மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 40

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணி, படம் : கே.ராஜசேகரன்

'இது நான் சொன்னது!’

##~##

'தொள்ளாயிரம் ஆண்டு களுக்கு முன் தொண்டை  மண்டலத்தை ஆண்டுவந்த, ஒரு ராஜாவின் கதைதான் இந்தப் படம்!’

-பாட்டெழுத உட்கார்ந்தவுடன், டைரக்டர் கே.சங்கர் அவர்கள் என்னிடம் இப்படிச் சொன்னவுடன்...

ஒரு வினாடி, என்னுள் தொண்டை மண்டலத்துத் தோன்றலான பேரறிஞர் அண்ணா அவர்களின் இனிய நினைவு இழையோடியது.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 40

காஞ்சியில் கண் மலர்ந்த அண்ணாவும் ஓர் அரசுதான்!

குஞ்சரம் இல்லை;
குடை இல்லை;
பதாகை இல்லை;
படை இல்லை!

-ஆயினும் - கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சில் கோலோச்சிய கோ!

அய்ம்பது

ஆண்டுகளுக்கு முன்னம்...

எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் படம் 'நல்லவன் வாழ்வான்’; அதன் திரைக்கதை உரையாடல் அண்ணாதான்.

அன்று  என் பாட்டைப் பாராட்டி, மெல்ல என்  முதுகில் தட்டிக் கொடுத்தான் அந்த மூதறிஞன்; அடடா! அந்த ஒரு தட்டல் போதும் - ஊன் விழும் வரை என் முதுகில் கூன் விழாது!

தமிழின் தகவுகளை அண்ணாபோல் ஆர் சொன்னார்?

அண்ணாவின் குரல் - ஒரு வகை NASAL SOUND; மூக்கும் நாக்கும் மருவி நின்று வார்க்கும் அருவி அது!

நெடுநாள் முனம் - நான் எழுதிய கவிதை ஒன்று என் நினைவுக்கு வந்தது.

'மானுடம்
மறக்கப் போமோ...
தொண்டைத் தமிழுக்குத்
தொண்டை மண்டலத்தானின்
தொண்டை - ஆற்றிய
தொண்டை?’

'ய்யோவ்! வாலியாரே! பாட்டுக்கான SITUATION-ஐ சொல்லவே ஆரம்பிக்கல்லே, அதுக்குள்ள ஏதோ சிந்தனையில ஆழ்ந்துட்டீரு...’

- என்று என் தோளைத் தட்டினார் இயக்குநர் சங்கர்.

'ஒண்ணுமில்லெ சார்... நீங்க தொண்டை மண்டலத்தை ஆண்டுவந்த ஒரு ராஜாவின் கதைன்னு சொன்னவுடனே-

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 40

அண்ணா ஞாபகம் வந்தது! SORRY சார்! நீங்க SITUATION-ஐச் சொல்லுங்க!’

- என்று நான் வெற்றிலையின் முதுகில் சுண்ணாம் பைத் தடவத் தொடங்கினேன்; சங்கர் தொடர்ந்து பேசலானார்.

தொண்டை மண்டலத்திற்கு - அண்டை மண்டலத்திலிருந்தெல்லாம் புலவர் பெருமக்கள்  வருவதும், பாடிப் பரிசில் பெறுவதும் வாடிக்கை.

அரசனின் அத்தாணி மண்டபத்தில் - ஏரார் தமிழை எழுத்தெண்ணிப் படித்தோரும்; அதன்பால் ஆழங்காற்பட்டுத் துறை போன சான்றோரும், அநேகர் இருந்தனர்.

புலவர்களைப் புரத்தல் என்பதை - மன்னன் தன் மரபு வழி நின்று கடைப்பிடித்து வந்தோனாதலால் -

அடிக்கடி அவையைக் கூட்டிப் புலவோரிடையே  போட்டி வைப்பதும், பொற்கிழி வழங்குதலும் -

திங்கள் தோறும் நடந்து வந்தது. எனினும் அரசனின் அவைப் புலவராகத் தருக்கும் செருக்கும் ஏறி நின்ற ஏகம்பவாணன் என்பானை எவராலும் வெல்ல இயலவில்லை.

எம்.என்.நம்பியார்தான் ஏகம்பவாணன்.

அவன் செருக்கை அடக்க, சாக்ஷ£த் சரஸ்வதியே ஆண் வேடமிட்டு அவைக்கு வருகிறாள். போட்டி தொடங்குகிறது!

'இதான்யா SITUATION; ஆண் வேடத்தில் வந்த சரஸ்வதியின் வினாக்களுக்கெல்லாம் - அவ்வப்போது சரியான விடையைச் சொல்கிறான் ஏகம்பவாணன்.

கடைசியில் - ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தோற்றுப்போகிறான்!

கேள்வியும் நீரே; பதிலும் நீரே; பாட்டெழுதித் தர வேண்டியது, உம்ம பொறுப்பு!’

- என்று இயக்குநர் சங்கர் சுவரில் சாய்ந்துகொண்டார்.

முதலில் அரசவைப் புலவன் ஆரம்பிக்கிறான் - அகந்தை தொனிக்க!

'அறிவில் ஆதவன்! - நான்
அறிவில் ஆதவன்!

- பல்லவி இப்படிப் போக, சரஸ்வதியின் ஆண் வடிவத்துப் புலவன், அதே பல்லவியை வாங்கிப் பாடுகிறான் -

'ஆம்!
அறிவில்லாதவன்! - நீ
அறிவில்லாதவன்!’
- என்று.

பிறகு -

ஒவ்வொரு கேள்வியாய்க் கலைமகள் கேட்க, ஏகம்பவாணப் புலவன் எல்லாவற்றிற்கும் விடையளித்து மண்டை வீங்கி நிற்பான்.

எலியைச் சற்று ஓடவிட்டுப் பின் - பூனை என்னணம் அதை ஒரே 'கவ்’வாகக் கவ்வி உண்ணுகிறதோ,

அன்னணம் -

சற்று, புலவனின் திமிருக்குத் தீனி போட்டுவிட்டு -

இறுதியாக வெண்டாமரைச் செல்வி ஒரு வினாவைத் தொடுப்பாள்!

'எறும்பின் வாயைவிட -
என்னது - மிகச் சின்னது?’

- இப்படி நாமகள் கேட்டவுடன் நாடி நரம்பெல்லாம் ஆடிப்போவான் அந்தப் புலவன்; விடையறியாமல் வியர்த்துக்கொட்ட, அந்த வியர்வையில் அவன் கர்வங்கள் கரையலாகும்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 40

'நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்; என்னோடு  போட்டியிட வந்த புலவனே! இந்த வினாவிற்கான விடையை நீர் சொல்லும், பார்க்கலாம்!’ - என்கிறான் ஏகம்பவாணன்.

ஆண் வடிவில் வந்திருக்கும் அறிவுத் தெய்வம், அவ்வினாவிற்கான விடையைச் சொல்கிறது -

'எறும்பின் வாயைவிடச்
சின்னது - அது தின்னது!’
- என்று!

'ஒய், வாலியாரே! அற்புதம்! கடைசிக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போறீர்னு - நாங்க எல்லாருமே மண்டையப்  பிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தோம்...  SIMPLY SUPERB! சரஸ்வதி - சபையில் உக்காந்து கேள்வி கேக்கல்லே; உம்ம, நாக்குல உக்காந்துண்டிருக்கா!’

- இயக்குநர் கே.சங்கர் இப்படி வாய் நிறையப் பாராட்டியவுடன், நான் வெகுவாக மகிழ்ந்தேன்; நெகிழ்ந்தேன்.

காரணம் - கே.சங்கர், நல்ல ரசிகர்; அவரது தாய் மொழி மலையாளமாயிருப்பினும் - தமிழில் ஓரளவு நல்ல பயிற்சியும் பாண்டித்யமும் அவருக்கு உண்டு.

கண்ணதாசனின் கனலும் புனலும் கலந்தாற்போன்ற உரையாடல்களைத் தாங்கி வந்த 'சிவகங்கைச் சீமை’க்கு  அவர்தான் இயக்குநர்.

'ஆலய மணி’; 'ஆண்டவன் கட்டளை’ - இவற்றில்  இறைச்சிப் பொருள் நிறைந்த கண்ணதாசன் பாடல்கள் உருவாக - சங்கர் அவர்களின் உந்துதலும் ஒரு காரணம் எனலாம்!

தமிழ் தெரிந்த இயக்குநரோடு தொழில் செய்தல் என்பது -

புலவி புரியும் பெண்ணோடு கலவி புரிதல் போலாகும்; அன்னணம் இன்றி - ஒரு தற்குறியோடு தொழில் செய்கையில், நம் சொற்குறி தவறிப்போகும்!

மிழும் இசையும் - ஒருசேரக் கலந்து நின்ற ஒரு பிறவி  மேதையிடம், நான் என் தொடக்க காலத்தில் தொழில் செய்ய நேர்ந்ததை, அடியேனின் ஆகூழ் என இக்கணம் நினைவு கூர்கிறேன்.

அவரது தாய் மொழி தெலுங்கு;  எனினும், சங்க காலப் பாடல் முதல் சங்கரதாஸ் சுவாமி பாடல் வரை -

அவருக்கு அத்துப்படி. தமிழிசையில் அவர் குரல் விளையாடும்; தபலாவில், அவர் விரல் விளையாடும்!

குறளும் அவரும் ஒன்று; உயரத்திலும் உற்ற புகழிலும்.

முதன்முதலாக -

அவர் படத்தில்தான் நான் அனைத்துப் பாடல்களும் எழுதினேன். அதன் பின்புதான், என் மேல் புகழ் வெளிச்சம் அடிக்க ஆரம்பித்தது. இன்றளவும் அந்தப் பாடல் கள் ஈரம் உலராமல் இருக்கின்றன.

நாற்பத்தெட்டாண்டுகள் நகர்ந்த பின்னும் நரைக்காத பாடல்கள் அவை; அதற்கு முக்கியக் காரணம், அதன் வரிகளை அப்படியே திருத்தாது வருத்தாது - இருக்க  அனுமதித்த அந்த இயக்குநரின் விசும்பனைய விசால மனம்தான்!

ன்னளவில் -

எனக் கவர்...

'கண்கண்ட தெய்வம்;’

'கை கொடுத்த தெய்வம்;’

'பேசும் தெய்வம்;’

'தெய்வத்தின் தெய்வம்;’

'சாரதா’ கடாட்சம் பெற்ற -

'தெய்வப் பிறவி;’

நவாப் ராஜமாணிக்கத்தின்

நாடக கம்பெனிதான் -

அவரை

ஆளாக்கிய 'அன்னை;’

சினிமா - அவருக்கு

'சித்தி’;

அனேகரை

அவர் ஈர்க்கக் காரணம்...

'பணமா? பாசமா?’;

'குலமா? குணமா?’;

அவையல்ல; பின் எது?

அவரிடமிருந்த தமிழெனும் 'செல்வம்’;

அதை

அவருக்கு -

அருளியவள்

'ஆதி பராசக்தி!’

ப்போது புரிந்திருக்குமே - நான் யாரைச் சொல்கிறேனென்று!

ஆம்; இயக்குநர் திலகம் திரு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான்!

அவருடைய 'கற்பகம்’ படம்தான் - எனக்கு நட்சத்திர அந்தஸ்தை நல்கியது.

இவ்வளவு ஏன், அவரை நான் பாராட்டுகிறேன் என்றால் - அவரே மிகச் சிறந்த பாடலாசிரியர்; அவர் எழுதிய  பாட்டெல்லாம் 'ஹிட்’!

அவர் படத்தில் நான் பாட்டெழுதுவது எனக்குப் பெரிய RISK!

'கோபாலகிருஷ்ணனே வரிகளைச் சொல்லி, வாலியை எழுதவெச்சிருப்பாருய்யா!’ - என்று கோடம்பாக்கம் பேச  வாய்ப்புண்டு.

அவ்வசை அடியேனுக்கு வராமல், என்னை என் கையைக்கொண்டே எழுதவைத்து, 'இது இவன் உழைப்புதான்’  என்று ஊருக்குப் பறை சாற்றிய புண்ணியவான் திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள்!

ன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால்...

இன்றைய கவிஞர்கள் எழுதுகின்ற சில நல்ல நல்ல பல்லவிகளைப் பாராட்டி -

இசையமைப்பாளர்களிடம் சொன்னால், அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

'அண்ணே! இது நான் சொன்னது!’

- சுழலும்...