மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 1

தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்

##~##

 கிலன் கண் விழித்தான்; மீண்டும் விழித்தான். இந்த முறை எங்கு இருக்கிறோம் என்பதற்காக. எல்லா நினைவுகளையும் துடைத்து எடுத்துவிட்ட மாதிரி பளிச்சென இருந்தது. எழுதப்படாத வெள்ளைக் காகிதம், பதியாத டி.வி.டி., க்ளீன் ஸ்லேட்... அப்படி ஒரு சுத்தம். மூளைக்குள் ஏதோ இணைப்புக் கோளாறு. சிந்திக்க அவதிப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது.

'சேஃப் மோடில்’ வேலை செய்கிறதா மூளை?

இரும்பில் செய்த இன்குபேட்டருக்குள் அடைக்கப்பட்டு இருப்பதாகத் திடுக்கிட்டான். அதனுள் எதற்கு வந்தோம், ஏன் வந்தோம் என நினைவில்லை. நிலக்கடலைக்குள் பருப்பு போல முற்றிலுமாக மூடப்பட்டிருந்தான். எட்டி ஓர் உதைவிட்டால் திறக்குமா? காலை அசைக்க முடியவில்லை. எல்லா பக்கங்களும் எப்படி மூடினார்கள்? படுக்கப்போட்டு ஃபைபரில் மோல்டு செய்துவிட்டார்களா?

தலைக்குள் 'கிர்ர்’ அடித்தது. எதை நினைக்கிறானோ அதுவே நினைவில் நிற்காமல் நழுவியது. ஜீரோ பெர்சென்ட் விருப்பத்தோடு அவனுடைய சுற்றுப்புறத்தை வெறித்தான்.

அவன் பப்பரப்பா என்று படுத்திருந்தான். அவனுடைய நீளம், உயரம், அகலம் என்று அவனுக்காகவே செய்யப்பட்ட மூடி. பக்கவாட்டில் நீல ஒளிர்வில் சில ஃபெதர் டச் ஸ்விட்ச்கள். ஏதோ ஒரு சர்வர் கம்ப்யூட்டருக்குள் தவறுதலாக வைத்துப் பூட்டிவிட்டார்களா? உட்புறத்தில் இருந்த உபகரணங்களை வர்ணிப்பது கஷ்டம். ஸ்கேனிங் மெஷினின் வயிற்றுக்குள் இருப்பதுபோல. தலைக்கு நேர் மேலே சில குமிழ்கள். அயர்ன் பாக்ஸில் சில்க், உல்லன் என்று அம்புக்குறி போட்டிருக்குமே அப்படி.

ஆபரேஷன் நோவா - 1

'இது என்ன இடம்? ஏன் இங்கு வந்தேன்? கடத்தி வந்தார்களா? கண்ணாமூச்சி ஆடுகிறார்களா?’

'ஏய்..!’ என்று குரல் கொடுத்தான் குத்துமதிப்பாக. குரல் அந்தப் பெட்டியைக் கடந்து போயிருக்க முடியாது என அவனுக்கே தெரிந்தது. 'என்ன இம்சை... ச்சே.’

ரீவைண்டு செய்து பார்த்தான். நேற்று வினோதினிக்குப் பிறந்த நாள். நல்ல பிள்ளையாக, ஞாபகமாக நள்ளிரவு 12 மணிக்கே 'ஹேப்பி பர்த்டே செல்லம்...’ என செல்போனில் செய்தி அனுப்பினான். ஃபேஸ்புக்கில் 'இந்நாள் ஒரு பொன்னாள்... வினோதமாக எனக்கு விடிந்த நாள்..’ என்று மொக்கையாக 'சாட்’டியதற்குப் பதிலாக... ஒரு ஸ்மைல் ஸ்டிக்கர்.

'தீம் பார்க் போகலாம்’ என்ற எளிமையான விண்ணப்பம் வைத்தாள். தீம் பார்க்கில், பெப்பர் பாப்கார்ன், கோக், ஃபிங்கர் சிப்ஸ், இட்டாலியன் டிலைட் ஐஸ்க்ரீம் என்று வயிற்றுக்குள் கதம்ப கலாட்டா. போதாததற்கு அங்கிருந்த பிரமாண்ட சக்கரங்களில் மனிதர்களை முரட்டுத்தனமாக உருட்டி இளமையைச் சோதித்தனர். மஞ்சள் சுடிதார், மஞ்சள் ஸ்டிக்கர் பொட்டு, மஞ்சள் ரிப்பன்... என மஞ்சமஞ்சேல் வினோ. ஜிவ் ஜிவ் என சுழன்றடித்த ரோலர் கோஸ்டரில் உற்சாகமாக அலறினாள். அடிவயிற்றைக் கவ்வும் ஊசலாட்டம். பயப்படுவதற்கான சகல வாய்ப்புகளும் இருக்கவே, அவளே அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். அவளுடைய தலைமுடி அகிலனின் முகத்தைப் போர்த்தியிருந்தது. இருவரின் உதடுகளும் மீச்சிறு இடைவெளியில் இருந்தன. இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. அதைப் பயன்படுத்தினான். அவள் முகத்தில் சிறிய அதிர்ச்சி. அதை அவள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இனிமேல் அடிக்கடி அதிர்ச்சி கொடுக்கலாம்.

காலையில் அவளுடன் தீம் பார்க், மாலையில் நண்பர்களுடன் பார். எல்லாம் மெதுவாக ஊறி ஊறித்தான் நினைவு வந்தன.

இரவு கொஞ்சம் ஓவராகிவிட்டதோ? பாரிலா? ஃப்ரண்டோட அறையிலா? மட்டையானதும் இங்கே மூடிவைத்து விளையாடுகிறார்களா? கிர்ர்ருக்கு அதுதான் காரணமா?

ஆபரேஷன் நோவா - 1

பீர் அடித்த பிறகு வோட்கா வேண்டாம் என்றால், மோகன் கேட்கவில்லை. இப்போது தலைவலி பின்னுகிறது.

'அந்த சேகரின் விளையாட்டுதான் இதெல்லாம். திறந்ததும் உதைக்கலாம்.’

அடித்துப்போட்டது மாதிரி இருந்தது. இருக்கும் கலோரியை வைத்து எங்கே இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்க நினைத்தான். இது அவனுடைய வீடோ, அலுவலகமோ இல்லை. இதுவரை அவன் இருந்திடாத இடம். லாட்ஜ்? இருக்கவே முடியாது. மேன்ஷன்? மிகக் குறுகிய அறை... சாஸ்திரத்துக்கு ஒரு லுங்கியோ, ஜட்டியோ இல்லை.

கண் விழித்த நேரத்தில் இருந்த சோர்வு இப்போது ஓரளவுக்கு ஆவியாகியிருந்தது.

விபத்து ஏதும் நடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோமா? கையையும் காலையும் உயர்த்திப் பார்த்தான். அவை எப்போதும்போல இருந்தாலும் உயர்த்துவதில் சிரமம் இருந்தது. அணிந்திருக்கும் ஆடை ஏன் ப்ளாஸ்டிக்கில் செய்ததுபோல உடம்போடு ஒட்டியிருக்கிறது? அவனுடைய உடம்பு அவனுடையது போல இல்லை. ஏதோ பிழை; வினோதம்; விபரீதம். இயல்பு தப்பி... தவறாக இருக்கிறோம் என நினைத்தான். ஏன் அப்படி நினைத்தோம் என்று மிரண்டான்.

கையையும் காலையும் உயர்த்திப் பார்த்தபோது, அளவுக்கு மீறிய நிதானம். மிதப்பதுபோல இருந்தது. இன்னுமா தெளியவில்லை? வெகுநாள் கழித்து எழுந்ததுபோல இருந்தது. 'தெரியாத பாரில் இனி சரக்கு அடிக்கக் கூடாது!’ சாயங்காலம் வரை தாக்குப்பிடிக்காத சபதம்.

அந்தச் சிறிய மூடியை எத்தனை முறைதான் சுழன்று சுழன்று பார்ப்பது? கொஞ்சம் நிமிர்ந்து உட்காரலாம் என தலையை உயர்த்தினான். இடமிருந்தது. கையையும் காலையும் உதறினான். சிறிய விடுதலை. ஜன்னல்? அப்படி எதுவும் இல்லை. 'பரிசோதனை எலியாக்கிட்டானுங்களே பாவிங்க’ இது சந்தோஷ் வேலையா? ஏரோனாடிக்ஸ் படிக்கிறான். காலேஜில் டம்மி ஃப்ளைட் செஞ்சு காட்டுற புராஜெக்ட். யெஸ் அவன்தான்.’

விடுதலைக்கான உத்தேசத்தோடு கதவைத் தேடினான். ம்ஹூம். 'எல்லாப் பக்கமும் மூடியிருக்கே... எந்தப் பக்கமா உள்ளே அடைச்சான்?’

படுத்திருந்த இடம், மெத்தை இல்லை. அது ஒரு ஃபைபர் பலகை. ஆனால், மனிதர் ஒருவர் படுத்து இருந்த இம்ப்ரெஷன் அதில் இருந்தது. அதனுள் அப்படியே பதிந்திருப்பது சுகமாக இருந்தது.

செல்போன் எங்கே? அங்குலம் அங்குலமாக நோட்டம்விட்டான். ஏதாவது கேமரா தென்படுகிறதா? இருக்கிற பட்டன்களில் ஒன்றை அழுத்தினால்? நீல நிறமாக ஒளிர்ந்த பட்டன்கள் கவனம் ஈர்த்தன. அழுத்தினான். 'காலை மணி 5:10’ என்றது ஒரு திடீர் பெண் குரல். திடுக்கிட்டுத்தான் போனான். டிஜிட்டல் குரல். புரோகிராம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓர் ஓசையும் இல்லை. தனியாக ஓர் இடத்தில் எத்தனை மணி நேரம் இருக்க முடியும் என்ற போட்டியில் பங்கெடுத்துள்ளோமா? இது ஏதாவது விளையாட்டா?

ஆபரேஷன் நோவா - 1

டி.வி., டேப்லெட், புத்தகம் அல்லது செஸ் போன்ற விளையாட்டு உபகரணங்கள் ஏதாவது..? எதுவும் இல்லை. படுத்திருக்கலாம்... அல்லது படுத்திருக்கலாம். படுக்கை மட்டும்தான் அங்கே இருந்தது. அப்புறம் அந்த பட்டன்கள். அகிலன் முதலில் அழுத்தின பட்டனையே மீண்டும் அழுத்தினான். '5:12’ என்றது. இத்தனை நேரத்துக்கு அப்புறம் இரண்டு நிமிடங்கள்தானா? உடனே அடுத்த பட்டனை அழுத்தினான்.

'உணவா? நீரா?’

'உணவு’ என்றான் அகிலன்.

'ஸ்ஸ்ஸ்...’ என்ற சிறிய சத்தம். 'போதும்’ என்றான் அவனை அறியாமல். வயிறு திம் என்று இருந்தது. 'ஒரு வாரத்துக்கானது’ என்றது அந்தப் பெண் குரல். 'ஒரு வாரத்துக்கா? சந்தோஷ்.. விளையாடாதடா!’

மூன்றாவது பட்டனை அழுத்தினான். 'என்ன வேண்டும்?’

அகிலன், 'வெளியேற வேண்டும்’ என்றான் அவசரமாக.

'காலை 6 மணிக்குப் பிறகு.’

எரிச்சலாக வெறித்துப் பார்த்தான். நம்முடைய நடவடிக்கைகளை ட்ரூமென் ஷோ செய்கிறார்களா என்று ஆத்திரமாக இருந்தது. எதிர் திரையை ஓங்கி உதைத்தான். மனதில் இருந்த ஆவேசத்தோடு உதைக்க முடியவில்லை. மெத்தென்று நிதானமாக கால் மோதியது. ரப்பர்!

ஆபரேஷன் நோவா - 1

கடைசியாக எங்கே இருந்தோம்? சரக்கடித்துவிட்டு சினிமாவுக்குப் போனோம். நானும் மோகனும். மோகன் எங்கே? அவனைப் பக்கத்து அறையில் அடைத்துவைத்திருப்பார்களோ? அல்லது மோகனின் சேட்டைதானா இதெல்லாம்? படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் கடத்தியிருக்கின்றனர். அப்போது கொடுக்கப்பட்ட குளிர்பானம். யெஸ்.. அகிலனுக்கு இன்னும் கொஞ்சம் பனி விலகியது. இதற்குத்தானா அத்தனை வம்படியாக அந்தப் பாடாவதி படத்துக்கு அழைத்தான்? படுபாவி.

கொஞ்சம் படுத்தான். கண்ணை மூடிக்கொண்டு கொஞ்ச நேரம். திறந்து கொஞ்ச நேரம். நகத்தைக் கடிக்க... காது குடைய.. மீண்டும் முதல் பட்டன். 5:57. இன்னும் மூன்று நிமிடங்கள்தான். 180 வரை நிதானமாக எண்ணினால், கதவு திறந்துவிடும். ஒன்று.., இரண்டு.., மூன்று.., நான்கு.., ... ... ... ... ... ... ... ... 177.., 178.., 179... சுவரின் எந்த மூலையில் கதவு திறக்கப்போகிறது என கண்களால் துழாவினான்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  ஓசையுடன்  திறந்தது. அகிலன் சுற்றும்முற்றும் பார்த்தான்.

வரிசையான படுக்கைகள். அது,  விசாலமான ஓர் அரங்கு. உருக்கி வார்க்கப் பட்ட பிரமாண்ட எந்திரத்தின் உட்புறம்போல. முறையற்ற நீள அகலத்தில் ரயில் பெட்டி? அவனைப் போலவே பலரும் படுக்கையில் இருந்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் ஒரே மாதிரியான நீல நிற உடை அணிந்திருந்தனர். அணிவிக்கப்பட்டிருந்தனர். அகிலனின் இடது பக்கத்தில் இருந்தது ஒரு பெண். ஐரோப்பி. வலது பக்கம் ஒரு சீனன். வேகமாக எல்லாப் படுக்கைகளையும் சர்ர்ரென ரேண்டம் ஸ்கேன் செய்தான். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு நாடு. எல்லா முகங்களிலும் குழப்பம். ஒருவரை ஒருவரை விரோதமாகவும் ஐயத்தோடும் பார்த்தனர். சுவரின் மையத்தில் 'ஜி.எல். 581 ஜி’ என்று அச்சிட்டு இருந்தது. டிரான்ஸ்ஃபார்மரையும் ராட்சஷ ஏ.டி.எம். மெஷினையும் இணைத்தது மாதிரி இரண்டு பக்கங்களும் விஞ்ஞானம். காதை அடைக்கும் அமைதி. ஆக்ஸிஜன் டிஃபிசியன்சி கன்ட்ரோலர், ஆக்ஸிஜன் கன்வெர்ட்டர் என வார்த்தைகள் ஒளிர்ந்தன. கண்ணாடிச் சதுரங்களின் வழியே வெட்டவெளி. பச்சையோ செழுமையோ போர்த்திய வெளி. அடையாளத்துக்கு ஒரு கட்டடம் இல்லை.

இது என்ன இடம்? இத்தனை பேரையும் யார் இங்கே அழைத்துவந்து இப்படி சீருடை அணிவித்தது? எதற்காக? ஏறத்தாழ அங்கிருந்த எல்லோருமே அதைத்தான் யோசித்தனர்.

எல்லோருடைய கேள்விக்கும் பதிலாக ஓர் அசரீரி ஒலித்தது.

'பூமியில் இருந்து வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு வணக்கம்!’

- ஆபரேஷன் ஆன் தி வே...