மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 25

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடங்கள் : எல்.ராஜேந்திரன்

##~##

'எண்ணே, வெயில்லாம் கம்ப்ளீட்டா விட்டுட்டு... சந்திப் பிள்ளையார் முக்குல நின்னு பேசுதேன். சிலுசிலுனு காத்தடிக்கில்லா’-திருநெல்வேலியில் இருந்து பொன்னையன் போன் பண்ணும்போது சொன்னான். அப்படி என்றால், குற்றாலத்தில் சீஸன் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம். மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கும் மழையைத் தொடர்ந்து, குற்றால அருவிகளில் விழத் துவங்கும் அருவியின் நீர்ச் சிதறல், 50 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலியில் சாரலாகப் பெய்வது ஆச்சர்யம்தான். 'ஒரு மாதிரியா வேனல் முடிஞ்சு, சீஸன் ஆரம்பமாயிட்டு. போன வருசத்தவிட இந்த வருசம் வெயில் ஜாஸ்திடே’ - கொஞ்சம்கூட மாற்றாமல் வருடா வருடம் பெரியவர்கள் இதையே சொல்லி வருவதைக் கேட்டு இருக்கிறேன்.

மூங்கில் மூச்சு! - 25

 குற்றாலத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க அதிகரிக்க... திருநெல்வேலி ரத வீதிகளில் வெளியூர் பஸ்கள், வேன்கள் தென்படும். வருடம் பூராவும் பார்த்துச் சலித்த சொற்ப மனிதர்களின் முகங்களுக்குப் பதிலாக, நெல்லையப்பரும் காந்திமதியம்மையும் குற்றால சீஸன் புண்ணியத்தில் சில புதிய மனிதர்களைப் பார்த்து மகிழ்வார்கள். 'அவாளும் இருட்டுக்குள்ளே ஒத்தேலதானெ கெடக்கா. இப்பிடி வெளியூர்க்காரங்க வர போக இருந்தா, அசலூர்க்காரங்க சப்போர்ட்டும் நமக்கு இருக்குன்னு அவாளுக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும்லா.’ என்னமோ உடம்பு சரி இல்லாமல் படுக்கையில்கிடக்கும் நடராஜப் பிள்ளை மாமாவைப்பற்றிச் சொல்வதுபோல, நெல்லையப்பரைப்பற்றிச் சொல்வான் கணேசண்ணன்.

மூங்கில் மூச்சு! - 25

தேரடியில் வெளியூர் ரிஜிஸ்ட்ரேஷன் வண்டிகள் இளைப்பாறும். ஈரத் துணிகள் ஜன்னல் ஓரங்களில் காய்ந்துகொண்டு இருக்க, விழாக்களுக்கு வரும் சினிமா நடிகைகள்போலத் தலையை விரித்துப் போட்டபடி, குளித்த புத்துணர்ச்சியுடன் பெண்கள் இருட்டு லாலா கடைப் பக்கம் நடமாடுவார்கள். இதுபோன்ற வெளியூர் வண்டிகளில் வரும் பெண்களைப்பற்றிய தகவல் திருநெல்வேலியிலேயே குஞ்சுவுக்குத்தான் முதலில் வரும்.

ஒருநாள் அரக்கப் பரக்க ஓடி வந்தான். 'கேரளால இருந்து ஃபர்ஸ்ட் கிளாஸ் பிள்ளைய ஒரு பத்துப் பதினஞ்சு எண்ணம் கீள ரத வீதில. நிக்காம வா, ஆளுக்கு ஒரு 50 கிராம் அல்வாவ வாங்கிட்டு பேச்சுக் குடுப்போம்.’

இருட்டு லாலா கடை ஹரிசிங்க மாமா குஞ்சுவைப் பார்த்தவுடனேயே, சிரிப்பை மறைத்தபடி அல்வாவை வெட்டிக் கொடுத்தார். 'என்னடா வெளியூர்ப் பிள்ளைய நடமாட்டம் இருக்கே! மருமகனக் காணோ மேன்னு நெனச்சேன்’ என்றார். 'சே சே, நீங்க வேற மாமா. இவன் அல்வா திங்கணும்னு சொன்னான். அதான்’ என்று என்னைக் காண்பித்தபடியே, எதிரே நிற்கும் கேரள ரிஜிஸ்ட்ரேஷன் வேனை நோட்டமிட்டான். வேனில் இருந்து இறங்கி அல்வா வாங்க அவர்களாக வரும் வரைக்கும் 50 கிராம் அல்வாவை அரை மணி நேரமாகச் சாப்பிட் டோம். வேகமாகச் சாப்பிட முயன்ற என்னை ஏசினான். 'ஏம்ல பறக்கெ? மெதுவாத்தான் தின்னு தொலையேன். இன்னொரு 50 கிராம் அல்வா வாங்கத் துட்டு இல்ல.’

வேனில் இருந்து இறங்கி, அங்கும் இங்கும் போக்குக் காட்டியபடியே நெல்லையப்பர் கோயிலுக்குள் நுழையலாமா என்று யோசித்தபடி அந்தப் பெண்கள் நிற்பதைப் பார்த்து குஞ்சு பரபரப்பாகிவிட்டான். மெதுவாக, அவர்களுக்கு அருகில் சென்று, 'ஸ்தலம் எவிடயானு?’ என்று ஆரம்பித்து, 'குத்தா லத்துல கொறைய வெள்ளம் அல்லே’ என்று சம்பாஷனைக்கான அஸ்திவாரத்தைப் பலப்படுத்தினான். திருநெல்வேலியில் நாங்கள் பார்த்துப் பழகிய மலையாளப் படங்களின் வசனங்களை நினைவுகூர்ந்து, 'இரிக்யூ, பச்சே, கொள்ளாம்’ போன்ற வார்த்தைகளை இடை இடையே போட்டு, கூச்சப்படாமல் கிட்டத்தட்ட மலையாளம் மாதிரியே பேசினான்.அவர் களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று, ஒரு கைடாக நெல்லையப்பர் கோயிலின் ஸ்தல புராணம் முழுவதையும் சொல்லி, அவர்கள் மனதில் இடம்

மூங்கில் மூச்சு! - 25

பிடித்தான். 'ஈ ஸ்த்ரீ நெல்லையச்சனோட பாரியா ஆனு’ என்று காந்திமதி அம்மையை அவர்களுக்கு முறையாக அறிமுகப் படுத்தினான். என் பங்குக்கு நானும் அவ்வப் போது தோளைக் குலுக்கி 'ஓ, ஆ, ஈ’ சொல்லிக் கொண்டேன். அந்தக் கூட்டத்தில் இருந்த இளம் பெண்கள் அனைவரும் குஞ்சுவின் பேச்சை ரசித்துச் சிரித்தபடியே இருந்தனர். அவர் களுக்குத் தலைமை தாங்குபவர்போல் இருந்த ஒரு பெண்மணி, கோயிலைச் சுற்றி முடித்து, இருட்டு லாலா கடையில் அல்வா வாங்கி, வேனில் ஏறும்போது, 'தம்பி, வரட்டுமாடே? எங்க எல்லாருக்கும் புளியரைதான். பாக்கதுக்கு மலையாளத்துக்காரங்க மாரி இருக்கதுனால எங்கள மலையாளிகன்னு நெனச்சுட்டிய, நல்லாப் படிக்கணும் என்னா?’ என்று சுத்தமான திருநெல்வேலித் தமிழில் பேசி கை காட்டியபடியே விடைபெற்றார்.

திருநெல்வேலியிலேயே இருந்தாலும், சீஸன் சமயத்தில் அடிக்கடி குற்றாலத்துக்குச் சென்று அருவியில் குளிப்பதை நாங்கள் வழக்கமாக்கிக்கொள்ளவில்லை. சீஸனுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை போனால் உண்டு. சீஸன் சூடு பிடிக்கும் முன்னோ, முடிந்த பின்னோ, குறைவாகவே தண்ணீர் விழுந்தாலும் பரவாயில்லை என அந்தச் சமயத்தில் போய்க் குளிப்பதையே எப்போதும் விரும்புவேன். காரணம், கடுமையான கூட்டத்தில் சில வெளியூர் பயில்வான்கள் வந்து அருவியோடு அருவியாக நம்மைப்போட்டு அமுக்கிவிடுவார்கள். ஒருமுறை ஐந்தருவியின் ஓர் இடுக்கில் போய் பாறையில் சாய்ந்து கண் மூடிக் குளித்துக்கொண்டு இருந்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக குற்றால அருவிக்கு வந்திருந்த ஒரு வெளியூர் சினிமாஸ்கோப் சைஸ் மாமா, என் மடியில் உட்கார்ந்து முதுகு தேய்த்துக் குளித்து முடித்தார். 'அண்ணா...ஆஆஆச்சி, ஆள் இருக்க்க்க்கு, எந்திங்க... நல்லாயிருப்பிய, கால் வலிக்கி அண்ணாச்சி எந்திங்க, மூச்சு முட்டுது’ என்று நான் கதறிய சத்தம், அருவியின் பேரொலியில் எனக்கே கேட்கவில்லை.

என்னுடைய விருப்பத்துக்கு நேர்மாறாக, கடுமையான கூட்டம் இருக்கும் சமயத்தையே குஞ்சு எப்போதும் தேர்வு செய்து குற்றாலத்துக்கு இழுத்துச் செல்வான். பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் போய் தலை நனைப்பவர்களுக்கு மத்தியில், நான் ஏதாவது ஒரு அருவியில் மட்டுமே குளிப்பது உண்டு.

குற்றால சீஸனின்போது குளிப்பதைவிட,  வேடிக்கை பார்ப்பதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். ரகவாரியான தொப்பை மனிதர்கள் ஒரு வருட உடல் உஷ்ணத்தையும் அன்றைக்கு ஒரே நாளில் தணிக்கும் முயற்சியில் வழிய வழிய உடம்பில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு இருப்பார்கள். குற்றாலத்தில் புதிதாக வாங்கிய 'குத்தாலத் துண்டை’ இடுப்பில் கட்டி இருப் பார்கள். சின்ன சைஸ் 'குத்தாலத் துண்டு’ அவ்வளவு பெரிய பிரதேசத்தை மறைக்க முயன்று தோற்கும். எண்ணெய் ஊற வேண்டும் என்பதற்காக உடனே குளிக்கச் செல்லாமல், கண்களை இடுக்கிக்கொண்டு சிகரெட் பிடித்தபடி, கவர்ச்சியாக 'சில்க்’ ஸ்மிதாபோல நடமாடுவார்கள். குற்றாலத்தில் எண்ணெய்க் கடை வைத்திருப்பவர் எண்ணெய் தேய்த்து அருவியில் குளிப்பாரா என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. எனது சந்தேகத்தை எழுத்தாளர் வண்ணதாசனின் 'ஓர் அருவியும் மூன்று சிரிப்பும்’ சிறுகதை தீர்த்துவைத்தது.

ருவிக் கரை வாசலில் நிறைய மாலிஷ், மசாஜ் நிலையங்கள் உண்டு. மாலிஷ்காரர்கள் தங்களின் வாடிக்கையாளர்களைக் குப்புற, மல்லாக்கப் படுக்கப்போட்டு உடம்பு முழுவதும் தைலத்தைக் கவிழ்த்து 'மடார் மடார்’ என்று சாத்துவார்கள். 'வலிக்கலியா பெரியப்பா?’ மாலிஷ் முடிந்து குளிக்க வந்த சுந்தரம்பிள்ளை பெரியப்பாவிடம் கேட்டேன். 'வீட்ல ஒங்க பெரியம்ம அடிக்கிற அடியவிடவாடே இவன் அடிக்கான்?’ என்று அருவிக்குச் செல்லும் குதூகல மனநிலையில் ரகசியம் உடைத்தார். நானோ, நண்பர்களோ மாலிஷ் செய்தது இல்லை. ஒரே ஒரு முறை ஆசைப்பட்டபோது 'ஆம்பளைக்கு ஆம்பள பண்றதுல்லாம் மாலிஷால?’ என்று குஞ்சு தடுத்துவிட்டான்.

மூங்கில் மூச்சு! - 25

குற்றால மலைக்கு மேலே இருக்கும் செண்பகாதேவி அருவிக்கும், தேனருவிக்கும் அசராமல் செல்பவர்கள் உண்டு. செண்பகாதேவி அருவியின் தடாகச் சூழலில் சிக்கி மாண்டவர்களும் உண்டு. இவை போக 'பழத் தோட்டம்’ என்னும் ஸ்பெஷல் அருவி உண்டு. அரசியல் செல்வாக்கு மற்றும் சிபாரிசு உடைய, பென்சில் மீசை செதுக்கிய, பளபள வெள்ளைக் கரை வேட்டிக்காரர்களை மட்டுமே பழத் தோட்டத்து அருவி குளிப்பாட்டும். 'அதென்னவே பளத் தோட்டம்னு பேரு?’ 'அருவியச் சுத்தி ஒரே பலாப் பளம்தான். அதுல குளிச்சா மேலு பூரா பள வாசனதான் அடிக்குமாம்.’ பழத் தோட்டத்தில் போய்க் குளிக்கும் வாய்ப்பு இல்லாத சாமானியர்கள் ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். ஆனால், பொதுவாகவே, நிறைய மரங்களும் மூலிகைகளுமாக அடர்ந்து நிறைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து விழும் குற்றால அருவித் தண்ணீருக்கு ஒரு வாசனை இருக்கத்தான் செய்கிறது. 'எய்யா, குத்தால அருவில விளுதது தண்ணின்னா நெனைக்கே? அது அம்புட்டும் தீர்த்தம்லா! குத்தாலநாதர் அதானெ அங்கனெயெ உக்காந்துட்டாரு!’ நெல்லையப்பர் கோயிலுக் குப் பால் எடுத்து ஊற்றும் கல்யாணி ஆச்சி ஒருமுறை சொன்னாள்.

குற்றாலத்துக்குப் போக நாங்கள் கிளம்பினாலே, அம்மாக்கள் எண்ணெய், சீயக்காய், துண்டு, மாற்று உடையுடன் சாப்பாடும் தயார் செய்து கொடுத்து அனுப்புவார்கள். எலுமிச்சை, புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம் போன்ற சித்ர அன்னங்கள் அடைக்கப்பட்ட தூக்குச்சட்டிகளும் எங்களு டன் பயணிக்கும். ஆனால், அவற்றைக் குளிப்பதற்கு முன்பே குஞ்சு தின்று தீர்த்துவிடுவான். இருட்டும் வரைக்கும் அவன் குளிக்கிறானானால், பயல் செங்கோட்டை போவதற்கு அடி போடுகிறான் என்பதை நாங்கள் புரிந்துகொள்வோம். தமிழ்நாடு - கேரள எல்லையில் இருக்கும் செங்கோட்டையில் ஒரு புகழ்பெற்ற கோழிக் கடை உள்ளது. அதை 'பார்டர் கடை’ என்பார்கள். குளிரக் குளிரக் குளித்துவிட்டு, அங்கு போய் நல்லெண்ணெயில் பொரிக்கப்பட்ட நாட்டுக் கோழியும், புரோட்டாவும் சாப்பிடுவதற்காக குஞ்சு ஆலாய்ப் பறப்பான். என்னைப்போன்ற சைவர்களின் முணுமுணுப்பைக் கொஞ்சம் கூடக் காது கொடுத்துக் கேட்க மாட்டான். வெளியூர் நண்பர்கள் யாராவது வந்திருந்தால், அவர் களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் சாமர்த்தியமாகப் பேசித் துணைக்கு அழைத்துச் சென்றுவிடுவான். 'குத்தாலத் துக்கு வந்தா, குளிச்சுட்டுக் கண்டிப்பா செங்கோட்டை பார்டருக்குப் போய் கோளி திங்கணும் பிரதர். குத்தாலக் குறவஞ்சில திரிகூடராசப்பக் கவிராயரே சொல்லியிருக்காருல்லா.’

சென்னைக்கு வந்த பிறகு 'குற்றாலத்தில் சீஸன் களைகட்டியது’ என்று தினத்தந்தியில் படிப்பதோடு சரி. சென்ற வருடம் படப்பிடிப்புகாகக் குற்றாலம் சென்றிருந்தபோது, நண்பர் அழகம்பெருமாள் மற்றும் உதவி இயக்குநர்கள் சகிதம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, ஒரு நள்ளிரவில் தூக்கக் கலக்கத்துடன் ஏதோ ஓர் அருவியில் குளித்தேன். சென்னைக்கு வந்து விட்ட காரணத்தால், என்னால் வருடா வருடம் குற்றால சீஸனுக்குப் போக முடியவில்லை. ஆனால், திருநெல்வேலியிலேயே இருந்துகொண்டு நண்பன் குஞ்சுவும் குற்றாலத்துக்குக் கடந்த சில வருடங்களாகச் செல்வது இல்லை. 'முன்னே மாதிரி இல்லலெ’ என்று சொல்லி வந்தான்.

அடிப்படையில் குஞ்சு ஒரு வேளாண் பொறியாளன். காடுகளை அழித்து இயற்கை எழிலுக்குச் சேதம் விளைவிக்கும் செயல்கள் குறித்து எப்போதுமே காரசாரமாகப் பேசுவான். 'இந்த வருஷம் சீஸனுக்கு வாரேன். குத்தாலத்துக்குப் போவோமால?’ என்று சென்ற வாரம் கேட்டேன். மீண்டும் 'முன்ன மாதிரி இல்ல’ என்ற பழைய பல்லவியையே பாடினான். 'அப்பிடி என்னதான் முன்னெ மாதிரி இல்ல? தண்ணில்லாம் நெறைய விளத்தானே செய்யுது?’ கொஞ்சம் கடுமையாகவே கேட்டேன்.

'எல, கோட்டிக்காரன் மாதிரி பேசாத. இப்போ கொஞ்ச வருசமாவே அருவில குளிக்கிற ஆம்பளைங்களுக்கும், பொம்பளைங்களுக்கும் எடைல தடுப்பு வச்சிட்டாங்க. குத்தாலத்தோட அளகே போயிட்டு’ என்று கோபமாகப் பதில் வந்தது!

- சுவாசிப்போம்...