மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 28

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடங்கள் : எல்.ராஜேந்திரன்

##~##

சாலிகிராமத்தின் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் நண்பர் ஒருவரைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது, சரியான மழை. இரண்டாவது தளத்தின் டைல்ஸ் படிக்கட்டுகள் நன்றாகக் குளித்து இருந் தன. கவனமாக அடி மேல் அடிவைத்து நடந்தும், பயங்கர சத்தத்துடன் வழுக்கி விழுந்தேன். சத்தம் என்னிடம் இருந்து தான். நல்லவேளை, யாரும் பார்க்கவில்லை என்று நொண்டியவாறே வீட்டுக்கு வந்து படுத்துவிட்டேன்.

காலையில் கால் 'திருநெல்வேலி விஞ்சை விலாஸ் பூரி’போல வீங்கி இருந்தது. எலும்பு முறிந்து இருக்கிறதா என எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, 'ANKLE SPRAIN’ என்று ஆங்கிலத்தில் சொல்லி, பேண்டேஜ் போட்டு, மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்தார் டாக்டர். 'கொறஞ்சது த்ரீ வீக்ஸுக்குக் காலை அசைக்கக் கூடாது. உயரமான எடத்துல காலைத் தூக்கிவெச்சுக்கிட்டு, கேர்ஃபுல்லாப் பாத்துக்கங்க.’

மூங்கில் மூச்சு! - 28

விஷயம் தெரிந்து நலம் விசாரிக்க வந்த நண்பர்கள், 'எப்பிடியும் ஒரு ஆறு மாசம் ஆகும். ஒரு வருஷம் வரைக்கும் நீங்க கவனமாத்தான் இருக்கணும். எதுக்கும் இன்னொரு காலுக்கும் ஒரு பேண்டேஜ் போட்டுக்கோங்களேன்.’ ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் சொன்னார் கள். இரண்டு தலையணைகளின் மேல் காலைவைத்துப் படுத்துக்கிடந்தபோது, விஜய் டி.வி-யின் 'நீயா... நானா’ விவாத நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைத்தனர். 'கிழிரிலிணி ஷிறிஸிகிமிழி’ என்ற காரணத்துக்கு எல்லாம் அஞ்சா மல், 'அதெல்லாம் அவரு உக்காந்திருக்கிற மாதிரியே காமிச்சுக்கலாம். ஆளத் தூக்கிட்டு வந்திருங்க’ என்று சினிமா வில்லன்போல் உத்தரவிட்டுவிட்டார் 'நீயா... நானா’ நிகழ்ச்சியின் இயக்குநரும் என் நண்பருமான அந்தோணி, நெல்லைக்காரர். நான் செட்டில் நுழையும்போது, 'ஊர்ப் பாசம் தேவையா?’ என்ற தலைப்பில் இரு தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் கொலை வெறியுடன் விவாதித்துக்கொண்டு இருந்தனர். அங்கும் இங்கும் நடந்தபடி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்ற கோபிநாத் மீதே, எனது கவனம் முழுக்க இருந்தது. அடிபட்டு இருந்த கால் எந்த நேரமும் அவரது பூட்ஸ் காலால் மிதிபடும் அபாயம் இருந்ததால், வெளியே காட்டிக்கொள்ளாத உள்நடுக்கத்துடனேயே அமர்ந்து இருந்தேன்.

மூங்கில் மூச்சு! - 28

பேசியபடியே எனக்கு எதிர்ப் பக்கம் சென்று என்னைப் பார்த்து, 'நீங்கள் சொல்லுங்கள் சுகா... எதனால் ஊர்ப் பாசம் தேவை என்று சொல்கிறீர்கள்?’ என்று கேட்டதுதான் தாமதம். கால் வலி காணாமல் போய், கண்கள் இருண்டு அவ்வளவு பெரிய கோபிநாத்தே அவுட் ஆஃப் ஃபோகஸில் தெரிந்தார். சத்தமாக எனது கருத்துகளைச் சொல்லத் துவங்கி னேன். நிறையக் காற்றும், கொஞ்சம் வார்த்தைகளுமாக வெளியே வந்து விழுந்தன. இரண்டாம் வாய்ப்பாடு எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. கோபிநாத் கேட்ட கேள்வி புரிந்த மாதிரியே பேசினேன். ஆனால், அதில் ஒரு வார்த்தைகூடப் புரிகிற மாதிரி இல்லை என்பதை உப்பில்லாப் பண்டம் சாப்பிட்டதுபோலான கோபிநாத்தின் முக பாவம் எனக்கு உணர்த்தியது. கூடவே, எனது அடிபடாத கால் நடுங்கியதையும் அவர் கவனித்து இருக்க வேண்டும். சட்டென்று என்னிடம் இருந்து நகர்ந்து, அவராகவே ஏதோ பேசிச் சமாளித்து, நிகழ்ச்சியை ஒரு மாதிரியாக முடித்து என்னை விடுவித்தார்.

வீட்டுக்கு வந்தவுடன்தான் எனது மூச்சு சீரானது. குஞ்சு போன் பண்ணினான். நிகழ்ச்சியில் நான் உளறியதை எல்லாம் கேட்டுச் சிரித்தவனிடம், கால் வலி குறையாததைச் சொன்னேன். 'இதுக்குலாம் நம்ம ஊர் பண்டாரவிள நாடார்தாம்ல சரி. தடவிப் பார்த்து சவ்வு கிளிஞ்சிருக்குன்னு முட்டப் பத்து போடுவாரு. ஒரே வாரத்துல ஓட வெச்சிருவாரு. என் கால அப்பிடித்தானெ சரியாக்குனாரு. ஞாவகம் இருக்கா?’ என்றான்.

மூங்கில் மூச்சு! - 28

'எல, கொஞ்சம் வீட்டுக்கு வாரியா?’. திருநெல்வேலியில் இருக்கும்போது ஒருநாள் முக்கலும் முனகலுமாக குஞ்சு போன் பண்ணியது இன்னும் நினைவில் உள்ளது. 'என்னல ஆச்சு? கொரல் ஒரு மாரி இருக்கு?’ என்று கேட்டதற்கு, 'சீக்கிரமா கௌம்பி வால. பண்டாரவிள நாடார்ட்ட போணும்’ என்றான். நான் போனபோது வேட்டியை மடித்துக் கட்டியபடி காலைத் தூக்கி ஒரு நாற்காலியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான். முகம் விளக்கெண்ணெய் குடித்ததுபோல் இருந்தது.

'இன்னும் என்ன சின்னப் பிள்ளையா. பையன் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுட்டான். இப்பிடிப் போயி கால ஒடச்சுட்டு வந்திருக்காரே!’- குஞ்சுவின் மனைவி பானு புலம்பினார். 'நீ அந்தாக்ல ஆரம்பிச்சுராத. நீ வால. போவோம். அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குப் போயிருக்காங்க. அவங்க வாரதுக்குள்ள போயிருவோம்’ என்று என்னிடம் சொன்னான். குஞ்சுவின் அப்பா செல்லமாக ஒரு ஸ்கூட்டி வளர்த்து வந்தார். பூப்போல அதை வீட்டில் இருந்து இறக்கி ஓட்டிவிட்டு, பின் அதைப் பத்திரமாக ஏற்றிப் பூட்டி, மூடியும் வைத்துவிடுவார். அந்த ஸ்கூட்டியை எடுக்கச் சொன்னான் குஞ்சு. சைக்கிளைத் தவிர, வேறு எந்த வண்டியும் ஓட்டத் தெரியாத என்னைப்போய் ஸ்கூட்டியை எடுக்கச் சொன்ன குஞ்சுவை அதிர்ச்சியுடன் பார்த்தேன். 'என்னயால எடுக்கச் சொல்லுதெ?’ கால் வலியில் நிற்க முடியாமல் துடித்த படி, 'ஸ்டார்ட் பண்ணித் தொலைல’ என்று கத்தினான். சிறு வயதில் இருந்தே சைக்கிள், ஸ்கூட்டர், பைக், கார் என எல்லா வண்டிகளையும் குஞ்சு ஓட்டி, நான் பின்னால் உட்கார்ந்து போய்த்தான்  பழக்கம். வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஒரு மோட்டார் வாகனம் ஓட்ட, பின்னால் கால் நீட்டியபடி குஞ்சு உட்கார்ந்துகொண்டான்.

அம்மன் சந்நிதியைத் தாண்டவே அரை மணி நேரம் ஆனது. 'கொஞ்சம் வேகமாத் தான் போயேன்’ என்று கத்தினான் குஞ்சு. நான் ஆக்ஸிலேட்டரைக் கூட்டினாலும், வண்டி போவேனா என்றது. விக்ரமாதித்யன் குதிரைபோல குஞ்சுவின் அப்பா அதை அப்படிப் பழக்கிவைத்து இருந்தார். வழக்க மாக அவர் ஓட்டும் வேகத்துக்கு, பின்னால் உட்கார்ந்திருப்பவர் சின்ன வெட்டுக் காயம்கூட இல்லாமல் சவரம் செய்து விடலாம்.

'ஏ எம்மா... என்னப் பெத்த அய்யா... உச்சிமாளி... ஒனக்குப் பொங்க வைக்கேன். அண்ணாச்சி... நல்லா இருப்பிய, என்னய விட்டிருங்க. இந்த வலியோடயே சாகுற வரைக்கும் இருந்திருதேன்’ - வலி தாங்க முடியாத நோயாளிகளின் புலம்பல்களைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், மளமள வெனக் கட்டுகள் போட்டு அனுப்பிக்கொண்டு இருந்தார் பண்டாரவிளை நாடார்.

குஞ்சுவின் முறை வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. 'எப்பிடி அடிபட்டுது?’ என்று காலை அவர் பார்த்துத் தொடுவதற்கு முன்பே, 'அண்ணாச்சேய்ய்ய்ய்ய்...’ என்று கத்தினான் குஞ்சு. 'எதுக்குக் கூப்பாடு போடுதிய? நாந்தான் இன்னும் தொடவே இல்லையே!’ என்று சொல்லிவிட்டுக் காலைப் பிடித்துப் படக்கென்று திருப்பிப் பார்த்தார். இந்த முறை குஞ்சு போட்ட சத்தத்தில், மேம்பாலத்தில் சென்றுகொண்டு இருந்த பஸ்ஸில் இருந்தெல்லாம் ஆட்கள் எட்டிப் பார்த் தனர். தலைமுறை தலைமுறையாக எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்து வரும் பண்டாரவிளை நாடார் குடும்பத்தின் பட்டுராஜன் அவர்கள் வைத்தியம் பார்க்கும் விதமே தனி.

அடிபட்ட நோயாளிகளின் கையையோ, காலையோ பிடித்துப் பார்த்து வைத்தியம் செய்யும்போது, நோயாளிகளிடம் பேசாமல், மற்றவர்களிடம் பேச்சுக் கொடுப்பார். 'ஏம்மா... அடிபட்ட ஆள உக்காரச் சொல்லுங்க. கூட வந்த நீங்க உக்காந்திருந்தியன்னா என்ன அர்த்தம்?’ அதாவது, உற்றுக் கவனித்து வைத்தியம் பார்க்கும் அளவுக்கு அப்படி ஒன்றும் நமக்கு அடிபடவில்லை என்று நோயாளியின் மனதில் மறைமுகமாக ஒரு நம்பிக்கையை விதைக்கும் ஒருவகையான மனோதத்துவ முறை இது.

புளியங் கொட்டையை அரைத்து, அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து துணியில் ஊற்றி, தைலத்துடன் குஞ்சுவின் காலில் கட்டு போடும்போது, 'ஓடிக்கிட்டே இருக்கெ. ஒனக்கொரு கால் கட்டு போட்டாதான் சரிப்பட்டு வருவேனு வீட்ல சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இப்பொ, அண்ணாச்சி நீங்க போட்டுவிடுதிய’ என்று வலியைப் பொறுத்துக்கொண்டு டைமிங் ஜோக் அடித்து, அருகில் நின்றுகொண்டு இருந்த பெண்களைப் பார்த்தபடி சொன்னான் குஞ்சு. அவர்களில் ஒன்றிரண்டு பேர் சிரிக்கவும், அந்தச் சூழலிலும் என்னைத் திரும்பிப் பெருமையாகப் பார்த்தான். குஞ்சுவைப்போல ஆயிரம் பேரைத் தன் அனுபவத்தில் பார்த்த பண்டாரவிளை பட்டுராஜன் அண்ணாச்சி, 'சரி... சரி... நெதமும் கட்டுல நல்லெண்ணெ ஊத்தாம விட்டுரக் கூடாது. இவரு மறந்துருவாரு. இவரு வீட்டம்மாகிட்டெ நீங்க சொல்லீ ருங்க. என்னா?’ என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.

சரியாக அப்போது நவராத்திரி நேரம். பொதுவாக, குஞ்சு வீட்டு ஆண்களுக்கு ஒரு குடும்ப உடை உண்டு. வட்டக் கழுத்து வைத்துத் தைக்கப்பட்ட எம்ப்ராய்டரி பூ டிசைன் போட்ட பட்டு ஜிப்பாதான் அது. குஞ்சுவும் அவன் அப்பாவும் அவரவர்களின் குடும்ப ஜிப்பாவை வருடா வருடம் நவராத்திரியின் போதும், நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின்போதும், பாச்சா உருண்டை போட்ட ஸ்டீல் பீரோவில் இருந்து வெளியே எடுத்து உதறி, அயர்ன் பண்ணுவார்கள்.

மாலை நேரங்களில் குஞ்சு வீட்டுக்கு கொலு பார்க்க வந்த பெண்கள், இலவச இணைப்பாக குஞ்சுவின் முறிந்த காலையும் வேறு வழி இல்லாமல் பார்த்துச் சென்றனர். காலில் முட்டைப் பத்து போட்ட கட்டு கட்டி இருந்தாலும், ஃபேர் அண்ட் லவ்லி யும் பாண்ட்ஸ் பவுடரும் போட்டு கொலுவோடு கொலுவாக குஞ்சுவும் உட்கார்ந்து இருந்தான்.

மற்ற நேரங்களில் குஞ்சுவிடம் பேசத் தயங்கும் பெண்கள்கூட, 'கவனமா இருக்கப்படாதா?’ என்று குசலம் விசாரித்தனர். 'இதுக்காகவே வருசா வருசம் நவராத்திரி டயத்துல கால முறிச்சுக்கிடலாம்போல இருக்கெல’ என்று சுண்டல் சாப்பிட்டுக்கொண்டு இருந்த என்னிடம் ரகசியமாகச் சொன்னான்.

கோமா மாமி குஞ்சு வீட்டுக்குள் நுழையும்போது, பின்னாலேயே குஞ்சுவின் அப்பாவும் வட்டக் கழுத்து ஜிப்பாவுடன் உள்ளே வந்தார். 'ஐயையோ, குஞ்சுவுக்கு என்னாச்சு?’ என்று கோமா மாமி கேட்க வும், குஞ்சுவின் அப்பா அவன் காலை உடைத்துக்கொண்ட கதையை விவரிக்க ஆரம்பித்துவிட்டார். 'வேறொண்ணும் இல்ல மாமி. பெரிய பதஞ்சலி முனிவரு மாரி யோகா கிளாஸுக்குப் போனான். ஒரு வார கோர்ஸு. கடைசி நாளு ஏதோ கேம்ஸாம். பல்லக் காமிச்சுக்கிட்டே பொம்பளைங்ககூட த்ரோ பால் வெளை யாண்டு குப்புற விளுந்துட்டான்!’

நான்கு நாட்களுக்கு ஒருமுறை கட்டு மாற்ற ஸ்கூட்டியில் குஞ்சுவைப் பண்டார விளை நாடாரிடம் கூட்டிச் சென்றதன் மூலம் குஞ்சுவுக்குக் குணமானதைவிட, நான் ஸ்கூட்டி ஓட்டக் கற்றுக்கொண்டேன். ஒருமுறை புதுக் கட்டுடன் இவனைப் பின்னால் உட்காரவைத்து தேரடிப் பக்கம்

மூங்கில் மூச்சு! - 28

வரும்போது, எங்களின் பழைய காதலி சந்திரா தன் பிள்ளையுடன் எதிரே வருவதைத் தூரத்திலேயே கவனித்து விட்ட குஞ்சு, மெதுவாகப் போகச் சொன்னான்.

இடுப்பில் குழந்தையுடன் எங்களை நோக்கி வந்த சந்திராவின் கண்கள் சட்டென்று கலங்கின. 'இன்னும் பளசெல்லாம் மறக்கலெ பாத்தியா. பொம்பள பொம்பளதாம்ல. சின்ன அடி தான். ரெண்டு நாள்ல கட்ட அவுத்துர லாம்னு சொல்லிருவோமா?’- என் தோளில் முகத்தை வைத்துக்கொண்டு உடைந்த குரலில் கிசுகிசுத்தான் குஞ்சு.

வேறு வழி இல்லாமல் நான் காலை ஊன்றவும், உடல் நலம் இல்லாத் தன் குழந்தையுடன் சந்திரா எங்களைத் தாண்டி 'ராதாகிருஷ்ணன் ஆஸ்பத்திரி’க்குள் நுழையவும் சரியாக இருந்தது!

- சுவாசிப்போம்...