மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 09

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 09

எளிவந்த தன்மை!

##~##

ராஜ வீதி.

ரதத்தில் வருகிறான் ராமன்.

'மனை நலமா? மக்கள் நலமா? வருத்தமின்றி நகர்கிறதா வாழ்க்கை?’ என்று -

எதிர்ப்படுவோரையெல்லாம் குசலம் விசாரிக்கிறான் சக்கரவர்த்தித் திருமகன்!

தானொரு வேந்து எனும் தருக்கை விடுத்து சாதாரணனாய்க் காட்சியளிக்கிறான்

சாகேதத்தின் இளவரசு!

முரசு கட்டிலில் அயர்ந்த புலவனை, அரசு கட்டிலில் அமரும் புரவலன் பார்க்கிறான்; காயாமல், கண்ணுறங்கும் புலவனுக்குக் கவரி எடுத்து வீசுகிறான்.

தமிழ் இந்த நிகழ்வைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறது!

த்தகு அரிய குணத்தை இசைக்கிறது வட மொழி 'சௌலப்யம்’ என்று; வண்ணத் தமிழ் 'எளிவந்த தன்மை’ என்று!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 09

இதனால்தான் - 'பண்புடையார் மாட்டு இவ்வுலகு’ என்று தமுக்கடித்துச் சொல்கிறது தாடி வைத்த தமிழ்!

காமராஜர் காலமானபோது, சத்தியமூர்த்தி பவனில் என் தலைமையில் கவியரங்கம்.

'பெண்ணைத் திருமணம் பேசி முடித்துப்
பிள்ளை குட்டிகள் பெறுவோ மாயின்
எண்ணிய வண்ணம் என்னுயிர் நாட்டிற்
கெவ்வா றுழைப்பேன் என்று கசிந்து
மண்ணை மணந்தான்; மக்கள் தமையே
மகனாய் மகளாய் மனத்தில் நினைந்தான்;
மன்னவ னின்று மடிந்த தனாலே
மண்மக ளன்றோ மஞ்ச ளிழந்தாள்!’

- இப்படிப் பாடியதும், காமராஜரின் எளிவந்த தன்மை நினைவிற்கு வந்து, என் நண்பர் -

திரு.குமரி அனந்தன் குலுங்கிக் குலுங்கி அழுதார்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், நான் அடையாறு பெசன்ட் நகரில் குடியிருந்தேன். கடலோரம். ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது.

நான் ஸ்டுடியோவிற்குப் போய்விட்டால், அய்ந்து வயது மகனோடு என் மனைவி தனித்திருப்பாள். ஆகவே, துணைக்கு என் மனைவியின் பாட்டியை வரவழைத்து உடன் வைத்துக்கொண்டேன்.

ஒருநாள் பகல் பனிரெண்டு மணியளவில் நான் ஸ்டுடியோவிலிருந்து திரும்பிவிட்டேன்.

வீட்டில் நுழைந்ததும் வியப்பை என் விழிகள் அப்பிக்கொண்டன.

சமையற்கட்டில் - அரிவாள்மணையில் ஒரு பிரபல நடிகர் காய்கறி நறுக்கிக்கொண்டிருக்கிறார்; இன்னொரு பிரபல நடிகர் நறுக்கிய காய்கறியை, மசாலாவில் தோய்த்தெடுத்து -

வாணலியில் வறுத்துக்கொண்டு இருக்கிறார்.

என் மனைவியும், மனைவியின் பாட்டியும், அடக்க முடியாத சிரிப்போடு!

'என்ன ப்ரதர் இதெல்லாம்?’ என்று நான் கேட்க -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 09

'வாலி! பீச்சுல பாலசந்தர் படம் ஷூட்டிங்; அவர் வேற ஷாட் எடுத்துட்டிருக்காரு; எங்க காம்பினேஷன் வல்லே; சரி, உன் வீடு இங்கு இருக்கேன்னு வந்தோம்; பாட்டிக்குத் துணையா சமையல் வேலேல இறங்கிட்டோம்! எங்க சமையலெ இன்னிக்கு நீ திங்கணும்கறது உன் தலெ விதி!’ - என்று இரண்டு நடிகர்களும் மாறி மாறி விளக்கினார்கள்!

எவ்வளவு பெரிய நடிகர்கள்; என்ன எளிமை!

விடியும் வரை இதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம் நானும் என் மனைவியும் வாய் வலிக்க!

வர் பெரிய கோடீஸ்வரர். ஸ்டுடியோ; பத்திரிகை; அச்சகம் இத்யாதி இத்யாதி!

எம்.ஜி.ஆர்., சிவாஜி - இவர்களையெல்லாம் வைத்துப் படம் எடுத்தவர்; இயக்கியவர்.

ஏராளமான இந்திப் படங்கள் வேறு! அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.

அவரோடு பேசிவிட்டுத் திரும்பும்போதுதான் - என் காரை ஒரு காவல் அதிகாரி, 'நோ பார்க்கிங்’கில் நிறுத்தியிருந்ததற்காக லாக் பண்ணிவிட்டுப் போயிருப்பது தெரிந்தது.

என் டிரைவர் அந்த அதிகாரியைத் தேடிப் போயிருக்கிறான். நான் அவசரமாக வீடு திரும்ப வேண்டியிருந்ததை அறிந்த அந்தப் பெரிய மனிதர் -

'வாலி! உங்களை என் கார்ல நான் ட்ராப் பண்றேன்; வாங்க!’ என்றார்.

நான் சங்கோஜப்பட்டு, 'வேண்டாம் சார்! உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?’ என்றேன்.

அதற்கு அவர் சொன்னார்.

''வாலி! நீங்க என் கார்ல வந்தா, 'பிரபல கவிஞர் வாலி, என் கார்ல வந்தார்’னு, நான் பெருமையா எல்லார்கிட்டேயும் சொல்லிப்பேன்!''

இப்படி அவர் சொன்னதும், நான் சில்லிட்டுச் சிலிர்த்துப்போனேன்; WHAT IS HIS STATUS? AND WHAT IS MINE?

மரபில் வந்த மனிதம் இது என்று மகிழ்ந்தேன்; நெக்குருகி நெகிழ்ந்தேன்!

மேற்சொன்ன யாவிலும் மேம் பட்டதாய் இன்னொரு நிகழ்வு!

அரசின் உயர் பதவியில் இருப்பவர் அவர். அவரது அளப்பரிய சாதனைகளின் சான்றாக, அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 09

பலர் - அவரது இல்லம் சென்று, அவருக்குப் பூமாலை, பொன்னாடை அணிவித்து வாழ்த்துச் சொன்னார்கள்.

தினம் தினம் பிரமுகர்களின் கூட்டம் அலை பாய்ந்ததால், அவருக்குப் பொன்னாடை அணிவித்து ஒரு வாழ்த்துக் கூற எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஒருநாள் ஒரு பொது நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தபோது -

'உங்கள் வீட்டுக்கு வந்து உங்களுக்கு ஒரு பொன்னாடை அணிவித்து வாழ்த்துச் சொல்ல வேண்டும்; அதற்கொரு நேரம் ஒதுக்கித் தந்தால், நலமாயிருக்கும்!’ என்று கேட்டுக்கொண்டேன்.

அதற்கு அவர் 'அண்ணே! நீங்களெல்லாம் என் வீடு தேடி வரக் கூடாது; நானே உங்கள் வீட்டுக்கு வருகிறேன்; வந்து, உங்கள் வாழ்த்தைப் பெற்றுக்கொள்கிறேன். அதுதான் முறை!’ என்றார்.

'பெரிய மனிதர்; பெரிய பொறுப்பு; எங்கே வரப்போகிறார்?’ என்று நான் எண்ணியிருந்தேன்.

திடீரென்று ஒருநாள் காலை பத்து மணியளவில் வந்தார்; நான் குளித்துக்கொண்டிருந்தேன். குளித்து வரும் வரையில் காத்திருந்தார்.

நான் அவருக்குப் பொன்னாடை அணிவிக்கு முன், அவர், எனக்குப் பொன்னாடை அணிவித்து வணங்கினார்.

நான் அவரை ஆரத் தழுவி, அவரது நெற்றியில் முத்தமிட்டேன்! வியப்பிலும் மகிழ்விலும் என் பாதாதிகேசம் வியர்த்துப்போனது!

எளிவந்த தன்மைக்கு இதனினும் உண்டோ ஓர் எடுத்துக்காட்டு!

சுவாரஸ்யம் கருதிப் பெயர்களைச் சொல்லாமல்விட்டேன்; இப்போது சொல்கிறேன்.

என் வீட்டிற்கு வந்து காய்கறி நறுக்கியவர் திரு.ஜெமினிகணேசன்; காய்கறி வதக்கியவர் திரு.நாகேஷ். பாலசந்தரின் 'புன்னகை’ படப்பிடிப்புக்காக வந்தபோது!

தன் காரில் நான் வந்தால் தனக்குப் பெருமை என்று சொன்ன தனவந்தர் -

திரு.எஸ்.எஸ்.பாலன் அவர்கள்.

என் வீட்டிற்கு வந்து எனக்குப் பொன்னாடை போர்த்திய பெருமகன் -

மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள்.

ளிமையை வலிமையாய்க்கொண்டவரை எவ்வுயிரும் கை கூப்பித் தொழும்!

- சுழலும்...