Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 16

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

சித்தப்பா

சிறகில் இருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது!
- தர்மு சிவராம் பிரமிள்
அணிலாடும் முன்றில்
அணிலாடும் முன்றில்

'கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பாக்களுடன் வளர்ந்த குழந்தைகள் வளர்ந்த பிறகும் அம்மாவை அண்ணி என்று அழைக்கும்’

என்று முன்பு நான் ஒரு கவிதை எழுதி இருந்தேன். என் அம்மாவைப் பெற்ற ஆயா வீடு, எப்போதும் கலகலப்பாக இருக்கும். ஐந்து மாமாக்கள், மாமிகள், அவர்களின் பிள்ளைகள் என எல்லோரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்ததால், குதூகலத்துக்குக் குறைவே இல்லை. ஒவ்வொரு முறை விடுமுறைக்குச் செல்லும்போதும் என்னை ஆச்சர்யப்படுத்துவது மூத்த மாமாவின் பிள்ளைகள். மூத்த மாமாவின் இரண்டு பிள்ளைகளும் அவர்களின் அம்மாவை 'அண்ணி’ என்றே அழைப்பார்கள்.

''யாராவது அம்மாவை அண்ணினு கூப்பிடுவாங்களா?'' என்று அவர்களை நான் கேலி செய்வேன்.

''என்ன பண்றது? எல்லா சித்தப்பாவும் எங்க அம்மாவை அண்ணின்னு கூப்பிடுறதைச் சின்ன வயசுல இருந்து பார்க்கறதுனால, நாங்களும் அப்படியே கூப்பிட ஆரம் பிச்சுட்டோம்'' என்பார்கள்.

''அம்மான்னு கூப்பிடச் சொல்லி மாமி அடிக்கலையா?'' என்று கேட்பேன்.

அணிலாடும் முன்றில்! - 16

''அடிச்சிருப்பாங்க... யாருக்கு ஞாபகம் இருக்கு!'' என்று சிரிப்பார்கள்.

இன்று வரை அவர்கள் தங்கள் அம்மாவை 'அண்ணி’ என்றுதான் அழைக்கிறார்கள். தன் பிள்ளைகள் தன்னை 'அம்மா’ என்று அழைக்காத வருத்தம் மாமியின் மனதில் இருக்குமா என்பதை நான் அறியேன்.

இந்த அனுபவத்தில் மேற்குறிப்பிட்ட கவிதையை நான் எழுதியபோது நிறைய வாசகர்கள், தாங்களும் தங்கள் அம்மாவை 'அண்ணி’ என்று அழைப்பதாகக் குறிப்பிட்டார்கள். ஒவ்வொரு முறையும் தன் அம்மாவை 'அண்ணி’ என்று அழைக்கும்போது, எங்கோ தொலை தூரத்தில் வாழும் சித்தப்பாவின் முகங்கள் அந்தக் கணத்தில் கண் முன் வந்து போகும் என்று ஒரு வாசகர் சொன்னபோது, நான் நெகிழ்ந்துபோனேன்.

சித்தப்பாவின் பாதிப்புகள் இல்லாமல் பால்யத்தைக் கடந்து வந்தவர்கள் மிகச் சிலரே. சித்தப்பாக்களின் நிழலில் வளர்ந்த சின்னஞ்சிறு செடிகள்தானே நாம்.

சித்தப்பாக்களின் தோள்களில் அமரும் பிள்ளைகள் இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் கூடுதல் உயரத்துடன் பார்க்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமையின் காலைகளில் ஆட்டுக் கறி வாங்குவதற்காக சைக்கிளில் கிளம்பும் சித்தப்பாவின் பின் இருக்கையில் இடம் பிடிக்கும் பிள்ளைகள் பாக்கியசாலிகள்.

தோல் உரித்த ஆடுகள் வாலுடன் தொங்கும் கறிக் கடையில், காதுகள் மடங்கி தனித்தனியாக வெட்டிவைக்கப்பட்டு இருக்கும் ஆட்டுத் தலைகளும்; அவற்றின் வெறித்த கண்களும் கொடுக்கும் பயத்தில் சித்தப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டு, ஓரக் கண்ணால் கசாப்புக் கடைக்காரரின் ரத்தத் துளிகள் படிந்த பனியன்களைத் தரிசிக்கும் பிள்ளைகள் இன்னும் பாக்கியசாலிகள். வாழ்வின் அச்சத்தை ஆச்சர்யமாகவும், ஆச்சர்யத்தை அனுபவமாகவும் மாற்றும் அழகிய தருணம் அது.

''எங்க சித்தப்பா படிக்கிற காலேஜ் இது!'' என்று பள்ளிப் பேருந்தின் ஜன்னல் வழியே சக நண்பனுக்குக் கை காட்டிக் குதூகலிக்கும் குழந்தைகளின் கண்களில் இருக்கும் பிரியங்களைக் கவனித்து இருக்கிறீர்களா? அந்தக் கண்களில் தெரிவது பிரியம் மட்டும்தானா? சித்தப்பாக்களிடம் இருந்து கிடைத்த கூடுதல் சுதந்திரத்தின் கொண்டாட்டமும்தானே?

உண்மையில் அப்பாக்களிடம் இருந்து கிடைக்காத சுதந்திரத்தின் சாவியை சித்தப்பாக்களிடம் இருந்தே குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். அந்தச் சாவி திறக்கும் உலகத்தின் அதிசயங்கள் அளவிட முடியாதவை.

அந்த உலகத்தில் கண்டிப்பு இல்லை. கட்டளை இல்லை. வீட்டுப் பாடங்கள் இல்லை. 'ஏன், வீட்டுப் பாடம் செய்யவில்லை?’ எனக் கையில் பிரம்புடன் கேள்வி கேட்கும் கண்ணாடி டீச்சரும் இல்லை.

அணிலாடும் முன்றில்! - 16

சித்தப்பாக்கள் சைக்கிளில் இருந்து கவாஸாகி பைக்குகளுக்கு மாறும் அதே தருணத்தில், குழந்தைகள் பால்யத்தில் இருந்து பருக்கள் அடர்ந்த முகத்துக்கு மாறிவிடுகிறார்கள். அப்போதே சித்தப்பா நண்பனாகிவிடுகிறார்.

தெரு முனை டீக்கடை மறைவில் சிகரெட் பிடித்துக்கொண்டு இருக்கையில், அவ்விடத்தில் தற்செயலாக எதிர்ப்படும் சித்தப்பாவின் கண்கள் கண்டும் காணாததுபோல் விலகிச் செல்லும் மர்மம் தோழமை அன்றி வேறு என்ன?

கல்லூரி முடிந்து, பொருளாதாரத்தின் வேர் தேடிப் போராடும் சித்தப்பாக்களை அருகில் இருந்து பார்க்கையில், சித்தப்பாக்களுடனான நெருக்கம் இன்னும் கொஞ்சம் கூடுதல் பிரியங்களைச் சேர்த்துக்கொள்ளும். வேலை இல்லாதவனின் பகலும், நோயாளிகளின் இரவும் நீளமானவை என்பதைப்போல... சித்தப்பாக்கள், சித்தப்பாக்களாக இல்லாத தருணங்கள் அவை.

ஏதோ ஒரு கணத்தில் ரேஷன் அட்டையை நீட்டி வாங்க வேண்டிய பொருட்களை நினைவுபடுத்துகையில், வாழ்வின் சூன்யத்தை சித்தப்பாவின் கண்கள் எதிர்கொள்கின்றன. ஒவ்வொரு வேளையும் தன் தட்டில் உணவு விழுகையில், தான் ஒரு சுமைதானோ என சித்தப்பாக்கள் நினைக்கையில், அந்த உணவும் சுமையாகிவிடுகிறது.

தற்காலிகமாக ஜவுளிக் கடைகளில் கணக்கு எழுதும் சித்தப்பாக்கள், தங்கள் பிரியங்களின் நிழலில் வளர்ந்து பெரியவர்களான குழந்தைகளிடம் இருந்து நிரந்தரமாக விலகிவிடுகிறார்கள்.

சித்தப்பாக்களுக்கும் சித்திகள் கிடைக்கா மலா போய்விடுவார்கள்? கனகாம்பரக் கலர் தாவணியும், பட்டுப் பாவாடையும் அணிந்த உறவுக்காரப் பெண் வாசலில் நின்று பன்னீர் தெளிக்க, உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்க, நண்பர் கள் சாக்லேட்டுடன் ஸ்டாப்ளெர் பின் அடித்து நல் வாழ்த்துகள் சொல்ல, சித்தப்பாக்கள் கல்யாணம் முடிந்து சித்திகளுடன் வருகிறார்கள்.

வாழ்க்கைக் காற்று அவர்களைத் திசை மாற்றிப் போட... மீண்டும் ஏதோ ஒரு கல்யாணத்தில், அல்லது ஒரு மரண வீட்டில், அல்லது வேறு விசேஷங்களில் சித்தப்பாக்களுடன் நாம் அமர்ந்து இருக்கையில், சட்டென நம் பால்ய காலம் காலச் சக்கரத்தில் ஏறிச் சுழன்று வருவதை சித்தப்பாக்கள் அறிவார்களா?

'நதியாலே வளரும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் பிரியங்களை நதி அறியுமா? அது உணருமா? கரையோரக் கனவுகள் எல்லாம்...’

என்று 'யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் 'ஒரு நாளுக்குள் இத்தனை கனவா?’ என்ற பாடலில் நான் எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

இப்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் கறிக் கடைகளில் காத்திருக்கும் கூட்டத்தில் பிஞ்சு முகங்களைக் காண நேர்கையில், அந்தக் குழந்தைகள் தங்கள் சித்தப்பாக்களுடன்தான் வந்திருக்கும் என்றும், அந்தக் குழந்தைகளுக்கு வாழ்வின் அச்சங்கள் ஆச்சர்யமாகவும், ஆச்சர்யங்கள் அனுபவங்களாகவும் மாறும் என்றும் மனசு நினைத்துக்கொள்கிறது!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan