மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

இட்லிக்கு ஏன் இவ்வளவு மவுசு?

ஹாய் மதன் கேள்வி - பதில்

பொன்விழி, அன்னூர்.

பூனைக் கண்கள்... ஆண், பெண் யாருக்கு அழகு?

பூனைக்கு மட்டும்தான் அழகு! பூனைக் கண்களை அழகான நடிக, நடிகைகளுக்கு வைத்துப் பாருங்களேன்!

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

இன்றைய காலத்தில் உணவு வகைகள் புதுமையாக வந்தாலும், இட்லியின் மவுசு குறையவில்லையே... எப்படி?

காரணம், நாம் தினந்தோறும் இரவில் சந்திரனைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நிலவை நம்மால் மறக்க முடியுமா? பிறைச் சந்திரனைப் பார்க்கும்போதும் இட்லியின் விள்ளல் மாதிரியேதான் படுகிறது. காதலியின் முகத்தைப் பார்க்கும்போதும் முழு நிலவு மனதில் தோன்ற, உடனே இட்லி தான் நினைவுக்கு வருகிறது. ஆகவேதான் இட்லியைச் சதுர மாகத் தயாரித்தால்கூட நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்!

##~##

மகிழை. சிவகார்த்தி, புறத்தாக்குடி.

முந்தைய காலங்கள்போல் இல்லா மல், இப்போது 'சின்னவீடு’ செட்டப் செய்வது என்பது ஆண்களிடத்தில் குறைந்து உள்ளது. சரியா?

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இப்போதெல்லாம் 'சின்ன வீடு’ செட்டப் செய்வது பெண்களிடம் அதிகரித்துவிட்டது என்கிறீர்களா? முதலில் எதையும் நேரடியாகச் சொல்லுங்கள் மிஸ்டர் மகிழை! (மற்றபடி உங்கள் கேள்விக்கு என்னுடைய பதில் - தெரியாது!)

கடையம் கணபதி, திருநெல்வேலி.

எங்க ஊர்ல ரெண்டு மாசமா, குழந்தைகளுக்கு யாருமே 'ராசா’ன்னு பேரு வைக்கலை. ராசான்னு பேரு உள்ளவங்களை எங்க ஊராரு, பேரு சொல்லிக் கூப்பிடுறதே இல்லை?

கடையம் கணபதி! தயவுசெய்து, விகடன் ஆசிரியர் இலாகாவுக்கு அனுப்ப வேண்டிய 'பெட்டிச் செய்தி’களை எல்லாம் 'ஹாய் மதனு’க்கு அனுப்பாமல் இருந்தால் நலமாக இருக்கும்!

சி.என்.ரமாதேவி, சென்னை-70.

'குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது’ என்றால் என்ன?

'குண்டுச் சட்டி’ என்ன சைஸ் என்பதைப் பொறுத்தது. அகண்ட கண்டத்தில் வளைய வரும் உருண்டையான பூமிகூட ஒரு குண்டுச் சட்டியே!

பி. மாணிக்கவாசகம், கும்பகோணம்.

விஷ்ணு அவதாரங்கள் எடுத்து அவதார புருஷராக இருக்கிறார். சிவன் அப்படிச் செய்யவில்லையா?

'அதெல்லாம் அவசியம் இல்லை... நெற்றிக்கண் இல்லாமல் நான் எங்கேயும் போவதாக இல்லை!’ என்று சிவன் சிடுசிடுத்து இருக்கலாம்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

நெல்லை த.ஞானசெல்வன், மும்பை-17.

பால்... சைவமா? அசைவமா?

Milkஆ, Ballஆ? பால் (Milk) என்றால், அசைவம்தான் - ஒரு பிராணியின் உடலுக்குள் உற்பத்தியாகிற அது - தாவரம் அல்ல. பால் (Ball) சைவம். எனக்குத் தெரிந்த வரை, எந்தப் பந்து தயாரிப்பிலும் இறைச்சி எதையும் சேர்ப்பது இல்லை! (மறுப்புக்கு நான் தயார்!)

மா.சுந்தரமூர்த்தி, செய்யார்.

காந்தி பிறந்திருக்காவிட்டால், இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றிருக்கும்?

சற்றுத் தள்ளிப்போயிருக்கும், அவ்வளவுதான்! அப்படிப் பார்த்தால், தென் ஆப்பிரிக்கா வில் நிற வெறி இருந்ததால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றுகூடச் சொல்ல முடியும். ஆகவேதான் காந்திஜி ரயில் பெட்டியில் இருந்து கீழே தள்ளப்பட்டார். மோகன்தாஸ் கரம் சந்த் பிற்பாடு காந்திஜி ஆனது அந்த அசம்பாவிதத்துக்குப் பிறகுதானே!

வாசுதேவன், நவி மும்பை.

ஹாய் மதன் கேள்வி - பதில்

உண்மையைப் பேசுபவள் பொய் சொல்வதும், பொய் பேசுபவள் உண்மை பேசுவதும் ஒப்பிடுக?

இருவருமே திடீரென்று நம் காலை வாரி விடும் துரோகிகள் என்பது என் கருத்து!

- என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக் கொல்லப் பயன்படுத்திவிட்டு, 'கத்தியைக் கண்டுபிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று சொல்வீர்களா?!

த.கதிரவன், திருவெண்காடு.

ஹாய் மதன் கேள்வி - பதில்

தாய்க்கு பின் தாரம், தந்தைக்குப் பின்...?

நீங்கள்!

பொன்விழி, அன்னூர்.

காதலிக்கு எப்போதும் நினைவில் இருப்பதுபோல், என்ன பரிசு கொடுக்கலாம்?

தாலிதான்!