சின்னச் சின்ன வண்ணக் கதைகள்!
தமிழ்
##~## |
நண்பர்களே... நீங்களும் சின்னச் சின்ன வண்ணக் கதைகளை எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். அஞ்சல் அட்டையில் எழுதினாலே போதும்.
உன் குதிரை... என் குதிரை!
நாடோடி ஒருவன், அந்த ஊருக்கு வந்தான். அங்கிருந்த குதிரைக்காரனிடம் ''எனக்கு ஊரைச் சுற்றிப் பார்க்க குதிரை வேண்டும். ஒருநாள் வாடகை எவ்வளவு?'' என்று கேட்டான்.
அதற்கு குதிரைக்காரன், ''உன்னை எனக்குத் தெரியாது. எனவே, இதன் விலையைக் கொடுத்து எடுத்துச் செல். குதிரையைக் கொடுத்ததும் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன்'' என்றான்.
நாடோடியும் ஒப்புக்கொண்டான். நாள் முழுவதும் அந்த ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, குதிரையைக் கொடுத்து, தனது பணத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

குதிரைக்காரன் வாடகை கேட்டான். அதற்கு அந்த நாடோடி, ''நான் இந்தக் குதிரையை விலை கொடுத்து வாங்கினேன். அது எனது சொந்தக் குதிரை. இப்போது அதை உனக்கு விற்றுவிட்டேன். எனது சொந்தக் குதிரையைப் பயன்படுத்தியதற்கு ஏன் வாடகை தர வேண்டும்?'' என்றான்.
குதிரைக்காரன் திகைத்து நின்றான்.
- ந.லாவன்குமார், கோவை.
புலி... கிலி!
காட்டில் தனியாகத் திரிந்து கொண்டிருந்த புலியின் கண்களில், கொழுத்த காட்டுப்பன்றி ஒன்று தென்பட்டது.
பன்றியும் புலியைப் பார்த்ததும் 'வசமாக மாட்டிக்கொண்டோமே... எப்படியாவது தப்பிக்க வேண்டும்’ என்று நினைத்தது.
பயத்தை வெளிக்காட்டாமல், ''புலியாரே... என்ன பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்? சீக்கிரம் என்னைக் கொன்று சாப்பிடுங்கள்'' என்றது.

பயந்து ஓடாமல், தைரியமாகப் பேசிய பன்றியைப் ஆச்சர்யமாகப் பார்த்தது புலி. பன்றி தொடர்ந்தது ''நான் மகத நாட்டின் அரசன். தவமிருந்த ஒரு முனிவரை தவறாகப் பேசியதற்காகப் சாபம் கொடுத்துவிட்டார். மன்னிப்புக் கேட்டேன். 'உன்னை யார் கொன்று சாப்பிடுகிறார்களோ, அவர் பன்றியாக மாறிவிடுவார். நீ சாபம் நீங்கி அரசனாக மாறுவாய்’ எனச் சொன்னார். ம்... சீக்கிரம் என்னைக் கொன்று சாபத்தை நீக்குங்கள்'' என்றபடி புலியின் முன் சென்றது.
''நான் பன்றியாக மாறுவதா... வெட்கக்கேடு!'' என்றபடி புலி எடுத்தது ஓட்டம்.
- எஸ்.சௌமியா, திருச்செங்கோடு.
கொக்குகளும்... வாத்துகளும்!
குட்டையில் மூழ்கிக் குளித்து விளையாடிய வாத்துகள் மூன்று கரையில் உட்கார்ந்தன.
அங்கே இருந்த இரண்டு கொக்குகள் ''நண்பர்களே, எத்தனை நாட்களுக்கு இந்தக் குட்டையிலேயே இருப்பீர்கள். சற்று தொலைவில் ஒரு ஆறு இருக்கிறது. அதில் பெரிய மீன்கள் உள்ளன. வாருங்கள்... அங்கே போகலாம்'' என்றன.
''வேண்டாம். தெரியாத இடத்துக்கு நான் வரவில்லை'' என்றது ஒரு வாத்து.

ஆனால், மற்ற இரண்டு வாத்துகளும் கொக்குகளின் பின்னால் சென்றன. அந்த ஆற்றை அடைந்து, மகிழ்ச்சியுடன் தண்னீரில் விளையாடின.
அப்போது அங்கே வந்த வேடன், வலையை வீசினான். கொக்குகள் பறந்துவிட்டன. பறக்க முடியாத வாத்துகள் வலையில் அகப்பட்டுக்கொண்டன.
- ச.மகாலெட்சுமி, திருச்சி.
கவனம்... கவனம்!
விவசாயி ஒருவர், தன் கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்துவிட்டார். அது, மனைவி அவருக்கு ஆசையாகப் பரிசளித்தது.
அங்கே சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களிடம், ''எனக்கு வேலை இருக்கிறது. உங்களில் யாராவது கடிகாரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், பரிசு ஒன்று கொடுப்பேன்'' என்றார்.
சிறுவர்கள் உற்சாகத்துடன் கூச்சலிட்டவாறு கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். ஒரு சிறுவன் மட்டும் போன வேகத்தில் திரும்பிவிட்டான்.
சிறிது நேரத்தில், கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி மற்ற சிறுவர்கள் கிளம்பிவிட்டனர். முதலில் வெளியே வந்த சிறுவன் மட்டும் மீண்டும் உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் கைக்கடிகாரத்துடன் வெளியே வந்தான். அதைப் பார்த்த விவசாயி, ''எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?'' என்று கேட்டார்.
''நான் உள்ளே சென்றதும் தரையில் அமைதியாக உட்கார்ந்து, காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டேன். எந்தத் திசையில் இருந்து 'டிக் டிக்’ சத்தம் வருகிறது என்று அறிந்து கண்டுபிடித்தேன்'' என்றான்.