மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

முத்தத்தைவிடச் சிறந்தது எது?

##~##

கண்.சிவகுமார், திருமருகல்.

 முத்தம்! காதலுக்கு அதைவிடச் சிறந்த 'இது’ எது?

இரண்டாவது முத்தம்!

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

தாய்மொழியான தமிழில் பேசுவதையே பலர் தரக் குறைவாக நினைக்கிறார்களே?

தரம் கெட்டவர்கள்தான் தமிழில் பேசுவதைத் தரக் குறைவாக நினைப்பார்கள். தமிழ் போன்ற ஒரு மொழி உங்களுக்குத் தாய்மொழி யாக அமைய நீங்கள் பல ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பிரச்னை அதுவல்ல.

  தாய்மொழியாக இருப்பதால், தமிழில் பேசு கிற ஒருவருக்கு அடிப்படைக் கல்வி அறிவாவது இருந்திருக்குமா என்கிற சந்தேகம் மற்றவருக்கு வரலாம் என்கிற 'காம்ப்ளெக்ஸ்’தான் காரணம். ஆங்கிலம் கல்விக் கூடத்தில் கற்றுக்கொள்கிற மொழி. அதைப் பெருமையாகப் பேசிக் காட்டுகிறார்கள். சினிமாவில்கூட சரோஜாதேவி விவசாயி ஆக வரும் எம்.ஜி.ஆரை இங்கிலீஷில் கிண்டல் செய்ய... எம்.ஜி.ஆர். பதிலுக்கு இங்கிலீஷில் சரமாரியாகப் பேசி சரோஜா தேவியைத் திகைக்கவைப்பார். நினைவு இருக்கிறதா?!

ஹாய் மதன் கேள்வி - பதில்

அனன்யா, திருச்சி.

பதில் சொல்லிச் சொல்லி உங்களுக்கு அலுக்கவில்லையா?! (கேள்வி கேட்டுக் கேட்டு உங்களுக்கு அலுக்கவில்லையா என்கிற பதிலைத் தவிர்க்கவும்)

பொது அறிவு கடல் அளவு. நானும் நீங்களும் சேர்ந்து அந்தக் கடல் நீரில் ஒரே ஒரு விரலை மட்டும் வாராவாரம் நனைத்துக்கொண்டு இருக்கிறோம். எப்படி அலுக்கும் அனன்யா?!

அமல்ராஜ், பாபநாசம்.

நம்மைப்போலவே உணவு அருந்துவது, காலைக் கடன் கழிப்பது, நமக்கு உள்ள வியாதிகளும் அவர்களுக்கு உள்ளது. நம்மைப்போலவே தூங்கி விழிக் கிறார்கள் சாமியார்கள். இவர்களுக்கு எப்படி சக்தி வரும்?

உடல் வேறு, மனசு வேறு. உடற் கூற்றையும் (Biology) ஆன்மிக வலிமையையும் (Spirituality) ஏன் போட்டுக் குழப்பிக்கொள்கிறீர்கள்? புத்த பகவானுக்கும் ரமண மகரிஷிக்கும் நோய்கள் வந்தன. ஓர் ஊழல் அரசியல்வாதிக் கும், தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்பவனுக்கும் நோய்கள் வரலாம். உடனே, எல்லோரும் ஒன்றாகிவிடுவார்களா?

கே.வெங்கட், விழுப்புரம்.

சாமியார்களின் சடை முடி, பெண்களின் கூந்தல் - ஒப்பிடவும்?

ஒற்றுமை - முடி. வேற்றுமை - இதுவரை சாமியார்களின் சடா முடிக்காக ஒரு ஷாம்பு, 'டை’ விளம்பரம்கூட நான் டி.வி-யில் பார்த்தது இல்லை!

விஜயலட்சுமி, சென்னை-74.

இயற்கைக்கு மாறான வழியில் - உதாரணமாக மிருகங்களுடன் மனிதர்கள் செக்ஸ் உறவுவைத்துக் கொள்ள முயற்சிப்பது, ஏன்?

சிலருக்கு அது 'இயற்கைக்கு மாறாக’ இல்லா மல் இருக்கலாமே! அந்தச் செயலுக்குப் பெயர் Bestiality. திரும்பத் திரும்ப அதைச் செய்ய விரும் பினால், அதை Zoophilia என்கிறார்கள். பிரபல செக்ஸ் ஆய்வாளர் டாக்டர் கின்ஸே, 'ஆண்களில் 8சதவிகிதத்தினருக்கும்பெண்களில் 3.6 சத விகிதத்தினருக்கும் இதில் விருப்பம் இருப்பதாக’ எழுதி இருக்கிறார். ஆண்கள், ஆடு மாடுகளு டனும், பெண்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளிடமும் இந்தவித செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்கிறார். ஆச்சர்யம்! - கஜூரஹோ கோயிலில் குதிரையைப் புணரும் பெண்ணின் சிற்பம் இருக்கிறது. இது, மனோதத்துவ காரணங்களால் ஏற்படும் ஒரு வகையான 'பெர்வெர்ஷன்’தான். (மனிதத் தலையுடன் ஆடு கன்று போடுவது எல்லாம், மகா கப்ஸா!)

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

மிகக் குறைந்த வயதிலேயே இப்போது எல்லாம் பெண்கள் செக்ஸ்பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனரே?

பேசவா..?!

மேகார்ஸ் புஷ்பராஜ், கடலூர்.

இன்று லஞ்சம் வாங்குவதிலும், கட்டப் பஞ்சாயத்து செய்வதிலும் ஆண் போலீஸாருக்கு இணையாக 'சாதனை’ புரிந்துகொண்டு இருக்கும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் நமக்குத் தேவையா?

ஒரு பக்கம் சம உரிமை அது இதுன்னெல்லாம் பேசிக்கிட்டு, இன்னொரு பக்கம் இப்படிப் போய் ஒரு கேள்வியைக் கேக்கறீங்களே!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உண்மையிலேயே புராண காலத்தில் நாரதர் கலகம் மூட்டிக்கொண்டுதான் இருந்தாரா?

முதலில் நாரதர் என்பவரே... இருந்தாரா?!

விஜயலக்ஷ்மி, சென்னை-74.

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஒரு கவர்ச்சி நடிகை தனது கைக்குட்டையை எங்கே வைத்துக்கொள்வார்?

அட, அவர் உடுத்திக்கொண்டு இருப்பதே அதைத்தானே?!

மஞ்சு வாசுதேவன், நவிமும்பை.

கடைசியாகக் கண்ட கனவு பலித்ததா?

நீங்க வேற! கண்டகனவெல்லாம் எப்படிங்க பலிக்கும்?