மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 33

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்

ஒரு கதையின் கதை

##~##

ன்று அல்லது ஒன்றரைப் பக்கம் இருக்கும்; அவ்வளவுதான் அந்தச் சிறுகதை.

ஒரு வார இதழில் வந்திருந்தது. படித்தவுடன் நான் பிரமித்துப்போனேன்.

கதைக் கரு என்னவோ கடுகளவுதான்; ஆனால், அதை விசும்பளவு விரித்து  நாடகம் போடலாம்; பிறகு, படமாகவும் ஆக்கலாம்!

ஆக - அது ஓர் ஆலம் விதை என்பதை அறிந்துகொண்டு -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 33

அந்தச் சிறுகதையைச் சட்டரீதியாக விலைக்கு வாங்கி -

நாடகமாக்கம் செய்துகொள்ளலாம் என்று அதன் ஆசிரியர் யாரென அறிய -

அந்த வார இதழின் அலுவலகத்திற்குச் சென்றேன்; அது சென்னையில்தான் இருந்தது.

போய்ப் பார்த்தால் -

அந்தச் சிறுகதையின் ஆசிரியரே, அது வெளியாகியிருந்த அந்த வார இதழின் உதவியாசிரியராகவும் இருந்தார்.

அந்தச் சிறுகதை அவரது இயற்பெயரில் வராமல் - அவரது புனைபெயரில் வந்திருந்தது!

'என்னுடைய கதைல அப்படி என்ன இருக்கு? ரொம்பச் சின்ன மேட்டர்; அதெ எப்படி நாடகமாப் போட முடியும்? என்னதான் - இழு, இழூன்னு இழுத்தாலும், கால் மணிக்கு மேலே தாங்காது; அதெ எப்படி - இரண்டு மணி நேர நாடகமா?’

- வியப்பு மேலிட என்னை வினவினார், அந்தக் கதாசிரியர்.

'சார்! நான் சினிமாக்காரன்; ஒரு சின்னப் பொறியை, ஊதிக் கனல் வளர்க்கத் தெரியும்! உங்க கதேல அந்தப் பொறி இருக்கு; ஒரு தீக்குச்சி போதும் சார், தீவட்டியை உருவாக்க!

நான் இதெ நாடகமாக்கிக் காட்டறேன்; அரங்கேற்றத்தன்னிக்கு உங்களை அழைக்கிறேன்... வந்து பாத்துட்டுச் சொல்லுங்க!

இந்தக் கதைக்கு உங்களுக்கு என்ன தரணும்? அதைச் சொன்னீங்கன்னா -

நாளைக்கு AGREEMENT  எழுதி எடுத்துக்கிட்டு வர்றேன்!’

- ஒரே மூச்சில் நான் மேற்கண்ட விஷயம் பூராவும் சொல்லி முடித்தேன்.

'SHORT STORY அதுவும் ஒண்ணரைப் பக்கக் கதை! இதுக்கு நான் என்னன்னு கேக்கறது? நீங்க நாடகம் போடறேன்னு சொன்னதே எனக்குப் பெரிய சன்மானம் தந்த மாதிரி!’ என்றார் அவர்.

'அப்படியில்ல சார்! இதன் உரிமையை நான் உரிய விலை கொடுத்து வாங்கறதுதான் மரியாதெ!’ - என்று நான் வற்புறுத்தியதும் -

'சார்! நீங்க என்ன கொடுத்தாலும் நான் வாங்கிக்கறேன்!’ என்றார் அவர்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 33

அவர் வீட்டு விலாசத்தை வாங்கிக்கொண்டு, 'நாளைக்கு வருகிறேன் சார்!’ என்று நான் புறப்பட யத்தனிக்கையில் -

'எங்க ஆசிரியரை - உங்களுக்குப் பரிச்சயம் உண்டா?’ என்று அவர் கேட்க -

'இல்லை’ என்றேன்; 'வாங்க! அறிமுகப்படுத்திவைக்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு -

என்னை,  EDITOR   இருக்கும் அறைக்குள் அழைத்துப்போனார், உதவி ஆசிரியர்.

EDITOR, என்னை மிகுந்த வாஞ்சையோடு வரவேற்று, எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.

'நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் இப்பதான் பாக்கறேன்!’ என்றார் அவர்.

'நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்; இப்பதான் பாக்கறேன்!’ என்றேன் நான்.

பிறகு, காபி வந்தது. பருகியவாறே அவரோடு பல விஷயங்களைப் பேசினேன்-

'அழகன் முருகனிடம்
ஆசை வைத்தேன்; அவன்
ஆலயத்தில் அன்புமலர்
பூசை வைத்தேன்!’

- இந்தப் பாட்டை வெகுவாக சிலாகித்துப் பேசினார்; தனக்கு மிகவும் பிடித்த பாட்டு என்று சொல்லி - முதல் இரண்டு வரிகளை மெல்ல முனகினார்.

பிறகு - '' 'திலங்’தானே?'' என்றார்.

'ஆமாம்!’ என்றேன். அவர், சினிமாவின் எல்லாக் கூறுகளையும் தெரிந்துவைத்துக்கொண்டு பேசியது எனக்குப் பிரமிப்பூட்டியது.

'வாலி சார்! ஒரு விஷயம் உங்ககிட்ட கேட்கப்போறேன். நீங்க - உங்க கருத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லணும்’ என்ற பீடிகையோடு அவர் பேசலானார்:

'நாங்க - எங்க பத்திரிகையிலே அவ்வப்போ வெளியாகிற படங்களைப்பற்றி விமர்சனம் எழுதறோம்; அந்த விமர்சனங்கள் - படத்தினுடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதா? உதாரணமா - உங்க பாட்டுகளையே எடுத்துக்கங்களேன்! ஒரு படத்துல - உங்க பாட்டுகள் மிகமிக மோசம் என்று எழுத நேருகிறது; இன்னொரு படத்துல - பாட்டு வரிகள் பிரமாதம்னு எழுத நேருகிறது!

- இப்படி எழுதறதெல்லாம் - உங்க பிராபல்யத்தைப் பாதிக்கிறது உண்டா?’-

EDITOR  என்னை இப்படிக் கேட்டதும்,

''சார்! உண்மையைச் சொன்னா - எந்தப் பத்திரிகையினுடைய எந்தப் பட விமர்சனமும் - எந்தப் படத்தையும் எந்த வகையிலயும் பாதிக்கறதில்லே! இதுதான் - COLOSSAL FACT! வாசகர்கள் பத்திரிகையில் வருகிற பட விமர்சனங்களைப் படித்துவிட்டு - படம் பார்க்க வருகிறதோ அல்லது வராமல் புறக்கணிக்கிறதோ நிகழலாம்; ஆனா - அது - ரொம்ப NEGLIGIBLE PERCENTAGE!

அந்தக் காலத்தில் - 'நாடோடி மன்ன’னை- 'கோமாளி மன்னன்’ என்று ஒரு தினசரிப் பத்திரிகை தொடர்ந்து தாக்கியது; ஆனா, அது எள் முனையளவுகூட எடுபடவில்லை. படம் பெரிய ஹிட்!

அதேமாதிரி - என்னுடைய பாட்டைப்பத்தி நீங்க எழுதறப்போ -

'வாலியின் பாட்டுகள், காது கொடுத்துக் கேட்க முடியவில்லை!’ என்று நீங்கள் எழுதினாலும் - என்னைக் கூப்பிடும் தயாரிப்பாளர்கள், கூப்பிடுவதை நிறுத்த மாட்டார்கள்.

'வாலியின் பாடல்களைப் பார்க்கையில் - அவர் இன்னொரு கம்பர் மாதிரி!’ என்று நீங்கள் எழுதினாலும் - என்னைக் கூப்பிட விரும்பாத தயாரிப்பாளர்கள், கூப்பிட மாட்டார்கள்.

அவர்களுடைய அளவுகோலெல்லாம் - உங்கள் விமர்சனங்களல்ல; பொதுமக்களிடையே என் பாட்டுக்கு ஏற்படும் வரவேற்பும், நிராகரிப்பும்தான்!'' என்று நீண்ட உரை நிகழ்த்தினேன்.

'என் கருத்தும் அதுதான்!’ என்று அவர் எனக்குக் கை கொடுத்தார்; அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நான் வீடு திரும்பினேன்.

றுநாள் சொன்னபடி, அந்த உதவிஆசிரியர் வீட்டுக்குச் சென்று, முறையாக AGREEMENT போட்டுப் பணமும் கொடுத்துவிட்டு வந்து -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 33

அந்தக் கதையை நாடகமாகப் போட்டேன். திரு.வி.எஸ்.ராகவன்; திரு.ஸ்ரீகாந்த் - இருவரும் அற்புதமாக நடித்தார்கள்.

MUSIC ACADEMY-ல் நாடகம் நடக்கும்போது,

அதை திரு.கே.பாலசந்தர், 'பிரேமாலயா வெங்கட்ராமன்’ அவர்களுக்காகப் படம் பண்ணும் உரிமையை என்னிடம் இருந்து வாங்கினார்.

அது பல்வேறு காரணங்களால் படமாகாது போனது!

பிறகு - திரு.ஏவி.எம்.ராஜன் அவர்களும் திருமதி புஷ்பலதா ராஜன் அவர்களும் -

திரு.ரஜினிகாந்த்தை வைத்துப் படம்எடுக்க அந்தக் கதையைக் கேட்டார்கள்.

'பிரேமாலயா’திரு.வெங்கட்ராமனிடம்இருந்து அதன் உரிமையை வாங்கி திரு.ஏவி.எம்.ராஜனுக்குக் கொடுத்தேன்.

ரஜினி அவர்கள் - சில காலம் முழங்கால் மூட்டு வலி காரணமாக - விஜயா நர்சிங் ஹோமில் இருக்க நேர்ந்ததால் -

படப்பிடிப்பு தள்ளிப்போனது. திரு.கே.விஜயன்தான் இயக்குநர்.

அனேகமாக - படம் கை விடப்பட்ட நிலையில், அதை ஒரு பட நிறுவனத்தார் என்னிடம் அதன் கதை, உரையாடல் சிலவற்றையெல்லாம் கேட்டுவிட்டு -

'நாங்கள் எடுக்கிறோம்; எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்!’ என்று கேட்க -

நான் திரு.ஏவி.எம்.ராஜனிடமிருந்து கதையை வாங்கி, அந்தப் பட நிறுவனத்திற்குக் கொடுத்தேன்.

கதை -

தந்தை, மகனைப் பற்றியது. தந்தை, மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். மகனோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், தந்தையின் மனம் புண்படும்படி நடந்து - அவரை அவமானப்படுத்துகிறான்.

அப்படியிருப்பினும்,

தந்தையானவர் - மகன் உடம்பில் ஈ மொய்த்தாலும், தன் கண்ணில் தீ மொய்த்தாற் போல் துடிக்குமளவு பாசத்தை மகன் மேல் பொழிகிறார்.

இறுதியில் ஒரு HEATED ARGUMENT  தந்தைக்கும் மகனுக்கும் நடக்க -

எதிர்பாராத விதமாக, மகனின் கிரிக்கெட் மட்டையால் தந்தை தாக்கப்பட்டு இறக்கிறார்.

இப்படிப் போகிறது என் கதை. நாடகத்திற்கு, நான் வைத்திருந்த பெயர் - 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி’; சென்னையில் எல்லா சபாக்களிலும் வெற்றிகரமாக நடந்தது.

தந்தையாக திரு.வி.எஸ்.ராகவனும்; மகனாக திரு.ஸ்ரீகாந்தும் - அற்புதமாக நடித்து அவையோரின் கரகோஷ மழையில் நனைந்தார்கள்!

றுதியாக இந்தக் கதையைப் படமெடுக்க முனைந்தவர்கள்.

அதை, உரையாடல்களோடு, அவர்களது குடும்பப் பெரியவருக்கு, நான் படித்துக் காட்ட வேண்டும் என்று விரும்பினார்கள்.

நான் - அதற்கு  ஒப்புக்கொண்டு - அந்தப் பெரியவரிடம், இரண்டு மாலை நேரங்களில் தொடர்ந்து என் உரையாடல்களை வாசித்துக் காண்பித்தேன்.

அவர், அதைக் கேட்டுவிட்டு - அட்வான்ஸ் தொகையை அவர் கையாலேயே எனக்குக் கொடுத்துவிட்டு -

'வாலி! உங்க வசனமே பிரமாதமாஇருக்கு; நீங்களே படத்திற்கான வசனங்களை எழுதிடுங்க!’ என்று சொன்னார்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பெரியவர் மிகப் பெரிய திரைப்பட வசனகர்த்தா. அவர், என் வசனத்தைப் பாராட்டி என்னையே வசனம் எழுதச் சொன்னது, எனக்கு வியப்பையும் மகிழ்வையும் ஒரு சேர ஏற்படுத்தியது!

பட வேலைகள் பரபரப்பாகத் தொடங்கின.

தந்தை வேடத்தில் திரு.ஜெமினி கணேசனும் மகன் வேடத்தில்              திரு. மு.க.முத்துவும் நடிக்க முடிவானது.

ஓரிரு நாள்களில், மைசூர் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் -

படம் நின்றுபோனது! காரணம் அப்போது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை! EMERGENCY!

திருமதி.இந்திரா காந்தி இதை அறிவித்தவுடன் -

என் கதையைப் படம் எடுக்க இருந்த படாதிபதி சிறையில் அடைக் கப்பட்டார். ஆம்; திரு.முரசொலி மாறன்தான் அந்தப் படாதிபதி!

என்னையே வசனம் எழுதச் சொல்லி, எனக்கு பிரமிப்பை ஊட்டிய பெரியவர் -

திரு.கலைஞர் பெருமான் அவர்கள்!

ரம்பத்தில் இந்தக் கதையின் - மூலமாக இருந்த சிறுகதையை வாங்கினேன் என்று சொன்னேனே -

அந்த எழுத்தாளர் 'புனிதன்’ எனும் புனைபெயர்கொண்ட திரு.ஷண்முக சுந்தரம் அவர்கள்;

அவர் உதவியாசிரியராக இருந்த வார இதழ்தான் 'குமுதம்’;

என்னோடு உரையாடி - பத்திரிகையில் வரும் பட விமர்சனங்கள் படத்தை எந்த வகையிலும் உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்யாது என்று சொன்ன என் கருத்தை -

கை கொடுத்து ஆதரித்தாரே -

அந்த EDITOR

அமரர் திரு.எஸ்.ஏ.பி. அவர்கள்!

- சுழலும்...