மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

நமீதா வேண்டாம்... அனுஷ்கா வேண்டும்!

எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

கேள்வி - பதில் பகுதி இல்லாமல் பத்திரிகை நடத்துவது கஷ்டம்... ஒப்புக்கொள்கிறீரா?

மாட்டேன்! ஏனெனில், நான் எழுதுகிற விகடனிலேயே 60 ஆண்டுகளுக்கு மேலாக கேள்வி - பதில் இருந்தது இல்லை! ஆனால், எந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு உள்ளேயும் தொடர்ந்து கேள்வியும் பதிலும் இருந்துகொண்டே இருக்கும்.

'சார், இந்த வாரம்அட்டைப் படம் நமீதாவைப் போடலாமா?’

'யோவ்! அனுஷ்காதான் என் ஃபேவரைட்... அவங்க படம் கொண்டாய்யா!’

எடக்காடு பீ.சேகர், ஊட்டி.

உங்களை யாராவது திட்டினால் உங்களுக்குக் கோபம் வருமா?

என்னை யாரும் திட்ட மாட்டார்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கும் அப்பாவி நான்! ஓரிருமுறை நேரடியாகத் திட்டு வாங்கியது உண்டுதான். ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு, ஹீரோவின் நடிப்பைக் குறை கூறி விமர்சனம் செய்தேன். உடனே, அவருடைய ரசிகர்கள் எப்படியோ என் போன் நம்பரைப் பிடித்து, ரொம்ப மோசமான சென்னை பாஷையில் திட்டினார்கள். நான் மிகவும் மென்மையாகக் குரலை வைத்துக்கொண்டு 'அவருக்கு நடிப்பே வரலை. அவருக்குப் போய் ரசிகரா இருக்கீங்களே... லூஸா நீங்க? கூச்சமாவே இல்லையா உங்களுக்கு?’ என்று நிதானமாகக் கேட்க... அவங்களுக்கு பி.பி. மேலும் எகிறியது!

##~##

விஜயலஷ்மி, சென்னை-74.

வரலாறு எல்லாம் உண்மையாகத்தான் இருக்குமா? உதாரணமாக, நான் ஒரு கல்வெட்டு ஒன்றை உருவாக்கிப் புதைத்துவிடுகிறேன். அதில் 21-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தமிழகத்தை மஹாராணி விஜயலட்சுமி ஆண்டு வந்தார். அவரது மந்திரி சபையில் மதன் என்பவர், அமைச்சர் என்ற பெயரில் எடுபிடியாக இருந்தார் என்று எழுதிவைத்தால், 500 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு பொய்யாகத்தானே உலா வரும்?

'அமைச்சர் என்ற பெயரில் எடுபிடி’ என்று நீங்கள் சொல்வதை மட்டும் நான் இப்பவே ஆட்சேபிக்கிறேன். ஏதாவது ஒன்றை மட்டும் சொன்னால் நல்லது. மற்றபடி, வரலாறு எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்று எல்லா வாசகர்களுக்கும் தெரியும். தயவுசெய்து அதில் நுழைந்து குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!

வி.ரவிச்சந்திரன், ஆழ்வார்பேட்டை.

ஒரு வேளை பத்திரிகைத் துறையில் வேலை கிடைத்திரா விட்டால், நீங்கள் எந்தப் பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள்?

ஒரு டயர் கம்பெனியில், தொழிற்சாலைப் பகுதியில் மற்ற சாமானியத் தொழிலாளிகளோடு இணைந்து வேலை செய்திருப்பேன். வேறு வழி இல்லாமல் அப்ளை பண்ணி, அநேகமாக வேலை கிடைத்துவிட்ட சமயத்தில், திடீரென்று விகடனில் இருந்து கடிதம் வந்தது. பேப்பரில் பென்சில் கோடுகளை அழிக்க மட்டும் ரப்பரைப் பயன்படுத்த ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஆர்.குமரலிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

திருக்குறள் ஏன் நமது தேசிய இலக்கியமாக அறிவிக்கப்படவில்லை? ஒருவேளை தமிழ் மொழி என்பதாலா?

நிச்சயமாக! உலக அளவில் அறிஞர்கள் கூடித் தேர்வு நடத்தினால்கூட, திருக்குறளைப் பிரமிப்பூட்டும் நிகரில்லாத ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இந்தியாவிலேயே பஞ்சாப், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா என்று ஏதாவது ஒரு மாநிலத்துக்குச் சென்று கேளுங்கள். 'திருக்குறள் என்றால் என்ன?’ என்று குழப்பத்தோடு திருப்பிக் கேட்பார்கள். எத்தனை இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? (நெஜமாவே எனக்குத் தெரியாது!) தேசிய அளவில் குறளை விஸ்வரூபம் எடுக்கவைக்க நாம் இதுவரை என்ன செய்தோம்? திரும்பத் திரும்ப தமிழ்த் திருக்குறளை தமிழிலேயே 'மொழிபெயர்ப்பது’தான் இங்கே நடந்துகொண்டு இருக்கிறது. ஆசை மட்டும் இருந்தால் போதுமா?!

மேகார்ஷ் புஷ்பராஜ், கடலூர்.

வழுக்கைத் தலைக்கு விக் வைத்து மறைப்பது, விதவிதமான தொப்பிகள் அணிந்து மறைப்பது எது புத்திசாலித்தனம் சார்?

இயற்கையாகத் தலைக்கு வந்து சேர்ந்த 'தொப்பி’யே பெஸ்ட் என்பது என் தலையாய கருத்து!

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

அரசியலில் சேர வேண்டும் என்று சொன்னால், எந்தக் கட்சியில் சேறுவீர்கள்? (மாட்டிக்கிட்டீங்களா?)

இதைத்தான் 'ஃப்ராய்டியன் ஸ்லிப்’ என்பார்கள். நீங்களே அறியாமல் கேள்விக்குறிக்கு முன்னால் நீங்கள் எழுதியிருக்கும் வார்த்தையைக் கவனிக்கவும்!