
அண்ணி
'நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினிகூட வளையல் குலுங்க, இவன் கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்கு சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக, இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி, அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக் குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக் கோணிக் கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும்.’ - கோணங்கி ('மதினிமார்கள் கதை’ தொகுப்பில் இருந்து...)
யாரோ எங்கிருந்தோ காற்றில் சுண்டிய ஒரு ரூபாய் நாணயம் அணிலாடும் முன்றிலில் வந்து விழுந்தது. தலை கிறுகிறுத்து, ஏழெட்டுச் சுற்று சுற்றிவிட்டுத் தன் அதிர்வடங்கி அமர்ந் தது. நாணயத்தில் இருந்த பூவும் தலையும், தாங்கள் எங்கு இருக்கிறோம் என ஒரு முறை பார்த்துக்கொண்டன. பூ, தலையில் இருந்தது. தலை, தரையில் இருந்தது. இரண்டும் அணிலாடும் முன்றிலில் இருந்தன.
''இந்த இடம் 'அணிலாடும் முன்றில்''’ என்றது பூ, தலையிடம்.
''அப்படியா? இந்த வாரம் என்ன உறவு? இரு, நான் எட்டிப்பார்த்துவிட்டு வருகிறேன்...'' என்று தலை சொன்னது.
''வேண்டாம். நான் ஏற்கெனவேபார்த்து விட்டேன். இந்த வாரத் தலைப்பு'அண்ணி.’ '' என்றது பூ.

''அப்படியா? கட்டுரை எப்படி இருக் கிறது?'' என்றது தலை.
''கதை சொல்லும் பாணியில் சொல்லப்பட்டு இருக்கிறது'' என்றது பூ.
''என்ன கதை?'' தலை கேட்க,
''நீயே பார்த்துக்கொள்ளேன்...'' என்றது பூ. இரண்டும் எட்டிப் பார்த்தன.
அண்ணி வந்த கதை!
தினம் தினம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் செடியில் நமக்கே தெரியாமல் திடீர் என்று ஒருநாள் புதிதாகப் பூ பூத்து இருப்பதைப்போல, நம் வீட்டுக்குள் வந்து விடுகிறார்கள் அண்ணிகள்.
வாசல் கோலத்தின் அரிசி மாவில் விருந்து உண்ண வரும் எறும்புகள் வாய் பிளந்து அண்ணிகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே, தோட்டம் சுத்தமாக; வீடு நேராக; கொல்லைப்புறத்துக் கொடிக் கயிற்றில் வானவில் வானவில்லாகப் புதிய புதிய புடவைகள் காயத் தொடங்குகின்றன.
அம்மாவின் அதே பழைய ருசியில் இருந்து திசை தப்பி, அண்ணி கைச் சமையலின் புதிய ருசிக்கு நாக்கின் சுவை மொட்டுக்கள் மலரத் தொடங்குகையில்; அம்மாவின் கோபம் அஞ்சறைப் பெட்டியில் குறுமிளகாக ஒளிந்துகொள்கிறது.
இத்தனை நாள் சொல்லியும் கேளாமல் இரவு 11 மணிக்கு மேல் லேசான பீரும்; பெட்டிக் கடை ஹால்ஸும் கலந்த வாசனையுடன் வந்து கதவைத் தட்டும் பிள்ளைகள், அண்ணி வந்த இரண்டொரு நாட்களில்... கதவைத் திறக்கும் அண்ணியின் கண்களைச் சந்திக்கக் கூச்சப்பட்டு, 8 மணிக்குள்ளாகவே வீட்டுக்குள் அடங்கிவிடுகையில், அம்மா கையில் இருந்த கொத்துச் சாவி, அண்ணி யின் கைகளுக்கு இடம் மாறிவிடுகிறது.
அண்ணியால் வளர்ந்த கதை!
அண்ணி வந்த பிறகு, அண்ணனுடனான நமது உரையாடல்களைக் கவனித்து இருக்கிறீர்களா? நம்மை அறியாமலேயே ஒரு கூடுதல் மரியாதையை நம் உதடுகளில் இருந்து அண்ணனுக்குப் பெற்றுத் தருகிறாள் அண்ணி. அண்ணனின் பழைய சட்டையை அணிவதைத் தவிர்த்து, நமக்கான சட்டையை நாமே தேடிக்கொள்ளும் தன்னம்பிக்கையை அண்ணிகளிடம் இருந்தல்லவா நாம் பெற்றுக்கொள்கிறோம்.
அண்ணிகள் மிகவும் விரும்பிக் கேட்ட கல்கி யின் பொன்னியின் செல்வனையும்; சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளையும்; லெண்டிங் லைப்ரரியில் தேடிப் பிடித்து எடுத்து வருகையில், அண்ணிகளின் வாசிப்புப் பழக்கம் நமக்கும் அல்லவா ஒரு புதிய ஜன்னலைத் திறந்து வைக்கிறது.
அண்ணியின் தங்கை, வீட்டுக்கு வருகையில் நம்மை அறியாமல் ஒரு குறுகுறுப்பு நம்மைத் தொற்றிக்கொள்கிறது. அத்தனை ஜாக்கிரதையாக இருந்தும் அண்ணியின் கண்கள் அதை அறிந்து, ''அவ எப்பவுமே க்ளாஸ் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூ முடிச்சதும் நிச்சயம் டாக்டருக்குப் படிப்பா. நீயும் நல்லாப் படி... வீட்ல பேசறேன்'' என்று சொல்கையில், அதுவரை புரியாத அல்ஜீப்ரா கணக்குகளுக்கு எல்லாம் புதிய புதிய விடைகள் தோன்றுவதை யாரால் தடுக்க முடியும்?
அண்ணியை அறிந்த கதை!

12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பரக்கப் பரக்க புத்தகங்களைப் புரட்டிவிட்டு; அரை இட்லியும்; கால் டம்ளர் பாலுமாகச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகையில், தெரு முனைப் பிள்ளையார் கோயிலில் நமக்காக வேண்டி வந்து, நம் நெற்றியில் விபூதிவைத்து ஊதிவிடும் அண்ணிகளின் கரிசனத்துக் காகவாவது நாம் பாஸாகிவிட மாட்டோமா என்று ஓர் எண்ணம் நெஞ்சில் தோன்றும்.
ஆயினும் என் நண்பா, அண்ணிகளின் கரிசனத்தை ஆசிரியர்கள் அறிவதேஇல்லை. விடை தெரியாத கேள்விகள் நம்மைக் கன விலும் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

காய்ச்சலில் விழுந்துகிடக்கையில், ஒவ் வொரு வேளையும் கண் விழித்து உனக்கான மாத்திரைகளைக் கொடுக்கும் அண்ணிகளின் முகத்தில் நீ உன் அம்மாவைப் பார்த்திருக்கிறாயா? பின்னாளில் மீண்டெழுந்து அந்தக் கைகளுக்குத் தங்கக் காப்பு செய்து போடு. இறைவன் நமக்காகப் படைத்த இன்னொரு தாயல்லவா அண்ணி!
அண்ணியைப் பிரிந்த கதை!
வாழ்க்கை என்னும் நதி, மரணம் என்னும் கடலில் கலக்கும் வரை, வெவ்வேறு திசைகளிலும், வெவ்வேறு மேடு பள்ளங்களி லும் ஓட வேண்டியிருக்கிறது.
நமக்கும் பிள்ளைகள் பிறந்து, நம் பிள்ளை கள் நம் அண்ணியைப் பெரியம்மா என்று அழைக்கையில், கூட்டுக் குடும்பம் சிதைந்து காலம் நம்மை வேறுவேறு கரைகளில் நிறுத்திவிடுகிறது.
இன்றைக்கும் மனைவி கை சாப்பாட்டு ருசியில்; அம்மா கை சாப்பாட்டு ருசியையும்; அண்ணி கை சாப்பாட்டு ருசியையும்; நம்மை அறியாமல் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பதை மனைவியின் கைகள் அறிவதே இல்லை.
அண்ணியின் கதையைப் படித்த பூவும் தலையும் அழுதுகொண்டு இருந்தன. நாணயம் அவற்றைத் தேற்றிக்கொண்டு இருந்தது!
- அணிலாடும்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan