மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 26

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடங்கள் : எல்.ராஜேந்திரன்

##~##

கீழ ரத வீதியில் பிள்ளையார் தேரை ஒட்டினாற்போல் இருக்கும் மொஹைதீன் மாமா வின் ஆஸ்பத்திரிக்குத்தான் பெரியம்மை வழக்கமாகப் போவாள். பெரிய அளவில் உடம்பு சரி இல்லாமல் போகும் வரை எல்லாம், பெரியம்மை காத்து இருப்பது இல்லை. 'சின்னவன் மோரையே சரியில்லியே! நல்லாத் தடுமன் புடிச்சிருக்கு. வெந்நி குடி, வெந்நி குடின்னா, எங்கெ கேக்கான்? மொய்தீன் மாமாட்ட கொண்டுபோய் காமிச்சாதான் சரிப்பட்டு வரும்.’

மொஹைதீன் மாமா ஒரு டாக்டர் என்கிற உணர்வே, எங்களுக்கு வந்தது இல்லை. பழம்பெரும் பாடகர் ஏ.எம்.ராஜா சாயலில் சிவப்பாக இருப்பார். ஒரு நாளாவது மொஹைதீன் மாமாவை, 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ பாடலைப் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறேன். ஊசி போட்டுவிடுவாரோ என்ற பயத்தில் கேட்டது இல்லை.

மூங்கில் மூச்சு! - 26

மொஹைதீன் மாமா பேசும் சத்தமே எதிராளிக்குக் கேட்காது. மனதால் அவர் பேசுவதை, அவரது சிரித்த சாந்தமான முகம் நமக்கு உணர்த்திவிடும். இளம் வயதில் காலமாகிப்போன பெரியப்பாவின் தோழர் என்பதால், எங்கள் குடும்பத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருமே ஒருவித உரிமையுடன் மொஹைதீன் மாமாவின் ஆஸ்பத்திரிக்குத்தான் போவோம். மற்ற ஆஸ்பத்திரிகளில் இருக்கிற 'ஆஸ்பத்திரி வாடை’ மொஹைதீன் மாமாவின் ஆஸ்பத்திரியில் அடிக்காது. எனக்கென்று போனதைவிட, பெரியவர்களுக்குத் துணை யாக மாமாவின் ஆஸ்பத்திரிக்கு நான் போனதுதான் அதிகம். 'ஆயிரந்தான் சொல்லு... அவாள் நம்ம கையப் புடிச்சுப் பாத்த ஒடனேயே, எந்தக் காச்சலும் சுர்ருன்னு எறங்கிரும்லா!’

நண்பன் குஞ்சுவின் வீட்டுக்கு நான்கு வீடுகள் தாண்டினால், டாக்டர் ராதாகிருஷ்ணனின் வீடு. அங்கு இருந்து காந்திமதியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் அவரது ஆஸ்பத்திரிக்கு நடந்தே சென்றுவிடலாம். எப்போதும், சத்தமாக, வேடிக்கையாகப் பேசும் ராதாகிருஷ்ணன் டாக்டரின் தகப்பனார் சந்திரசேகரும், அந்தக் காலத்தில் திருநெல்வேலியின் புகழ்பெற்ற டாக்டர். இன்னைக்கும் தனது கிளினிக் வாசலில் தனது தகப்பனாரின் பெயரையும் சேர்த்து போர்டு மாட்டி இருக்கிறார் ராதாகிருஷ்ணன் டாக்டர். 'இதுக்குப் பேசாம டாக்டர் - சன்ஸ்னு அவாள் போர்டு மாட்டீரலாம்’ - பெரியண்ணன் சொல்லுவான்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கிராமப்புற விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் இரண்டு தலைமுறைகளாக ராதாகிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்குத்தான் வருகிறார்கள். நானும் குஞ்சுவும் வேடிக்கை பார்ப்பதற்காகவே, ராதாகிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்குச் செல்வது உண்டு. 'ஏ, என்னடே! குஞ்சு என்ன சொல்லுதான்?’ என்று என்னிடமும், 'பொளுது போக மாட்டெங்கு, என்னா?’ என்று குஞ்சுவிடமும் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, நோயாளிகளைப் பார்ப்பார். நோயாளிகளிடம் அவர் காட்டும் நெருக்கம், தோழமையான பேச்சு இவை காரணமாக அவரது ஆஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழியும்.

'என்னடே? என்ன செய்யுது?’

'நாலு நாளாத் தொண்ட பொகச்சல் சாமி.’

'நீ செட்டியார்ட்ட வாங்குற சம்பளத்துல பாதிய, சொக்கலால்ட்ட கொண்டுபோயில்லா குடுக்கெ! பீடி குடிக்காதெ குடிக்காதென்னு சொன்னாக் கேக்கியா? இந்தா, இந்த மாத்திரய மூணு நாளைக்குத் தின்னு. தாவலையாயிரும்.’

மூங்கில் மூச்சு! - 26

பேரசிட்டமால்தான் கொடுப்பார் என்றாலும் ராதாகிருஷ்ணன் டாக்டரின் குரல் தரும் நம்பிக்கையில் எல்லாம் சரி ஆகிப்போகும்.

இவை போக, 'ஊர்ல மள கிள உண்டா, ஆத்துல தண்ணி போகுதா, தோட்டத்துல என்ன போட்டிருக்கெ?’ என்று ராதாகிருஷ்ணன் டாக்டரின் விசாரிப்புகள், எல்லாத் தரப்பு மக்களையும் விரைவில் அவரிடம் நெருங்கச் செய்துவிடும். 'பஜாருக்கு ஜாமான் வாங்க வந்தேன். அப்பிடியே சாமியப் பாத்துட்டுப் போயிருவோம்னு’ - கையில் கொண்டுவந்த முள்ளங்கியை டாக்டரிடம் கொடுத்துவிட்டு, அப்படியே 'சத்து டானிக்’ வாங்கிக்கொண்டு போகும் எத்தனையோ விவசாயிகளைப் பார்த்து இருக்கிறேன்.

மூங்கில் மூச்சு! - 26

மொஹைதீன் மாமா, ராதாகிருஷ்ணன் டாக்டர், நாயுடு டாக்டர் என திருநெல்வேலியின் கீழ ரத வீதியிலேயே அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகள் உண்டு என்றாலும், 'நான்லாம் ஆஸ்பத்திரி வாசப்படி மிதிச்சதே கெடையாதுல்லா’ என்று சொல்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். காலில், கையில் மட்டும் அல்ல, மண்டையே உடைந்து ரத்தம் கொட்டினாலும், அடிபட்ட இடத் தில் காபித் தூள் வைத்து அடைப்பான் மணி மாமா. 'ஒண்ணும் செய்யாதுலெ. ரெண்டு நாள்ல சரியாயிரும்’ என்பான். அநேகமாக வீட்டுக்கொரு 'படிக்காத டாக்டர்’ இருப்பார். எல்லோர் வீட்டிலும் சைபால் வைத்து இருப்பார்கள். எந்தப் புண்ணையும் சைபால் ஆற்றிவிடும் என்று நம்பினார்கள். 'ஏ, டாக்டர்கிட்ட போனாலும் அவரும் இதே மாதிரி களிம்புதான் எளுதிக் குடுப்பாரு. அதுக்கு நாமளே சைபாலப் போட்டுரலாம்லா. துட்டுக்குப் புடிச்ச கேடா, அவருக்குக் கொண்டுபோயிக் குடுக்க.’

டாக்டர்களிடம் போகாமல் தன் மருத்துவம் பார்ப்பது போக, பூசாரிகளை மருத்துவர்களாக நம்புகிற மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அநேகமாக, திருநெல்வேலியின் எல்லாத் தெருக்களிலும் இருக்கிற உச்சினி மாகாளி பூசாரிகள், எம்.பி.பி.எஸ். படிக்காத டாக்டர்கள். காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு இவை அனைத்தும் பூசாரி எறிகிற தண்ணீரில் குணமாகிப்போகும் என்பார்கள். பக்த நோயாளிகள் தன்னை நம்பி வருகிற சொற்ப நிமிடங்களில் உச்சினி மாகாளி கோயில் பூசாரிகள் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த டாக்டர்கள்போல நடந்துகொள்வார்கள். சொம்புத் தண்ணீரைக் கையில் சாய்த்து, உச்சினி மாகாளி அம்மனையும் வானத்தையும், மூன்று முறை உற்றுப் பார்த்து, வார்த்தையே உபயோகிக்காமல் முணுமுணுத்து, படீரென்று முகத்தில் எறிவார்கள். அந்த அதிர்ச்சியில் நோயாளியைக் கூட்டி வந்தவருக்குக் காய்ச்சல் வந்துவிடும். அவர் மறு நாள் தண்ணீர் எறிய வருவார்.

திருநெல்வேலி புட்டாரத்தி அம்மன் கோயிலுக்கு தண்ணீர் எறிய, பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் பக்தர்கள் வருவதைப் பார்த்து இருக்கிறேன். அம்மை போட்ட ஒரு பெண் குழந்தையை ஆட்டோவில்வைத்து அங்கு கூட்டி வந்த ஒரு தாயிடம், 'மொதல்ல ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்க் காட்டுங்கம்மா’ என்று ஒருமுறை சொன்னதுக்கு, 'ஒன் சோலியப் பாரு’ என்று திட்டினார். சின்னச் சின்ன நோய்களுக்கு இதுபோன்ற நம்பிக்கைகள், மனதுக்குத் தைரியம் கொடுப்பவைதான் என்பது புரிந்தாலும், அம்மை நோய் கண்ட அந்தப் பெண் குழந்தையைப் பார்ப்பதற்கு எனக்குக் கவலையாக இருந்தது. காரணம், அப்போதுதான் சுஜாதா எழுதிய 'நகரம்’ சிறுகதையை வாசித்து இருந்தேன்.

மூங்கில் மூச்சு! - 26

டாக்டரையும், டெய்லரையும், முடி திருத்துபவரையும் ஒருபோதும் மாற்றக் கூடாது என்பார்கள். அது உண்மைதான் என்பதை அனுபவம் உணர்த்தியது. ஒரு நாள் பாளையங்கோட்டையில் நடந்து சென்றுகொண்டு இருக்கும்போது, குஞ்சு திடீரென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு ரோட்டில் உட்கார்ந்துவிட்டான். 'வயித்து வலி தாங்க முடியலலெ. என்னால ஒரு அடி எடுத்துவைக்க முடியாது’ என்று கதற ஆரம்பித்துவிட்டான். மொஹைதீன் மாமா, ராதாகிருஷ்ணன் டாக்டர் தவிர, வேறு எந்த டாக்டரையும் அறியாத நாங்கள், அது நாள் வரை கேள்விப்படாத ஒரு டாக்டரிடம் சென்றோம். தலைக்கு மேலே குண்டு பல்ப் எரிய, தனியாக அமர்ந்து பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு இருந்தார். 'என்ன செய்யுது?’ என்றார். 'வயித்து வலி டாக்டர், கெடந்து துடிக்கான்’ என்றேன். 'மொதல்ல உக்காருங்க’ என்று சொல்லிவிட்டு, நேரே என்னிடம் வந்து, 'நாக்க நீட்டுங்க’ என்றார். எரிச்சலில் குஞ்சு, காண்டாமிருகம் மாதிரி வாயைப் பிளந்து நாக்கை நீட்டி, வயிற்று வலி தனக்குத்தான் என்பதை டாக்டருக்கு உணர்த்தினான். உடனே, அவனை சட்டையைக் கழற்றச் சொல்லி, படுக்கையில் படுக்கவைத்து, பூணூலை ஒதுக்கிவிட்டு, வயிற்றில் தன் கைகளைக் கிட்டத்தட்ட ஊன்றி அழுத்தினார். வலி தாங்க முடியாத குஞ்சு, பொதுவாக யாருடைய அக்காவையோ திட்டினான்.

'சாப்பிட்டது எதுவோ ஒத்துக்கல. வெஜிடேரியன்ல அப்பிடி என்னத்த சாப்பிட்டுட்டீங்க?’ என்று கேட்டார். 'சிக்கன்’ என்றான் குஞ்சு. பிரிஸ்கிரிப்ஷன் பேப்பர் முழுக்கக் கட்டுரைபோல ஏதேதோ எழுதினார். 'சார், ஒரு ஊசி போட்டிருங்களேன். அப்பொதான் வலி டக்குனு விடும்’ என்று குஞ்சு கெஞ்சினான். 'தேவை இல்ல. ஒரு வாரத்துக்கு இந்த மருந்து, மாத்திரைங்க சாப்பிடுங்க’ என்றார்.

வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து ராதாகிருஷ்ணன் டாக்டரிடம் சென்றோம். 'என்னல? வயித்த வலியா? ராத்திரி என்ன தின்னெ? கொக்கரக்கோவா?’ என்று கேட்டு, ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். 'நாளைக்குச் சரியாப் போயிரும். கொதகொதன்னு எண்ணெய்ல பொரிச்சதத் திங்காதல. கொளம்புல போட்டதச் சாப்பிடு’ என்றார்.

சில டாக்டர்களைவிட அவர்களது கம்பவுண்டர்களுக்கு ஏக கிராக்கி இருக்கும். அவசரத்துக்கு அணுக கம்பவுண்டர்கள் எப்போதுமே தோதானவர்கள். சாஃப்டர் பள்ளியின் 8-ம் வகுப்புக்கான ரிசல்ட் வந்தபோது, ரத்னா தியேட்டர் வாசலில் நின்று 'மாலை முரசு’ பேப்பரில் எங்கள் எண்களைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். குமரனின் எண்ணை எவ்வளவு தேடியும் காணவில்லை. சட்டென்று டிராயர் பாக்கெட்டில் இருந்து ஒரு பாட்டிலைத் திறந்து மடக்கென்று குடித்துவிட்டு, 'மக்கா, நான் வெஷத்தக் குடிச்சுட்டேன்’ என்றான். தான் பாஸ் ஆன அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத ராமசுப்ரமணியன், இதைப் பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டான். விஷம் குடித்தவனை விட்டுவிட்டு, மயங்கிக்கிடந்தவனை தண்ணீர் தெளித்து எழுப்பினோம்.

அதற்குள் விஷம் தலைக்கேறி குமரன் இரும ஆரம்பிக்க... நான் குஞ்சு, ராமசுப்ரமணியன் மூவரும் குமரனைத் தூக்கிக்கொண்டு ஓடினோம். போகும் வழியில் ராமசுப்ரமணியன் அழுதுகொண்டே இருந்தான். 'தற்கொலைக்கு ஒடந்தனு நம்மளையும் போலீஸ் புடிச்சுட்டுப் போய் தட்டப்பாறை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில சேத்திரும்ல.’

நான் நைஸாக ஓடிவிடலாமா என்று யோசிப்பதற்குள், கல்லத்தி முடுக்குத் தெரு வந்துவிட்டது. அங்குதான் கம்பவுண்டர் தம்பிரான் மாமா இருந்தார். அவரது வீட்டுக்குள் குமரனைச் சுமக்க முடியாமல் சுமந்தபடி நாங்கள் நுழைந்தபோது, 'நான் எறந்துட்டா, என் தங்கச்சி கல்யாணத்த நல்லபடியா நடத்துவேளால?’ என்று குழறலாக குமரன் கேட்டான். அப்போது அவன் தங்கை மூன்றாம் கிளாஸ் படித்துக் கொண்டு இருந்தாள்.

தூங்கிக்கொண்டு இருந்த தம்பிரான் மாமாவை எழுப்பினோம். படுக்கப் போட்ட குமரனின் கண்களின் கீழ் இமையை இழுத்துப் பார்த்தார். 'என்னத்தடே குடிச்சான்?’ தன் டிராயர் பாக்கெட்டிலேயே பத்திரமாக வைத்திருந்த காலி பாட்டிலை எடுத்து குமரனே கொடுத்தான். அதைப் பார்த்துவிட்டு, குமரனை ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கச் செய்தார். 'ஓதுவார் கடைல ஒரு காபி வாங்கிக் குடுத்து, வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க’ என்று எங்களிடம் சொல்லிவிட்டு, மீண்டும் படுக்கத் தயாரானார்.

'உயிருக்கு ஒண்ணும் ஆபத்துஇல்லையே, மாமா?’ என்று கவலையோடு ராமசுப்ரமணியன் கேட்டான்.

'இருமல் மருந்தக் குடிச்சா ஒரு ஆபத்தும் இல்ல. தூங்கவிடுங்கல சவத்துப் பயவுள்ளேளா’ என்று கடுப்புடன் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டார் தம்பிரான் மாமா!

- சுவாசிப்போம்...