வந்தேன்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 09
##~## |
ஆனா, நான் முதன்முதல்ல செல் போன்ல கேட்ட வார்த்தை... 'பொறம் போக்கு!’ அப்படி நான் திட்டு வாங்கக் காரணம்... இன்னொரு பொறம் போக்கு!
அப்பத்தான் செல்போன் தமிழ்நாட்டுக்கு வந்த புதுசு. செல்போனைப் பார்த்தாலே இந்தியாவுக்குக் கப்பல்ல வந்து இறங்கினாரே வாஸ்கோடகாமா... அவரைப் பார்த்தது கணக்கா வாயப் பொளப்பாங்க பசங்க. ஊருல பத்து பேரு, தெருவுக்கு ஒருத்தன்னு செல்போன் வெச் சுட்டு அலம்பிட்டு இருப்பானுங்க. அதுவும் ஒண்ணொண்ணு செங் கல்லு கணக்கா கனக்கும். வீரா ணம் குழாய் கணக்கா நீளமா இருக்கும். ஆனாலும், அதை வெச்சிக்கிட்டு அவனுங்க காட்டுற ஃபிலிம் இருக்கே... அது உங்க வீட்டு, எங்க வீட்டு ஃபிலிம் இல்லை. உலக சினிமாவே தோத்துப் போகும். அதுவும் ரிலையன்ஸ் போன்

வெச்சிருக்கிறவன், அம்பானி ரிலேஷன் மாதிரியே பேசிட்டுத் திரி வான். இப்படித்தான் எனக்கு முருகேசன்னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். எப்பப் பார்த்தாலும் மொக்கை போட்டு, மொக்கை ஐடியாவா கொடுத்து சொதப்புற மொக்கை முருகேசன். அவன்தான் எங்க செட்ல முதல் செல்போன் வெச்சிருந்த மாண்புமிகு மாக்கான்.
செல்போனை வெச்சுக்கிட்டு, அவன் காட்டுற பயாஸ்கோப்பைப் பார்த்தாலே பத்திக்கிட்டு எரியும். நாங்கள்லாம் தேமேன்னு உக்காந்திருப்போம். வெடுக்வெடுக்குன்னு வர்றவன் 'ஹாய்டா மச் சான்’ சொல்லிட்டு, 'அந்த தம்மு தாயேன்’னு ஓசி சிகரெட் வாங்கிட்டுப் போனான்னா, முழுசா ஒரு மணி நேரம் கழிச்சுதான் வருவான். அதுலயும் செல்போன் சிக்குனதுல இருந்து முழுக்க முழுக்க போன்லயேதான் டீலிங்கு ஃபீலிங்கு. 'ஆமாடா... பல்லாவரத்தில இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல பாரிஸ் கார்னர் வந்திடுவேன்’, 'அம்மா முருங்கைக்காய் சாம்பாரா வெச்சிருக்கே..? முட் டைக்கோஸ் பொரியல் பண்ணேன்’ன்னு செல் லுல அவன் போடற மொக்கையைக் கேட்டா, செவுள்லேயே நாலு விடலாம் போல கோபமா வரும். பத்து நாள் அவன் போன்ல பேசறதைக் கேட்டா அவனோட சுயசரிதையே எழுதலாம். ஆனா, அது நமக்குச் சத்திய சோதனையா இருக் கும். அதுவும் அது வரை லோக்கல் மெட்ராஸ் பாஷையில கபடி ஆடுறவன், கொஞ்சம் சுமாரா ஒரு ஃபிகர் கிராஸ் ஆனா, 'ஆமாயா... அங்கதான்யா. எங்க ஆயா, ஆட்டுக்கால் பாயா’ன்னு 'யா, யா’ போட்டே எங்களை சட்னி ஆக்கிருவான்.
எங்களுக்குன்னா செம காண்டா இருக்கும். 'மச்சி ஓவரா ஸீன் போடுறான்டா. அது வும் இன்கமிங்குக்கு எட்டு ரூபா, அவுட் கோயிங்குக்கு பதினாறு ரூபா. இந்த நாய் அப்பா பாக்கெட்டை பீராய்ஞ்சு அம்பது பைசாவையே லவட்டிக்கிட்டு வர்றவன். இவன் எப்படி செல்லு பில்லு கட்டுவான்? உண்மையிலேயே இவனுக்குப் போன் வருதா... இல்லை எம்ப்ட்டி ஸ்க்ரீன்ல எட்டு ரீல் ஓட்டு றானா?’ன்னு டவுட்னா டவுட்டு. ஒருநாள் வழக்கம்போல் மொக்கை முரு கேசன் செங்கக்கல்லு செல்போன்ல மொக்கை போட்டுட்டே வந்துட்டு இருந்தான். 'ஆமாமா... கோயம்பேட்ல காய்கறி விலைலாம் ஏகத்துக்கு ஏறிடுச்சு. மெட் ராஸ் செம ஹாட்யா’ன்னு ஓட்டிட்டு இருந் தான்.

நான் நைஸா சைஸாக் கண்ணைக் காமிச்சேன். பசங்க முருகேசன் கையை இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டாங்க. நான் அவன்கிட்ட இருந்து செல்போனைப் பிடுங்கி என் காதுல வெச்சேன். அவ்வளவு தான்... பதினைஞ்சு கட்டுவிரியன் பாம்பு காதுல பொட்டுன்னு கொத்துன மாதிரி இருந்தது. போன்ல ஆப்போசிட் பார்ட்டி அவ்வளவு அசிங்கம் அசிங்கமா திட்டிட்டு இருக்கான். 'பொறம்போக்கு... பொறம் போக்கு நாயே! என் செல்போனைத் திருடிட்டுப் போயி ஒரு வாரமாச்சு. மானம், சூடு, சொரணை இருந்தா திருப்பித் தந்திருப்பியேடா பேமானி? இதுல நான் ஒரு கேள்வி கேட்டா நீ சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஏதேதோ பேசுற. பத்தாததுக்கு இங்கிலிபீஷ் வேற!

உன்னை மாதிரி திருட்டு நாய்க்கு இங்கிலிபீஷ் ஒரு கேடா? நாளைக்கு நீ வரலைன்னா நானும் போலீஸும் உன் வூட்டுக்கு வருவோம்’னு ஆரம்பிச்சு விடாமத் திட்டறான். திரும்பி முருகேசனைப் பார்த்தா, பேக்கு மாதிரி பேந்தப் பேந்த முழிக்கிறான்.
போனைக் கட் பண்ணிட்டு, பசங்ககிட்டே சொன்னதும், 'ஏன்டா கஸ்மாலம்... ஒரு திருட்டு போனை வெச்சுக்கிட்டு உனக்கு இந்த ஸீன் தேவைதானா?’ன்னு அந்த ஆப்போசிட் பார்ட்டி திட்டின அத்தனை வார்த்தையையும் ரிப்பீட் பண்ணி ரிவிட் அடிச்சாங்க.
இன்னமும் செல்போன் கூப்புடுறப்பலாம் எனக்கு முருகேசன் முகம் மனசுல மின்னி மறையும்!
( இன்னும் கலாய்ப்பேன்... )