Published:Updated:

கல்லூரிச் சாலை!

கல்லூரிச் சாலை!

கனவு... ஒலிம்பிக் பதக்கம்!

கல்லூரிச் சாலை!

புதுக்கோட்டை மாவட்டம் மாமன்னர் கல்லூரி மாணவி அனுராதா, பளு தூக்கும் சாம்பியன். சமீபத்தில், கேரளாவில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அகில இந்தியப் பளு தூக்கும் போட்டியில்  ஸ்னாட்ச் சுற்றில் 60 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் 77 கிலோவுமாக மொத்தம் 137 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். அனுராதா வீட்டு அலமாரியில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. இவருடைய ரோல் மாடல் கர்ணம் மல்லேஸ்வரி.

''ரொம்ப சாதாரண கிராமப்புறப் பின்னணி யில் இருந்து வந்தவள் நான். என் குடும்பமும் பயிற்சியாளரும் கொடுத்த ஊக்கம்தான் இந்த வெற்றிகளுக்குக் காரணம். பயிற்சி எடுக்க மிகக் குறைந்த வசதிகள்தான். அதுவும் முறையான வசதிகள் கிடையாது. இன்னும் திருத்தமான பயிற்சிகள் கிடைத்தால், சர்வதேச அளவில் சாதிக்க முடியும். சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் ஜெயிக்கணும்!''-கண்களில் ஆர்வமும் உறுதியும் சரிவிகிதத்தில் மின்னுகிறது அனுராதாவுக்கு!

    ச.ஸ்ரீராம்,  படம்:பா.காளிமுத்து

கம்பெடுத்து வந்த சிங்கங்கள்!

கல்லூரிச் சாலை!

ஞ்சை சத்யா ஸ்டேடியத்தில் கம்பு சுழற்றி காற்றைக் கிழித்துக்கொண்டு இருக்கிறார்கள் நான்கு மாணவிகள். எஸ்.சுகன்யா, ஸ்டெல்லா, பி.சுகன்யா மற்றும் திவ்யாவின் கைகளில் சக்கரம்போல் சுழன்றுகொண்டு இருக்கிறது சிலம்பக் கம்பு.

''நாங்க நாலு பேரும் சிக்ஸ்த் படிக்கும்போது இருந்தே படா படா தோஸ்த். ப்ளஸ் டூ படிக்கிறப்போ, எஸ்.ஆர்.காளிமுத்து மாஸ்டர் எங்களுக்கு சிலம்பு கத்துக்கொடுத்தார். பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் நாலு பேரும் வெவ்வேறு கல்லுரியில் சேர்ந்துட்டோம். ஆனாலும் தினமும் சாயங்காலம் 5 மணிக்கு இங்கே சங்கமிச்சு பயிற்சியைத் தொடர்ந்தோம். போன ஜூன் மாசம் வேலூரில் நடந்த அகில இந்திய சிலம்பாட்டப் போட்டியில் கலந்துக்கிட்டு ஒரு தங்கம், மூணு வெள்ளிப் பதக்கங்கள் ஜெயிச்சோம்.

சிலம்பம் இன்னும் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கப்படலை. எதிர்காலத்தில் காமன்வெல்த் போட்டியில் சேர்க்கப்படலாமாம். அப்படிச் சேர்க்கும்போது, இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தர்றது எங்க பொறுப்பு!'' என்று ஸ்டெல்லா உத்தரவாதம் கொடுக்க, அதை ஆமோதிக்கிறார்கள் மற்ற மூவரும்.

க.ராஜீவ்காந்தி  படம்: கே.குணசீலன்

விவேகானந்தரின் வெற்றிக்குக் காரணம்!

கல்லூரிச் சாலை!

தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தினமணி நாளிதழில் எழுதிய தலையங்கங்கள் 'உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடும் விழா அது. சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அப்துல் கலாம் புத்தகங்களை வெளியிட்டார். வரவேற்புரை ஆற்றினார் கார்ட்டூனிஸ்ட் மதி. ''சிகாகோ சர்வ மத சபையில் விவேகானந்தர் தன் உரையைத் தொடங்கு முன், 'சகோதர சகோதரிகளே..’ என்றார். உடனே, அங்கு கூடியிருந்தவர்கள் தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்குக் கை தட்டி ஆரவாரித்தார்கள். ஆனால், அதற்கு முன்னரே அந்தச் சபையில் 'சகோதர சகோதரி களே...’ என்று தன் உரையைத் துவக்கினார் ஐந்தாவதாகப் பேசிய அகஸ்டா. 20-வது நபராகப் பேசிய பேராசிரியர் மினாஸ் செராஸ் ஆகியோரும் அப்படித்தான் ஆரம்பித்தார். 23-வது நபராகத்தான் விவேகானந்தர் உரை ஆற்றினார். ஆனால், அவர் 'சகோதர சகோதரி களே’ என்று கூறியபோது மட்டும் அந்த எழுச்சி ஏற்படக் காரணம், விவேகானந்தர் சம்பிரதாயமாக இல்லாமல் இதயத்தின் ஆழத் தில் இருந்து அந்த வார்த்தைகளைக் கூறியது தான்!

எதுகை, மோனையோடு கவர்ச்சியாகப் பேசுவது பெரிதல்ல. தங்களுடைய பேச்சுக்குத் தாங்களே பிரதிநிதியாக முன் நிற்க வேண்டும்!'' என்று மதி முடித்தபோது, அரங்கில் ஆக்ரோஷ கரகோஷம்!

கலாம் தன் தலைமை உரையில், ''பத்திரிகைகளும் பத்திரிகை ஆசிரியர்களும் நாட்டின் வளர்ச்சியில் முக்கியமானவர்கள். சட்டப்பேரவை, நகர்மன்ற, ஊராட்சி மன்ற, கிராம பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில் பத்திரிகையில் செய்திகளை வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் குறிப்பிடத் தக்க வகையில் என்ன வளர்ச்சி பெற்றுள்ளன என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஒவ்வொரு பத்திரிகையும் 50 சட்ட மன்றத் தொகுதிகளைத் தத்தெடுத்து, தொகுதி ஒன்றுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, பசுமை நகராக மாற்ற வேண்டும். தொகுதி வளர்ச்சியோடு மக்கள் வளர்ச்சிக்கும் பத்திரிகைகள் உதவும் போது அரசியலைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் முன்னேறுவார்கள்!'' என்று பத்திரிகைகளுக்குச் செய்தி சொன்னார் கலாம்.

- க.நாகப்பன் படம்: கே.கார்த்திகேயன்

வேதனைகளுக்கு மத்தியில் சாதனை!

கல்லூரிச் சாலை!

ராமநாதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் அடுத்தடுத்து உலக சாதனை படைத்திருக்கிறார்கள். கோயில் புரோகிதராக இருக்கும் வெங்கட்ராமனின் குடும்பத்துக்கு வறுமைதான் ஒரே சொத்து. அன்றாடச் செலவுகளுக்கே சமயங்களில் தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை. வெங்கட்ராமனின் நான்காவது மகன் சங்கரநாராயணன், முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவர். இவர் ஒரே மூச்சில் 151 மெழுகுவத்திகளை ஊதி அணைத்துச் சாதனை புரிந்துள்ளார். தம்பி சாதிக்கவும் வீறுகொண்டு எழுந்த அவரது சகோதரர் சுந்தர், 398 ஸ்ட்ராக்களை வாயில் நுழைத்துத் தன் பங்குக்கு ஒரு சாதனை படைத்தார். சகோதரர்களின் தொடர் சாதனை, சகோதரி ரமாவையும் தூண்டிவிடாமல் இருக்குமா? ரமாவும் தன் பங்குக்கு ஒரு சாதனை படைத்தார். இது நிச்சயம் கொஞ்சம் வித்தியாசமான சாதனைதான். விதவிதமாக பல்வேறு ஹேர் க்ளிப்புகளைச் சேகரித்து இருக்கிறார் ரமா. மொத்தம் 549 வகையான ஹேர் க்ளிப்புகள்!

 ச.புபேஸ் படம்: உ.பாண்டி