மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 35

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்

நான் நாணுகின்றேன்!

##~##

'வழுதாவூர்’; 'வழுதாவூர்’; என்றோர் ஊர்; விழுப்புரம் பக்கம்.

அவ் வழுதாவூர், அடியேன் இதுகாறும் வழுத்தா ஊராயிருந்து - இப்போது நான் வாய் மணக்க வழுத்தும் ஊராகிப்போனது!

காரணம் -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 35

அகவை தொண்ணூற்றேழு வரை, அஷ்டாட்சரத்தை வைகலும் ஓதி, வீர வைஷ்ணவராய் விளங்கிப் பின் விண்ணகரம் போய் -

நித்ய சூரியாய்த் திகழும் பரமபாகவ தோத்தமரான திரு.சாமிக்கண்ணுக் கவுண்டர்!

தினம் தினம் தேவராஜப் பெருமாளுக்குத் திருவால வட்டக் கைங்கரியம் புரிந்தவரும்;

ஆச்சரிய புருஷனாகவும் - ஆச்சாரிய புருஷனாகவும் எதிராஜரால் ஏற்றுக்கொள்ளப் பட்டவரும் ஆன -

திருக்கச்சி நம்பிகள்தான், வானின்றிழிந்து வழுதாவூர் வந்தாற்போல் -

திருமண் சாத்திக்கொண்டும், திவ்வியப் பிரபந்தங்களைச் சேவித்துக்கொண்டும் திகழ்ந்த திரு.சாமிக்கண்ணனார் -

பிறிதொரு நப்பின்னையே எனப் பிறங்கிய திருமதி இலட்சுமி அம்மாளுடன் வைணவ மரபு வழுவாது இல்லறம் நடத்தி வந்தார்.

அவ் இருவருக்கும் - நாவெல்லாம் நாலாயிரம்; நெஞ்செல்லாம் நாராயணம்!

சாமிக்கண்ணனாருக்கு ஒரு சத்புத்திரர். தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி!

அனவரதமும் ஆழ்வாரில் ஆழ்வார்; இருந்தால் எழுந்தால் நின்றால் நடந்தால் - 'நாராயணா’தான்!

நாலாயிரத்துக்கும் உரையெழுதியவர்; அதை உயர்ந்த காகிதத்தில் அச்சிட்டு உலகெங்கும் விநியோகித்தவர்.

அது மட்டுமோ?

மேடையேறி 'மைக்’ கைப் பிடித்தால் - பாசுரங்கள் பாபநாசம் அருவிபோல் பாய்ந்து வந்து -

அவையோர் அகவழுக்கை அலம்பும்! நேற்று எழுதிய சினிமாப் பாட்டை நினைவில் வைத்து - மறுநாள் பேசத் தெரியாதவன் நான்!

அய்யங்கார் மரபில் வந்து, ஆழ்வார்களை மனனம் செய்யாத அடியேன் -

சாமிக்கண்ணனார் புதல்வரைக் கண்டு சர்வாங்கமும் கூசிப்போய் -

நாணி நிற்கின்றேன்!

நாளும் என்னை நாண வைத்துக்கொண்டு இருக்கும், இன்னொருவரைப் பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 35

அவர் வாயைத் திறந்தாலே, ஆழ்வார்கள் வந்து விழுவார்கள்; தினம் தினம் நுனிநாக்கில் நின்றுகொண்டிருப்பவர், திருமங்கை ஆழ்வார்.

பொழிச்சலூர் வாழ் ஸ்ரீமான் பார்த்தசாரதி அய்யங்காருக்கும், திருமதி மைதிலி அம்மை யாருக்கும் புதல்வராகப் பிறந்த -

அவர் ஒரு பத்திரிகையாளர்; என் வீட்டுக்குள் நுழையும் போதே - கடகடவென்று பாசுரங்களை என் காதுகளில் கொட்டித் தீர்ப்பார்!

நாலு ஆழ்வார் பாடல்களை நினைவில் ஒழுங்காக வைத்துக்கொள்ளாத நான் -

அவரைக் கண்டு நாணாமல் என் செய்வேன்?

இதை எழுதுங்கால் - என் சிந்தனைகள் ஸ்ரீரங்கத்திற்குச் செல்கின்றன!

துரகவி ஆழ்வார் தவிர - மற்ற ஆழ்வாரெல்லாம் மங்களா சாஸனம் செய்த -

திவ்விய க்ஷேத்திரம் திருவரங்கம்; அங்கு தெருமண் எல்லாம் திருமண்!

நம்மாழ்வாரைத் தவிர 'தேவு மற்றொன்றறியேன்’ என்று உறுதியாய் நின்று - உரகசயனனைப் பாடாது விட்டவர் மதுரகவி!

ரகசயனனென்றும்; உதகசயனனென்றும் ஆழ்வாராதிகள் சுட்டுவது -

பாலாழியிலும்; பைந்நாகப் பாயிலும் படுத்துக் கிடந்து -

பின் -

விசும்பு விட்டு அயோத்தி இறங்கி, வீடணன் வழியே -

திருவரங்கம் வந்து இரு தீர்த்தங் கள் நடுவே, அறிதுயில் கொள்ளும் அரங்கமா நகருளானை!

முப்பதாண்டு காலம், மூலை முடுக்கெல்லாம் திரிந்து -

திருவரங்கத்துத் தெருப்புழுதியை உடலிலும் உள்ளத்திலும் அப்பிக் கொண்டவன் நான்; தமிழ் என்னைத் தழுவாமலிருக்குமா?

தினம் தினம் திரும்பிய பக்கம் எலாம், திதிக்கத் திதிக்கத் திவ்வியப் பிரபந்தம் -

காது குரும்பையைக் கல்லிப் பின், புந்தியுள் புகுந்து பூந்தமிழை போதிக்குமே!

திருவரங்கத்தமுதனார் யாத்து அருளிய 'இராமானுச நூற்றந்தாதி’ யைக் கேட்டவனுக்குக் கனவில் கூடக் கட்டளைக் கலித் துறைபாட வருமே!

செங்கட் சீயம் சிரிக்க - மேட்டழகிய சிங்கர் சந்நிதிக்குக் கீழே -

ஸ்ரீரெங்கநாயகித் தாயார்க்கு முன்பு - நான்கு கால் மண்டபத்தில், அட்டணைக்கால் போட்டு அமர்ந்துகொண்டு -

தான் இயற்றிய 'இராமாவதார’த் தைத் திருவழுந்தூர்க்காரன்-

அரங்கேற்றிய ஊரல்லவா, அரங்கன் ஊர்! இவ்வூர்க்காரனுக்குக் கற்றா வர வேண்டும் கன்னித்தமிழ்?

ஸ்.எஸ்.எல்.சி. வரை - என்னுடைய SECOND LANGUAGE சமஸ்கிருதம்; பறங்கியர் காலப் பாடத் திட்டத்தில் -

வடமொழி அல்லது வண்டமிழ் - இரண்டில் ஒன்றை இரண்டாம் பாடமாகக் கற்கலாம் என்றிருந்தது!

ருப்பினும், இங்கிலீஷ் ஞானம் இருந்தோர்க்கெல்லாம், இருந்தமிழ் ஞானமும் இருந்தது இயல்பாக!

திருவாய் மொழியின் பால் தீராத மையல் மேவி நின்றதால் -

உதட்டில் ஆங்கிலத்தையும், உள்ளத்தில் அருந்தமிழையும் -

உட்கார்த்தி ஊட்டி வளர்த்தபடி, உலகு சுற்றியோர் ஆவர் -

அரங்கமா நகரத்தார்!

இல்லையேல் -

'NEWYORK TIMES’ நிருபர் - 'கணையாழி’ கஸ்தூரிரங்கனென்றும்;

SILICON VALLEY - ல் புழங்கியவர் - சிறுகதைப் பள்ளத்தாக்கிலும் ஒரு சீதளப் பூந்தென்றலாய் உலவிய 'சுஜாதா’ வென்றும்..

என்னணம் ஏற்றம் பெற ஏலும்?

ஒரு சாலை மாணாக்கரான கஸ்தூரி ரங்கனும்; 'சுஜாதா’ ரங்கராஜனும் திருவரங்கத்துத் திருவாய் மொழிப்புனலில், குடைந்தாடியோர்!

'திருமலாச்சாரி’; 'திருமலாச்சாரி’ என்று திருவரங்கம் மேல உத்தர வீதியில் ஒரு நண்பர்; என் நாடக நடிகரும் கூட!

மணவாள மாமுனிகள் மரபில் வந்தவராதலால் -

பின்னாளில் பெரிய ஸ்ரீவைஷ்ணவராகப் பரிணமித்துப் - பிரபந்தங்கள் குறித்துப் பிரவசனம் பண்ணலானார்!

அவரிடம் - திருவாய்மொழிப் பாடம் கேட்க -

வாரம் ஒருமுறை திருச்சியிலிருந்து திருவரங்கம் வருவார் -

தகவுசால் ஒரு தமிழ் வித்வான்; நெற்றியில் ஸ்ரீசூர்ணம்; பட்டு வேஷ்டி; பட்டு ஜிப்பா; நல்ல ஆகிருதி; பார்ப்பவர் யாரும் பயபக்தியோடு வணங்கி நிற்கும் பாண்டித்தியம்!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 35

அவர்தான் - அருந்தமிழ்க் கொண்டல் திரு.அய்யன்பெருமாள் கோனார் அவர்கள்!

உலகு புகழ் 'கோனார் நோட்’ஸை உருவாக்கியருளிய உத்தமர்!

திருமலாச்சாரி வீட்டில் அவரை நான் சந்தித்துத் தண்டனிடுவதுண்டு; ஒருமுறை, என்னிடம் பேரன்பு கொண்டு, அவர் கீழ்க் கண்டவாறு சொன்னார்.

'வாலி! ஒண்டமிழில் ஒருவன், நூலாயிரம் படிக்கலாம்; அவை, போலாயிரம் படிக்கலாம்; அதற்கு மேலாயிரம் படிக்கலாம்; ஆனால், நாலாயிரம் படித்தாலே யன்றி - அவனது நாக்கு, நற்றமிழ் வங்கியாகாது!

நீ - வளரும் கவிஞன்; விடாதே, ஆழ்வார் களை! வேளை கிடைக்கும் போதெல்லாம் பிரபந்தங்களைப் படி; அந்த அருளிச்செயல்கள் - உன் அறிவைச் சாணை பிடிக்கும்!’

ய்யன்பெருமாள் கோனார் அவர்கள் அறுபதாண்டுகளுக்கு முன் அடியேனுக்கு அறிவுறுத்தியதை அவ்வப்போது நினைப்பேன்.

இந்த நினைப்பை - நாளாவட்டத்தில் என்னால் நடைமுறைப்படுத்த முடியாதபடி போய்விட்டது!

ருமுறை 'சுஜாதா’ என்னிடம், 'வாலி! நீ அவதார புருஷன் எழுதின மாதிரி - வசன கவிதையில, நாலாயிரத்துக்கும் உரை எழுது; ஸ்ரீரங்கத்துல வளந்துட்டு - ஸ்ரீரங்கத்து மண்ணுக்கு நீ ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டாமா?’ என்று என்னை உசுப்பிவிட்ட போதும் -

நாலாயிரத்தைப் பாராயணம் பண்ணாமல் விட்டுவிட்டோமே என்று, நானே என்னைக் கடிந்துகொண்டேன்!

'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ எழுதி சுஜாதா தன் கடனைத் தீர்த்தார்; தீர்க்காமல் நிற்கிறது என் கடன்!

'நாலாயிரத்தை’ச் சம்பாதிக்காத வைணவன் நாற்பது லட்சத்தைச் சம்பாதித்து - ஜென்மத்தைக் கடைத் தேற்றிவிட முடியுமா?

ருபதாண்டுகளுக்கு மேலாக என்னை - நாலாயிரமும் நாராயணமும் சொல்லி நாண வைத்துக் கொண்டிருப்பவர் -

அமரர் சாமிக்கண்ணனாரின் அருமந்தப் புதல்வர் -

மாண்புமிகு அமைச்சர் பெருந்தகை - திரு.ஜெகத்ரட்சகன்!

அவர் - நாளும் நிகழ்த்துகிறார் நாவில் நாராயண வேள்வியை -

ஒரு ரிஷி போல; அவருக்கு வாய்த்த மனைவி யார் பெயரும் - ஒரு ரிஷிபத்தினி பெயர்தான்! ஆம்; அனுசூயா!

ஃதே போல் -

என்னை நாண வைத்துக் கொண்டிருக்கும் இன்னொருவர் -

'ஆழ்வார்க்கடியான்’ என நான் அன்போடு விளிக்கும் -

திரு.மை.பா.நாராயணன்!

டத்திற்குப் புதிதாகப் பாடல் எழுத வருபவர்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்: 'உங்களிடம் வாக்கு வங்கி இருந்தால்தான் - வர்ண மெட்டுக்கு ஏற்ப வார்த்தைகளைப் போட முடியும்!’

'தமிழ் உனக்கு வசப்பட -

கம்ப ராமாயணம் படி; பிரபந்தங்கள் படி!’

- பாவேந்தர் பாரதிதாசன்!

- சுழலும்...