மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 27

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##

ம்மன் சந்நிதியில் அதிகாலைத் தூக்கத்தில் இருக்கும் எங்கள் காதுகளில் கஞ்சிரா சத்தத்துடன் ரத்தின பாகவதர் பாடும் குரல் கேட்கும் நாள், மார்கழி மாதத்தின் முதல் நாளாக இருக்கும். ரத்தினம் என்பது அவரது பெயர். 'தாடி’ ரத்தின பாகவதர் என்றால்தான், எல்லோருக்கும் தெரியும். கொஞ்சம் பித்துக்குளி முருகதாஸ் சாயலில் இருப்பார். நீண்ட வெண் தாடியுடன் தன் மகன்கள், மற்றும் புல்லாங்குழல் கலைஞர் ஒருவரையும் சேர்த்துக்கொண்டு திருநெல்வேலி வீதிகளில் மார்கழி மாதக் காலைகளில் வலம் வருவார் 'தாடி’ பாகவதர். ஸ்ருதி விலகாமல் கணீர்என்று

மூங்கில் மூச்சு! - 27

கம்பீரமாகப் பாடுவார். உடன் செல்லும் புல்லாங்குழல் கலைஞருக்குப் பார்வை கிடையாது என்பதால், 'தாடி’ பாகவதரின் கடைக்குட்டி மகன், கையைப் பிடித்து அவரை அழைத்துச் செல்வான். உலகத்தில் கண் தெரியாதவர்களுக்குத்தான் புல்லாங்குழல் வாசிக்க வரும் என்று வண்ணதாசன் அண்ணாச்சியைப்போல நானும் நம்பி இருக்கிறேன். பூதத்தான் முக்கில் 'ஃபேன்ஸி டெய்லர்ஸ்’ கடை வைத்திருந்த கோபாலகிருஷ்ண மாமா புல்லாங்குழல் வாசிப்பதைப் பார்க்கும்போதுதான் அந்த எண்ணம் மாறியது. டெய்லரான மாமா கை நடுங்காமல் துல்லியமாக ஊசியில் நூல் கோக்கும் அளவுக்கு நல்ல பார்வை உடையவர்.

 'தாடி’ ரத்தின பாகவதர் கீழப் புதுத் தெருவில்தான் குடியிருந்தார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். குழந்தைகளுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். பாடும்போது வாயாலேயே 'மோர்சிங்’ மாதிரி 'டொய்ங் டொய்ங்’ என்று சத்தம் எழுப்புவது 'தாடி’ பாகவதரின் சிறப்பு களில் ஒன்று. இதைப்பற்றி வண்ண தாசனின் 'வேர்’ சிறுகதையில் படிக்கலாம். ஒரு மார்கழி மாதத்தின் கடைசி நாளில் எங்கள் வீட்டு தார்சா வில் அமர்ந்து 'தாடி’ பாகவதர் தன் குழுவினருடன் பாடினார். எங்கோ, எப்போதோ, யாராலோ அன்பளிப் பாகக் கொடுக்கப்பட்ட நைந்துபோன பழைய பட்டு நேரியலை இடுப்பில் கட்டியிருந்த, 10 வயதே நிரம்பி இருந்த அவரது இளைய மகன், மதுரை சோமுவின் புகழ் பெற்ற 'என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் உருக வில்லை’ என்ற பாடலைப் பாடினான். முருகர் உருகினாரோ, என்னவோ! அவன் பாடிய விதத்தில், கேட்டுக் கொண்டு இருந்த நாங்கள் எல்லோருமே உருகினோம்.

மூங்கில் மூச்சு! - 27

இசைத்தட்டு, வானொலி, திரைப்படம் எனப் பல்வேறு வடிவங்களில் பாடல்கள் கேட்டு வந்தாலும், சிறு வயதில் இருந்தே பாடுபவர்களின் மீதும் பாட்டுக் கச்சேரிகளின் மீதும் ஓர் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஹார்மோனியம் வாசிக்கும் தியாகராஜ மாமா, புல்லாங்குழல் வாசிக்கும் கோபாலகிருஷ்ண மாமா, தபலா வாசிக்கும் எங்கள் பெரிய அண்ணன், பாடகர்கள் பரமசிவம் பெரியப்பா மற்றும் ஆதிவராகமூர்த்தி மாமா போன்றோர், எனது சிறு வயது ஹீரோக்கள். அறிமுகம் இல்லாத மற்ற இசைக் கலைஞர்களைப்பற்றித் தெரிந்துவைத்துக்கொள்வதும் உண்டு. 'அவன் ஒரு சரித்திரம்’ திரைப்படத்தின் டைட்டில் பாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடியிருக்கும் நெல்லை கணபதி அவர்கள், திருநெல்வேலிப் பகுதியில் புகழ் பெற்ற இசைக் கலைஞர். அவரது பிள்ளைகள் அனைவருமே இசைத் துறையில் உள்ளவர்கள். அவரது மகளான கண்ணம்மா அக்காவை இன்று வரைக்கும் எனக்கு அறிமுகம் இல்லை. ஆனால், கச்சேரி நடக்கும் மேடையில் அவர்களைப் பார்க்கும்போது, 'எல, இந்தக் கச்சேரில கண்ணம்மாக்காவும் பாடுதாங்க’ என்று குஞ்சுவும் நானும் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் 'சாந்தி நிலையம்’ படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவன் வருவான்’ என்ற பாடலைத்தான் கண்ணம்மா அக்கா முதலில் பாடுவார்கள்.

மூங்கில் மூச்சு! - 27

'பாட்டு கேக்கணும்னா, டேப்லயோ, ரேடியோலயோ கேக்க வேண்டியதுதானெ? ஏற்கெனவே பாடுன பாட்டத்தான பாடுதாங்க? வேலையத்த வேலையா, அதப் போயி என்னத்துக்குக் கேக்கணுங்கென்?’ லாலா சத்திர முக்கில் ஒரு கச்சேரி கேட்க, நானும் ராமையா பிள்ளையும் போய்க்கொண்டு இருக்கும்போது சண்முக அண்ணன் இந்தக் கேள்வியைக் கேட்டான். 'பாடத் தெர்ஞ்சவம்லாம் கடவுளோட கொளந்தைல்லா.  ஒன்னாலயும், என்னா லயும் பாட முடியுதா? இல்லெல்லா? பாடுறவன் கலைஞன். கேக்குறவன் ரசிகன். நீ ரெண்டுமே இல்ல. எங்கள ஏன் மறிக்கெ? சோலியப் பாத்துட்டுப் போ!’ - ராமையா பிள்ளை சூடாகப் பதில் சொன்னார். மேடைகளில் நினைத்த மாத்திரத்தில் பாடுவதோ, இசைப்பதோ அவ்வளவு எளிதல்ல என்னும் சமாசாரம், சங்கீதம் படிக்க ஆரம்பித்த பிறகு தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு மேடைப் பாடகர்களின் மீதும், கலைஞர்கள் மீதும் மரியாதை பல மடங்காக உயர்ந்தது.

கூடியிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு முன் குறைந்தது மூன்று மணி நேரம் கச்சேரி செய்து, வெவ்வேறு பாடல்களைப் பாடி, இசைப்பவர்கள் சாதாரணர்கள் அல்லர்.

ஒரு சில பாடல்களைக் கேட்கும்போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஞாபகம் வருவது இயற்கை. ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் பாடிய 'செந்தாமரையே செந்தேன் இதழே’ பாடலைக் கேட்கும்போது எல்லாம், எனக்கு ராயல் டாக்கீஸ் முக்குதான் ஞாபகத்துக்கு வரும். அதன் அருகில் வெற்றிலை பாக்குக் கடை, கந்த விலாஸ் ஜவுளிக் கடை என எல்லாமே அந்தப் பாட்டுடன் சேர்ந்து கண்முன் நிற்கிறது. ராயல் டாக்கீஸுக்கு முன் போடப்பட்ட மேடையில் ஏ.எம்.ராஜாவும் அவர் மனைவி ஜிக்கியும் உட்கார்ந்திருந்த படி இந்தப் பாடலைப் பாடினார்கள். இன்றைக்கு அவர்கள் இருவருமே இல்லை. ராயல் டாக்கீஸும் இல்லை. ஆனாலும், எங்காவது 'செந்தாமரையே’ பாடல் ஒலித்தால், இவை எல்லாமே சித்திரமாக மனதில் விரிகிறது.

பூதத்தான் முக்கில் கேட்ட ஒரு கச்சேரி யில் நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த ஒரு பாடகர் 'அம்மாடி, பொண்ணுக்குத் தங்க மனசு’ பாடினார். ரத்தச் சிவப்பில் சட்டை அணிந்து கண் மூடி அனுபவித்து அவர் பாடியதை, டி.எம்.சௌந்தர்ராஜன் கேட்டு இருந்தால், நிச்சயம் மகிழ்ந்து இருப்பார்.

மூங்கில் மூச்சு! - 27

'முருகண்ணே, ஒரு பாட்டு படியேன்’ என்று சொன்ன மறு நிமிடமே, 'இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்’ என்று அடி வயிற்றில் இருந்து எக்கிப் பாடுவார், வறுமையில் வாடும் ஏழைத் தொழிலாளியான 'கட்டை’ முருகண்ணன். இவர் பாடும்போது, கோவிந்தராஜன் குரலெல்லாம் நமக்குக் கேட்காது என்றாலும், அவர் பாடும் முறையில் அதில் உள்ள உயிர் நம்மை உருக்கிவிடும். 'சீர்காழி’ கோவிந்தராஜன் குரல் என்றாலே, எனக்கு திருநெல்வேலி கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தின் இசைக் குழுவில் 'டிரம்பெட்’ வாசிக்கும் ஓர் இளைஞர்தான் நினைவுக்கு வருவார். ஒரு கையை தன் பேன்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு, மறு கையால் அநாயசமாக 'டிரெம்பெட்’ வாசிக்கும் அந்த இளைஞர் அவ்வப்போது ஒரு சில பாடல்கள் பாடுவார். முக்கியமான பிருகாக்களின்போது, உட்கார்ந்து எழுந்து  இருப்பதுபோன்ற ஒரு பாவனையில் 'காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை’ பாடலை அச்சு அசல்சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் பாடி அசரடித் தார். அதுபோக, 'சந்திரோதயம்’ திரைப் படத்தின் இரு குரல் பாடலான 'காசிக்குப் போகும் சந்நியாசி’ என்ற கடினமான வேடிக்கைப் பாடலை, டி.எம்.எஸ். குரல் பாடகரோடு போட்டி போட்டுக்கொண்டு அவர் பாடிய விதத்தில் லாலா சத்திர முக்கே கோலாகலமானது.

சம்பந்தம் இல்லாத பாடலை சம்பந்தம் இல்லாத பாடகர்கள் பாடி நம்மை அசரடிப்பது உண்டு. திருநெல்வேலியில் 'ஆடலரசன்’ பிரபாகரன் என்றொரு மெல்லிசைப் பாடகர் புகழ்பெற்றிருந்தார். 'ஆடலரசன்’ என்ற அடைமொழிக்கேற்ப, 'என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு?’ என்று அகல பெல்ட் போட்ட பெல்பாட்டம் தவழ, தலையையும் இடுப்பையும் ஆட்டி எஸ்.பி.பாலசுப்ர மணியத்தின் குரலில் அழகாகப் பாடுவார். கீழப் புதுத் தெருவில் நடந்த ஒரு கச்சேரி யில், அடுத்த பாடலாக 'நம்ம ஊரு சிங்காரி’ பாடி, ஆடி எங்களை மகிழ்விப் பார் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தபோது, சட்டென்று எம்.கே.தியாகராஜ பாகவதரின் புகழ் பெற்ற 'சியாமளா’ படப் பாடலான 'ராஜன் மகராஜன்’ பாடினார். கடினமான பயிற்சி இருந்தால் மட்டுமே பாட முடிகிற, ஹுசேனி ராகத்தின் ஸ்வர வரிசைகளுடன் அமைந்த அந்தப் பாடலை அட்சரம் பிசகாமல் பாடி எங்களை இன்பத் திகைப்புக்கு உள்ளாக்கினார். 'ஓ... ஓன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு இதுல்லாம் என்னலெ பாட்டு’ என்று கச்சேரி ஆரம்பித்ததில் இருந்தே புலம்பிக்கொண்டு இருந்த சில பெரியவர்களை, 'ராஜன் மகராஜன்’ பரவசப்படுத்தியது. 'இந்தப் பாட்டுல்லாம் பிளேட்ல கேட்டு பத்து முப்பது வருசம் இருக்கும். இப்பல்லாம் இந்த மாரி ஒரு பாட்டு வெளங்குதா’ வரிந்து கட்டிக்கொண்டு பேசினார் கள். இத்தனைக்கும் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்... வசந்த காலக் கோலங்கள்’ போன்ற நல்ல மெலடி பாடல் களைப் பாடத்தான் செய்தார் கள். இப்போது உள்ளதுபோல மைக்கேல் ஜாக்சனின் தமிழ்ப் பாடல்கள் அப்போது இல்லை.

சிறு வயதில் திருநெல்வேலி சங்கீத சபாவில் நடந்த எம்.எஸ்.உமாபதியின் 'சங்கீத சுதா’ கச்சேரியில் 'ராஜ பார்வை’ திரைப்படத்தின் துவக்க வயலின் இசையை, சகோதரர்களான தியாகு, வைத்தி இருவரும் பிரமாதமாக வாசித்தபோது, மெய் மறந்து கை தட்டி இருக்கிறேன். பிற்காலத்தில் அந்த சகோதரர்களின் தகப்பனாரான கிருஷ்ணய்யர்தான் எனது இசை ஆசிரியராக வரப்போகிறவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. நான் இசை பயின்று எங்கள் ஆசிரியரின் பிரதான சிஷ்யனாக ஆன காலத்தில், அந்தக் குடும்பத்தின் நான்கு சகோதரர்களும் 'திண்டுக்கல் அங்கிங்கு’ இசைக் குழுவின் நிரந்தர கலைஞர்களாக வாசித்துக்கொண்டு இருந்தனர். நான் சென்னைக்கு வந்த பிறகும் ஊருக்குச் சென்றால், பக்கத்து ஊர்களில் எங்காவது 'அங்கிங்கு’ கச்சேரி இருந்தால், தகவல் சொல்லிவிடுவார்கள். அப்படி ஒரு முறை பத்தமடையில் 'அங்கிங்கு’ கச்சேரி இருப்பதை கிருஷ்ணன் சாரின் கடைக்குட்டி மகன் பாலாஜி சொன்னார். நான் அங்கு போய்ச் சேரும்போது, கச்சேரி அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. பத்தமடை இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி என்பதால், முதல் பாடலாக 'முகம்மது பின் துக்ளக்’ திரைப்படத்தின் 'அல்லா அல்லா’ பாடலைப் பாடினார்கள். சென்னை யில் உள்ள லக்ஷ்மண் ஸ்ருதி இசைக் குழுவினர்போல 'அங்கிங்கு’ குழுவினரும், னீணீஸீuணீறீ ஆகவே எல்லா இசைக் கருவிகளையும் இசைப்பார்கள். அவ்வப்போது எனது இசை ஆசிரியர்களின் புதல்வர்கள், முன் வரிசையில் இருந்த என்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே கச்சேரியைத் தொடர்ந்தனர்.

நள்ளிரவு தாண்டி 3 மணிக்கு கச்சேரி முடிந்தது. எல்லோரும் கிளம்பத் தயாரானபோது, எனது இசை ஆசிரியரின் மூத்த மகனும், அற்புதமான வயலின் கலைஞருமான தியாகு அண்ணன் என் அருகில் வந்தார்.

'தம்பி, பாலு மகேந்திரா சார்கிட்டே ஒரு காரியம் ஆகணுமே’ என்றார். எனக்கு 'அடடா, மாட்டிக்கொண்டோமே’ என்று இருந்தது. பொதுவாக, நான் சினிமாவில் இருப்பதாக யாரிடமும் காட்டிக்கொள்வது இல்லை.

காரணம், 'திரிசாவ நேர்ல பாக்க முடியுமாடே, நல்ல டைப்தானா? மெட்ராஸ் வந்தா சிவகுமார் மக்கமாருகூட ஒரு போட்டோ எடுத்துரலாமா? நம்ம பைய ப்ளஸ் டூ பெயிலாயிட்டு, வெளங்காம

மூங்கில் மூச்சு! - 27

சுத்திக்கிட்டு இருக்கான். அவனக் கூட்டிட்டுப் போயி சினிமால தள்ளிவிட்டுரேன்’ என நான் சற்றும் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து சிபாரிசுகள் வந்து தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும்.

தியாகு அண்ணன் இப்படிக் கேட்கவும், மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், 'என்ன கேட்கப் போகிறாரோ’ என்ற கலக்கத்துடன், 'சொல்லு... ங்... கண்ணே’ என்றேன்.

அவ்வளவு களைப்பிலும் உற்சாகமான குரலில் தியாகு அண்ணன் கேட்டார். ' 'மறுபடியும்’ படத்துல 'நலம் வாள எந்நாளும்’னு ஒரு பாட்டு இருக்குல்லா! அந்த டியூன என்னன்னு இளையராஜாகிட்ட சொல்லி, பாலுமகேந்திரா சார் வாங்குனாருன்னு மட்டும் கேட்டு சொல்லுடே!’

- சுவாசிப்போம்...