மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை - 26

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை - 26

மனம் கொத்திப் பறவை - 26

ருநாள் என் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பரின் மனைவி ஏதோ ஒரு பொருளைக் கம்பியில் குத்தி இளம் சூட்டில் வாட்டிக்கொண்டு இருந்தார். அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. பிராமணர் கள்கூட பாயா சாப்பிட ஆரம்பித்துவிட்டார்களா என்ன? பாயா செய்வதற்குத் தானே இப்படி ஆட்டுக் காலை நெருப்பில் வாட்டுவார்கள்? பிறகுதான் தெரிந்தது, அம்மணி ஆப்பிளைத்தான் அப்படி வாட்டிக்கொண்டு இருந்தார். என்ன விஷயம்? ஆப்பிள் பளபளப்பாக இருப்ப தற்காக அதன் தோலின் மீது மெழுகைத் தடவிவிடுகிறார்கள். அந்த மெழுகைத்தான் அப்படி நெருப்பில் வாட்டி உருக்கிக்கொண்டு இருந்தார் அந்தப் பெண். கஷ்டம்டா சாமி!

''அடக் கடவுளே! மாம்பழத்தையே ஏதோ ஒரு ரசாயனக் கல்லில் போட்டு பழுக்கவைக்கும் ஊரில் இப்படி எல்லாம் பார்க்கலாமா?' என்று கேட்டுவிட்டு வந்தேன். இந்த நாட்டில் நாம் விஷம் கலந்த காற்றைத்தான் சுவாசிக்கிறோம். விஷம் கலந்த உணவைத்தான் சாப்பிடுகிறோம். விஷமான தண்ணீரைத்தான் குடிக்கிறோம். அதனால்தான் இங்கே நோய்கள் அதிகமாக இருக்கின்றன.

எண்டோசல்ஃபான் (Endosulfan) என்பது ஒரு பூச்சிக்கொல்லி மருந்தின் பெயர். ஆனால், இந்த எண்டோசல்ஃபானைப் பயன்படுத்துவதால், பூச்சியோடு சேர்ந்து மனிதர்களும் மடிகிறார்கள். இந்த விஷ மருந்தை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உட்பட 70 நாடுகள் தடை செய்து இருக்கின்றன. ஆனால், இந்தியா மட்டும் தடை செய்யவில்லை. அது மட்டும் அல்ல; உலகிலேயே எண்டோசல்ஃபானை அதிக அளவில் தயாரிப்பதும், பயன்படுத்துவதும் இந்தியாதான். ஒலிம்பிக் போட்டிகளில் கியூபா போன்ற தம்மாத்துண்டு நாடுகள்கூட தங்கப் பதக்கங்களை அள்ளிக்கொண்டு போக, அந்தப் பட்டியலிலேயே கடைசியில் தேடினால்தான் இந்தியாவின் பெயர் தெரியும். ஆனால், மக்களைக் கொல்லும் எண்டோசல்ஃபான் போன்ற விஷ மருந்துகளைத் தயாரிப்பதில் உலகில் முதல் இடம் இந்தியாவுக்கு. நான் இப்படி எல்லாம் இந்தியாபற்றி விமர்சித்து எழுதும்போது, எனக்குத் தேச பக்தி இல்லை என்று குறை சொல்பவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்தியாவையே விஷமாக்கிக்கொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள். அவர்களைத்தான் நான் விமர்சிக்கிறேன். உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்தும் தடை செய்துஇருக்கும் ஒரு பூச்சிக்கொல்லியை இந்தியா உலகிலேயே அதிக அளவில் தயாரிக்கிறது என்றால், இதை என்னவென்று சொல்வது? அரசாங்கமே மக்களுக்கு எதிராக இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

மனம் கொத்திப் பறவை - 26

இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்கள் எல்லாம் தூங்கிக்கொண்டு இருந்தபோது, மலையாளிகள் மட்டும் இதை எதிர்த்துப் போராடினார்கள். இந்த எதிர்ப்பை முன்னின்று நடத்தியது ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு. விளைவாக, எண்டோ சல்ஃபான் அங்கே தடை செய்யப்பட்டது. இப்படி கேரளாவில் இயற்கைக்கு எதிரான எந்தக் காரியம் நடந்தாலும், அங்கே உள்ள அமைப்புகள் அதற்கு எதிராகப் போராடி, அரசின் முடிவை மாற்றி அமைக்கின்றன. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி என்ற ஊரில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பினர் நடத்திய ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக அழைக் கப்பட்டு இருந்தேன். 'சமூகத்தில் இளைஞர் களின் பங்கு’ என்பது வழங்கப்பட்ட தலைப்பு. சுதந்திரமும் பொறுப்பு உணர்வும் என்பதாகத் தலைப்பை மாற்றிக்கொண்டேன். பொறுப்பு உணர்வு இல்லாத சுதந்திரம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று பேசினேன்!

னக்கு பஸ், ரயில் பயணத்தைவிட, விமானப் பயணமே பிடித்திருக்கிறது. பயணத்தின் ஒவ்வொரு முறையும் விமானம் கடலில் விழுந்துவிட்டால் லைஃப் ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு தப்பிப்பது எப்படி என்பதை ஏர்ஹோஸ்டஸ் விளக்குவதுதான் சற்று எரிச் சலாக இருக்கும். அதிலும் அந்த ஜாக்கெட்டின் அடிப் பகுதி மூலம் காற்றை நிரப்ப முடியாமல் போனால், அதன் மேல் புறம் உள்ள குழாய் மூலம் ஊதிக் காற்றை நிரப்பிக்கொள்ளலாம் என்று கிங்ஃபிஷரின் அழகான ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் ஊதிக் காண்பிக்கும்போது, அவர் களின் அழகையும் மீறி எரிச்சல் பற்றிக்கொண்டு வரும். விமானம் தண்ணீரில் விழும்போது, நம்முடைய மூளை அவ்வளவு சரியாகவா வேலை செய்யும்?

விமானத்தைவிட, எனக்குப் பிடித்தது கப்பல்தான். ஏ.கே.செட்டியார் உலகம் முழுவ தும் கப்பலில்தான் சுற்றியிருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சினிமா நடிகர்களைத் தவிர, நம்மைப்போன்ற சாமானியர்கள் கப்பல் பயணம் செய்ய முடிவது இல்லை. கப்பல் நிற்கும் நாடுகளில் எல்லாம் இறங்கி சுற்றிப் பார்த்து, அப்படியே உலகத்தைச் சுற்றினால் எப்படி இருக்கும்? மரைன் இன்ஜினீயர்களுக் குத்தான் அப்படி ஒரு வாழ்க்கை வாய்த்து இருக்கிறது. கடலோடி நரசய்யா ஞாபகம் வருகிறார். நான் இது வரை கப்பலில் பயணம் செய்தது இல்லை. ஒரு முறையாவது, குறைந்தபட்சம் அந்தமான் வரையாவது கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சபதம் செய்துகொள்கிறேன். வரும் ஆண்டிலாவது நிறைவேற வேண்டும். இன்ஷா அல்லாஹ்!

இப்போது விமானப் பயணம்கூட சலிப்பூட்டுவதாக மாறிவிட்டது. கோழிக்கோடில் இருந்து சென்னை வர ஆறு மணி நேரம் ஆகிறது. வழியில் பெங்களூரில் இரண்டரை மணி நேரக் காத்திருப்பு. ஆனால், அப்போதுதான் ஓர் அதிசயிக்கத்தக்க விஷயத்தைக் கண்டேன். சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது பெங்களூரு விமான நிலையம். நம் சென்னை விமான நிலையம் மட்டும் அப்படி இல்லாமல், பஸ் ஸ்டாண்டைவிட மட்டமாகக் காட்சி தரும் காரணம் என்ன? பெங்களூரு விமான நிலையத்தைப்போல் இருந்தால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். அங்கே இருந்த புத்தகக் கடையிலேயே ஒரு மணி நேரம் சுவாரஸ்யமாகக் கடந்துவிட்டது. அதை விட்டு வெளியே வந்தால், பயணிகளின் வசதிக்காக விஸ்தாரமான பல இடங்கள். ஓர் இடத்தில் பயணிகள் பலர் அமர்ந்து தங்கள் மடிக் கணினியில் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். 200 பேர் சாப்பிடும் அளவுக்கு ஒரு பெரிய ஃபுட் கோர்ட். அதன் பக்கத்தில் நம் சினிமாவில் வருவதுபோன்ற ஒரு ஆடம்பர மான பார். வெளிநாட்டுக்காரர்களும் உள்நாட்டுக்காரர்களும் அமர்ந்து பியர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். எனக்கு (ஒரு காலத்தில்) பிடித்த மொஹித்தோகூட இருந்தது. கியூபாவின் தேசிய மது. ரம், புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு, கொஞ்சம் சீனி, சோடா ஆகிய அயிட்டங் கள் அடங்கிய 'மோசமான’ பானம். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதால், லேசாக எட்டிப் பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

மனம் கொத்திப் பறவை - 26

இப்படி, சர்வதேசத் தரத்தில் அமைந்த விமான நிலையம் ஏன் சென்னையில் இல்லை என்று யோசித்தேன். பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி விமான நிலையங்கள் தனியார் துறையைச் சேர்ந்தவை. சென்னையைப்போல் அரசுத் துறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹைதராபாத், பெங்களூருவாசிகள் வெளிநாடு செல்ல வேண்டுமானால், சென்னை மீனம்பாக்கம்தான் வர வேண்டியிருந்தது. அந்த ஊர்களில் அப்போது உள்ளூர் நிலையங்களே இருந்தன. ஆனால், இப்போது அந்த நகரங்களின் விமான நிலையங்கள் வளர்ந்துவிட்டன.  இங்கே டப்பாவுக்குள் முடங்கிவிட்டது. காரணம், அரசியல்.

அந்த நகரங்களைப்போலவே ஸ்ரீபெரும்புதூரில் க்ரீன்ஃபீல்டு சர்வதேச விமான நிலையம் அமைக்கலாம் என்று தனியார் நிறுவனங்கள் முன்வந்தபோது, இப்போதைய அரசு 'நாங்கள் மீனம்பாக்கம் நிலையத்தையே விரிவுபடுத்திக்கொள்கிறோம்’ என்று சொல்லி, அதை மறுத்துவிட்டது. ஆனால், அந்த வேலை இன்னும் முடியவில்லை. இதற்கு இடை யில், இந்த விரிவாக்கத்துக்கு கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் என்ற கிராமங் களைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதிகளை நீக்க வேண்டியிருந்தது. தரிசு நிலங்களையோ, விளை நிலங்களையோ அல்ல; மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. இதனால் மக்கள் போராட்டம் வெடித்தது. மேதா பட்கரே நேரில் வந்து போராடினார். ஆனால், மீனம்பாக்கத்தின் பின்னால் இருக்கும் கவுல் பஜாரில் இதே போன்ற போராட்டம் தொடங்கியபோது, அரசாங் கம் அந்த ஊர் மக்களுக்கு ஆதரவாக இருந்து, அங்கே தனது விரிவாக்கத்தை உடனே நிறுத்திக்கொண்டது. காரணம், அந்தப் பகுதி முழுவதும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான இடங்கள் இருந்தன. இதை விட்டுவிட்டு, அரசு மேலே சொன்ன மூன்று கிராமங்களில் இருந்தும் மக்களை விரட்டிவிட்டது. இன்னும் சில பகுதிகளில் மிச்சம் இருக்கும் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.  

இவ்வளவுக்கும் மீனம்பாக்கம் விமான விரிவாக்கம் தற்காலிகம்தான். ஏனென்றால், ஸ்ரீபெரும்புதூரில் சர்வதேச நிலையம் கட்டப்பட்டால், அந்தத் தனியார் துறை 'நாங்கள் பெரும் செலவு செய்து கட்டி இருக்கிறோம். மீனம்பாக்கத்தில் உள்ளூர் நிலையம் இருந்தால், எங்களுக்கு நஷ்டம்’ என்று ஆட்சேபிக்கும். அதனால், ஸ்ரீபெரும்புதூரில் சர்வதேச நிலையம் வந்தால், மீனம்பாக்கத்தை மூட வேண்டும். அப்படித்தான் பெங்களூரிலும் மைசூரிலும் மூடப்பட்டு இருக்கிறது. அப்படியானால், 'மீனம்பாக்கத்தை விரிவாக்கம் செய்யாமல், ஸ்ரீபெரும்புதூரிலேயே கட்டுவதற்கு என்ன?’ என்று மக்கள் கேட்டார்கள். இந்தத் தற்காலிக விரிவாக்கத்துக்குப் பல கோடி ரூபாய்கள் செலவு. யாருடைய பணம்? மக்களுடைய வரிப் பணம். இன்னும் எத்தனை வருடங்கள் இருக்க முடியும் என்றே தெரியாத, தற்காலிக விமான நிலையமான மீனம்பாக்கத்தில், அதற்கு எதிரே ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டது. எந்த விமான நிலையத்திலும் நாம் வெளியில் இருந்து பார்த்தால் அதன் உள்ளமைப்பு தெரியாது. ஆனால், இந்த மேம்பாலத்தில் இருந்து பார்த்தால் மீனம்பாக்கம் விமான நிலையம் முழுவதும் தெரியும். விமான நிலையத்தின் பாதுகாப்பு கருதி அதன் பக்கத்தில் உயரமான கட்டடங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பது உலகம் பூராவும் அனுசரிக்கப்படும் விதி. ஆனால், நம் மீனம்பாக்கத்தில் மட்டும் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்தக் கொடுமைக்கு எல்லாம் காரணம்? கான்ட்ராக்ட் சாமி, கான்ட்ராக்ட்!

வ்வளவு பிரச்னைக்கு இடையிலும் வாழ்க்கையை உல்லாசமாக வைத்துக்கொள்ள ஒரு வழி கண்டுபிடித்தேன். சவுதி அரேபியர்கள் கவா (kawa) என்ற ஒரு பானத்தைப் பருகுகிறார்கள். இது மதுபானம் அல்ல. ஆனாலும், குடித்தால் உடம்பில் ஒருவித கிறுகிறுப்பு ஏறுகிறது. பலரும் தூக்கம் வரவில்லை என்று சிரமப்படுகிறார்கள் அல்லவா? கவாவைக் குடித்துவிட்டுப் படுத்தால் தூக்கம் பிய்த்துக்கொண்டு வரும். வளைகுடா நாடுகளில் இருந்து பேரீச்சையும் பாதாம் பருப்பும் கொண்டுவருபவர்களிடம் கவாவையும் கேளுங்கள். கவா பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு துணியில் கட்டி, ஒரு டம்ளர் தண்ணீரில் மூழ்கவைத்து, 20 நிமிடங்கள் கழித்துக் குடிக்கலாம். வெந்நீர் கூடாது. ஹவாய் போன்ற தென் பசிபிக் தீவுகளில் இருந்துதான் கவா அறிமுகமானது. இது எப்படி சவுதியில் இவ்வளவு பிரபலமானது என்று தெரியவில்லை. அமெரிக்காவில் தூக்கம் வராதவர்களுக்கு இது மருந்தாகக் கொடுக்கப்படுகிறது என்றும் அறிகிறேன்.

ப்போதாவது தென் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால், அது சுலபம் இல்லை என்று தெரிகிறது. காரணம், திருட்டு பயம். துப்பாக்கியை நீட்டுபவனிடம் நம்மிடம் இருக்கும் அவ்வளவு பணத்தையும் கொடுக்காவிட்டால், நம் உயிர் நம்மிடம் இல்லை. ஒரு மெக்ஸிகன் நண்பர் சொன்னார். அவர் ஒருநாள் பால் வாங்குவதற்காக ஒரு ஸ்டோருக்குச் சென்றிருக்கிறார். அப்போது கல்லாவின் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த ஒரு ஆள், 'என்ன வேண்டும்?’ என்று கேட்டிருக்கிறான். நண்பர் 'பால் வேண்டும்’ என்று கேட்கிறார். '10 நிமிடங்கள் பொறுங்கள். இந்தக் கடையைக் கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறோம்’ என்றானாம் அந்த ஆள்.

மனம் கொத்திப் பறவை - 26

அப்புறம்தான் இவர் கவனித்து இருக்கிறார், கேஷியர், ஒரு பக்கத்தில் மண்டை உடைந்து மயக்கத்தில் கிடக்கிறார். பிரேசில் இதைவிட மோசமாம். அப்படியானால், என் வாழ்நாள் கனவான பிரேசிலின் ரியோ கார்னிவலை எப்படிப் பார்ப்பது?

ந்த வாரத்துடன் மனம் கொத்திப் பறவைக்கு ஒரு சிறிய இடைவேளை. மீண்டும் சந்திப்போம் என்று கூறும் வேளை யில் , உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். இலக்கியம் சார்ந்த விஷயங்களை நிறையப் படியுங்கள். நல்ல இசை, நல்ல புத்தகம், நல்ல சினிமா ஆகியவற்றைப்போல் நம் வாழ்வை மேம்படுத்தக்கூடியவை வேறு இல்லை. மனம் கொத்திப் பறவைக்கு விகடனில் எனக்குக் கிடைத்த சுதந்திரம் இதுவரை அனுபவித்திராதது. அதற்கு விகடன் ஆசிரியருக்குத் தனிப்பட்ட நன்றி. விரைவில் சந்திப்போம்!