மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 22

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடம் : எல்.ராஜேந்திரன்

##~##

பெரியப்பா காலமான பிறகு, வீட்டில் இருந்த தொலைபேசியை சரண்டர் பண்ணிவிட்டார்கள். அதற்குப் பிறகு, எல்.ஐ.சி-யில் பணிபுரிந்த சடகோபன் பெரியப்பா வீட்டுத் தொலைபேசி எண்தான் எங்கள் PP போன். PP போன் என்றால், நம் வீட்டு போன் இல்லை என்று அர்த்தம். அப்போது எல்லாம் ஒரு தெருவில், ஒரு வீட்டில் போன் இருந்தாலே அதிசயம். அதற்குப் பிறகு, எங்கள் வீட்டுக்கு வெளிர் ஊதா கலரில் குண்டாக ஒரு போன் வந்து சேர்ந்தது. டயல் சிஸ்டம் வருவதற்கும் முந்தைய போன் அது. ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்தால், சில நொடிகளில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் இருந்து 'நம்பர் ப்ளீஸ்’ என்பார்கள். உடனே, நாம் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணைச் சொல்ல வேண்டும். இணைப்பு கொடுப்பார்கள்.

மூங்கில் மூச்சு! - 22

எனது தொலைபேசியை ஒட்டுக் கேட்கி றார்கள் என்று இப்போது பல அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டுவதை செய்தித் தாள்களில் பார்க்கிறோம். ஆனால், அப்போது எல்லாருடைய தொலைபேசி உரையாடலிலும் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் நமக்கு இணைப்பு கொடுப்பவர் பங்கெடுப்பார். குறிப்பாக, வெளியூர்களுக்குப் பேசும் உரையாடல்களில்.

'யாரன்னாலும் நம்புட்டி. ஆனா, இந்த புளியங்குடிக்காரிய மட்டும் நம்பீரவே நம்பீராதே!’

'ஏம்மா?’

'பொறவு? ஏளா ஏளான்னு என் சீலைக்குப் பொறத்தாடியெச் சுத்திட்டு இருப்பான் இந்தப் பய. என்ன மாய மருந்தக் கலக்கிக் குடுத்தாளோ, தெரியல. அவ உக்காரச் சொன்னா, உக்காருதான்... எந்திக்கச் சொன்னா, எந்திக்கான்.’

'யாரம்மா சொல்லுதெ?’

'ஆமா. ஒனக்குப் புளி போட்டு வெளக்கணும். ஒன் தம்பி கணேசனத்தான் சொல்லுதென். வெருவாக்கங்கட்ட பய.’

திருநெல்வேலி கல்லத்தி முடுக்குத் தெருவில் இருக்கும் தாய்க்கும், குலசேகரன்பட்டணத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டு இருக்கும் மகளுக்குமான குடும்ப உரையாடலில் புகுந்து 'எம்மா, த்ரீ மினிட்ஸ் மோர்’ என்பார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஊழியர்.

'எட்டி, யாரோ எடைல பேசுதாங்க. வெச்சிருதேன்’ என்று பதறி போனை வைத்துவிடுவார்கள்!

மூங்கில் மூச்சு! - 22

பூர்வமாகத்தான் வருவார் என்றாலும் பிரமநாயகம் மாமா எப்போது போன் பண்ண வேண்டும் என்றாலும், எங்கள் வீட்டுக்குத்தான் வருவார். ஒருமுறை அப்படி போன் பேச வந்த போது, அவர் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லோரும் தள்ளி வந்துவிட்டோம். கிட்டத்தட்ட கால் மணி நேரமாகத் தலை குனிந்து ரகசியமாக போனில் மாமா பேசிக்கொண்டு இருந்தார். வேர்வையில் சட்டை நனைந்து முதுகோடு முதுகாக ஒட்டி இருந்தது. 'பாவம், அவாளுக்கு வேக்கு, போய் ஃபேன் போட்டுவிடு’ என்றாள் அம்மா. ஃபேனைப் போடும்போதுதான் கவனித்தேன். மாமா எதுவும் பேசாமல் போனில் தலை கவிழ்த்து உற்றுக் கவனித்துக்கொண்டு இருந்தார். 'PP நம்பரா மாமா? கூப்புடப் போயிருக்காங்களா?’ என்று கேட்டேன். 'இல்ல மாப்ளே... டெலிபோன் ஆபீஸ்ல இருந்து 'நம்பர் ப்ளீஸ்’னு யாருமே கேக்கலியே! காப்பி கீப்பி குடிக்கப் போயிருக்காங்கபோலுக்கு. அரசாங்க ஆபீஸுல எவன் ஒழுங்கா வேல பாக்கான். அதெல்லாம் வெள்ளக்காரன் காலத்தோட போச்சு’ என்றார். அப்போது டயல் சிஸ்டம் வந்துவிட்டது தெரியாமல், 'நம்பர் ப்ளீஸ்’ குரலுக்காகக் காத்துக்கிடந்தார் மாமா. நான் அருகே போய் மாமாவுக்குத் தேவையான நம்பரை டயல் செய்து கையில் கொடுத்தேன். அவமானத்தில் அதற்கு அப்புறம் மாமா எங்கள் வீட்டுக்கு போன் பண்ண வரவே இல்லை. 'நம்ம வீட்டுக்கு மட்டுமில்ல. அவாள் இனிமே வாள்க்கைல போனே பண்ண மாட்டா’ என்றான் கணேசண்ணன்.

யல் சிஸ்டம் வந்த பிறகும் வெளியூர் களுக்குப் பேச வேண்டும் என்றால், 180-க்கு போன் செய்து டிரங்க் கால் புக் பண்ண வேண்டும். சிறிது நேரம் கழித்து அவர்கள் கூப்பிட்டு 'டபிள் த்ரீ டபிள் செவென் த்ரீ ஃபோரா? அம்பாசமுத்திரத்துக்கு டிரங்க் கால் புக் பண்ணிருக்கீங்களா? பேசுங்க’ என்பார்கள். இதுபோன்ற டிரங்க் கால்களை சுந்தரம் பிள்ளை பெரியப்பா பேசும்போது, பக்கத்துத் தெருவில் இருந்தெல்லாம் என்னமோ ஏதோ என்று ஆட்கள் ஓடி வருவார்கள். அவ்வளவு சத்தமாகப் பேசுவார். 'ஏன் பெரியப்பா, கூப்பாடு போடுதிய?’ என்று கேட்டால், 'ஏ, மதுர என்ன மாடத் தெருவுலயாடே இருக்கு? எத்தா தூரத்துல கெடக்கு? அங்கெ வரைக்கும் கேக்க வேணாமா?’ என்று சீரியஸாகவே சொல்வார்!

டிரங்க் கால் புக் பண்ணும்போது சில சௌகரியங்கள் உண்டு. மருத்துவமனை, காவல் நிலையம் போன்ற அரசு சார்ந்த முக்கியமான இடங்களில் தொலைபேசி எண்கள் நமக்குத் தெரியவில்லை என்றாலும், பிரச்னை இல்லை. 'களக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு டிரங்க் கால் புக் பண்ணணும் சார். நம்பர் நாட் நோன்’ என்று சொன்னால், அவர்களே டைரக்டரி பார்த்து இணைப்பு கொடுத்துவிடுவார்கள். பிறகு, நாளடைவில் நாமே நேரடியாக எஸ்.டீ.டி. டயல் பண்ணி வெளியூர்களுக்குப் பேசும் வசதி வந்துவிட்டது.

மூங்கில் மூச்சு! - 22

வீட்டில் உள்ள தொலைபேசிகளைச் சுத்தம் செய்ய மாதம் இருமுறை காட்டன் புடவை உடுத்தி, குடை பிடித்து நல்ல வாசனையாக ஒரு பெண்மணி வந்து செல்வார். அவரது கைப் பையில் உள்ள துணியால் முதலில் வெறுமனே தொலைபேசியைத் துடைப்பார். பிறகு, சிறிய வாசனைத் திரவிய பாட்டிலைத் திறந்து இரண்டு சொட்டு துணியில் சாய்த்து, தொலைபேசியில் துடைத்து வைத்துவிட்டுப் போவார். 'அந்த அக்கா போனுக்கு போடுத சென்ட அவங்க மேலயும் தெளிச்சிக்கிடு தாங்களோல?’ என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தைக் குஞ்சுவிடம் கேட்டேன். குஞ்சுவின் வீட்டுக்கும் அவர் செல்வது உண்டு. 'சேச்சே... அது வேற. இது வேற.’ உறுதியான குரலில் சொன்னான் குஞ்சு. 'எப்பிடில சொல்லுதெ?’ என்று கேட்க நினைத்து, பின் தவிர்த்துக்கொண்டேன்!

சென்னைக்கு நான் வந்து 'வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களிடம் சேர்ந்தபோது, எனக்கு நம்ப முடியாத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 'வாத்தியார்’ வீட்டிலோ, அலுவலகத்திலோ, தொலைபேசி வசதி இல்லை என்னும் செய்திதான் அது. நான் வாத்தியாரிடம் வந்து சேர்ந்த புதிதில், என்னுடைய லேண்ட் லைன் போனின் எண்தான் வாத்தியாரின் தொடர்பு எண்ணாக இருந்தது. வீட்டில் இருந்து கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டால், அவசரத்துக்கு போன் பண்ண அருகில் உள்ள பொதுத் தொலைபேசி இருக்கும் கடைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு நீண்ட கியூ நிற்கும். ஒருமுறை கியூவின் 11-வது ஆளாக புரொடக்ஷன் மேனேஜர் சுந்தர்ராஜன் மாமா நின்றார். பேச்சுத் துணைக்கு என்னையும் உடன் இழுத்துச் சென்று இருந்தார். வரிசையில் மெள்ள முன்னுக்கு நகர்ந்து மாமா ரிசீவரைக் கையில் எடுத்து, என் பக்கம் திரும்பி, 'ஏன்டா? நான் யாருக்கு போன் பண்ண வந்தேன்?’ என்று கேட்டார். 'என்கிட்டெ சொல்லலியே மாமா’ என்று நான் சொல்லவும், பின்னால் நிற்பவர் கள் சத்தம் போட்டார்கள். 'சார், நல்லா யோசிச்சுட்டு அப்புறம் வாங்க’. மாமாவுக்கு தான் போன் பண்ண வேண்டிய எண் ஞாப கம் வந்தபோது, கியூவில் அவருக்கு முன்னால் மேலும் எட்டு பேர் நின்று இருந்தார்கள்!

ரவு 11 மணியை நெருங்கும்போது, சாலிகிராமத்தில் உள்ள ஒரு டெலிபோன் பூத்துக்குத் தினமும் செல்வேன். டிக்கெட் கொடுப்பதற்கு முன்பே, ஒவ்வொருவராக சினிமா தியேட்டர் கவுன்டருக்கு முன் வந்து கூடும் ஜனங்கள்போல, பொதுத் தொலைபேசி நிலையங்களுக்கு மெள்ள ஆட்கள் வரத் துவங்கும் நேரம் அது. அப்போது இரவு மணி 11-க்கு மேல் வெளியூருக்குப் பேசும் எஸ்.டீ.டி. அழைப்புகளுக்கு கால் கட்டணம்தான். எங்கள் வீட்டுத் தொலைபேசியில் எஸ்.டீ.டி. வசதி இல்லாததால், டெலிபோன் பூத்தின் கடிகாரத்தையும், கையில் கட்டி இருக்கும் வாட்சையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பேன். சரியாக 11 மணிக்கு கேபினுக்குள் நுழையக் கடும் போட்டி இருக்கும். 'சார்... சார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அந்த சார்தான் மொதல்ல வந்தாங்க. என்கிட்டெ சொல்லிட்டுத்தான் டீ குடிக்கப் போனாங்க. 'முதலில் வந்தவர் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். நிறைய சிரித்து, நிறைய 'ம்ம்ம்’ போட்டுப் பேசுவதன் மூலம் பூத்துக்குள் பேசுபவரின் உடல்மொழி, கண்ணாடிக்கு வெளியே காத்துக்கிடக்கும் நமக்கு, அவர் தன் காதலி யுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். வேறு பூத் நோக்கிக் கிளம்புவதைத் தவிர வேறு வழி இல்லை!

ன்றைய நவீன உலகில் கைபேசி இல்லாத மனிதர்கள் அபூர்வப் பிறவிகள். எல்லாத் தரப்பு மக்களிடமும் கைக்குட்டை இருக்கிறதோ இல்லையோ, கைபேசி இருக்கிறது. திரைப்பட இணை இயக்குநர் இளங்கோ சொன்னார். 'சார், எங்க அபார்ட்மென்ட்டுக்கு மீன் விக்கிற அம்மா வராங்க. கீழே நின்னுக்கிட்டு செல்போன்ல ஏழாவது மாடி அம்மாவக் கூப்பிட்டு, மீன் வேணுமான்னு கேக்குறாங்க. ஏழாவது மாடிலே இருந்து அந்த அம்மா எறங்கி வந்துதான் இவங்க தலையில உள்ள கூடையையே எறக்குறாங்க. இது பரவாயில்ல. இன்னோர் ஆள் இடியாப்பம் விக்கிறாரு. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுட்டு அப்பார்ட்மென்ட்ல இருக்கிறவங்களுக்கு ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் தட்டுறாரு. பத்தாவது நிமிஷம் எட்டு மாடி ஆட்களும் பாஞ்சு வந்துடறாங்க.’

இன்றைக்கு அத்தியாவசியமாகிவிட்ட செல்போன் எல்லோர் கைகளிலும் தவழ்வது குறித்து நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால், சினிமா பார்த்துக்கொண்டு இருக்கும்போது, மேடையில் யார் பேச்சையாவது கவனித்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது, பஸ் மற்றும் ரயில் பயணங்களில் மெள்ள தூக்கத்தை எட்டிப் பிடிக்கும்போது சத்தமான ரிங் டோன் மூலமும், அதைவிட சத்தமாகப் பேசுவதன் மூலமும் பிறத்தியாரைத் தொந்தரவு செய்யும் நபர்களிடம் இருந்து செல்போனை மட்டும் அல்லாது, அவர்களின் ரேஷன் கார்டையும் அரசு பிடுங்கிவிட வேண்டும்.

மூங்கில் மூச்சு! - 22

முன்பெல்லாம் எல்லா தொலைபேசி எண்களையும் ஒரு சின்ன டைரியில் எழுதி பாக்கெட்டில் வைத்திருப்பேன். 'வாத்தியார்’ பாலுமகேந்திரா போன் பண்ண வேண்டிய ஆளின் பேரைச் சொல்லி தொலைபேசி எண் கேட்டால், டைரியைப் பார்க்காமலேயே சொல்வேன். 'எதுக்கும் டைரியைப் பாத்துதான் சொல்லேன்’ என்பார். அதற்கு அவசியமே இல்லாமல் உறுதியாகச் சொல்லும் அளவுக்கு மனப் பாடமாக 200 எண்கள் வரை நினைவில் இருந்தன. சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு நண்பர் என் கைபேசி எண்ணைக் கேட்டார். 'ஒரு நிமிஷம்’ என்று சொல்லிவிட்டு, என் TOUCHPAD கைபேசியில் என் பெயரைப் போட்டு, நான் பதிவு செய்துவைத்து இருக்கும் என்னுடைய எண்ணைத் தடவித் தேடினேன்!

- சுவாசிப்போம்