்கூத்தன், ஆத்மாநாம், தேவதச்சன், தேவதேவன், பிரம்மராஜன், முகுந்த் நாகராஜன், இந்திரஜித், சுகுமாரன், விக்ரமாதித்யன், லட்சுமி மணிவண்ணன், என்.டி.ராஜ்குமார், சங்கர ராமசுப்ரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன். மனுஷ்ய புத்திர னின் 'இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்’ என்ற கவிதைத் தொகுதியும் வருகிறது. 300 பக்கங்களுக்கும் மேல். இவர் அளவுக்கு எழுதிக் குவிக்கும் ஒரு கவிஞனை இதுவரை நான் கண்டது இல்லை. அது மட்டுமல்லாமல்; கவிதை என்றால், ஏதோ புத்திஜீவிகளுக்கான விஷயம் என்று இருந்ததை இவர் கவிதைகள் மீறுகின்றன. நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல் எழுதுகிறார்!
- பறக்கும்...