Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 19

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

மனைவி

உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி
கவியரசு கண்ணதாசன் ('உன் கண்ணில் நீர்வழிந்தால்...’ பாடலில் இருந்து)

ன் செல்லமான குட்டிமாவுக்கு, உன் பிரியத் துக்குரிய பூனைக் குட்டி எழுதுவது. என் வாழ்வில், இந்த 36-வது வயதில் நான் எழுதும் முதல் காதல் கடிதம் இது. அதுவும் மனைவிக்கு என்பதை நினைக்கையில், வேடிக்கையாக இருக்கிறது.

என்ன செய்வது? என் தலைக்கு மேல் மழை பெய்யும் மேகங்கள் கடந்து சென்றபோது எல்லாம், நான் குடை பிடித்தபடி கவிதை எழுதிக்கொண்டு இருந்தேன். ஏற்கெனவே ஒரு கவிதையில் நான் எழுதியுள்ளதைப் போல,

''காதல் கவிதை எழுதுகிறவர்கள் கவிதை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்!''

அணிலாடும் முன்றில்! - 19

ஐந்து வருடங்களுக்கு முன்பு உன்னை முதன்முதலாகப் பெண் பார்க்க வந்தது இப்போதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. உண்மையில், பெண் பார்க்கும் படலத்தில் யார் தான் முழுதாகப் பெண் பார்த்தார்கள்? அது வெறும் கண் பார்த்தல் மட்டுமே. உன் கண்களை வர்ணிக்க நான் பைபிளில் சாலமோனின் உன்னதப் பாட்டில் இருந்து வார்த்தைகளைக் களவாடுகிறேன். 'என் ரூபவதி! உன் கண்கள் புறாக் கண்கள்!’

உன் கண்களில் நான் உன் கண்களை மட்டுமா பார்த்தேன். அதில் என்னைப் பார்த்தேன். என் எதிர்காலத்தைப் பார்த்தேன். இலையுதிர் காலத்தையும் கோடை காலத் தையும் கடந்து வந்து தகிக்கும் என் பாதங்களுக்கான இளைப்பாறுதல் தரும் நிழலைப் பார்த்தேன். என் காயங்களின் நெருப்பை அணைக்கும் ஈரத்தைப் பார்த்தேன். எல்லாவற்றுக்கும் மேல் என் தாயைப் பார்த்தேன்.

நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட இரண்டு மாத காலத் தொலைபேசி உரையாடலுக்காக, நாம் அதைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல்லுக்கும், செல்போன் உரையாடலுக்காக லீ கூப்பருக்கும் நன்றி சொல்ல வேண்டும். கன்னங்களில் வியர்வை வழிய காதுச் சூட்டோடு தங்கள் காதலிகளுடன் காலங்களை மறந்து தொலை பேசும் நண்பர்களை நான் பல தருணங்களில் கிண்டல் செய்திருக்கிறேன்.'அப்படி என்னதான் பேசுவீர்கள்?’ என்று கேட்டு இருக்கிறேன். 'உனக்குப் புரியாது’ என்று புன்னகைப்பார்கள். உண்மையில் புரியாததொரு மாய உலகம்தான் அது.

நாம் பேசினோம், பேசினோம், பேசிக்கொண்டே இருந்தோம்.

'முத்தம் கொடு’ என்று நான் கேட்க; 'முடியாது’ என்று நீ வெட்கப்பட; 'அச்சம் தவிர்’ என்று நான் சொல்ல; 'ஆண்மை தவறேல்’ என்று சிரித்தபடி நீ பதில் சொல்ல; அய்யோ! என் கண்ணம்மாஎன்னை விடச் சிறந்த கவிஞர் நீதானடி.

இன்று நம் உரையாடல்கள் ''சாப்பிட வர மாட்டேன்... லேட்டாகும்.''

''பையன் ஸ்கூல்ல இருந்து வந்துட்டானா?''

அணிலாடும் முன்றில்! - 19

''மீட்டிங்ல இருக்கேன்... கூப்பிடுறேன்'' என்று திருமணத்துக்குப் பிறகு சுருங்கிப்போனதில் ஏகப்பட்ட வருத்தம் உனக்கு.

''கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ நேரம் பேசுவோம்? இப்போ உடனே போனை வெச்சிடுறீங்க'' என்று ஆதங்கப்படுவாய். அடி போடி என் பைத்தியக்காரி. அலையின் வேகம் குறைந்தாலும், நதி எப்போதும் கரையுடன் உரையாடிக்கொண்டுதான் இருக்கும்.

என் செல்லம்மா! உன்னைப் போல அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் இல்லை. அதே நேரத்தில் உன்னைப்போல துரதிர்ஷ்டசாலியும் இந்த உலகத்தில் இல்லை. காலை 10 மணிக்குக் கிளம்பி மாலை 6 மணிக்குக் கூடு அடையும்பறவை நான் இல்லை. ''அப்பா எப்பம்மா வீட்டுக்கு வருவாரு? தூக்கம் வருதும்மா!'' என்று கேட்டு, கனவில் என்னைக் காணும் மகனுக்குத் தாலாட்டிக்கொண்டு இருக்கிறாய் நீ. நெருப்பைத் தொலைவில் இருந்து ரசிப்பது வேறு. நீ நெருப்புடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறாய். என் அனலின் வெம்மை உன்னைக் காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னித்துவிடு என் கண்மணி! உன் அன்பின் ஈரத்தில்தான் நான் உயிர் வாழ்கிறேன்.

என் ப்ரியம்வதி! என்னைப்போன்ற, எப்போதும் வேலை வேலை என்றிருக்கும் அரைக் கிறுக்கனுக்கு வாழ்க்கைப்பட்டது நீ விரும்பி ஏற்றுக்கொண்ட சிறை. அந்தச் சிறையையும் சோலையாக்கியது நீ எனக்குத் தந்த கொடை.

உன் உடலில் நானும்; என் உடலில் நீயும்; கண்டடைந்த தேடல் கண் எதிரே நம் உடலாய் நம் முன் நிற்கிறது. அப்பா என்றும், அம்மா என்றும் நம் பிள்ளை நம்மை அழைக்கையில், இல்லறத்தின் நதியில் நாம் இறங்கிக் குளித்ததற்கான தடயம் காலத்தின் முன் நிற்கிறது.

எனை ஆள வந்தவளே! தினம் தினம் நமக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகளின் ஊடல்களில் நீ வாடிவிடுகிறாய். ஊடல்களுக்குப் பிறகு நடக்கும் பெரிய பெரிய சமாதானங்களில் நீ மலர்ந்தும்விடுகிறாய். இந்த உலகத்தில் எல்லாப் பூக்களும் மலர்ந்த பின்தான் வாடும்! வாடிய பின் மலரும் ஒரே பூ நீதானடி! உன்னை மலரவைக்கவே வாடவைக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா என்ன?

அணிலாடும் முன்றில்! - 19

சென்ற வாரத்தில் ஒருநாள். நான் என் சிலுவைகளை எல்லாம் இறக்கிவைத்துவிட்டு, ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தேன். உறக்கத்தில் அரை மயக்கத்தில் கனவில் நிஜம் போல ஒரு விழிப்பு. நம் மகன் ஆதவன் என் வயிற்றில் காலைப் போட்டு உறங்கிக் கொண்டு இருந்தான். ஏதோ ஒரு சன்னமான குரல் நள்ளிரவில் என்னை எழுப்பியிருக்கிறது. அந்தக் குரல் உன் குரல். உறங்குவதைப்போல நடித்து உன் குரலை அவதானித்தேன். நான் உறங்குவதாய் நினைத்து நீ பேசிக்கொண்டு இருக்கிறாய். ''எங்க வீட்டுக்கு ரெண்டு பூனைக் குட்டி வந்திருக்கு. அய்யோ! எவ்ளோ அழகாத் தூங்குதுங்க.''

என் ஜீவனை வாழ்விக்க வந்த என் ஜீவ லட்சுமியே! என் மாமருந்தே! உன் பெரிய பூனைக் குட்டி எழுதுகிறேன். அதற்குப் பிறகு, நீ தூங்கிய பிறகும் நான் தூங்கவே இல்லை. நம் கல்யாணப் பத்திரிகையாக நான் எழுதிய பாடலை மீண்டும் நினைவுகூர ஆசைப் படுகிறேன். நான் எழுதிய பாடல்களில் மிகச் சிறந்த பாடல் இதுதான். ஏனென்றால், இது உனக்காக எழுதியது.

பல்லவி

எனக்காகப் பிறந்தவளைக் கண்டுபிடித்தேன்! - அவள் கண்ணசைவில் ஒரு கோடி கவிதை படித்தேன்! என் பாதி எங்கே என்று தேடி அலைந்தேன்! - அவளைப் பார்த்தவுடன் அடடா நான் முழுமை அடைந்தேன்! இரு இதயம் ஒன்றாய் இனி அவள்தான் என் தாய்!

சரணம்-1

வேப்பம் பூ உதிர்கின்ற என் வீட்டு முற்றம் அவள் போடும் கோலத்தால் அழகாய் மாறும்! விண்மீன்கள் வந்து போகும் மொட்டை மாடி அவள் கொலுசின் ஓசையினால் மோட்சம்   போகும்! காற்று வந்து கதை பேசும் கொடிக் கயிற்றில் அவள் புடவை அன்றாடம் கூட்டம் போடும்! காத்திருப்பாள் ஒருத்தி என்ற நினைவு வந்து கடிகார முள் மீது ஆட்டம் போடும்!

சரணம்-2

பாதரசம் உதிர்கின்ற கண்ணாடி மேல் புதிதாகப் பொட்டு வந்து ஒட்டிக்கொள்ளும்! பழைய ரசம் அவள் கையால் பரிமாறினால் பழரசமாய் இனிக்குதென்று பொய்கள்   சொல்லும்! பூக்கடைக்குப் போகாத கால்கள் ரெண்டும் புதுப் பழக்கம் பார் என்று திட்டிச் செல்லும்! ஆண்களுக்கும் வெட்கம் தரும் தருணம் உண்டு என்பதை ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan