மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

மோனோலிசா யார்?

##~##

கே.வெங்கட், விழுப்புரம்-2.

பாண்டிய மன்னர்கள் பல பேர் இருக்க, கட்டபொம்மனுக்கு மட்டும் 'வீர பாண்டிய’ என்ற அடைமொழி ஏன்?

பாண்டிய நாடு என்றால், மதுரை மட்டும்தான் என்று நினைத்தீர்களா? மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவனந்தபுரத்தின் சில பகுதிகள் என்று தென்னிந்தியா வில் 56 தேசங்களை பாண்டியர்கள் ஆண்டார்கள். திருச்சிகூட பாண்டிய நாட்டுக்கு (நாயக்கர்கள் ஆட்சியின்போது) தலைநகரமாக இருந்திருக்கிறது. ஆகவே, கட்டபொம்மன் பெருமிதத்தோடு 'வீர பாண்டிய’ என்கிற அடைமொழியைச் சேர்த்துக்கொண்டார். என்ன ஆட்சேபனை?! ('பாண்டி’ என்பதற்கு மாட்டு வண்டி, எருது, பல்லாங்குழி, பாண்டி விளையாட்டு என்றும் அர்த்தங்கள் உண்டு!)

வெ.கா., கடையநல்லூர்.

தனது ஓவியத்துக்கு மாடலாக வந்த அழகி மோனோலிசாவை ஓவிய மேதைலியனார்டோ டாவின்சி காதலிக்கவும் செய்தாராமே?

ஜஸ்ட் 30 அங்குல உயரம் - 21 அங்குல அகலம் -'மோனோலிசா’ என்கிற ஓவியம், புகழில் உலக அளவில் முதலாவது இடத்தைப் பெற்றிருக்கும் ஓவியம். ஓவியத்தில் இருக்கும் பெண் யார் என்பதுபற்றிப் பல கருத்துகள் நிலவுகின்றன.  

ஃப்ளாரன்ஸ் நகரில் ஒரு பெரிய வங்கி நிர்வாகியின் மனைவி என்றும் மெடிஸி பிரபுவின் காதலி என்றும் பலர் பலதைச் சொல்கிறார்கள். மர்மம்! ஆனால், அவர் டாவின்சியின் காதலி இல்லை என்கிறார்கள் (ஓவியர்... ஹோமோ!) 1503-ம் ஆண்டு துவங்கி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போகும் இடம் எல்லாம் 'மோனோலிசா’வை அணைத்துத் தூக்கிக்கொண்டு, அங்கங்கே வண்ணங்களால் 'டச்’ பண்ணிக்கொண்டே இருந்தார் டாவின்சி. இது எக்ஸ்ரே சோதனைகள் மூலம் தெரியவருகிறது. அவர் இறந்த பிறகு, ஓவியம் பல கைகள் மாறின. ஒரு முறை திருடப்பட்டது. 1805-ம் ஆண்டு நெப்போலியன் அதை வாங்கி, பாரீஸில் உள்ள லூவர் மியூஸியத்தில் வைத்தார். இன்று வரை லிசா அங்குதான் - பலத்த பாதுகாப்புடன் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள்!

நான் அங்கு சென்றபோது,ஓர் அடி தொலைவில் நின்று வெகு நேரம் அவளை ரசித்தேன். ஏன் 'மோனோ’வுக்கு இவ்வளவு புகழ்? அது தனிக் கதை!

வி.ரியாஸ், நாச்சியார்கோவில்.

இப்போது உள்ள நடிகைகள்எல்லாம் ஏன் மிக மிக ஒல்லியாக இருக்க விரும்புகிறார்கள்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

முன்பு தமிழ் சினிமாவில் காதல் காட்சியில் மேலெழுந்த வாரியாக மட்டும்(!) தொட்டு நடித்தார்கள். இன்று ஹீரோ காதலை வெளிப்படுத்த, ஹீரோயினை வெறித்தனமாக இறுக்கமாக அணைத்துக்கொண்டு புரள வேண்டி இருக்கிறது. அது ஒல்லியாக இருந்தால்தான் முடியும்!

தேவசேனாதிபதி, வேலூர்.

நாடாக இருக்கட்டும், மாநிலமாக இருக்கட்டும், வீடாக இருக்கட்டும்... அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் தகராறு, ஏன்?

லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, கற்கால மனிதன் குடும்பம் என்கிற அமைப்பை ஏற்படுத்திக்கொண்ட கையோடு, ஒரு முக்கியமான விஷயத்தை எச்சரிக்கையாகத் தயாரித்துக்கொண்டான். அதன் பெயர் வேலி!

வேலி என்பது நம் ரத்தத்தில் ஊறிய விஷயம். கதவைத் திறந்துகொண்டு ஒருவன் நம் வீட்டுக்குள் நுழைந்தால்கூட, நாம் பதற்றம் அடைய மாட்டோம். அதுவே காம்பவுண்ட் சுவரை அவன் தாண்டிக் குதித்து வந்தால், நமக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். மற்ற உயிரினங்களுக்கும் இந்த உணர்வு உண்டு - Territory! தனி மனிதனாக ஓர் அறைக்குள் இருக்கும்போது, அதற்கு வேறு ஒரு பெயர் உண்டு - ப்ரைவஸி.  எல்லாத் தகராறுகளுக்கும் அடிப்படைக் காரணம் Territory என்கிற இந்த எல்லைக்கோடுதான்!

கு.தேசிங்கு, சேலம்.

உங்களைப் பொறுத்தமட்டில் யார் மிகவும் ஆச்சர்யமான மனிதர்?

ஒவ்வொரு மனிதரும் ஆச்சர்யமானவர்தான்! உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு பெற்றோர் - அதாவது, இரண்டு பேர். அந்த இரண்டு பேருக்கும் அப்பா - அம்மா உண்டு. அப்படியே போய்க்கொண்டே இருங்கள். ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட, 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்றால், உங்களை உருவாக்க இயங்கியவர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமோ? - 1 லட்சத்து 48 ஆயிரத்து 576 பேர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்த வரிசையில் ஏதாவது ஒரே ஒரு ஜோடி மிஸ் பண்ணியிருந்தால்கூட... நாங்கள் உங்களை மிஸ் பண்ணியிருப்போம்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

பி.சுகுமாரி, புதுவை.

  'காம்ப்ளெக்ஸ் (Complex)’ என்றால் 'சிக்கலான’ என்றுதானே அர்த்தம்? பிறகு ஏன் 'அவருக்கு காம்ப்ளெக்ஸ் உண்டு’ என்று வேறு அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம்?

காம்ப்ளெக்ஸ் என்பதே 'காம்ப்ளெக்’ஸானதுதானே!

முதுகெலும்பில் இருந்து தலைக்குப் போகும் பெரிய தசைக்குப் (Muscle) பெயர்கூட 'காம்ப்ளெக்ஸ்’தான். கணிதத்தில் 'காம்ப்ளெக்ஸ் நம்பர்’ என்று உண்டு. மனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அந்தப் பெயரை முதன்முதலில் (1990-களில்) பயன்படுத் தியவர் கார்ல் யாங் என்ற புகழ்பெற்ற மனோதத்துவ மேதை!