மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 30

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகாபடங்கள் : எல்.ராஜேந்திரன்

##~##

கோடை விடுமுறைக்கு அம்மாவின் சொந்த ஊரான ஆழ்வார் குறிச்சிக்குப் போகும்போது எல்லாம், 'சைலு’ தாத்தாவின் வீட்டுக்குச் செல்வேன். 'சைலு’ தாத்தாவின் முழுப் பெயர் சைலப்பன். ஆழ்வார்குறிச்சிக்கு அடுத்த ஊரான சிவசைலத்தின் சிவ பெருமான் மேல் உள்ள பக்தி காரணமாக, அந்தப் பகுதியில் வீட்டுக்கு ஒரு சைலப்பன் இருப்பர்.

 கழுத்து வழியாகப் போடும் நீல கலர் சட்டையும் வேட்டியுமே சைலு தாத்தா வின் நிரந்தர உடை. ஒவ்வொரு வருடம் நான் பார்க்கும்போதும் சைலு தாத்தா வின் ஒவ்வொரு பல்லாகக் காணாமல் போய்க்கொண்டு இருக்கும். 'வயசாகு துல்லா. விளாமப் பொறகு மொளைக்க வாடே செய்யும்’ என்று சொல்லிச்சிரித்து விட்டு, 'போன வருஷம் எப்பிடி இருந் தேன்னு அந்த போட்டால பாரும்வே’ என்பார். போட்டோவை போட்டா என்றுதான் சொல்லுவார் சைலு தாத்தா. போன வருடம் என்றில்லை, அநேகமாக பத்துக்கும் மேற்பட்ட முந்தைய வருடங் களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீட்டில் மாட்டிவைத்திருப்பார் சைலு தாத்தா. வருடத்துக்கு ஒருமுறை போட்டோ எடுப்பதை ஒரு கடமையாகச் செய்து வந்தார். 'விஞ்ஞானம் இப்பொ நம்ம கைல இருக்கு. அதப் பயன்படுத்திக் கிட வேண்டாமா? எங்க அம்மையும் அப்பாவும் எப்பிடி இருந்தாங்கன்னு என் புள்ளையளுக்குத் தெரியாது. ஆனா, என் பிள்ளைகளோட பிள்ளைகள நான் பாக்கலைன்னாலும் அவங்க என்னையப் பாப்பாங்கல்லா! என்ன சொல்லுதேரு?’

மூங்கில் மூச்சு! - 30

நான் பிறந்த சில மாதங்களிலேயே அப்பாவைப் பெற்ற தாத்தா காலமாகி விட்டதால், நான் அவரைப் பார்த்தது இல்லை. ஆனால், தாத்தாவின் தகப்பனார் எப்படி இருந்தார் என்பதை அவருடைய புகைப்படம் எனக்குக் காட்டியது. அதேபோல் ஆச்சியின் தாயாரை நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வை சுமார் 100 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அவருடைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படம் இன்றைக்கும் ஏற்படுத்துகிறது. உறுதியான உடற்கட்டும், தீர்க்கமான பார்வை யும்கொண்ட அந்த ஆச்சியின் உருவமும், அந்தக் கால மனுஷிகளின் முன் கொசுவச் சேலையும், அவள் காதுகளில் போட்டு இருக்கும் பாம்படமும் சொல்ல முடியாமல் உணர மட்டுமே முடிகிற எத்தனையோ செய்திகளைச் சொல்லுகின்றன.

மூங்கில் மூச்சு! - 30

போட்டோ எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று நம்பும் மனிதர்கள், அதை உறுதி செய்யும்விதமாகப் பேசவும் செய்வார்கள். 'போட்டோ புடிச்சா ஆயுசு கொறஞ்சிரும்லா. நம்ம லெச்சுமணபிள்ள மாமாக்குல்லாம் சாகுற வயசா? அவாளோட சதாபிஷேகத்தன்னிக்கு அவ்வளவு போட்டோ எடுக்கப் போயிதானே ரெண்டே வருஷத்துல மண்டையப் போட்டுட்டா.’ அதே சமயம், போட்டோ ஸ்டுடியோக்களுக்குப் போய் புகைப்படம் எடுத்துக்கொள்வதை ஒரு சம்பிரதாயமாகவே செய்து வந்த மனிதர்களையும் பார்த்து இருக்கிறேன். திருமணம் ஆன சிறிது காலத்தில் தம்பதி சமேதராக பக்கவாட்டில் சிரித்தபடி எடுக்கப்பட்டு, தங்க ஃபிரேம் போடப்பட்ட புரொஃபைல் புகைப்படத்தை, அநேகமாக நண்பர்கள், உறவினர்கள் என எல்லோர் வீடுகளிலும் பார்த்த ஞாபகம் உள்ளது. இதுபோக, கர்ப்பம் அடைந்த அத்தை, சித்தி, மதினிகளின் புகைப்படங்களும் மனதில் நிழலாடு கின்றன. 'நடுவுல உள்ளவன உண்டாயிருக்கும்போது எடுத்தது. 10 வயசு வரைக்கும், என்னையவிட்டுட்டு எப்புடி நீ மட்டும் போயி போட்டோ எடுக்கலாம்னு சண்ட போடுவான், மூதி’. பூப்படைந்த பெண்களுக்குத் தலை பின்னி, தாழம்பூ தைத்து, ஆளுயரக் கண்ணாடி முன் நிற்கவைத்து, முன்னும், பின்னுமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது, தாழம்பூ வாசனையை உணர்ந்து இருக்கிறேன். காலத்தால் அழியாத, இப்போது மறைந்து கொண்டுஇருக்கிற ஓவியங்கள், அவை.

திருநெல்வேலி ரத வீதிகளில் மாரார் ஸ்டுடியோ, கல்பனா ஸ்டுடியோ, மித்ரா ஸ்டுடியோ என அடுத்தடுத்து போட்டோ ஸ்டுடியோக்கள் இருந்தன. எல்லா நாட்களும் வெளியூர் ஆட்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் வந்துபோன வண்ணம் இருப்பார்கள். 'ஊட்டி வரை உறவு’ சிவாஜி மாதிரி கர்லிங் வைத்து தலை சீவியிருக்கும் 'மித்ரா ஸ்டுடியோ’ அதிபர் மித்ரா வள்ளிமணாளன் மாமா, 'ம்ம்ம்... கொஞ்சம் தலய நிமித்திப் பாருங்க. சிரிக்கலாமெ, தப்பில்லையே?’ என்று சொல்லி கண் இமைக்கும் நேரத்தில், சில சமயங்களில் கண் இமைத்த நேரத்தில், சட்டென்று கேமராவில் இருந்து மின்னலடித்துவிட்டு 'அடுத்த ஆளு’ என்பார். வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்காக ஸ்டுடியோவில் எப்போதும்  கண்ணாடி, சீப்பு, பவுடர் இருக்கும். 'மாப்ளே போதும்வே. அதான் பஸ் ஏர்றதுக்கு முன்னாடியே ஒரு டின்ன காலி பண்ணிட்டுத்தானெ வந்தேரு! என்னத்த வெள்ளை அடிச்சாலும் இருக்குறதுதானவே இருக்கும்?’

மூங்கில் மூச்சு! - 30

ஏதாவது ஒரு மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டில் சபரிமலைக்கு மாலை போட்டு, தாடி மீசையுடன், சந்தன குங்கும நெற்றியில் வணங்கியபடி இருக்கும்  போட்டோ வாசலிலேயே நம்மை வரவேற் கும். அருகிலேயே மழுங்கச் சிரைத்த முகத் துடன், சிரித்தபடி வெள்ளைச் சட்டையில் அவர் இருக்கும் புகைப்படமும் மாட்டப் பட்டு இருக்கும். இதுபோக, குடும்பத்துடன் திருச்செந்தூருக்குச் சென்று மொட்டை போட்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம், குறுக்குத்துறை முருகனுக்கு பால்குடம் எடுத்தபோது முகம் எல்லாம் திரு நீறுடன் அடையாளமே தெரியாத புகைப் படம், காலமாகிப்போன ஆச்சி மற்றும் தாத்தாவின் படத்துக்கு முன் நின்றுமாலை யும், கழுத்துமாக வணங்கும் மணமக்களின் புகைப்படம்போன்றவை இல்லாத வீடுகளே இல்லை எனலாம். உறவினர்களின் வீடுகளில் நான் பார்த்த புகைப்படங் களிலேயே மறக்க முடியாத புகைப்படமாக இன்று வரை இன்ஜினீயர் சுப்பிரமணிய மாமா வீட்டில் அவருடைய ஒட்டுமொத்தக் குடும்ப உறுப்பினர்களும் திரைப்பட நடிகர் வி.கே.ராமசாமி அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் இருக்கிறது.

மூங்கில் மூச்சு! - 30

சின்னச் சின்ன ஊர்களில் உள்ள ஸ்டுடியோக்களின் வாசலில் தொப்பி இல்லாத எம்.ஜி.ஆர், ஒப்பனை இல்லாத சிவாஜி, 'கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ் ணன், 'ஜெமினி’கணேசன், எஸ்.எஸ்.ராஜேந் திரன், எஸ்.ஏ.அசோகன், ஸ்டெப் கட்டிங் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் புகைப்படங்களும், பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா வில் இருந்து அனைத்து நடிகைகளின் புகைப்படங்களும் மாட்டப்பட்டு இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக அம்பா சமுத்திரத்துக்கு அருகில் ஒரு ஸ்டுடியோ வாசலில் தர்மேந்திராவே தொங்கிக்கொண்டு இருந்தார். சின்ன வயதில் இவர்கள் அனைவரும் திருநெல்வேலி 'சித்ரா’ ஸ்டுடியோ வில் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட தாகவே நம்பியிருக்கிறேன்.

எங்கள் வீட்டு விசேஷங்களில் சின்ன அக்காவின் திருமணத்தின்போதுதான், முதன்முதலில் வீடியோ எடுத்தார்கள். தனது டி.வி.எஸ். 50-யில் வீடியோக்காரர், சாதனங்களுடன் வந்து இறங்கும்போது எனக்கு கையும் காலும் ஆட ஆரம்பித்து விட்டன. நேரே ஓடிப் போய் பெரிய அண்ணனிடம் சொன்னேன். 'எண்ணே, வீடியோக்காரரு வந்துட்டாரு.’

காலையில் முகூர்த்தத்தின்போது சம்பிரதாயமாக பட்டு வேட்டி, சட்டையில் இருந்த அண்ணன், மாலை ரிசப்ஷனின்போது ஒரு 'வானவில்’ சட்டையை எடுத்து அணிந்தான். 'கலர் வீடியோல்லாலெ. அதான் இந்த சட்ட. நல்லாப் பாரு எல்லா கலரும் இருக்கும்’ என்றான். வானவில்லில் இல்லாத கலர்களும் அண்ணனின் சட்டை யில் இருந்தன. நிழற்படம்போல் அல்லாமல் நம் அசைவுகளையும் படம் பிடிக்கக்கூடிய வீடியோவுக்கும் ஆடாமல், அசையாமல் மூச்சைப் பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்த காலத்தைக் கடக்க ரொம்ப நாட்களானது. புகைப்படம் எடுக்கும் போதாவது ஒரே நொடியில் ஒரு மின்னல் ஒளி அடித்து ஓய்ந்துவிடும். ஆனால், வீடியோ ஒளி நம் கண்ணைக் கூசச் செய்து தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

மிக இள வயதிலேயே திருமணம் செய்து கொண்ட எங்கள் பள்ளித் தோழன் சுந்தரின் திருமணத்துக்குச் சென்றிருந்த போது, வீடியோ லைட்டுக்கும், கூட்டத்துக்கும் அஞ்சி மணமக்கள் அருகிலேயே செல்லாமல் ஒதுங்கி உட்கார்ந்து இருந்தேன்.

கூட்டம் கொஞ்சம் குறைந்து வீடியோ எடுப்பவர் காபி குடித்துக்கொண்டு இருந்த நேரத்தைக் கணக்குப் பண்ணி விறு விறுவென மணமேடைக்குச் சென்றேன். மணமக்களை நான் நெருங்கவும், காபி டம்ளரை அவசர அவசரமாகக் கீழே வைத்துவிட்டு வீடியோகிராஃபர் என் மீது குறிவைத்து ஒளி பாய்ச்சினார். பதற்றத்தில் எதுவுமே பேசாமல் மணமகன் சுந்தரின் கைகளைப்பற்றிக் குலுக்கிக்கொண்டே இருந்தேன். பொறுமை இழந்த சுந்தர்எனக்கு வாழ்த்துகள் சொல்லி, பரிசைப் பிடுங்கிக் கொண்டு சாப்பிட அனுப்பினான்.

சமீபத்தில் 'வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எங்கள் பள்ளியைச் சேர்ந்த நாயர் ராமன், இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் என அனைவரும் ஒன்று கூடினோம்.

வாத்தியாருடன் அனைவரும் சேர்ந்து போட்டோ எடுக்கலாம் என்று முடிவு செய்து நிற்கும்போது, ஐந்தாறு கேமராக்கள் தயார் நிலையில் எங்கள் முன் நின்றன. பதற்றத்தில் எனக்கு முன்னால் அமர்ந்து இருந்த வாத்தியாரின் துணைவியார் அகிலாம்மாவின் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.

'சீக்கிரம் எடுங்கப்பா. ரொம்ப நேரம் கேமராவையே பாத்துக்கிட்டு இருக்கிறது ரொம்ப கஷ்டம்’ என் காதருகில் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். இயக்குநர் வெற்றிமாறன். துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் அவனிடம் கேட்டேன். 'வெற்றி, இத்தன கேமரா இருக்கே? இதுல எந்த கேமராவடா நாம பாக்கிறது?’  'அதாண்ணே எனக்கும் தெரியல. குத்து மதிப்பா ஏதாவது ஒண்ண மொறச்சுப் பாப்போம்’ என்றான் வெற்றி.

புகைப்படம் எடுக்கும்போது என்னுடைய லட்சணம் இதுதான் என்றாலும், அம்மாவை போட்டோ எடுக்கும்போது கடுமையாகக் கேலி செய்வேன். 'இப்போ ஒன்ன யாரு அடிக்கப்போறா? கொஞ்சம் சிரிச்சுத்தான் தொலையேன்’ - சிரிக்க முயன்று தோற்பாள். இல்லையென்றால், அதிகமாகச் சிரித்து போட்டோ எடுக்க முடியாமல், அந்த இடத்தைவிட்டு ஓடிவிடுவாள்.

அவளுடைய திருமணப் புகைப்படத்தில் இருந்து எல்லாப் புகைப்படங்களிலும் அம்மாவால் இயல்பாக இருக்க முடிந்தது இல்லை.

கோவையின் புகழ் பெற்ற IAB போட்டோ ஸ்டுடியோஸில் குடும்பத்துடன் நாங்கள் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அப்போது அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தில்தான் அம்மா அவ்வளவு இயல்பாக, அழகாக இருந்தாள். அந்தப் புகைப்படத்துக்குத்தான் தினமும் மாலை போட்டு வணங்கி வருகிறேன்!

- சுவாசிப்போம்...