Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 15

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

முறைப் பெண்கள்

'உடைந்த வளையல் துண்டு குளத்தில் எறிந்தேன் அடடே! எத்தனை வளையல்கள்!’
- கவிஞர் அறிவுமதி
ட்டிமன்றம் முடிந்து, பேச்சாளர்களும் கூட்டமும் கிளம்பிச் சென்ற பின், மேடை யில் இருந்த நாற்காலிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.

தலைமை நாற்காலி சொன்னது, ''நாம் இப்போது புதிதாக ஒரு பட்டிமன்றம் தொடங்குவோம். தலைப்பு... 'அன்பில் சிறந்தவர்கள் அத்தைப் பெண்களா? மாமா பெண்களா?''

ஏற்கெனவே இரு அணிகளாகப் பிரிந்து இருந்த நாற்காலிகளில் முதல் அணியைச் சேர்ந்த நாற்காலி தன் வாதத்தை ஆரம்பித்தது...

''தலைவர் அவர்களே! 'தலை’ 'மை’ நரைத்ததால்தான் நீங்கள் 'தலைமை’ப் பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள்.''

அரங்கில் இருந்த காலி நாற்காலிகள் கை தட்ட, தலைமை நாற்காலி இடைமறித்துச் சொன்னது.

''இது சுத்த நரை அல்ல, பித்த நரை'' காலி நாற்காலிகள் மீண்டும் கை தட்டின.

முதல் அணி நாற்காலி தொடர்ந்தது...

அணிலாடும் முன்றில்! - 15

''அது பித்த நரையோ, மத்த நரையோ... உங்கள் பேரனுக்கும் உங்களுக்கும் ஒரே வயதென்று கேள்வி.''

இப்போது மீண்டும் தலைமை நாற்காலி சொன்னது...

''இல்லை, இல்லை... என் பேரன் என்னை விட இரண்டு வயது பெரியவன்.''

கை தட்டுவதற்காகவே காத்திருந்த காலி நாற்காலிகள் கை தட்டி ஆர்ப்பரிக்க, முதல் அணி நாற்காலி சிரிப்புடன் சொன்னது;

''ஒப்புக்கொள்கிறேன் நடுவர் அவர்களே, உங்கள் தலைமை இது இளமை. நீங்கள் நடந்தால் நடனம்; பேசினால் புதினம்; எங்கள் அணிக்கு எதிராக நீங்கள் தீர்ப்பு சொன்னால், நடக்கும் கலகம்.''

காலி நாற்காலிகள் விசில் அடிக்க... தலைமை நாற்காலி மீண்டும் இடைமறித்துச் சொன்னது, ''அதனால்தான் நான் இந்த வாரம் முழுக்க விரதம். மௌன விரதம்!''

விசில் சத்தம் கூரையைப் பிளந்தது. அது பிளந்த இடைவெளியில், கூரைக்கு மேலே பறந்த இரண்டு பறவைகள் உள்ளே வந்து ஆர்வமாகக் கவனிக்க ஆரம்பித்தன.

முதல் அணி நாற்காலி கீழே குனிந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துவிட்டுத் தொடர்ந்தது, ''நடுவர் அவர்களே... அன்பில் பெரிதும் சிறந்தவர்கள் அத்தைப் பெண்களே. அத்தை என்பவர் தந்தையின் உதிரத் தொடர்ச்சி. அத்தைப் பெண், வம்சத்தின் தொடர்ச்சி.'' நடுவர் நாற்காலி இடைபுகுந்து, ''மகிழ்ச்சி மகிழ்ச்சி!'' என்றது.

''அதனால்தான் நடுவர் அவர்களே, சினிமா கவிஞர்கள்கூட அத்தைப் பெண்ணைப்பற்றி அத்தனைப் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். யாருமே மாமன் மகளைப்பற்றி எழுதவே இல்லை.''

''அவர்களுக்கு மாமா பெண்கள் இல்லாமல் இருக்கலாம்'' என்று நடுவர் நாற்காலி சொல்ல, அரங்கம் அதிர்ந்தது. ரிக்டர் அளவுகோலில் கணக்கிட்டால், அந்த அதிர்வு சுனாமிக்கு முந்தைய பூகம்பமாகக்கூட இருக்கக் கூடும். முதல் அணி நாற்காலி, இப்போது இலக்கியத் தமிழில் இருந்து பாமரத் தமிழுக்கு இறங்கி வந்தது.

''எனக்கெல்லாம் ஒரு அத்தைப் பெண்ணு இருந்தா... அம்புட்டு அழகு. என்னைத்தான் கட்டிக்குவேன்னு சொல்வா. சின்ன வயசில இருந்து, அவளுக்கு நானு... எனக்கு அவனு வளர்ந்தோம்'' என்று சொல்ல...

''அப்படி வாங்கய்யா கதைக்கு'' என்று நடுவர் நாற்காலி எடுத்துவிட, அரங்கம் இப்போது கூரையையும் பிளக்காமல் அதிரவும் செய்யாமல் புன்னகைத்தது.

''அஞ்சாப்பு படிக்கையில அப்பா - அம்மா விளையாட்டு விளையாடுவோம். அந்தப் புள்ள சொப்பு வெச்சி சமைக்கும். நான் ஆபீஸ் போய்ட்டு வருவேன். மண்ணும் கல்லுமா சோத்தைப் பிணைஞ்சி ஊட்டிவிடும் பாருங்க... அதுக்கப்புறம் அந்த மாதிரி ருசியான சாப்பாட்டை இன்ன வரைக்கும் நான் சாப்பிட்டதே இல்ல.''

''அபாரம்... அபாரம்!'' என்றது நடுவர் நாற்காலி.

''நான் பரீட்சைக்குப் படிக்கும்போது, தேத்தண்ணி வெச்சிக் குடுக்கும். எங்க மாமா சட்டையை நான்தான் தொவைப்பேன்னு அடம்புடிக்கும். அந்தக் காலம் திரும்பி வராதய்யா.''

அரங்கம் தங்கள் நினைவுகளில் மூழ்கிக்கொண்டு இருந்தது.

''உம்... சொல்லுங்க சொல்லுங்க, அப்புறம் என்னாச்சி?'' என்றது தலைமை.

''படிச்சி முடிச்சி வேலை கெடச்சதும், அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தைக் காலில் நின்னேன். சொந்தத்துல கல்யாணம் பண்ணா, பொறக்குற கொழந்தைக்கு ரத்த சம்பந்தமான நோய் வரும்னு வீட்டுல மறுத்துட்டாங்க.''

''அது நெசம்தான்யா... விஞ்ஞானம் சொல்லுது'' என்றது தலைமை.

''விஞ்ஞானம் ஆயிரம் சொல்லும். மனசு கேக்கலை. அந்தப் புள்ளகிட்ட 'எங்கயாவது ஓடிப் போயி, இட்லிக் கடை போட்டுப் பொழைக்கலாம்’னு சொன்னேன். அதுக்கு அது சொல்லிச்சி, 'மாமா... எனக்குப் பொறக்குற குழந்தை நல்லா இல்லன்னாக்கூட பரவாயில்லை. உங்க வம்சம் தழைக்கணும். வேற பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்குங்க’னு சொல்லிட்டு, ரொம்ப நேரம் அழுதுக்கிட்டே இருந்துச்சி.''

அரங்கில் இருந்த நாற்காலிகள் எல்லாம் இந்தக் கதையைக் கேட்டு ஈரமாக, முதல் நாற்காலி தொடர்ந்தது.

''இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே... அன்பில் சிறந்தவங்க அத்தைப் பொண்ணுங்கதானே?''

''உண்மைதான்யா. எதுக்கும் எதிர் அணி விவாதத்தையும் கேட்போம். மாமா பெண்களே அன்பில் சிறந்தவர்கள்னு பேச... பேச்சுப் புலி பிரம்பு நாற்காலியை அழைக்கிறேன்'' என்று தலைமை சொல்ல, எதிர் அணி பிரம்பு நாற்காலி எழுந்தது.

''நடுவர் அவர்களே... அத்தைப் பெண்களைப்பற்றி ஆயிரம் பாட்டு வந்தாலும், எங்க அணியைப்பற்றி சொல்ல ஒரு பாட்டு போதும்... 'மாமா உன் பொண்ணைக் கொடு, ஆமா... சொல்லிப்புடு!’ '' என்று கரகரப்பான குரலில் பாடிக்காட்ட, அரங்கம் கலகலப்பானது.

''சபாஷ்... சரியான போட்டி'' என்றது தலைமை.

''தலைவர் அவர்களே... 'மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே? அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே?’ என்று ஒரு தாலாட்டுப் பாட்டே நம்மிடையே இருக்கிறது. அத்தை வழி உறவுகளைவிட, மாமன் வழி உறவுகளையே இது முன்னிலைப்படுத்துகிறது. நம் சமூகம் தாய் வழிச் சமூகம். ஆகையால், மாமன் மகள்களே அன்பில் சிறந்தவர்கள்'' என்று பிரம்பு நாற்காலி வாதிட,

அணிலாடும் முன்றில்! - 15

''இதுகூட நல்லாத்தான்யா இருக்கு'' என்று தலையாட்டியது தலைமை.

''நடுவர் அவர்களே... எதிர்க் கட்சிப் பேச்சாளர் மட்டும்தான் கதை சொல்வாரா? நானும் சொல்கிறேன். எனக்கும் ஒரு மாமா பொண்ணு இருந்தாய்யா...'' என்று பிரம்பு நாற்காலி ஆரம்பிக்க,

''அப்படிப் போடு!'' என்றது தலைமை. கதை கேட்க, காது மடல்களை விரிக்கத் தொடங்கின நாற்காலிகள்.

''சொப்பு விளையாடுவாங்க ளாம்... அந்தம்மா ஊட்டிவிடுமாம். என்னய்யா வெறும் மண்ணுச் சோறு. எனக்கு மீன் கொழம்பு ரொம்பப் பிடிக்கும்னு, பத்து வயசிலயே மீன் சமைக்கக் கத்துக்கிட்டாய்யா என் மாமா பொண்ணு.''

''பலே... பலே!'' என்றது தலைமை.

''மீனைக் கடையில போயி வாங்க மாட்டா. அவளே ஆத்துக்குப் போயி புடிச்சுட்டு வருவா. முள் இல்லாம அவ மீனோட சதையை மட்டும் எடுத்துக் கொடுக்கக் கொடுக்க... நான் ருசிக்க ருசிக்க... அதுதான்யா சொர்க்கம்!''

அரங்கின் நாற்காலிகள், ''அடடா... அடடா!'' என்று கை தட்டிக்கொண்டு இருந்தன.

''என்னய்யா, ரத்த சம்பந்தமான நோய் வரும். சயின்ஸு சொல்லுதுன்னு பயமுறுத்தறீங்க. எனக்கு நீ கொழந்தை... உனக்கு நான் கொழந்தைன்னு வாழ வேண்டியதுதானே!'' என்று உணர்ச்சிவசப்பட்ட பிரம்பு நாற்காலி, பின்பு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு...

''அம்புட்டுப் பிரியமா இருந்த அந்தப் புள்ளைய எனக்குக் கட்டிவைக்கல. பொருளாதார ஏற்றத்தாழ்வைக்

காரணமாக் காட்டிப் பிரிச்சிவெச்சிட்டாங்க. அந்தப் புள்ள அதைத் தாங்காம, தற்கொலை பண்ணிக்கிடுச்சி. இன்னிக்கும் என் பொண்டாட்டிய நான் தொடும்போதெல்லாம், அந்தப் புள்ளகிட்ட மன்னிப்பு கேட்டுட்டுதான் தொடுறேன்'' என்று பிரம்பு நாற்காலி தன் கண்ணீரைத் துடைக்க, அரங்கம் முழுக்க அழுதுகொண்டு இருந்தது.

தலைமை நாற்காலி தன் தீர்ப்பைச் சொல்ல வந்தது... ''அன்பில் சிறந்தவர்கள் அத்தைப் பெண்கள், மாமா பெண்கள் இருவருமே என்றுதான் நான் சொல்ல நினைத்தேன், இப்போது குழப்பமாக இருக்கிறது. ஆகையால், இந்தத் தீர்ப்பைப் பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறேன்'' என்று சொல்லி முடிக்க, தங்களது தீர்ப்பை மனதில் சுமந்தபடியே பார்வையாளர்களாக இருந்த நாற்காலிகள் நகரத் தொடங்கின!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan