மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

நாகேஷ் இடத்தில் இப்போது யார்?

வெ.க, கடையநல்லூர்.

 'விலை மதிப்புள்ள பொருள்’, 'விலை மதிப்பற்ற பொருள்’ - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஹாய் மதன் கேள்வி - பதில்
##~##

கோஹினூர் வைரத்துக்கு விலை மதிப்பு வைக்க முடியும். பிக்காஸோ ஓவியத்துக்கு வைக்க முடியும். தாஜ்மஹாலுக்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கும் விலை மதிப்பு வைக்க முடியுமா?!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

வீட்டில் இருந்துகொண்டே நான் சென்னையில் இருக்கேன்... மதுரையில் இருக்கேன்... பெங்களூரில் இருக்கேன்... என்று பெருமை பேசும் நண்பரை எப்படித் திருத்துவது சார்?

திருத்த முடியாது. ஆனால், 'அட! மதுரையிலா இருக்கே? நானும் மதுரையில்தான் இருக்கேன். அட்ரஸ் சொல்லு, இதோ வரேன்!’ என்று வெறுப் பேத்திப் பார்க்கவும். பை தி வே, அவர் வீட்டில் தான் இருக்கிறார் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? போய் எட்டிப் பார்த்துவிட்டு வந்து, அவருக்கு போன் செய்வீர்களா?!

வி.ரவிச்சந்திரன், ஆழ்வார்பேட்டை.

பெரும்பாலான மக்கள் ஏன் இடது கையில் வாட்ச் கட்டிக்கொள்கிறார்கள்?

வலது புறத்தில் இருந்து தலையைத் திருப்பி இடது கை மணிக்கட்டைப் பார்ப்பது இன்னும் சுலபம். ட்ரை பண்ணிப் பாருங்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் விட்ட இடத்தை இப்போது யார் பிடித்திருக்கிறார்கள்?

நாகேஷின் இடம் எப்போதும் அவருடையது. அதை யாராலும் பிடிக்க முடியாது. அவருடைய நடிப்புத் திறன் விஸ்தாரமானது. ('நம்மவர்’ படம் நினைவிருக்கிறதா?!). எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் போன்றவர்கள்கூட, குறிப்பிட்ட ஒரு ஸீனை நாகேஷ் தட்டிக்கொண்டு போய்விடுவாரோ என்று கவலைப்பட்டது உண்டு. தவிர, படப்பிடிப்பின்போது பெரிய நட்சத்திரங்கள், இயக்குநர்களை அவர் நையாண்டி செய்ததை எல்லாம் GROUCHO MARX ஸ்டைலில் ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாம். ஆனால், தனி நபர் வழிபாடு தலை விரித்தாடும் மாநிலம் இது என்பதால் வாய்ப்பு இல்லை!

அ.உமர், கடையநல்லூர்.

நாளிதழ்களில் கார்ட்டூன் வரைவது, வார இதழ்களில் கார்ட்டூன் வரைவது - எதில் ரிஸ்க் குறைவு?

ரிஸ்க்? நாளிதழில்தான் குறைவு. அரசியலில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கார்ட்டூன் போடலாம். வாரப் பத்திரிகைக்கு, சில நாட்கள் முந்தியே கார்ட்டூன் வரைந்து, அது பிரின்ட்கூட ஆகிவிடும். அந்த சில நாட்களுக்குள் காட்சி மாறினால், பேஜார்தான்.

உதாரணமாக, ஒரு தலைவரைக் கிண்டல் செய்து வரைந்துவிட்டு, அடுத்த இரண்டு நாட்களில் தலைவர் இறந்துவிட்டால், ரொம்ப தர்மசங்கடமாகி விடும். எனக்கு அது நிகழ்ந்திருக்கிறது!

எம்.மிக்கேல், சாத்தூர்.

ஆன்மிகப் பாதை, பகுத்தறிவுப் பாதை - எந்தப் பாதையில் பயணம் செய்யலாம்?

அப்படி இப்படியென்று எல்லோரும் தேடிப் போவது எதை? - நிம்மதி! எதில் உங்களுக்கு நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும் என்று நம்புகிறீர்களோ அந்தப் பாதையில் போக வேண்டியதுதானே? ஏன் என்னைக் கேட்கிறீர்கள்?

ஆன்மிகத்துக்கு நம்பிக்கை போதும் - FAITH! இரண்டாவதற்கு பகுத்து அறிவது முக்கியம். அது இல்லாமல் பகுத்தறிவாளன் என்று பெருமையடித்துக் கொண்டால், உங்கள் கொள்கையை மாற்ற ஒரு பூனையைக் குறுக்கே விட்டால் போதும்! அதனால் தான், பலர் பகுத்தறிவுப் பாதையை பைபாஸ் ரோடாகப் பயன்படுத்துகிறார்கள்!

சங்கமித்ரா நாகராஜன், கோவை.

ஹாய் மதன் கேள்வி - பதில்

ராமாயண காலத்தில் மொபைல் போன் இருந்திருந்தால், கதையின் முடிவு என்னவாக இருக்கும்?

பொன் மானாக வந்த மாரீசன் செத்து விழுந்தபோது ராமன் குரலில் அலற, மொபைலில் ராமன் சீதைக்கு போன் போட்டு, 'எனக்கு ஒண்ணும் ஆகலை. மாரீசன்தான் என் குரலை மிமிக்ரி பண்ணான்!’ என்று சமாதானம் செய்ய, ராமாயணமே நடந்திருக்காது!

விஜயலஷ்மி, சென்னை-74.

நம்மை நாமே நண்பர்களாக்கிக்கொள்ள முக்கியமாக என்ன செய்ய வேண்டும்?

முதலில் Introduce செய்துகொள்ள வேண்டும்!