மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஃப்ளிப்நாஸிஸ் திறமைசாலியா நீங்கள்?

மனோன்மணி தினகரன், ஈரோடு-3.

சிலருக்கு மட்டும்... எதைச் சொன்னாலும் எப்படி பதிலுக்கு 'ஜோக்’ அடிக்க வருகிறது? இந்தத் திறமை எப்படி?

ஹாய் மதன் கேள்வி - பதில்
##~##

நீங்கள் ஒன்றைச் சொன்னவுடன் அதைப் பல கோணங்களில் - மின்னல் வேகத்தில் - அலசி, நகைச்சுவையுடன் பதில் சொல்வது ஒரு தனித் திறமை. அதற்காக, அவர்கள் மற்ற எல்லா விஷயங்களிலும் கெட்டிக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக வித்தியாசமாகச் சிந்தித்துச் செயல்படும் இந்தத் திறமைக்கு Flipnosis என்று பெயர் (இந்தத் தலைப்பில் ஒரு புத்தகம் உண்டு!). இதற்கு சற்றுக் கோணலாக சிந்திக்கும் Lateral thinking தேவை. இது இருந்தால் எப்பேர்ப்பட்ட இறுக்கமான நிலைமையையும் சரி பண்ணிவிடலாம். ஓர் உதாரணம்: விமானம் டேக் ஆஃப் ஆகப்போகிறது. உள்ளே புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி (சற்று சிடுசிடுஎன்று) அமர்ந்திருக்கிறார். விமானப் பணிப்பெண் அவர் அருகில் வந்து, 'சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!’ என்றாள். உடனே முகமது அலி, 'எனக்கு எதற்கு சீட் பெல்ட்? நான் ஒரு சூப்பர் மேன்!’ என்கிறார் வெடுக்கென்று. பணிப் பெண் புன்னகையுடன், 'சார்... சூப்பர்மேனுக்கு விமானமே தேவைப் பட்டது இல்லை...’ என்று சொல்ல... முகமது அலிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இதுதான் ஃப்ளிப்நாஸிஸ்!

கிருஷ்ணபாரதி, சென்னை-91.

ஹாய் மதன் கேள்வி - பதில்

'போராளிகளுக்கு Sense of Humour இருக்கவே இருக்காது’ என்கிறான் நண்பன். நிஜமா சார்?

சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இயற்கையானது. போராளிகள் ரத்தமயமான வாழ்க்கையில் நடுவே இயங்குவதால், சில சமயம் அந்த உணர்வு அமுங்கியிருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஜோக்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஒரு முறை விகடனுக்காக நான் அவரைச் சந்தித்தபோது, 'உங்கள் கார்ட்டூன்களைப் பார்த்து அப்படியே வரைவேன்... என் பொழுதுபோக்கு அது!’ என்றார். வரைந்து காட்டுங்கள் என்றேன். வரைந்தார்... சற்று கூச்சத்துடன்!

கி.மனோகரன், பொள்ளாச்சி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

நாம்தான் சிரிக்க வேண்டும். நம்மைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கக் கூடாது. அப்படித்தானே?

அப்படி நினைத்து இருந்தால், சாப்ளின், கலைவாணரில் ஆரம்பித்து எந்த நகைச்சுவை நடிகரும் தோன்றியிருக்க மாட்டார்!

 எம்.வைத்தியலிங்கம், கோயம்புத்தூர்-10.

சூரிய நட்சத்திரம் இருக்கட்டும்! அதைத் தவிர, நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் இருக்கும் இடத்துக்கு, இந்த நூற்றாண்டுக்குள் நம்மால் போக முடியுமா?

முடியாது! சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் (பக்கத்து வீட்டுக்கார) நட்சத்திரம் ப்ராக்ஸிமா ஸென்ட்டாரி. ஒரு பறக்கும் காரில், 65 மைல் வேகத்தில் நீங்கள்பயணித் தால், அங்கே செல்ல 4 கோடியே 55 லட்சம் ஆண்டுகள் ஆகும். உங்கள்பக்கத்து வீட்டில் ரஜினி, கமல் போல சினிமா நட்சத் திரங்கள் இருந்தால், சில நிமிடங்களில்போய் விடலாம். ஆனால், உள்ளே விட மாட்டார்கள்!

சுநந்தா ராமன், சென்னை-28.

தெனாலிராமன், பீர்பால், முல்லா நஸ்ருதீன் - நகைச்சுவை உணர்வில் நம்பர் ஒன் யார்? (நிச்சயமா மாட்டிக்கிட்டீங்க!)

முல்லா! தெனாலியும் பீர்பாலும் பெரும் அரசர்களின் கீழ் பணிபுரிந்தார்கள். முல்லா ஒரு நாடோடி. புகழ்பெற்ற சூஃபி தத்துவ ஞானி. இன்றைக்கும் துருக்கியில் ஆண்டு தோறும் நிகழும் 'முல்லா விழா’வில் ஜோக் போட்டிகள் நடைபெறுகின்றன. துருக்கியைத் தவிர... க்ரீஸ், ரஷ்யா, சில அரபு, மத்திய ஆசிய நாடுகள் 'எங்கள் நாட்டில்தான் முல்லா பிறந்தார்’ என்று சொந்தம் கொண்டாடு கின்றன.முல்லா பற்றிய எனக்குப் பிடித்த ஜோக் -

'ஒரு முறை அரண்மனையில் மன்னர் வைத்த விருந்துக்கு, முல்லா கிழிந்த, அழுக்கான ஆடை அணிந்து செல்ல, வாசலில் சேவகர்கள் அவரை உள்ளே விட மறுத்தார்கள். சற்று தொலைவில் நின்று இருந்த அமைச்சரும் தளபதியும் 'அந்த ஆளை வெளியே அனுப்பு!’ என்று குரல் கொடுத்தனர். முல்லா வீட்டுக்குத் திரும்பி, பிரமாதமான ஜரிகை உடை ஒன்றைக் கடன் வாங்கி அணிந்துகொண்டு, மறுபடியும் அரண்மனைக்குப் போனார். எல்லோரும் வழிவிட்டனர். மன்னரும் அவரை விருந்தில் அமரச் சொன்னார். பதார்த்தங்கள் பரிமாறப் பட்டன. முல்லா ஒவ்வொன்றையும் எடுத்து ஜரிகை உடை மீது தேய்த்துக்கொள்ள ஆரம்பித்தார். மன்னர் திகைப்புடன், 'என்ன இது... லூஸா நீங்க?’ என்று

ஹாய் மதன் கேள்வி - பதில்

கேட்டதற்கு முல்லா, 'அரசே! விருந்தைச் சாப்பிட எனக்குத் தகுதி கிடையாது. அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு வந்ததே இந்த ஜரிகை உடைதான். நியாயமாக அதுதான் விருந்து சாப்பிட வேண்டும்!’ என்றார்!

ஒய்.முகமது ரஃபீக், மதுரை-8.

என் நண்பன் ரொம்பப் புளுகுகிறான். அவனை எப்படித் திருத்துவது?

எதற்குத் திருத்த வேண்டும்? ஆண்டுதோறும் பிரிட்டனில் 'மிகவும் பிரமாண்டமாகப் புளுகுபவர்’களுக்கான போட்டி ஒன்று நடக்கிறது. நண்பர்கள் எல்லாம் நிதி திரட்டி டிக்கெட் எடுத்து அவரை அங்கே அனுப்பவும்!