Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 18

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

மைத்துனன்

'ஒரு சிலர் மட்டுமே மழையை உள்ளத்தில் இருந்து உணர்கிறார்கள்; மற்றவர்கள் நனைய மட்டுமே செய்கிறார்கள்!’
பாப் மார்லே

காட்சி-1 இடம்: ஒரு திருமண மண்டபம் DAY/EXT 

கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட ஓர் ஊரின் திருமண மண்டபம்.

எங்கு இருந்தோ வெட்டி எடுத்து வரப்பட்ட வாழை மரங்கள், வாசலின் இருபுறமும் தோரணமாகக் கட்டப்பட்டு இருக்கின்றன. அந்த மரங்களில் எப்போது வேண்டுமானாலும் வெடித்துவிடலாம் என்ற நிலையில், ரத்த நிறத்தில் வாழைப் பூக்கள், அதிகாலைச் சூரியனின் மஞ்சள் வெளிச்சத்தில் தகதகத்துக்கொண்டு இருக்கின்றன.

கழுத்துக்குள் புதைந்துகிடக்கும் கல்வைத்த நெக்லஸை எடுத்து வெளியேவிட்டபடி வெவ்வேறு வயதுள்ள, பட்டுப் புடவை அணிந்த பெண்கள், தங்கள் கணவர்களின் இரு சக்கர வாகனங்களில் இருந்தோ, ஆட்டோக்களில் இருந்தோ இறங்கி, மண்டபத்துக்குள் கேட்கும் நாகஸ்வர, மேளச் சத்தங்களுக்குள் நுழைந்து காணாமல் போகிறார்கள்.

அணிலாடும் முன்றில்! - 18

இப்போது மண்டபத்தில் இருந்து, பட்டு வேட்டி சட்டை அணிந்த மாப்பிள்ளையும் மணப்பெண்ணின் அண்ணனாகிய மைத்துனனும் புரோகிதர் துணையுடன் வாசலுக்கு வருகின்றனர். சுற்றிலும் உறவினர்கள் நின்றிருக்க... மாப்பிள்ளையைப் பார்த்து...

புரோகிதர்: ''காசிக்குப் போறேன்னு கோச்சுண்டு போங்கோ!''

கூச்சப்பட்டபடி...

மாப்பிள்ளை: ''எங்க போவணும்?''

புரோகிதர்: ''இதெல்லாம் ஒரு சடங்கு. சொந்த பந்தங்களை வெறுத்து நீங்க காசிக்குப் போறேள். உங்க மைத்துனர் வந்து தன் தங்கையைக் கல்யாணம் பண்ணிண்டு லௌகீக வாழ்க்கைல ஈடுபடச் சொல்லி சமாதானப்படுத்துவார். எங்கே சொல்லுங்கோ... 'காசிக்குப் போறேன்...’ ''

வெட்கப்பட்டபடி...

மாப்பிள்ளை: ''காசிக்குப் போறேன்.''

அருகில் இருந்த மைத்துனனை முன்னே அழைத்து...

புரோகிதர்: ''இப்ப நீங்க சொல்லுங்கோ. 'போகாதீங்க மாப்பிள்ள. பணம் தர்றேன். பொன் தர்றேன். என் தங்கச்சியையும் கட்டி வெக்கிறேன். லௌகீகத்துல ஈடுபடுங்கோ.''

மாப்பிள்ளையைவிட அதிகமாகக் கூச்சப்பட்டபடி...

மைத்துனன்: ''தங்கச்சிய தர்றேன். லௌகீகத்துல ஈடுபடுங்க!'' என்று திக்கித் திணறி சொல்லி முடிக்க, மாப்பிள்ளைக்கு மைத்துனன் பாத பூஜை செய்து, புதுச் செருப்பு அணிவித்து, குடை பிடித்தபடி மண்டபத்தின் உள்ளே அழைத்துச் செல்கிறார்.

கேமராவை நோக்கி முகம் காட்டி கூட்டத்தில் இருந்து பெரிதாக மீசை வைத்து வயது முதிர்ந்த ஒரு குரல் நகைச்சுவையாக...

குரல்: ''இந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு, இவன் காசிக்கே போலாம்.''

காட்சி-2 இடம் - கடல் DAY/EXT

டலில் ஏழெட்டுப் படகுகள் அலையில் ஆடிக்கொண்டு இருந்தன. ஒவ்வொரு படகில் இருந்தும் கட்டுமஸ்தான இளைஞர்கள் இடுப்பில் கட்டிய கயிறுடன் கடலுக்குள் முத்துக்குளிக்கக் குதிக்கின்றனர்.

கடைசியாக நிற்கும் படகில் இருந்து ஓர் இளைஞன் குதிக்கத் தயாராக, முத்துக் குளிக்கப்போகும் அந்த இளைஞனைப் பார்த்து...

படகில் இருக்கும் ஒரு முதியவர்: ''ஏலே அந்தோணி, உன் மச்சான் எங்க?''

அப்போதுதான் மீசை முளைக்கத் துவங்கியிருக்கும் ஒரு பையன், முதியவரின் முன்பு வந்து நின்றபடி...

பையன்: ''இங்கே இருக்கேன் தாத்தா.''

அந்த இளைஞனிடம்...

முதியவர்: ''உங்க அக்கா புருஷனோட இடுப்புக் கயிற புடிச்சுக்கலே. ஏலே அந்தோணி, இப்ப நீ குதிக்கலாம்'' என்று சொல்ல...

அந்தோணி படகில் இருந்து கடலில் குதிக்கிறான்.

இப்போது கண்களில் கேள்விகளுடன் முதியவரைப் பார்த்து படகில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்கும்...

பையன்: ''ஏன் தாத்தா மச்சானுங்கதான் இடுப்புக் கயிற புடிக்கணும்னு சொல்றீங்க?''

அந்தப் பையனைப் பார்த்து...

முதியவர்: ''ஏலே... உங்க அக்கா புருஷன் உசுரோட அரும மத்தவனைவிட உனக்குத்தான்லே அதிகம் தெரியும். காலகாலமா நம்ம தூத்துக்குடில இதுதான் வழக்கம்.''

கண்களில் ஆர்வத்துடன் முதியவரை நோக்கி...

அணிலாடும் முன்றில்! - 18

பையன்: ''தூத்துக்குடில மட்டும் இல்ல தாத்தா. 'ஹென்றி சாரியர்’ எழுதுன 'பட்டாம்பூச்சி’னு ஒரு புத்தகம் படிச்சேன். அதுல இதே மாதிரி ஒரு காட்சி வருது. கதாநாயகன் ஜெயில்ல இருந்து தப்பிச்சி, மேற்கிந்தியத் தீவுல முத்துக் குளிக்கிற மீனவக் கிராமத்துல ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்றான். அந்த மீனவர்கள் முத்துக் குளிக்கப் போறாங்க. அங்கேயும் நம்மள மாதிரி மச்சானுங்ககிட்டதான் இடுப்புக் கயிறைக் குடுக்குறாங்கன்னு எழுதி இருந்ததப் படிச்சேன். அதுக்கு இப்பதான் காரணம் புரியுது.''

முதியவர்: ''ஏலே... எல்லா ஊருலயும் காத்தும் வானமும் மனுஷ மனசும் ஒண்ணுதான்லே. நீ படிச்சுத் தெரிஞ்சிக்கிற... நாங்க பழகிப் புரிஞ்சிக்கறோம்'' என்று சொல்ல... அந்தப் பையன் கண் கலங்குகிறான்.

காட்சி - 3 இடம் - புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு DAY/EXT-INT 

சுற்றிலும் கைவிடப்பட்ட வயல்வெளிகளுக்கு நடுவே ஆங்காங்கே மஞ்சள் கற்கள் ஊன்றப்பட்டு இருக்க, ஏழெட்டு வீடுகள் தென்படுகின்றன.

ஒரு வீட்டின் முன்பு மினி லாரி ஒன்று நின்று கொண்டு இருக்க... கட்டில், பீரோ எனப் பாத்திர பண்டங்கள் அந்த லாரியில் ஏற்றப்படுகின்றன.

லாரிக்கு அருகில் நின்றுகொண்டு இருக்கும் இளைஞனைப் பார்த்து, 40 வயது தோற்றத்தில் இருக்கும்...

ஒருவர்: ''என்ன மாப்ள? ஆறு மாசமா கம்பெனி ஸ்டிரைக்குனு சொல்லவே இல்ல? இப்பதான் தங்கச்சி சொல்லுச்சி. அப்பவே நம்ம வீட்டுக்கு வந்திருக்கலாம் இல்ல? வாடகை கம்மின்னு இப்படி ஊருக்கு வெளிய வயக்காட்டுல இருந்துக்கிட்டு கஷ்டப்படணுமா?''

குற்றவுணர்வுடன்...

இளைஞன்: ''இல்ல மச்சான்... சமாளிச்சிக்கலாம்னு...''

முன்பு பேசிய 40 வயதுக்காரர்: ''எதுக்குக் கூச்சப்படணும்? நாங்கள்லாம் இல்லையா?''என்று சொல்ல, அந்த இளைஞன் கண் கலங்கித் தன் மனைவி, மக்களை மினி லாரியில் ஏற்று கிறான்.

வானத்தில் மிதக்கும் மேகத்தைப் பார்த்தபடி கிடத்தப்பட்டு இருக்கும் சோபாவில் ஐந்து வயதுப் பெண் குழந்தை ஏறி அமர, குலுங்கியபடி லாரி நகரத் தொடங்குகிறது.

காட்சி-4 இடம் - ஒரு பூங்கா DAY/EXT

பூங்காவில் சிமென்ட் பெஞ்ச் ஒன்றில் முதல் மூன்று காட்சிகளில் இருந்த மைத்துனர்கள் அமர்ந்து இருக்கிறார்கள்.

முதல் காட்சி மைத்துனன்: ''அன்னிக்குக் கல்யாண மண்டப வாசல்ல இருந்து என் தங்கச்சி மாப்பிள்ளையக் குடை பிடிச்சி உள்ள கூட்டிக்கிட்டுப் போனேன். இன்னிக்கு வரைக்கும் என் நிழல்லதான் இருக்கான். சீர் செனத்தின்னு எவ்ளோ செய்றது? இப்படி ஒரு உறவு தேவையா?''

அணிலாடும் முன்றில்! - 18

இரண்டாவது காட்சி மைத்துனன்: ''அப்படி இல்ல. உறவுங்கிறது ஒரு கயிறு மாதிரி. உண்மைல நாம அந்தக் கயிற பிடிக்கல. அந்தக் கயிறுதான் நம்மளப் பிடிச்சிக்கிட்டு இருக்கு.''

மூன்றாவது காட்சி மைத்துனன்: ''அது கயிறா இருந்தாலும் பாம்பா இருந்தாலும் புடிச்சித்தான் ஆகணும். ஏன்னா, அது நாம வளர்ந்த தொப்புள்கொடியோட மிச்சம்.''

இந்த உரையாடலைக் கேட்டபடி பூங்காவின் மரத்தில் இருந்து உதிர்ந்த ஒரு சருகு, கொஞ்ச நேரம் கீழே கிடந்து மீண்டும் காற்றில் பறக்கத் தொடங்கியது!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan