மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 24

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##

ழகம்பெருமாளின் தாயாராக நடிப்பதற்கு ஒரு பாட்டி தேவைப்பட்டார். திருநெல் வேலிப் பகுதியைச் சேர்ந்தவராக, முற்றிலும் புதிய முகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். புது முகங் களைத் தேடும் வேட்டையில் உதவி இயக்குநர்கள் இறங்கினார்கள். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றிவிட்டு, ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்களுடன் உதவி இயக்குநர் தியாகராஜன் வந்தார். ஏற்கெனவே 'நான் கடவுள்’ திரைப்படத்துக்காக இதே வேலையாகச் சுற்றிய 'மாபெரும் அனுபவம்’ அவருக்கு இருந்தது. நூற்றுக்கணக்கான புகைப்படங்களில் உள்ள முகங்களை சலிப்படையாமல் பார்த்துச் சலிப்படைந்து களைத்தபோது, 'சார், இந்த வீடியோவைக் கொஞ்சம் பாத்திருங்களேன்’ என்றார். குள்ளமாக, தாறுமாறான பல்வரிசையில், முறைத்துப் பார்க்கும் விழிகளுடன் ஒரு வெள்ளைச் சேலை பாட்டி இருந்தார்.

மூங்கில் மூச்சு! - 24

'ஒங்க பேரென்ன?’ கேள்வி முடியும் முன் 'குப்பம்மா’ என்ற பதில் வந்து விழுந்தது.

'வயசு?’

'அது எப்பிடியும் ஒரு எளுவத்தஞ்சு, எம்பது... எளுவதுக்கு மேல இருக்கும்!’  

'கொழந்தைங்க?’

'பிள்ளல்லாம் ஒண்ணும் இல்ல.’

'ஒங்க வீட்டுக்காரர் பேரு?’

'பேர சொல்லக் கூடாதுல்லா?’

மூங்கில் மூச்சு! - 24

'இருக்கறாரா?’

'அவ்வொல்லாம் மண்டையப் போட்டு ஆச்சு, பத்து முப்பது வருசம்.’

குப்பம்மா பாட்டியைத் தேர்வு செய்தேன்.

திருநெல்வேலியில் முதல் நாள் படப்பிடிப்பு. குப்பம்மாள் பாட்டி முதல் ஆளாகப் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்திருந்தார். துணைக்கு அவரது 75 வயது தம்பி. நான் இருக்கும் இடத்துக்கு வேகவேகமாக அவர் நடந்து வருவதைப் பார்த்து எழுந்து அவரருகில் சென்று வணங்கினேன். 'எய்யா, வணக்கம். சும்மா இருக்கியா?’ இதுதான் குப்பம்மா பாட்டி என்னிடம் பேசிய முதல் வார்த்தை. திருநெல்வேலி பகுதிகளில் பாட்டியை 'ஆச்சி’ என்றழைப்பதுதான் வழக்கம். அதன்படி நான் குப்பம்மா பாட்டியை 'ஆச்சி’ என்றழைக்க, ஒட்டுமொத்த யூனிட்டும் அவரை 'ஆச்சி’ என்றே அழைக்க ஆரம்பித்தது.

எப்போதும் வெள்ளைச் சேலை அணிந்திருக்கும் ஆச்சிக்கு, மங்கிய காவி மற்றும் நீல நிறத்தில் பருத்திப் புடவையும், கழுத்தில் அணிய ஸ்படிக, துளசி, ருத்திராட்ச மாலைகளும் கொடுக்கப்பட்டன. படப்பிடிப்பு முடிந்தவுடன் முதல் ஆளாக புடவை, மாலைகளைக் கழற்றி காஸ்ட்யூமரிடம் கொண்டு கொடுப்பார். 'எய்யா, சரி பாத்துக்கிடுங்க.’ 'எல்லாம் சரியாத்தான் இருக்கும் ஆச்சி’ என்று சொன்னால் விட மாட்டார். 'காலைல என்ட்ட குடுத்தது குடுத்த மாரி இருக்கான்னு அவ்வளத்தையும் எண்ணுங்கய்யா.’ சரிபார்த்துச் சொன்னால்தான் அந்த இடத்தை விட்டு நகர்வார்.

'சினிமால்லாம் பாத்திருக்கியா ஆச்சி?’ படப்பிடிப்பின் இடைவெளியில் கேட்பேன். 'எங்க வீட்டய்யா ரெண்டு மூணு படத்துக்குக் கூட்டிட்டுப் போயிருக்காக. பேருல்லாம் நெனவு இல்ல. ஆனா, எல்லாம் கணேசன் படம்.’

அவரது காட்சிகள் இல்லையென்றாலும் படப்பிடிப்பை ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பார். 'சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதான். மாறி மாறி எடுக்கேளே! சரியாப் படம் புடிக்கற வரைக்கும் விடமாட்டிய, என்னா?’ அவ்வப்போது சந்தேகம் கேட்பார்.

மூங்கில் மூச்சு! - 24

ஒருநாள் காலையில் நான் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழையும்போது மரியாதை கொடுக்கும் வண்ணம் எழுந்து நின்றார். அருகில் சென்று ஆச்சியின் தோளைப் பிடித்து அழுத்தி உட்காரவைத்துச் சத்தம் போட்டேன். 'ஒன்ன யாரு எந்திரிக்கச் சொன்னா? பேசாம உக்காரு.’ 'என்ன இருந்தாலும் நீ மொதலாளில்லாய்யா. அந்த மரியாதய குடுக்கணும்லா’ என்றார். 'எங்க எல்லாருக்கும் நீதான் மொதலாளி. இனிமேல் எந்திரிச்சேன்னா, உன்கிட்டப் பேச மாட்டேன்’- கடுமையாகச் சொன்னவுடன் லேசாகச் சிரித்துக்கொண்டார். சாப்பாடு இடைவேளையின்போது ஆச்சியின் அருகில் போய் உட்கார்ந்தால், எழுந்து அந்த இடத்தைத் தூசிதட்டி, 'எய்யா, செத்த நேரந்தான் கட்டைய சாத்தேன்’ என்பார். 'சும்மா இரி ஆச்சி. வேல நேரத்துல தூங்கலாமா?’ 'பத்து நிமிசம் கெடந்து எந்திருச்சேன்னா, நல்ல கெதியா வேல பாக்கலாம்லா?’ என்பார்.

சின்ன வேடம்தான். வசனங்களும் அதிகம் இல்லை. ஆனாலும் 'படித்துறை’ படப்பிடிப்பில் கேமராவைப் பார்க்காமல், வசனம் பேசுவதில் குப்பம்மா ஆச்சிக்கு சிரமம் இருந்தது. சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மூதாட்டியைத் தேடிப் போய், நாம்தான் நடிக்க அழைத்து வந்திருக்கிறோம் என்பதால், அவரை அதிகம் படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 'ஸ்டார்ட்... சவுண்ட்’ என்ற உத்தரவுக் குரலுக்குப் பிறகு 'ரோலிங்’ என்று எங்கிருந்தோ யாரோ சத்தம் கொடுக் கிறார்கள். அதைத் தொடர்ந்து இயக்குநர் 'ஆக்‌ஷன்’ என்கிறார். அதற்குப் பிறகே எல்லோரும் நடிக்கத் தொடங்குகிறார்கள். இயக்குநரிடம் இருந்து 'கட்’ என்ற சொல் வந்துவிட்டால் சகஜமாகி, நடிப்பவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் குப்பம்மா ஆச்சி மெள்ள மெள்ளப் புரிந்துகொண்டார். என்ன ஒன்று, அவருக்கு அவை எல்லாம் பிடிபட ஆரம்பிக்கும் போது படம் முடிந்துவிட்டது. 'இப்பம்தான் அங்கென இங்கென திரும்பிப் பாக்காம நீ சொன்னதச் செய்ய ஆரம்பிச்சேன். அதுக் குள்ள படம் முடிஞ்சிட்டுங்கியெ?’ குறைபட்டுக் கொண்டார்.

மூங்கில் மூச்சு! - 24

குப்பம்மா ஆச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு, ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் எங்களுக்கு மற்ற காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடர்ந்தது. குப்பம்மா ஆச்சியின் சொந்த ஊரான குற்றாலத்தைத் தாண்டி எங்கள் கார் சென்றுகொண்டு இருக்கும்போது ஆச்சியைப் போய் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவுசெய்து, அவரது வீட்டுக்குச் சென்றோம். அப்போது ஆச்சி குளித்துக்கொண்டு இருந்தார். அவரது தம்பி ஓடோடிச் சென்று ஆச்சியிடம் விவரம் சொல்ல வும், அவசர அவசரமாக ஈர உடம்பில் ஒரு வெள்ளைச் சேலையைச் சுற்றிய படி ஆச்சி வந்தார். முகம் முழுதும் சிரிப்பாக 'எய்யா... வா’ என்று என் அருகில் வந்து சுருங்கிய, குளிர்ந்த விரல்களால் கைகளைப் பிடித்துக் கொண்டார். உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவரிடமும் 'எய்யா, வாருங்க வாருங்க’ என்று வரவேற்றார். உள்ளே போய் ஒரு நெளிந்த எவர்சில்வர் சொம்பை எடுத்து வந்து, தம்பியிடம் கொடுத்து காபி வாங்கி வரச் சொன்னார். 'ஆச்சி, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இப்பொதான் சாப்பிட்டுட்டு வந்தோம்’ என்றதற்கு 'என் வீட்டுக்கு வந்துட்டு ஒண்ணும் குடிக்காம, கொள்ளாமப் போகக் கூடாது’- உறுதியான குரலில் கட்டளைபோலச் சொன்னார். சொம்பை வாங்கிக்கொண்டு தள்ளாடி ஒருசில அடிகள் முன்னே சென்ற தன் தம்பியை அழைத்தார். 'ஏல, இங்கெ வா’. காதருகில் ரகசியமாக ஏதோ சொன்னார். காது சரியாகக் கேட்காத அவரது தம்பி, 'கொஞ்சம் சத்தமாச் சொல்லு. கேக்கல’ என்றார். 'நீ ஒரு செவிட்டுமூதி. வடகிட வாங்கிட்டு வால, கோட்டிக்காரப் பயல’ என்றார்.

வடையும் காபியும் தன் கையாலேயே எங்களுக்கு வழங்கிய குப்பம்மா ஆச்சியிடம் இருந்து விடைபெறும்போது, ஆச்சியின் கைகளைப் பிடித்து கொஞ்சம் பணம் கொடுத்தேன். கைகளை உதறி, 'ஆகாங்... வேண்டாம்யா. அதான் நடிச்சதுக்குச் சம்பளம் குடுத்துட்டேல்லா?’ என்று வாங்க மறுத்தார். 'ஆச்சி, அது சம்பளம். இது பேரன் பிரியமா ஆச்சிக் குக் குடுக்கேன். வாங்கு’ என்றதும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்.

சில வாரங்களுக்குப் பிறகு சென்னையில் டப்பிங் ஆரம்பமானது. குற்றாலத்தில் இருந்து குப்பம்மாள் ஆச்சி தன் தம்பியுடன் டப்பிங் தியேட்டருக்கு வந்து சேர்ந்தார். ஏ.சி-யின் குளிர் தாங்க முடியாமல், காதுகளை மறைத்து மஃப்ளர் கட்டியிருந்தார். 'ஆச்சி, சின்னப் பிள்ள மாரி ஸ்டைலால்லா இருக்கே!’ கேலி பண்ணினேன். உதட்டோரமாகச் சிரித்தபடி டப்பிங் பேச ஆரம்பித்தார். அவ்வளவு பெரிய ஸ்கிரீனில் அவர் நடித்த காட்சிகள் தெரிந்தாலும், ஆச்சியால் அதைப் பார்த்து டப்பிங் பேச முடியவில்லை. இணை இயக்குநர் பார்த்திபன் ஆச்சியின் அருகில் அமர்ந்து சொல்லச் சொல்ல, ஆச்சி திரும்பச் சொல்லிக் கொண்டு இருந்தார். 'சார், சில இடங்கள்ல ஒப்பிக்கிற மாதிரியேதான் ஆச்சியால பேச முடியுது. என்ன பண்ணலாம்?’ படப்பிடிப்பின் போதும் சொன்ன அதே அபிப்ராயத்தைக் கவலையுடன் தெரிவித்த பார்த்திபனிடம் 'பரவாயில்லங்க, நமக்கு ஆச்சியின் உருவம்தான் முக்கியம். இந்த மாதிரியான முகங்களைத் திரைல பதிவு செய்றது நம்ம கடமை’ என்றேன். சில குறிப்பிட்ட திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்கள் வரும்போது நான் ஆச்சிக்கு சொல்லிக் கொடுப்பேன்.  

'ஆச்சி, நான் சொல்றத அப்பிடியே திரும்பச் சொல்லு. என்னா?’

'சரிய்யா.’

'ஏ பேராச்சி, நல்லா பொடுபொடுன்னு காய நறுக்கு. மாப்பிள அளப்புக்கு நேரம் ஆச்சுல்லா?’

ஆச்சி திருப்பிச் சொல்லுவார். 'ஆச்சி, கொஞ்சம் வேகமாச் சொல்லு.’ சொன்னபடி வேகமாகச் சொல்லுவார். 'ஆங்... கரெக்ட்டு. இப்போ கொஞ்சம் மெதுவாச் சொல்லு.’ எரிச்சல் வந்துவிட்டது ஆச்சிக்கு. 'வெரசலா சொல்லுங்கே... பைய சொல்லுங்கே. ஏதாவது ஒண்ணு சொல்லு.’ 'என்னப் பெத்த அம்மல்லா. கோவப்படாதே’-கன்னம் தொட்டுக் கொஞ்சுவேன். சிறு பெண் குழந்தைபோல வெட்கத்தில் முகம் சிவப்பார்.

ஆச்சியின் டப்பிங் வேலைகள் முடிந்து குற்றாலத்துக்குக் கிளம்பிய பிறகு, அவ்வப்போது போனில் பேசுவது உண்டு. அவரிடம் எப்போதாவதுதான் பேச முடியும் என்றாலும், அவரது தம்பியிடம் விசாரித் துக்கொள்வோம். ஒருமுறை போனில் ஆச்சி கிடைத்தார். 'எய்யா, என் பேருல்லாம் போட்டு பேப்பர்ல வந்திருக்குன்னு என் தம்பி பேரன் கொண்டாந்து பேப்பர குடுத்தான். படிக்கத் தெரியாதுல்லா. அதான் அந்தப் பக்கத்தப் பாத்தேன். ரொம்பச் சந்தோசம்’ என்றார்.

சினிமா உலகில், எழுதி கையில் வைத்திருக்கும் திரைக்கதையை, மனதில் நினைத்தபடி படமாக எடுக்க முடிபவர்களின், படம் முடிந்தவுடனேயே ரிலீஸ் பண்ணிவிடுபவர்களின் மூதாதையர் நிறையப் புண்ணியங்கள் செய்தவர்கள். கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்பதுபோல, 'ஒரு சினிமா எடுத்துப் பார்’ என்பதற்கேற்ப பட வேலைகளும், ரிலீஸும் தாமதமாகிக் கொண்டே போனதால், வெறும் குசலம் விசாரிப்பதைத் தவிர ஆச்சியிடம் பேசு வதற்கோ, சொல்வதற்கோ விஷயம் ஏதும் இல்லாததால், இடையில் சிறிது காலம் தொடர்பு ஏதும் இல்லாமல் போனது. ஆச்சியும் அவரது தம்பியும் அவர்களாக போன் செய்து நம்மைத் தொந்தரவு செய்வதும் இல்லை.

'அடிக்கடி பேசலையேன்னு தப்பா நெனச்சுக்கிடாதெ ஆச்சி’ என்று ஒருமுறை சொன்னதற்கு, 'எய்யா, நீங்கல்லாம் பல சோலிக்காரங்க. எங்கள மனசுல நெனைக் கேளே. அதுவே போதும்’ என்றார். 'விஷயம் இருந்தால்தான் பேச வேண்டுமா? சும்மாப் பேசக் கூடாதா?’ என்று சென்ற மாதத்தில் ஒருநாள் ஆச்சியின் தம்பியிடம் தொடர்புகொண்டு பேசியபோது, அத்தனை நாள் கழித்துப் பேசினாலும், தினமும் பேசிக்கொள்பவர் போல உற்சாகமாகவே பேசினார்.

மூங்கில் மூச்சு! - 24

'எப்பிடி இருக்கிய?’

'நல்ல சௌக்யம் சார். சும்மா இருக்கேளா?’

'ஆச்சி எப்பிடி இருக்கா?’

'அக்கா எறந்து மூணு மாசமாச்சுல்லா. பதற்றத்துல ஒங்க எல்லாருக்கும் சொல்லணும்னு தோணல.  மன்னிச்சுக்கிடுங்க!’

- சுவாசிப்போம்...