
சுகா
##~## |
சிறு வயதில் சினிமாவுக்குக் கிளம்பும்போது ஏற்படும் மகிழ்ச்சி, வேறு எதிலும் இருந்ததாக ஞாபகம் இல்லை. சினிமா தியேட்டருக்குப் போய் அமர்ந்து இருட்டுக்குள் அவ்வளவு பெரிய திரையில் படம் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷமே தனிதான். அந்த சந்தோஷத்தின் துவக்கம், படத்துக்குப் போகப்போகிறோம் என்று அம்மா சொல்லும் நிமிடத்திலேயே துவங்கிவிடும். என்ன படம் என்பதில்கூட அவ்வளவு பிரத்யேக ஆர்வம் இருக்காது. சினிமாவுக்குப் போகிறோம். அவ்வளவுதான்!
புதுப் படங்களும் பார்ப்பாள்தான் என்றாலும், பெரும்பாலும் பழைய திரைப்படங்கள் எதையும் அம்மா தவறவிடுவது இல்லை. 'பாப்புலர்ல 'வண்ணக்கிளி’ போட்டிருக்கான். வா, போவோம்’. அம்மாவுக்குத் துணையாக ஜெயா அக்கா வருவாள். கறுப்பு வெள்ளைத் திரைப்படம்தான் என்றாலும், 'வண்ணக்கிளி’ எனக்குப் பிடித்திருந்தது. 'சின்ன பாப்பா எங்கள் செல்லப் பாப்பா’, 'அடிக்கிற கைதான் அணைக்கும்’ போன்ற பாடல்களின் காட்சியமைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.

அப்போது புதுப் படங்களுக்கு இணையாக பழைய திரைப்படங்களுக்கும் 'இன்று முதல்’ போஸ்டர் ஒட்டி, தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்து, சினிமா கொட்டு அடித்து, ரோஸ், மஞ்சள் கலர் சாணிப் பேப்பரில் நோட்டீஸ் கொடுப்பார்கள். போன தலை முறையினரின் மனதில் தங்கிவிட்ட 'பாசமலர்’, 'பார் மகளே பார்’, 'கற்பகம்’, 'அடுத்த வீட்டுப் பெண்’, 'இரும்புத் திரை’, 'நெஞ்சம் மறப்பதில்லை’, 'சர்வர் சுந்தரம்’ போன்ற பழைய படங்களை எப்படியும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது திருநெல்வேலியின் ஏதாவது ஒரு தியேட்டரில் திரையிடுவார்கள். மேற்குறிப்பிட்ட எல்லாப் படங்களையும் ராயல், பார்வதி, ரத்னா, லட்சுமி தியேட்டர்களில் நான் பார்த்து இருக்கிறேன்.

அநேகமாக தீபாவளி, பொங்கல் ரிலீஸுக்கு முன்பு உள்ள இடைப்பட்ட நேரத்தில், இதுபோன்ற பழைய படங்கள் வரும். சில படங்களுக்கு ஒரு வார காலமும் கூட்டம் இருக்கும். அதற்குப் பிறகு வந்த புதுப் படங்களில் சில ஓடாமல் போனதும் உண்டு. 'ஒளுங்கா மரியாதயா 'இருவர் உள்ளம்’ படத்¬தயேத் தூக்காம இருந்திருக்கலாம். ஐயருக்கு ஆச. அந்தாக்ல புதுப் படம் அள்ளிக் குடுத்துரும்னு!’
சில குறிப்பிட்ட படங்கள் அபூர்வமாகத்தான் திரையிடப்படும். திருநெல்வேலி மாவட்டத்தின் எந்த ஊரில் தங்களுக்கு விருப்பமான படம் திரையிடப்பட்டு இருந்தாலும், அங்கு போய் படம் பார்த்துவிட்டு வருவதற்கு சோம்பற்படாத மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். 'திருச்செந்தூர் போறதுக்கு வீராவரம் பஸ் ஸ்டாண்ட்ல நிக்கேன். அம்பாசமுத்ரம் பஸ்ஸுக்குப் பொறத் தாடி 'வடிவுக்கு வளைகாப்பு’ வால் போஸ்ட்டு ஒட்டியிருந்தான். ஒரு நிமிசம்கூட யோசிக்க லெல்லா. அந்தாக்ல ஒரு சர்பத்த குடிச்சுட்டு ஏறிட்டேன். படம் பாத்துட்டு ராத்திரிதான் வீட்டுக்கு வந்தேன். சோறு வைக்கும்போது ஒங்க பெரியம்மை மொனங்குனா. சனிக் கௌம செகண்ட் ஷோ ராயல் டாக்கீஸ்ல 'இரும்புத் திரை’க்குக் கூட்டீட்டுப் போற வரைக்கும் மூஞ்சியத் தூக்கிட்டேத்தானே இருந்தா.’ - சுந்தரம் பிள்ளை பெரியப்பா சொல்வார்.
திருநெல்வேலியில் நான் பார்த்து ரசித்த படங்களைப்பற்றிய இனிமையான நினைவுகள் இன்னும் என் மனதில் தங்கியிருக்கக் காரணம், அந்தப் படங்கள் மட்டும் அல்ல. அதன் சூழலும்தான். பார்வதி தியேட்டரில் படம் பார்க்கும்போது எல்லாம், இடைவேளையில் பால்கனியில் ஸ்டைலாக நின்று சிகரெட் பிடித்தபடி, கீழே பெஞ்ச் டிக்கெட்டில் உள்ள அக்காக்களைப் பார்த்து ரசிக்கும் பெயர் தெரியாத அண்ணன்களின் முகங்கள் இன்றைக்கும் நினைவில் உள்ளது. 'அன்புக்கு நான் அடிமை’ பார்க்கச் சென்றபோது, பால்கனியில் கணேசண்ணன் தன்னை மறந்து சிகரெட் பிடித்தபடி யாரோ ஒரு அக்காவை ரசித்துக்கொண்டு இருந்தான். சரியாக அந்த அக்கா கணேசண்ணனை நிமிர்ந்து பார்க்கும் போது, கணேசண்ணனின் பிடரியில் படீரென்று ஓர் அடி விழுந்தது. 'பெரிய மைசூரு மகராசா. உப்பரிகைல நின்னு பொம்பளேள பாக்கான். பீடி குடிக்கக் கூடாதுன்னு சிலைடு போடுதவன் கோட்டிக் காரனால’-தரதரவென்று சட்டையைப் பிடித்து போலீஸ்காரர் இழுத்துப் போனார்.
திடீரென்று ஒருநாள் அம்மன் சந்நிதியில் வெங்காச்சு மாமாவுக்குச் சொந்தமான ஒற்றை அறைகொண்ட 'சுசி எலெக்ட்ரிக்கல்ஸ்’ கடையில் இருந்து வயர்கள் இழுத்து எல்லா வீடுகளுக்கும் கனெக்ஷன் கொடுத்தார் மணி. அந்தச் சின்னஞ் சிறிய அறையில் உள்ள ஒரு வீடியோ கேஸட் ப்ளேயரில் அவர் போடும் படம், எல்லா வீடுகளின் டி.வி-க்களிலும் தெரிந்தது. ஆச்சர்யம் தாங்காமல் 'சுசி எலெக்ட்ரிக்கல்ஸ்’ கடையையே பார்த்துக்கொண்டு இருந்தோம். 'ஏ, அதென்னடே! அம்புட்டுப்போல ரூம்புக்குள்ள இருந்து அவன் போடுத படம் எளுவது வீட்டுக்கும் எப்பிடித் தெரியுது?’
'யோவ், அதான் அவன் கடைல இருந்து வயர் இளுக்காம்லா. அது நேரே தங்க மாரியப்பன் செட்டியார் அண்ணாச்சி வீட்டுக்குப் போகுது, பாரும். அது வளியாத்தான் தெரியுது.’
'வே, நான் என்ன கூறுகெட்டவன்னு நெனச்சேரா? செட்டியார் வீட்டுலேருந்து போற வயர்ல இருந்து எப்பிடிவே வள்ளிநாயகம் ஸார்வாள் வீட்டு லைனுக்குப் படம் போகும்?’
குழப்பம் தீராமல் புலம்பிக்கொண்டு இருந்த அம்மன் சந்நிதிக்காரர்களை, அடுத்தடுத்து சுசி எலெக்ட்ரிக்கல்ஸ் மணி போட்ட படங்கள் அசர அடித்தன. அதற்குப் பிறகு படங்கள் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டனர். 'இந்த மணிப் பயல டேபிள் டி.வி-ல 'அரசிளங்குமரி’ போடச் சொல்லணும்டே. பாத்து எவ்வளவு நாளாச்சு’. அதை கேபிள் டி.வி. என்றுகூட ராமையா மாமாவால் சொல்லத் தெரியவில்லை.

ஒரே படத்தை மதியம் ஒரு முறையும் இரவு ஒரு முறையும் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்புவார் மணி. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பிற்பகலின் குட்டித் தூக்கத்துக்குப் பின் இல்லத்தரசிகள் பார்ப்பதற்கு மதிய ஒளிபரப்பு. வேலைக்குச் சென்றுவிட்டு வரும் ஆண்களுக்கு இரவு ஒளிபரப்பு. அப்போது தனியார் தொலைக்காட்சிகள் தயாரிக்கும் 'ராமாயண நீளத் தொலைக்காட்சி மெகா தொடர்கள்’ அறிமுகம் ஆகவில்லை. 'இப்படி ஓர் தாலாட்டு பாடவா’ பாட்டுக்காகவே ஆச ஆசயா 'அவர்கள்’ படம் பாக்க உக்காந்தென் பாத்துக்கோ... எப்பொ கண் அசந்தேன்னே தெரியல. ச்சை... ராத்திரி இன்னொரு மட்டம் போடுவான்லா. அப்பம் எப்பிடியாவது பாத்துரணும்’. மதியம் விட்ட படத்தை இரவு எப்படியும் பிடித்துவிடும் வைராக்கியத்துடன் சொல்வாள் சிவகாமி மதினி.
வீடியோ கேஸட்டுகள் மெள்ளப் பொலிவிழந்து வி.சி.டி. எனும் குறுந்தகடுகள் வர ஆரம்பித்தன. 'டெக்னாலஜி என்னமா வளந்திருக்குய்யா!’ என்ற ஆச்சர்யம் நீங்காமலேயே, யானை விலை, குதிரை விலை கொடுத்து வி.சி.டி-க்கள் வாங்க ஆரம்பித்தபோது சென்னைக்கு வந்துவிட்டேன்.
'வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களிடம் உள்ள ஏராளமான வீடியோ கேஸட்டுகள் அனைத்துக்கும் பூஞ்சை பிடித்து உடல் நலக் குறைவு ஏற்படும்போது, அவற்றைச் சுத்தம் செய்ய ஜெமினி பார்சன் கட்டடத்தில் உள்ள ஒரு கடைக்கு எடுத்துச் செல்வோம். 'ஸார், சி.டி-ல படம் பாருங்க ஸார். இதெல்லாம் இனி வேலைக்கு ஆவாது. கூடிய சீக்கிரம் எல்.டி வரப்போகுது. நீங்க இன்னும் பழைய கேஸட்டுகள வெச்சிக்கிட்டு இருக்கீங்க.’ கடைக்காரர் புலம்புவார். அவர் சொன்ன எல்.டி என்னும் லேசர் டிஸ்க், கல்லூர்ப் பிள்ளை கடையில் உள்ள பெரிய தோசைக் கல் சைஸுக்கு வந்தது. அதை போட்டுப் பார்ப்பதற்கு அதைவிடப் பெரிதாக ஒரு ப்ளேயர். அல்பாயுசில் மறைந்துபோன எல்.டி-க்கள், இப்போதும் சில நண்பர்களின் வீட்டில் பழைய ஓட்டை உடைசல் சாமான் களுடன் ஒளிந்து இருப்பதைப் பார்க் கிறேன்.
வாத்தியாரிடம் இருக்கிற படங்கள் போக சில அபூர்வமான உலகத் திரைப்படங்கள் பார்க்க, ஃபிலிம் சொஸைட்டியைத்தான் நம்பி இருக்க வேண்டும். வேற்று தேசத்துத் திரைப்படங்கள், நமது அண்டை மாநிலத்துப் படங்கள் பார்ப்பதும் ஃபிலிம் சொஸைட்டிக்கள் வழியாகத்தான். சத்யஜித் ரேயின் 'பதேர் பாஞ்சாலி’, கிரீஷ் காசரவள்ளியின் 'கதஷ்ரதா’, அடூர் கோபாலகிருஷ்ணனின் 'எலிப்பத்தாயம், மதிலுகள்’, கே.ஜி.ஜார்ஜின் 'மற்றோர் ஆள்’, எம்.டி.வாசுதேவன் நாயரின் 'நிர்மால்யம்’ போன்ற பல படங்களை வெவ்வேறு திரைப்பட விழாக்களில் பார்த்திருக்கிறேன்.
சில உலகத் திரைப்படங்களைப் பார்க்கும்போது புரிகிற மாதிரியே இருக்கும். ஆனால் புரியாது. ஆனாலும், மற்றவர்கள் முன்னால் கௌரவமாகத் தெரிவதற்காக, கண் கலங்கி எல்லாம் அழுதிருக்கிறேன். ஒருமுறை ஒரு ஜெர்மன் திரைப்படம் பார்க்கும்போது 'நினைத்தாலே இனிக்கும்’ இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேல் என் அருகில் அமர்ந்திருந்தான். ஒரு குறிப்பிட்ட காட்சியில் நான் கண் கலங்கியதைக் கவனித்துவிட்டான். 'ஏன்டா அழறே?’ பதறிப்போய் கேட்டான். 'ஒண்ணுமே புரியலடா’ என்று என் கண்ணீருக்கான காரணத்தைச் சொன்னேன். 'அப்பாடா’ என்று அவனிடம் இருந்து நிம்மதிப் பெருமூச்சு. ஏனென்றால், படம் போட்டதில் இருந்தே இதே காரணத்துக்காக அவன் கண்களும் கலங்கிக்கொண்டு இருந்தன.
இப்போது கணிசமான அளவில் எல்லாப் படங்களும் டி.வி.டி-க்களில் புழங்குகின்றன. 15 வருடங்களுக்கு முன்பே இதைச் சொன்னார் வாத்தியார். 'வேணாப் பாரேன். இன்னும் கொஞ்ச நாள்தான் இந்த மாதிரி ஃபிலிம் சொஸைட்டிகளுக்கு வந்து நாம உலகப் படம்லாம் பாக்குறது நடக்கும். கூடிய சீக்கிரமே சின்ன வெங்காயம் வாங்குற
கடைலயே செர்ஜியோ லியோனி படமும் வாங்கத்தான் போறோம்!’ வாத்தியார் சொன்னது வாஸ்தவம்தான். கொரிய இயக்குநர் கிம்-கி-டக், இத்தாலிய இயக்குநர் Giuseppe Tornatore, ஸ்பானிஷ் இயக்குநர் Pedro Almodovar போன்ற வெளிநாட்டு இயக்குநர்களின் படங்கள் ரிலீஸான சூட்டோடு சூடாக நம் கைகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் சினிமா சேனல்கள் கவனிப்பாரற்றுத் தொடர்ந்து பல கிளாஸிக்குகளைக் காண்பித்துக்கொண்டே இருக்க, நாம் ரிமோட் கன்ட்ரோலை வைத்துக்கொண்டு தாவித் தாவிச் சென்றுகொண்டே இருக்கிறோம்.
வெளிநாட்டுப் படங்கள்தான் என்று இல்லை. சிறு வயதில் தேடித் தேடிப் பார்த்த பல தமிழ்த் திரைப்படங்களின் மேல் உள்ள பிரியமும் மெள்ள வடிந்துகொண்டு இருக்கிறது. வட பழனியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் அமைந்து இருக்கும் ஒரு கடைக்கு அடிக்கடி செல்வேன். பல விதமான புத்தகங்கள், இசை மற்றும் சினிமா சி.டி, டி.வி.டி-க்களை விற்பனை செய்யும் கடை அது. நோக்கம் எதுவும் இல்லாமல் சும்மா அந்த சி.டி, டி.வி.டி-க்களை மேயும்போது, சில அபூர்வமான படங்கள் கிட்டுவது உண்டு. இப்போது அநேகமாக ஏதாவதொரு தொலைக்காட்சியில் நமது விருப்பப் படங்கள் ஒளிபரப் பாகிக்கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், நமது ஓய்வு நேரத்தில் சாவகாசமாக உட்கார்ந்து அசை போட்டபடி பார்ப்பதற்காக, சில படங்களின் டி.வி.டி-க்களை வாங்குவேன்.

திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டரில் காத்துக்கிடந்து பார்த்த 'ஒரு கைதியின் டைரி’, பெரியண்ணன் தன் கல்யாணத்துக்குப் பிறகு சின்னப்பிள்ளைகளாக இருந்த எங்களை அழைத்துச் சென்று பார்வதி தியேட்டரில் காண்பித்த பழைய கறுப்பு வெள்ளைத் திரைப் படமான 'மாயா பஜார், 'கண்ணன் வந்து பாடுகின்றான், ராஜராஜ சோழன் நான்’ போன்ற பாடல்களுக்காகவே மீண்டும் மீண்டும் 'ராயல்’ தியேட்டரில் நான் போய்ப் பார்த்த 'ரெட்டைவால் குருவி’, பூர்ணகலா தியேட்டரே கதியாகக்கிடந்து பார்த்து மகிழ்ந்த 'பூவே பூச்சூட வா’ போன்ற படங்களின் டி.வி.டி-க்களை மறு யோசனை இல்லாமல் அள்ளி வந்தேன்.
ஆசை ஆசையாக வாங்கி வந்த இந்தப் படங்களை ஒன்றுவிடாமல் ஹோம் தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தினமும் நினைக்கிறேன். இன்னும் ஒரு டி.வி.டி-யின் கவரைக்கூடப் பிரித்தபாடில்லை!
- சுவாசிப்போம்