Published:Updated:

2 லட்சம் கோடிக்கு அதிபதி நீங்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

2 லட்சம் கோடிக்கு அதிபதி நீங்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

கண்.சிவகுமார், திருமருகல்.

2 லட்சம் கோடிக்கு அதிபதி நீங்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

'கைப்பாவை' என்றால் என்ன ஜென்டில்மேன்?

'பாவை' என்றால் பொம்மை (Puppet) - கையில் உள்ள, சொன்னபடி எல்லாம் ஆடுகிற, வெறும் ஜடப் பொருளான பொம்மை! சில சமயம், பொம்மை நாட்டைக்கூட ஆள முடியும். அதைத்தான் நாம் பொம்மை ஆட்சி Puppet Regime என்கிறோம்!

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்.

'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்கிறார்கள்; 'எவ்வளவுக்கு எவ்வளவு சிரிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அழுவோம்' என்றும் சொல்கிறார்கள். இதில், எது உண்மை?

முதலாவதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மை. பொறாமை பிடித்த சிடுமூஞ்சிகள் சொல்வதுதான் இரண்டாவது 'கருத்து'. அவர்களை நம்ப வேண்டாம். அல்லது, அவர்கள் சொல்வதை வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதாவது, நிறைய சிரித்தால் கண்ணீர் வரும். ஆனந்தக் கண்ணீர்!

வெ.கா., கடையநல்லூர்.

கடல் நீரில் சூரிய ஒளி எவ்வளவு தூரம் ஊடுருவிச் செல்ல முடியும்?

முதலில், அலைகள் உருவாகும் கரையோரக் கடல். இது ஸ்விம்மிங் பூல் மாதிரிதான்! பிறகு, பெரும் சரிவு - 500 அடி

ஆழத்துக்கு. இது Continental Shelf. பிறகே ஆழ்கடல். இதையும் இரண்டாகப் பிரிக்கிறார் கள். வெளிச்ச ஆழ்கடல், இருட்டு ஆழ்கடல். அதாவது, வெளிச்சம் ஊடுருவும் வரை உள்ள கடல். அதற்கு அடியில் இருட்டுக் கடல். கடலுக்குள் சூரிய ஒளி சுமார் 600 அடி வரை பாய்கிறது. (இங்கேதான் முக்கால்வாசி கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன). தெளிவான நீர் என்றால் அதிகபட்சம் 1,000 அடி ஆழம் வரை ஒளி மங்கலாக இருக்கும். பிறகு கும்மிருட்டு. முகத்துக்கு அருகே வைத்துப்பார்த்தால்கூட - உங்கள் உள்ளங்கை உங்களுக்கே தெரியாது! சுமார் 30,000 அடிக்குக் கடைசி வரை. அநேகமாக எட்டு மைல் ஆழத்துக்கு கும்ம்ம்மிருட்டுதான்!

பா.அசோக், பிள்ளையார்குளம்.

'கர்ண கொடூரம்' என்று சொல்கிறார்களே... கர்ணனுக்கும் கொடூரத்துக்கும் என்ன சம்பந்தம்?

கொடூரம் என்பது செயல். கடூரம் என்பது சொல். கடுமையான, துன்புறுத்தும் சொற்கள் என்று அர்த்தம். கர்ணன் மகாவீரன். பெரும் வள்ளல். விசுவாசம் மிகுந்தவன். ஆனால், அவன் கொடியவனுக்கு விசுவாசமாக இருந்தான். தனக்கு மாதவிலக்கு என்று கெஞ்சியும் திரௌபதியை விடாமல் சபைக்கு இழுத்து வந்து, புடவையை துச்சாதனன் களைய முனைந்தபோது, கர்ணன் அதை ஆதரிக்கிறான். துரியோதனன், தன் தொடையில் அவளை அமரச் சொன்னபோது, திரௌபதி கதறிப் பின் வாங்குகிறாள். கர்ணன் அவளைப் பார்த்து இகழ்ச்சியோடு 'ஐந்து பேருடன் படுத்துக்கொள்கிறவள் நீ. உனக்கு என்ன மானம், ரோஷம் வேண்டிக்கிடக்கிறது? துச்சாதனா! துரியோதனன் மடியில் அவளை இழுத்து உட்காரவை!' என்று, மேலும் கடூரமான வார்த்தைகளால் அவளை ஏசுகிறான். சபையில் இருந்த பெரியவர்கள் காதைப் பொத்திக்கொள்கிறார்கள். அதுவே கர்ணகடூரம்! அதாவது, ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக, வீரனாக, வள்ளலாக இருந்தாலும் ஓர் அப்பாவிப் பெண்ணிடம் இகழ்ச்சியாக நடந்துகொண்டால், வீழ்ச்சி நிச்சயம்!

பொன்விழி, அன்னூர்.

புலிப் பல்லில் டாலர் அணிவதால் ஏதாவது பயன் உண்டா?

2 லட்சம் கோடிக்கு அதிபதி நீங்கள்! - ஹாய் மதன்-கேள்வி பதில்

துளிக்கூட பயன் கிடையாது. ஆனால், அந்த பிசினஸில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் ஷேர் உண்டு. இந்தியர்கள் புலிகளை விஷம்வைத்துக் கொன்று காடு, மலை வழியாக (வாகனங்களை போலீஸ் மடக்கி சோதனை செய்யும் என்பதால்!) நடந்து சென்று சீனர்களுக்கு புலித் தோல், அதன் உடல் பாகங்கள், குறிப்பாகப் பற்கள், நகங்கள், அதன் உறுப்புகளை (Penis) விற்கிறார்கள். பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கில்கூட புலிகள் இருந்தது உண்டு. அப்போது காட்டுக்குள் தமிழ் இளைஞன் சென்று, புலியை வேட்டையாடிக் கொன்று, அதன் பல்லை மாலையாக அணிந்து (திரும்பி!) வந்தால்தான்... பெண் அவனுக்குத் தலை நீட்டுவாள். அந்தப் புலிப் பல் மாலையை அவளுக்கு தமிழன் அணிவிப்பான். அது தான் திருமணம். அதுவே பிற்பாடு தாலியாக மாறியது. இப்போது கொடுமை! அழித்தொழித்தல் காரணமாக, இந்தியாவிலேயே 4,000-க்கும் குறைச்சலாகத்தான் புலிகள் இருக் கின்றன. அநேகமாக நம் பேரப் பிள்ளைகள் பதப்படுத்தப்பட்ட புலியை மியூஸியத்தில்தான் பார்ப்பார்கள்!

கண்.சிவகுமார், திருமருகல்.

கிருமிகளைப் பார்க்கும் திறன் மனிதனின் கண்களுக்குக் கிடைத்தால்?

நம் உடலின் 'போர்வை'யான தோல் மீது மட்டும் சுமார் 2 லட்சம் கோடி பாக்டீரியாக்கள்... அதாவது, கிருமிகள் வாழ்கின்றன! உதாரணமாக, கன்னத்தில் ஒரு சதுர சென்டிமீட்டர் அளவுக்கு ஒரு சதுரம் வரைந்துகொள்ளுங்கள். அந்த சதுரத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் வளைய வரும். ஒரு மனிதனின் உடலில் இருந்து ஒவ்வொரு நாளும் 1,000 கோடி செத்துப்போன தோல் துகள்கள் வெளியேற்றப்படுகின்றன. அதுதான் அந்த பாக்டீரியாக்களின் உணவு! தினமும் நீங்கள் (பாம்பு மாதிரி!) தோல் உரிக்கிறீர்கள். கூடவே, புதிய தோல் வளர்கிறது! அந்த பாக்டீரியாக்கள் நம் தோலை உண்ணாவிட்டால், செத்துப்போன தோல் உடலிலேயே அப்பிக்கொண்டு யானை அளவு பெருத்துவிடுவோம்! உடலுக்கு உள்ளே போனால்... ஜீரண உறுப்புகளில் மட்டும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்டீரியா உண்டு ('பாக்டீரியா' என்பது பன்மை!) அதுதான் நாம் உண்ணும் உணவைப் பிரித்து ஜீரணிக்கவைக்கிறது. இதெல்லாம் நல்ல பாக்டீரியா. கெட்டதும் உண்டு. பாக்டீரியாவுக்கும் ஒரு நாடு தேவை. அதுதான் உங்கள் உடல்! சரி, விடுவோம்! இதை எல்லாம் கண்களால் பார்க்க முடிந்தால் மனிதன் என்ன செய்வானா? சகிக்க முடியாமல் கதிகலங்கிப் போய், ஓடிச் சென்று தற்கொலை செய்துகொண்டுவிடுவான்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

'கடலின் ஆழம், ஆகாயத்தின் உயரம்'... எதைப் பார்க்க ஆசை?

முதலில் உலகத்தின் நீள அகலத்தை! இதையே இன்னும் பார்த்து முடிக்கவில்லை. கடலும் ஆகாயமும் எங்கும் போய்விடாது. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்!