டீன் கொஸ்டீன் : உள்ளங்கை வியர்வைக்கு அணை!
எஸ்.முத்துராஜா, கோயம்புத்தூர்-4.
"நான் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து, கடந்த ஆண்டு பதிவுத் திருமணம்
அழகுராமன், வழக்கறிஞர்.

"நீங்கள் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்து இருப்பதால், உங்கள் மனைவி உங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். உங்கள் திருமணம் சிறப்புத் திருமணப் பதிவின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால், உங்களை மதம் மாறச் சொல்லி பெண் வீட்டார் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், நீங்கள் அப்படிப் பதிவு செய்யாமல் இருந்தால், பெண் வீட்டார் உங்களைத் தங்கள் மதத்துக்கு மாற வேண்டும் எனக் கோரிக்கை வைக்க முடியும். தற்போது கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் அமலில் இல்லை. அவர்கள் உங்களைக் கட்டாயப்படுத்தி மிரட்டும்பட்சத்தில் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரலாம்!"
சா.கணேச மூர்த்தி, அவிநாசி.
"என் வயது 32. மது, புகை என எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால், நான் எப்போதும் மிகுந்த சோர்வுடனே இருக்கிறேன். தூங்கி எழுந்ததும் தொடர்ச்சியாகக் கொட்டாவி வருகிறது. இது என் பணிக்கு மிக இடைஞ்ச லாக இருக்கிறது. நான் புத்துணர்வோடு இருக்க ஒரு நல்ல வழி சொல்லுங்கள்?"
தேவகி, மனநல மருத்துவர்.

"அதிக சோர்வுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலும் சோர்வு ஏற்படும். அல்லது 'ஹைபோ தைராய்டிஸம்' என்று குறிப்பிடப் படும் தைராய்டு சுரப்பிகள் குறைவாகச் சுரக்கும் நிலையிலும் சோர்வு ஏற்படும். முழுமையான தூக்கம் இல்லாவிட்டாலும், சோர்வு ஏற்படும். உளவியல்ரீதியாக உங்களுக்கு ஏதேனும் மன அழுத்தம் போன்றவை இருந்தால், அதுவும் ஒரு காரணம்தான். பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்வதன் மூலமும், 'டீப் ரிலாக் சேஷன்' பயிற்சிகள் மூலமும் புத்துணர்வோடு இருக்கலாம்!"
செ.அரசு, நாகர்கோவில்.
"நான் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி தொடங்கலாம் என நினைக்கிறேன். அதற்கு யாரிடம் உரிமம் பெற வேண்டும்? எந்தெந்தத் துறைகளில் அனுமதி பெற வேண்டும்?"
வரதராஜன், சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி.

"நீங்கள் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி தொடங்குவதற்கு முன்பு, நீங்கள் டிடெக்டிவ் ஆக உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் காவல் துறை, ராணுவம் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே முறையான லைசன்ஸ் பெற்று டிடெக்டிவ் ஏஜென்ஸி துவங்க முடியும். ஆனால், இந்தியாவில் அப்படியான லைசென்ஸ் முறைகள் எதுவும் இல்லை. இது தொடர்பான சட்ட மசோதா பார்லிமென்ட்டில் கடந்த மூன்று வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. ஆகவே, உங்கள் டிடெக்டிவ் ஏஜென்ஸியை 'Registrar of Companies Act'ன் கீழ் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். நேர்மையான வேலை ஆட்கள், டிடெக்டிவ் கருவிகள் போன்றவை வாங்கி சிறப்பாகச் செயல்படுங்கள்!"
டி.குமார், கோவில்பட்டி.

"எனக்கு உள்ளங்கை, உள்பாதம் ஆகிய இடங்களில் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது. இதனால் யாருடனும் கைகுலுக்கவோ, பேசவோ முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?"
பிரியா, சருமநோய் நிபுணர்.

"இது பெரும்பாலும் பருவ வயதின் தொடக்கத்தில் வரும். பரம்பரைத் தன்மையோ, கோபம், பதற்றம், பயம், மன உளைச்சல் போன்ற உணர்வுகளின் அழுத்தங்களாலோ ஏற் படலாம். நாளடைவில் இந்தப் பிரச்னை தானாகவே நிவர்த்தி ஆகும். வியர்வையைக் குறைக்க பவுடர்கள், லோஷன்கள் பயன்படுத்தலாம். அல்லது அதற்கு உள்ள ஒரு பிரத்யேக ஊசியை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் போட்டுக்கொள்ளலாம். 10 மாதங்களுக்கு ஒரு முறை அந்த ஊசி போட்டுக்கொண்டால் குறிப்பிட்ட இடங்களில் வியர்வையைக் கட்டுப்படுத்தலாம்!"
எம்.ராம், கடையநல்லூர்.
"இனி, அனைத்து வாகனங்களும் புகை கட்டுப்பாடு சான்று வைத்திருக்க வேண்டும் என்று செய்திகளில் படித்தேன். அது இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந் துமா? அதை எங்கு, எப்படிப் பெறுவது?"
கார்த்தலிங்கன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்.
"மோட்டார் வாகனச் சட்டப்படி அனைத்து வாகனங்களுமே புகை கட்டுப்பாடு சான்று வைத்திருக்க வேண்டும். இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல், அனைத்து வாகனங்களும் இதைப் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற மாசுக் கட்டுப்பாடு மையங்களில் பரிசோத னைக்குப் பின் இந்தச் சான்றிதழை வழங்குவார்கள். புதிதாக ஒரு வண்டி வாங்கி அதைப் பதிவு செய்யும்போது வழங்கப்படும் சான்று ஒரு வருடத்துக்குச் செல்லும். அதன் பிறகு, ஒவ்வொரு ஆறு மாதமும் புகை கட்டுப்பாடு பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற வேண்டும்!"