மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

சேமிக்கக் கூடாதது எது?

ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

குதிரையைப் படைத்தவன் கழுதையைப் படைத்தது ஏன்? ஒட்டகத்தைப் படைத்த ஆண்டவன் ஒட்டகச்சிவிங்கியைப் படைத்தது ஏன்? புலியைப் படைத்த கடவுள் பூனையைப் படைத்தது ஏன்?

ஹாய் மதன் கேள்வி - பதில்
##~##

படைப்பும் அதன் பரிணாம வளர்ச்சியும் பெரும் ஆச்சர்யம்! ஆறு கோடி வருடங்களுக்கு முன்பே 'குதிரை’ உருவாகிவிட்டது. அப்போது அதன் சைஸ் - முயல் அளவு தான். அது படிப்படியாக மாறி, வளர்ந்து, பலவிதமாகப் பிரிந்து ஒரு வழியாக சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் 'இன்றைய சைஸ் குதிரை’யாக (ஈக்வெஸ் EQUUS என்று பெயரிடப்பட்டு) மாறியது. ஆகவேதான் ஒலிம்பிக்ஸில் குதிரை சம்பந்தப்பட்ட போட்டிகளுக்கு equestrian என்று பெயர். அதேபோல ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, புலி... இவற்றுக்கு எல்லாம் 'கஸின் பிரதர்ஸ்’ உண்டு - விளக்க இடம் போதாது! சரி, குரங்குகளைப் படைத்தவன் கடைசியாக மனிதனை ஏன் படைத்தான்? பெரிய தப்பு!

எஸ்.சீனிசலாப்தீன், ராமநாதபுரம்.

இப்போது எல்லாம் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டுவிட்டாலே, இருட்டைச் சமாளிக்கத் திணறுகிறோமே... ஆதிகால மனிதர்கள் அடர்ந்த காட்டு வாழ்க்கையை எப்படிச் சமாளித்து இருப்பார்கள்?

இப்போது மாதிரிதான்! அடர்ந்த 'கான்கிரீட் காட்டில்’ ஆதிவாசிகள் மாதிரிதான் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். சிறு கடை வைத்திருக்கும் ஒரு நண்பர் என்னிடம் கண் கலங்கினார் - 'காலையில் சென்று கடையைத் திறக்கும்போதே, அபசகுனமாக மின் வெட்டு. எப்படி நான் வாழ்க்கையை நடத்துவது?’ 21-ம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் ஜூஸ் போடுபவர்கூட வியாபாரம் செய்ய முடியாத நிலை.

அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சூண்டு எடுத்து, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஜெனரேட்டர் இலவசமாகத் தர முடியும். புதிய ஆட்சி இந்தக் கொடுமையான நிலையை உடனடியாகச் சீர் செய்யாவிட்டால், மக்கள் அடியோடு நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அந்தக் கோபம் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும். நாம் வேறு என்னதான் செய்ய முடியும்?!

ஹாய் மதன் கேள்வி - பதில்

வி.திருவேங்கடம், சென்னை-4.

கபில்சிபல் - திக் விஜய் சிங்! தொலைக்காட்சிகளில் தோன்றி அதிகம் எரிச்சல் ஊட்டுபவர் யார்?

திக் விஜய் சிங்கிடம் 'எதிர் அணிக்குப் பதிலடி  தரவும். அட்டாக்!’ என்று சொல்லப்பட்டு இருக்க வேண்டும். அவர் தன் 'கடமை’யைச் செய்கிறார். எரிச்சல் ஊட்டுபவர் கபில்சிபல்தான். 'எல்லோரும் பச்சா பையனுங்க’ என்பது போன்ற 'பாடி லாங்குவேஜ்’ உடன் அலட்சியமான இகழ்ச்சிப் புன்னகையோடு... ஏதோ, தான் சாணக்கியர் - ஆஸ்கர் ஒயில்டு இருவரின் கலவை என்பதுபோல, ராம்தேவையும், அண்ணா ஹஜாரேவையும் கிண்டலாகத் தாக்கிப் பேசுவது, மகா எரிச்சல் தருகிறது. எவ்வளவு 'கெட்டிக்காரத்தனமாக’ப் பேசும்போதும் அவர் நின்றுகொண்டு இருப்பது என்னவோ ஆட்சியாளர்கள் அனுமதித்து இருக்கிற இடுப்பளவு ஊழல் சேற்றில் என்பதை அவர் மறந்துவிடுகிறார்!

அ.ராஜா ரஹ்மான், கம்பம்.

அடித்துவிட்டுத் தட்டிக்கொடுப்பது, தட்டிக்கொடுத்துவிட்டு அடிப்பது எது மேலானது?

முதலாவது, சினிமாவில் சில டைரக்டர்கள் பண்ணுவது! நடிகையை அடித்துவிட்டு, பிறகு நன்றாக நடித்துக் காட்டிவிட்டால் தட்டிக்கொடுப்பார்கள். இரண்டாவது, சினிமாவில் வில்லன் பண்ணுவது! கூட்டாளியின் அருகில் சென்று தட்டிக்கொடுத்துவிட்டு 'எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனா, காரியத்தை முடிக்காம நீ வந்தது எனக்குப் பிடிக்கலை!’ என்று சிரித்துக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவதைப் பார்த்திருப்பீர்கள். எது பெட்டர் என்று நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளவும்!

சீர்காழி சாமா, தென்பாதி.

கேள்விக்குப் பதில் கூறுவதைவிட, கேள்வி கேட்பதுதான் கடினம் என என் மனைவி கூறுகிறாள். தங்களின் மேலான பதில் என்ன?

ஒரு விதத்தில் உண்மையே! வெற்றிகரமாகப் பதிலை வாங்கிவிடுகிற கேள்வி, குறி பார்த்து ஹர்பஜன் சிங் வீசும் பந்து விக்கெட்டை வீழ்த்துவது மாதிரிதான். பாருங்கள், என் விக்கெட்டைக் காலி பண்ணிவிட்டீர்களே!

ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி.

சேமிக்கக் கூடாதது எது? சேமிப்புக்கு உரியது எது?

ஹாய் மதன் கேள்வி - பதில்

1. அழுக்கு மற்றும் சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் (இரண்டும் ஒன்றுதான்!)
2. கல்வி அறிவு மற்றும் நல்லோர் நட்பு!

ரேணுகா, நீடாமங்கலம்.

கணக்குக்கும் புலிக்கும் என்ன தொடர்பு உள்ளதோ? (கணக்குல சூரப்புலி என்பது)

கணக்கில் ரொம்ப கெட்டிக்காராக இருப்பவரோடு யாருமே கூட இருக்க மாட்டார்கள். புலியும் அவர் மாதிரியே தன்னந் தனியாகத்தான் போய்க்கொண்டு இருக்கும்!