
உயிர் மொழி - 21
பெண்ணைத் தாண்டி வருவாயா?
##~## |

இயற்கையின் பொது விதி... ஆண்தான் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட வேண்டும். அதனால், இயல்பிலேயே ஆண்களுக்குத் தொலை தூரம் துணை தேடிப் போகும் தன்மை உண்டு. இன்றும்கூட இள வட்ட ஆண்கள் வயசுக்கு வந்துவிட்டால், ஏதாவது வண்டி பிடித்து, அக்கம்பக்கத்து ஊர்களுக்குப் போய், அங்கு இருக்கும் பெண்களை எல்லாம் தரிசித்துவிட்டு வருவதை ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். இதற்காகவே ஆணின் மூளையில் தூரம், திசை ஆகியவற்றை எடைபோட வல்ல பிரத்யேக மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் பெண் மூளையில் அவ்வளவு வலிமையாக இருப்பது இல்லை. அதனால்தான், இன்றும்கூடப் பெண்களால் திறந்த வெளிகளில் திக்குதிசை அனுமானிக்க முடிவது இல்லை. ஏதாவது நிலக் குறிகள் (landmarks) இருந்தால் அவற்றைவைத்து இடங்களை அடையாளம் கண்டுகொள்ள முயல்கிறார்கள் பெண்கள். இப்படி இயற்கை, துணை தேடலுக்காக ஆண்களுக்கு இயல்பாக அருளிய இந்த மூளை மையத்தைத்தான், ஆண்கள் மிக சாமர்த் தியமாக இரை தேடவும் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். போகப் போக, இதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மாறினார்கள்.
இயற்கையின் அமைப்பில் ஆண்களின் மூளைக்கு 'உருவம் அறிந்து பொருத்தும் தன்மை’ stereognosis உண்டு. கலவியின்போது பெண் பெரிதாக மூளையைப் பயன்படுத்த வேண்டி இருப்பது இல்லை. சும்மா வெறுமனே அசையாமல் இருந்தாலே போதும். ஆனால், ஆணின் பணியோ ரொம்பவே நுணுக்கமானது. உடல் பாகங்களை மிகச் சரியாக ஒருங்கிணைத்துப் பொருத்தினால் ஒழிய, இனவிருத்தி ஏற்படாது. ஆக, ஒரு ஜீவராசி தழைப்பதும், சுவடே இல்லா மல் மரிப்பதும் ஆணின் ஸ்டீரியோகுனோஸிஸ் என்கிற இந்தத் திறமையைப் பொருத்ததே. அதனால், ஆணின் மூளைக்கு மட்டும் இப்படி உருவங்களை உணரும் பிரத்யேக மையத்தை இயற்கை அமைத்து இருக்கிறது. குரங்காக இருந்த போது, இந்த மையத்தை வெறுமனே துணை சேர்க்கைக்காகப் பயன்படுத்தியவன், மனிதனாக மாறி மாமிச வேட்டைக்குப் போகும்போது, இதே மையத்தை ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்த ஆரம்பித்தான். இதனால், மனித குலமே கூடுதல் பிழைக்கும் திறனைப் பெற்றது.

ஆனாலும், வேட்டைக்கு உண்டான குறி பார்த்தல், வேகம் உணர்தல், திட்டமிட்டு கூடி வேட்டையாடுதல், சமிக்ஞையின் மூலமாக இரைக்குத் தெரியாமல் உரையாடிக்கொள்ளுதல் என்பது மாதிரியான மற்ற மையங்கள், ஆணின் மூளையில் இருந்திருக்கவில்லை. இந்த மையங்கள் இல்லாமல், வேட்டையாடவும் முடியாது. இதற் காகப் புதுப் புது மையங்களை மூளையில் உரு வாக்கினாலோ, மூளையின் சுற்றளவு பெரிதாகி விடும். மூளையின் சுற்றளவு பெரிதாகிவிட்டால், மனிதப் பெண்ணின் இடுப்பு வழியாக இந்தப் பெரிய தலையைப் பிரசவிப்பது பெரும்பாடாகி விடும். இதுவே பெரிய இக்கட்டானது. மூளையில் புது மையங்களும் வேண்டும். அதே நேரம், மூளையின் மொத்த சுற்றளவும் பெரிதாகாமல் பிரசவத்துக்குத் தோதான அளவிலேயே இருக்க வேண்டும். அதற்கும் ஒரு வழியைக் கண்டு பிடித்தன ஆணின் மரபணுக்கள்.
பேச்சுக்கு உண்டான மையத்தை ஒரு வேட்டுவன் ரொம்பவும் பயன்படுத்த முடியாது. அவன் பல நாட்கள் அமைதியாகப் பதுங்கி இருந்துதான் வேட்டையாடவே செய்வான். ஆக, எப்படியும் பேச்சு அவனுக்கு உதவப்போவது இல்லை. அடுத்து, முகத்தைப் பார்த்து உணர்வைப் புரிந்துகொள்ளும் மையமும் வேட்டையின்போது ரொம்பவும் தேவைப்படாது. அப்புறம், இவன் பாட்டுக்கு 'ஐயோ பாவம், அந்தக் குட்டி மான்’ என்று முகம் பார்த்து உருக ஆரம்பித்துவிட்டால், வேட்டையைக் கோட்டை விட்டுவிடுவான். அதனால், இந்த முகத்தைப் பார்த்து ஃபீல் செய்யும் மையமும் அவனுக்கு அவ்வளவாகத் தேவைப்படவில்லை. ஒரே சமயத்தில், பல விஷயங்களைப் போட்டு மனதில் உழப்பிக்கொண்டே இருந்தாலும், அவனால் வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. அதனால், multi tasking மையமும் ஒரு வேட்டுவனுக்குத் தேவை இல்லை. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், மொழி மையம், முகபாவத்தைக் கிரகிக்கும் மையம், பல விஷயங்களை ஒரே சமயத்தில் ஒருங்கிணைத்து யோசிக்கும் மையம் ஆகியவை எல்லாம் வேட்டைக்குத் தேவைப்படவில்லை. அதனால், இந்தமையங் களுக்காக அதுவரை ஒதுக்கிய இடத்தைப் பெரும்பாலும் காலி செய்துவிட்டு, வேட்டைக்கு வேண்டிய புதிய தேர்ச்சிகளை வெற்றிடங்களில் நிரப்பின ஆண்களின் மர பணுக்கள்.

இந்த மாற்றங்களினால், மனித ஆண் கை தேர்ந்த வேட்டுவன் ஆனான். ஆனால், அதற்கு மேல் பெண்களின் மனதையோ, முக பாவத்தையோ புரிந்துகொண்டு இனிமையாகப் பேசும் தன்மையை அவன் இழந்துவிட்டான். இரை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரே இலக்கைத் துரத்திக்கொண்டு போய், தவமாய்த் தவம் கிடந்து, அதில் பெரிய சுவாரஸ்யம் உணரும் விசித்திரமான குணத்தையும் பெற்றான். அதனால், ஆண் - பெண் என்கிற இந்த இரண்டு பாலினத் துக்கும் பெரிய மன இடைவெளி உருவாக ஆரம்பித்தது. அதற்கு மேல் ஒருவரை மற்றவர் புரிந்துகொள்ளுவது கடினமாகிவிட்டது. ஆனால், புரிந்துகொள்வதைவிட, பிழைத்துக்கொள்ளுதல் அந்தக் காலத்தில் முக்கியமாகப்பட்டதால், ஆணின் மூளை மாற்றங்களைப் பெண்கள் சட்டை செய்யவில்லை.
உணவு கொண்டுவரும் வரை எல்லாமே ஷேமம்தான் என்று இருந்துவிட்டார்கள். ஆனால், போகப் போக ஆணின் மூளை மாற்றத்தினால் பல பிரச்னைகள் தலை தூக்க ஆரம்பித்தன. அவற்றைப்பற்றி...
(காத்திருங்கள்...)