மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 29

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##

சிறு வயதில் பெற்றோருடன் ஊட்டிக்குச் சென்று இருந்தபோது, நிறைய கார்களும் மக்கள் கூட்டமுமாக ஓர் இடத்தில் குழுமி இருந்தனர். காரில் இருந்தபடியே பார்த்தபோது, ஒரு விசில் சத்தத்தைத் தொடர்ந்து, தமிழ் அல்லாத ஒரு வேற்று மொழியில் பாடல் ஒன்று ஒலிபெருக்கியில் ஒலித்தது. கூடவே, கை தட்டலோடு ஒன்... டூ... த்ரீ... என்ற சத்தமும் கேட்டது. நான் பார்த்த முதல் படப்பிடிப்பு அதுதான்!

மூங்கில் மூச்சு! - 29

டெல்லி அப்பளம் மாதிரி பெரிய வட்டத் தொப்பியும் கூலிங் கிளாஸும் அணிந்த ஒருவர் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். கையில் சிகரெட் புகைந்துகொண்டு இருந்தது. அவ்வளவு குளிரிலும், தாமிரபரணியில் குளிப்பதற்குச் சற்று முன் துணி துவைத்துக்கொண்டு இருக்கும் பெண்கள் அணிந்து இருப்பதுபோல சிக்கனமாக உடை அணிந்த ஒரு பெண்மணி, குதித்துக் குதித்து ஆடிக்கொண்டு இருந்தார். அரை மணி நேரம் நாங்கள் நின்று பார்த்ததில், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி அந்தப் பெண்மணி ஆடுவதை ஆரஞ்சு வண்ண கோட் சூட்டில் கை கட்டி நின்றபடி ஒரு மை மீசை மாமா ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். தலையில் குருவிக் கூடு விக் வைத்து, சோப்பு டப்பா சைஸில் நீலக் கலர் கண்ணாடி அணிந்து இருந்தார். ஆடியபடியே தன் மீது வந்து மோதிய அந்த அம்மாளின் இடுப்பை வளைத்துப் பிடித்து முகர்ந்து பார்த்தார். ''கட். ஒன் மோர்'' என்றார் அப்பளத் தொப்பி. நாங்கள் கிளம்பிவிட்டோம்!

மூங்கில் மூச்சு! - 29

அப்போது எல்லாம் திருநெல்வேலியில் திரைப்படப் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறுவது இல்லை. தாழையூத்து சிமென்ட் தொழிற்சாலைப் பின்னணியில் திருநெல்வேலிக்காரரான கதாசிரியர் சோமசுந்தரேஸ்வர் (இயக்குநர் கே.ராஜேஸ்வர்) எழுதி இருந்த திரைக்கதை, 'ஏழாவது மனிதன்’ என்ற பெயரில் திருநெல்வேலியிலேயே படமானது. முழுக்க முழுக்க பாரதியாரின் பாடல்களைக்கொண்ட அந்தப் படத்தின் தயாரிப்பாளரான பாளை.சண்முகம் அண்ணாச்சிக்கும் திருநெல்வேலிதான். 'அந்தா வாரான் பாத்தியா, வளத்தியா ஒரு செவத்த பையன். அவன்தான் கதாநாயகனாம்’ என்று பேசிக்கொண்டனர். பிற்காலத்தில் தென்னிந்தியத் திரை உலகின் தவிர்க்க முடியாத முக்கிய நடிகனாக அந்த செவத்த, வளத்தியான பையன் உருவெடுப்பார் என்பதும், அவர் பெயர் 'ரகுவரன்’ என்பதும் 'ஏழாவது மனிதன்’ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த திருநெல்வேலிக்காரர்கள் யாருக்குமே அப்போது தெரியாது!

தாழையூத்தில் இருந்த ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த 'கட்டை’ சண்முகம் அண்ணன், தினமும் 'ஏழாவது மனிதன்’ ஷூட்டிங்பற்றி ஒரு கதை சொல்லுவான். 'கதாநாயகன் நல்லாப் பேசிப் பளகுதான்டே. ஒரு நா என்னையப் பாக்கலேன்னாலும், 'சம்முகம், ஒன்னைய என்ன ஆளையே காணோம்’ங்கான்’. ஒவ்வொரு நாள், ஒவ்வொரு செய்தி சொன்ன சண்முகம் அண்ணன், தற்செயலாகச் சொல்வதுபோல் சொன்ன ஒரு விஷயம், ரகுவரனின் முழங்கால் உயரமே உள்ள 'கட்டை’ சண்முகம் அண்ணனை அண்ணாந்து பார்க்கவைத்துவிட்டது. 'அத ஏன் கேக்கெ? டைரட்டர்ட்டெ சொல்லி என்னையும் நடிக்கவெச்சுட்டான். மாட்டேன் மாட்டேன்னு எத்தனையோ மட்டம் சொல்லிப் பாத்தேன். அவன் கேக்கல’ என்றான். பார்வதி தியேட்டரில்தான் 'ஏழாவது மனிதன்’ ரிலீஸ் ஆனது. படத்தில் நடித்த ஒரு நடிகருடன் உட்கார்ந்து படம் பார்ப்பதில் எங்களுக்கு எல்லாம் பெருமை. வழக்கமாக பிறத்தியார் செலவிலேயே காபி வாங்கிக் குடிக்கும் 'நெட்டை’ அம்பி, அன்றைக்கு 'கட்டை’ சண்முகம் அண்ணனுக்குத் தாராளமாகச் செலவு செய்தான். 'பவன்டோ குடி மக்கா. கத்திரி வாங்கவா, பனாமா ஃபில்டர் அடிக்கியா?’ படம் போடுவதற்கு முன் 'கட்டை’ சண்முகம் அண்ணனுக்குப் பக்கத்து ஸீட்டில் உட்கார்வதற்குப் பலத்த போட்டி இருந்தது.

மூங்கில் மூச்சு! - 29

'ஏழாவது மனிதன்’ திரைப்படத்தில் சிமென்ட் தொழிலா ளர்களின் போராட்ட ஊர் வலம் ஒன்று இடம்பெற்று இருந்தது. அதில் ஒரு கோஷ அட்டை ஏந்தி கூட்டத்தோடு கூட்டமாக 'கட்டை’ சண்முக அண்ணனும் போனதாக அவனே சொன்னான். 'அந்தா பாரு... அந்தா பாரு. ஊதா சட்ட போட்டு, கைல ஒரு அட்டய வெச்சுக்கிட்டுப் போறெம்லா. அதான் நான்’. கண் இமைக்கும் நேரத்தில் தன்னைத் திரையில் பார்க்காமல் தவறவிட்டவர்களை மறுபடியும் 'ஏழாவது மனிதன்’ திரைப்படத்துக்கு 'கட்டை’ சண்முகம் அண்ணனே கூட்டிப் போனான். ' 'ஏளாவது மனிதன்’கூட ரெண்டு நாளு நம்ம ஊர்ல ஓடுனதுக்கு கட்ட சம்மொகந்தானெ காரணம்!’

'ஏழாவது மனிதன்’ படத்துக்குப் பிறகு பெரிய அளவில் திருநெல்வேலியைத் திரைப்படத் துறையினர் கண்டுகொள்ளவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றதாகச் செய்திகள் வந்தன. நாங்கள் எதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. திடீர் என ஒருநாள், தாமிரபரணிக்கு மிக அருகில் குறுக்குத் துறையில் உள்ள செட்டியார் சத்திரத்தில், சிவகுமார், அம்பிகா ஆகியோர் நடிக்கும் 'ஒருவர் வாழும் ஆலயம்’ ஷூட்டிங் நடப்பதாகச் சொன்னார்கள்.

அந்தி மயங்கிய பொழுதில் நாங்கள் அங்கு சென்றபோது, முள் வேலிக்கு வெளியே பெருங் கூட்டம் கூடியிருந்தது. இருட்டும் வரைக்கும் காத்துக்கிடந்தோம். எட்டி எட்டிப் பார்த்தும் நடிக, நடிகையர் யாருமே கண்ணுக்குத் தென்படவில்லை. ஆனாலும், சோர்வு அடையாமல் நின்று கொண்டு இருந்தோம். 'கார்லாம் முக்குல தான் நிக்கி. எப்பிடியும் அதுல வந்துதானெ ஏறணும். அப்பொ பாத்து கையெளுத்து வாங்கிருவோம்’. சரஸ்வதி படம் போட்ட 40 பக்க நோட்டைக் கையில் வைத்திருந்தான் ராமசுப்ரமணியன். முள்வேலியின் ஓரத்தில் கிடந்த ஒரு கல்லில் ஏறி நின்றால், உள்ளே நடக்கும் ஷூட்டிங் தெரிவதாகச் சொன்னார்கள். ஆளாளுக்குக் கொஞ்ச நேரம் அதில் ஏறி நின்று முயன்று பார்த்தோம். என்னுடைய முறை வரும்போது பிடரியில் அடி விழுந்தது. 'வீட்ல ஆளக் காணோம்னு அம்மை கெடந்து தேடிக்கிட்டு இருக்கா. ஒனக்கு சூட்டிங் கேக்கோல சூட்டிங்கு’ - நாக்கைத் துருத்திய படி மணி மாமா காதைப் பிடித்துத் திருகினான். 'மாமா, அந்தா பாரு அம்பிகா’ என்றேன். கண்களை அகல விரித்து, வாயெல்லாம் பல்லாக, 'எங்கெல?’ என்று முள் வேலிக்குள் சரிந்து விழுந்தான் மணி மாமா.

மறு நாள் ராமசுப்ரமணியனும் நானும் அம்பிகாவைப் பார்த்து மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்ததாகவே எல்லோரிடமும் சொல்லிக்கொண்டோம். 'ஒருவர் வாழும் ஆலயம்’ ஷூட்டிங் சமயத்தில், ஊரில் இல்லாமல் போன குஞ்சுவுக்காக, மேலும் சில எக்ஸ்ட்ரா பொய்களைச் சொன்னோம். 'மெட்ராஸ் வந்தா, வீட்டுக்கு வராம இருக்கக் கூடாதுன்னு சொன்னாங்கல்லா’. கண்டுகொள்ளாதவன்போல இருந்தாலும் குஞ்சுவின் காதுகள் சிவந்தன. 'எனக்கு அம்பிகா புடிக்காது. ராதாதான் நம்ம ஆளு’ என்றான்.

மூங்கில் மூச்சு! - 29

'குஞ்சு ஒங்க வீட்ல இருக்கானாடே?’ ஒருநாள் குஞ்சுவின் பெரியப்பா சோமப்பா போன் பண்ணிக் கேட்டார். நண்பர்கள் வீட்டில் எல்லாம் தேடிப் பார்த்தோம். இரவு வரை தகவல் இல்லை. 'காலைல காப்பி குடிக்கும்போது, பேப்பர் படிச்சுக் கிட்டு இருந்தான். குளிச்சுட்டு வாரதுக்குள்ள ஆளக் காணொம். ஊரு பூராப் புள்ள புடிக்கிறவன் நடமாடுதான். காந்திமதி, என் கொளந்தயக் காப்பாத்து’ எனக் கண் கலங்கினார் குஞ்சுவின் அம்மா. 'புள்ள புடிக்கிறவன ஒன் புள்ள புடிச்சிட்டுப் போகாம இருந்தா சரி’.  மகனைக் காணாத கோபத்தில் கத்தினார் குஞ்சுவின் தகப்பனார்.

அதிகாலையில் வீட்டைவிட்டுக் கிளம்பிய குஞ்சுவின் தலை, அம்மன் சந்நிதி மண்டபம் பக்கம் தெரியும்போது, இரவு மணி 9. 'கோவத்துல யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். மொதல்ல அவன் சாப்பிடட்டும்’. சாப்பிட்டு முடியும் வரை காத்திருந்து, குஞ்சுவின் அப்பா கேட்டார். 'எங்கல போனே?’

'தென்காசில ஒரு ஆளப் பாக்கப் போனேன்.’

'தென்காசில ஒங்கம்மகூடப் பொறந்த தங்கச்சியா இருக்கா? யாரல பாக்கப் போனெ?’

தென்காசியில் 'வேலுண்டு வினைஇல்லை’ ஷூட்டிங் நடந்துகொண்டு இருப்பதாகவும், அதன் கதாநாயகி அம்பிகா என்பதையும் 'தினத்தந்தி’யில் அன்று காலையில் படித்த ஞாபகம் எனக்கு வந்தது. மெள்ளக் கிளம்பி வந்துவிட்டேன். 'அவ வயசென்ன? ஒன் வயசென்னல?’ என்று வாரியலாலேயே அவன் அப்பா அடித்ததாக மறுநாள் குஞ்சு சொன்னான். அப்போதும் 'ஷூட்டிங்ல மத்தியானம் அம்பிகாகூடத்தான் லெமன் ரைஸ் சாப்பிட்டேன்’ என்று சொல்லத் தவறவில்லை.

சென்னையில் நான் திரைப்படத் துறைக்கு வந்த பிறகு ஒருநாள், குஞ்சு சென்னைக்கு வந்திருந்தான். கேட்டால் சம்மதிக்க மாட்டேன் என்பதால், என்னிடம் ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்று அவன் சொன்னதே இல்லை. ஷூட்டிங்குக்கு அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டு இருந்த என்னைப் பாவமாகப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தான். 'சரி. வேணா என் கூட வா’ என்று நான் சொன்ன மறு நிமிடமே காரில் ஏறிக்கொண்டான்.

அன்றைக்கு சாலிகிராமத்தில் உள்ள அருணாசலம் ஸ்டுடியோவில் வாத்தியார் பாலுமகேந்திரா அவர்களின் 'ராமன் அப்துல்லா’ படத்தின் ஷூட்டிங். செட்டின் ஓரத்தில் குஞ்சுவை உட்காரவைத்துவிட்டு வேலைகளில் மும்முரமானேன். பொதுவாக, எங்கள் வாத்தியாரின் படப்பிடிப்புத் தளத்தில் அநாவசியச் சத்தங்கள் இருக்காது. கேமராவில் அமர்ந்தபடி அவர் ஸ்டார்ட் சொல்வதும், கட் சொல்வதும் சமயங்களில் எங்களுக்கேகூடக் கேட்காது. வசனம் சொல்லிக் கொடுக்கும்போது நானுமே, நடிக, நடிகையருக்கு அருகில் போய் மெதுவாகத்தான் சொல்வேன். அப்படித்தான் எங்களைப் பழக்கி இருந்தார் வாத்தியார்.

மதிய உணவுக்குப் பிறகு குஞ்சு கிளம்பிவிட்டான். 'என்னல ஷூட்டிங் இது? நீங்க என்ன செய்தியன்னே புரிய மாட்டெங்கு. என்னைக்காது கிளப் டான்ஸ் ஸீனு இருந்தாக் கூட்டிட்டுப் போ’!

சமீபத்தில் எனது 'படித்துறை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு. 'ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு நடந்த அதே செட்டியார் சத்திரத்தில் நடந்தது. அதிகாலையில் படப்பிடிப்புக் குழுவினருடன் நான் அங்கு போய் இறங்கும்போது, செய்தி அறிந்து தாமிரபரணிக்குக் குளிக்கச் செல்லும் வழியில் ஒன்றிரண்டு பேர் எட்டிப் பார்த்துச் சென்றனர். 'யாருடே ஹீரோயினு? புதுப் பிள்ள மாரி இருக்கு? நயந்தாரான்னா, ரெண்டு வார்த்த பேசிட்டுப் போலாம். டைரக்டரு நம்ம ஊர்க்காரப் பயலாம்லா? சோலியத்துப் போயி அலையுதான். ஒளுங்காப் படிச்சு ஒரு வேலைக்கு கீலைக்குப் போலாம்லா?’  

மூங்கில் மூச்சு! - 29

செட்டியார் சத்திரத்தின் உட்பகுதியில் ஒரு காட்சியைப் படமாக்கி முடிக்க மதியத்துக்கு மேல் ஆனது. அதை முடித்துவிட்டு மொட்டை மாடிக்குச் சென்றோம். நாயகனுக்கும் நாயகிக்குமான உணர்ச்சிமயமான ஒரு காட்சியை அங்கு எடுக்கத் திட்டமிட்டோம். 'சார், பத்தே நிமிஷம். லைட்டிங் முடிச்சுட்டுக் கூப்பிடறேன்’ என்றார் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன்.

மொட்டை மாடியின் விளிம்புச் சுவர் பக்கம் வந்து நின்றேன். 'ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பைப் பார்க்க நாங்கள் நின்ற அதே இடத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. யாராவது தெரிந்துவிட மாட்டார்களா என்ற தவிப்புடன் நின்றுகொண்டு இருந்த அவர்களின் கண்களுக்கு நான் சிக்கிய மறு நொடியே கூட்டத்தில் இருந்து ஓர் உரத்த குரல் கேட்டது, 'இவனாலே ஹீரோ? சவம் படம் வெளங்குன மாரிதான்’!

- சுவாசிப்போம்...