FA பக்கங்கள்
Published:Updated:

கசக்காத மருந்து !

விஸ்வம் படங்கள் : கண்ணா

##~##

வெள்ளை உடையைப் பார்த்தவுடன்  சரணுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.

வெள்ளை ஃப்ராக், முழங்கால் வரை வெள்ளை சாக்ஸ். ஒரு கையில் சிறிய பெட்டி. மறு கையில் பிளட் பிரஷர் பார்க்கும் கருவி. நர்ஸ் உள்ளே நுழைந்ததும் அடுத்த அறைக்கு ஓடிய சரண், கதவை மூடிக்கொண்டு சிறிய இடைவெளி வழியே எட்டிப் பார்த்தான்.

தாத்தாவை அப்பாவும் அம்மாவும் சேர்ந்து திருப்பிப் போட்டனர். பின்புறத்தில் பஞ்சினால் துடைத்துவிட்டு, நர்ஸ் ஊசியைச் செலுத்தினாள். தாத்தா கண்களை மூடி, பொக்கை வாயைக் கடித்துக்கொண்டார். சரணுக்கு கண்களில் நீர் சுரந்து வழிந்தது.

பிறகு, தாத்தாவை உட்காரவைத்தனர். நர்ஸ் மஞ்சள் கேப்சூல், சாக்பீஸ் போன்ற நீளமான வெள்ளை மாத்திரை இரண்டையும் எடுக்க, அப்பா தண்ணீரை நீட்டினார். தாத்தாவோ, தம்ளரை வாங்க மறுத்தார்.

''என்னாலே முழுங்க முடியாதுடா. என்னை அப்படியே விட்டுருங்க'' என்றார்.

''பேசாம முழுங்குப்பா. உனக்கு என்ன, சின்னக் கொழந்தைனு நெனப்பா?''

கசக்காத மருந்து !

சரணின் அப்பா கத்த ஆரம்பித்ததும், தாத்தா வாயைத் திறந்தார். நர்ஸ், மாத்திரையை வாயின் உள்ளே போட்டு தண்ணீர் ஊற்ற, தாத்தா விழுங்க முயன்றபோது, இருமல் வந்தது. வாந்தி எடுத்து, படுக்கையை நாசம் செய்தார்.

சரணின் அப்பா, கன்னாபின்னாவெனக் என்று கத்தினார். மீண்டும் வேறு மாத்திரையைக் கொடுக்க, தாத்தா கஷ்டப்பட்டு விழுங்கினார்.

பிறகு, அவர் உடம்பையும் படுக்கையையும் டெட்டால் போட்டு சுத்தம் செய்தனர். பெட்ஷீட்டை  மாற்றினர். கடைசியாக, நர்ஸ் ஒரு டானிக்கை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி நீட்டினாள்.

''இது ரொம்பக் கசக்குமே!'' என்றபடி மிகவும் கஷ்டப்பட்டு அதையும் விழுங்கினார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், 100 ரூபாய் வாங்கிக்கொண்டு நர்ஸ் கிளம்பியதும், தாத்தாவின் அருகில் வந்து உட்கார்ந்தான் சரண்.

முன்பு எல்லாம் தாத்தா நன்றாகத்தான் இருந்தார். சரணுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்தது அவர்தான். அவனைக் கோயில், பூங்கா எனப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார்.ஒருநாள் திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தார். வீட்டுக்கு வந்த பிறகும் படுக்கையே கதியாகிவிட்டார்.

''என்ன தாத்தா, ரொம்பக் கஷ்டமா இருக்கா?'' என்று கேட்டான் சரண்.

தாத்தா, அவனைப் பார்த்து புன்னகை செய்தார். அந்தப் புன்னகைகூட கஷ்டப்பட்டுத்தான் வந்தது. நடுங்கும் அவரது கைகளை எடுத்து, தன் மடியில் வைத்துக்கொண்டான் சரண்.

மறுநாள் நர்ஸ் வந்துபோது, சரண் ஓடி ஒளியவில்லை. ஹாலிலேயே உட்கார்ந்திருந்தான். அப்பா, மருந்தையும் ஊசியையும் தேடினார். கிடைக்கவில்லை.  அம்மாவைப் பார்த்து, ''எங்கே வைத்தாய்?'' என்று கூச்சலிட்டார். சரணைக் கூப்பிட்டு, ''தாத்தாவின் மருந்து, மாத்திரையை விளையாட எடுத்தியா?'' என்று கேட்டார்.

முதலில் மறுத்த சரண், அப்பாவின் கோபத்தைப் பார்த்ததும் எடுத்ததை ஒப்புக்கொண்டு, தேம்பித் தேம்பி அழுதான்.

''எங்கே வெச்சிருக்கே?'' என்று கேட்டார்.

கசக்காத மருந்து !

வாசலுக்கு கூட்டிப்போய், குப்பைத் தொட்டியைக் காட்டினான். ஊசி, மருந்து, மாத்திரைகள் எல்லாம் அங்கே கிடந்தன.

அப்பா, கோபத்துடன் சரணின் முதுகில் பளார் என்று அடிக்க, அம்மா தடுத்தாள்.

''தாத்தாவை எல்லாரும் பாடாய்ப் படுத்துறீங்க. கசப்பு மருந்தை வாயிலே ஊத்துறீங்க. அதான், தூக்கி எறிஞ்சுட்டேன்'' அழுதபடியே சொன்னான் சரண்.

நர்ஸ், மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு சென்றார். கோபம் தணிந்த அப்பா, சரணை அழைத்துக்கொண்டு மருந்துக் கடைக்குக் கிளம்பினார். வழியில், ''நீ பண்ணினது தப்பு சரண். தாத்தாவுக்கு உடம்பு சரியாகணும். அதுக்குத்தான் மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறோம்'' என்றார்.

''ஆனா... கசக்காத மருந்து, வலிக்காத ஊசியாத் தரலாமே'' என்றான் சரண்.

''அந்த மாதிரி எல்லாம் கிடையாது சரண்.   தாத்தாவுக்கு சீக்கிரம் சரியாகிடும். அப்புறம் அவரோடு விளையாடலாம்'' என்றார் அப்பா.

சரண் யோசனையுடன் நடந்தான். கடையில் மருந்து வாங்கி முடித்ததும், ''உனக்கு பிஸ்கட் வேணுமா... சாக்லேட் வேணுமா?'' என்று கேட்டார்.

''எனக்கு ரெண்டும் வேண்டாம். வேற ஒண்ணு வேணும்'' என்றான்.

இருவரும் வீடு திரும்பினார்கள். தாத்தாவிடம் ஓடிய சரண், ''தாத்தா, இங்கே பாருங்க'' என்றான்.

அவன் கையில் தேன் பாட்டில். ''இது எதுக்கு சரண்?'' என்று கேட்டார் தாத்தா.

''நீங்க மருந்து சாப்பிட்டதும் இதை ஒரு வாய் குடிங்க. கசப்புத் தெரியாது'' என்றான் சரண்.

''அப்பா, உங்க கஷ்டம் எனக்கும் புரியுது. இனிமே நானும் உங்ககிட்டே கோபமாப் பேச மாட்டேன்'' என்றார் சரணின் அப்பா.

மறுநாள் முதல், நர்ஸ் மருந்தைக் கொடுத்ததும் சரண் அவன் கையாலேயே தாத்தாவுக்கு தேனை ஊட்டிவிட ஆரம்பித்தான். அப்பாவும் பக்கத்திலிருந்து தொண்டையைத் தடவிவிடுவார்.

தாத்தாவுக்கு இப்போதெல்லாம் மருந்து கசப்பதே இல்லை. அதற்குக் காரணம், சரண் கொடுக்கும் தேன் மட்டும் அல்ல; அவர்களின் அன்பும்தான்.