மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 2

தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்

##~##

 குரல், எந்தத் திக்கில் இருந்து வந்தது எனத் தெரியவில்லை. பூமியில் இருந்து வந்தவர்களுக்கு வணக்கமாம். சிந்தசைஸ்டு தெனாவட்டு. பிராய்லர் கோழியைக் கறிக்கடைக்கு அனுப்பும் அடாவடித்தனம்.

யாரோ ஒருவர் முதலில் ஆரம்பித்தார். ''முட்டாளே... எதுக்காக விளையாடுகிறாய் என்று ஒழுங்கு மரியாதையாகச் சொல்லிவிட்டால், கோர்ட்டுக்குப் போகாமல் இங்கேயே முடித்துக்கொள்ளலாம். நான் யார் தெரியுமா?''

மொத்தம் 40 பேர். 40 கோபங்கள். ஏறத்தாழ எல்லோரும் 'இது என்ன இடம்?, கூட்டிவந்தது யார்?, வெளியே வாடா பல்லைப் பேத்துடுவேன்!’ எனக் கலவையாகக் கத்தினர். சிலர், காரணம் தெரியாமல் அழுதனர். யாருக்கும் எதுவும் கேட்கவில்லை. வெட்டவெளியில் கையை வீசி நியாயம் கேட்டனர்.

''உங்களுடைய அத்தனை கேள்விகளும் பதிவுசெய்யப்பட்டன. ஒவ்வொரு பதிலாகச் சொல்லப்படும். அமைதியாகக் கேட்கவும்.

1. நீங்கள் இருப்பது பூமியில் இருந்து 20 ஒளியாண்டு தூரத்தில். ஜி எல் 581 ஜி. கான்ஸடலேஷன் லிப்ரா.

2. 'நான் யார் தெரியுமா?’ என்று நிறையப் பேர் மிரட்டினீர்கள். அகிலன்... உங்கள் ட்விட்டர் பாஸ்வேர்டு சொல்லட்டுமா? பெண்கள் எல்லாம் காதை மூடிக்கொள்ளுங்கள்.''

''ஐயோ வேண்டாம்'' என்று அலறினான்.

''உங்கள் சரித்திரமே டேட்டாபேஸில் இருக்கிறது.

3. உங்களை, உலக மனித மேம்பாட்டுக் குழு இங்கே அனுப்பிவைத்திருக்கிறது.

4. இங்கிருந்து பூமிக்குத் திரும்புவது சாத்தியம் இல்லை.

- நீங்கள் அனைவரும் கேட்டது இவற்றைத்தான்'' - குரல் தெளிவுபடுத்தியது.

ஒருவன், தன் இருக்கையிலிருந்து தாவிக் கீழே குதித்தான். சிவப்பான அவன் முகம் மேலும் சிவந்திருந்தது. சிற்றிலக்கிய பாங்கில் சொல்வதென்றால்... ஒருவித அறச் சீற்றம்.

''சொல்லுங்கள் ஹென்ரிச்?''

ஆபரேஷன் நோவா - 2

''விளையாட்டுக்காகத்தானே? இது வேறு கிரகம் இல்லைதானே?''

''விளையாடவில்லை. நிஜமாகவே வேறு கிரகம்.''

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

''நீங்கள் இருப்பது ஒரு ஸ்பேஸ் ஷிப். இதனுள் கிராவிட்டி, ஆக்ஸிஜன், தட்பவெப்பம் போன்றவை ஏறத்தாழ பூமிபோலத்தான். இதனுள் நடக்கலாம்; ஆடலாம்; பாடலாம். ஆனால், ஜி எல் 581 ஜி-க்கு என்று சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன.''

''சட்டத்தைப் பற்றி நீ பேசாதே'' என்றான் அகிலன்.

''அகிலன், சட்டம் பிடிக்கவில்லை என்றால் விதி என்று வைத்துக்கொள். இந்த விதிகள் ஜி.எல் 581- ஐ பொறுத்தவரை உயிர்வாழ்வதற்கான அடிப்படை. இங்கே மொழி கிடையாது. அகிலன் நீங்கள் பேசுவது என்ன மொழி?''

''தமிழ்.''

''ஹென்ரிச், நீங்கள்?''

''ஜெர்மன்.''

''யார் எந்த மொழியில் பேசினாலும் கேட்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே புரியும். இது முதல் விதி.''

'அதானே!’ என்ற ஆச்சர்யம், எல்லோர் முகத்திலும்.

''விதி இரண்டு: சுவாசிக்க சிரமம் இருக்கும்போது ஆக்ஸிஜன் டெஃபிசியன்ஸி கன்ட்ரோலரைத் திருகி, மானிட்டரில் பூஜ்ஜியத்துக்கு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.

விதி மூன்று: உடைகளைக் கழற்றக் கூடாது. கதிர்வீச்சு, நோய் எதிர்ப்பு, மறு சுழற்சி ஆகியவற்றுக்கான பிரத்யேக உடை. லாங்வேஜ் கன்வெர்ட்டரும் உடையில்தான் பொருத்தப்பட்டுள்ளது. நான் பேசுவது உங்கள் உடைகள் வழியாக காது கன்டெக்ஷன் போன்ஸ் மூலம் கேட்கிறது.''

'' 'நான்’ என்று சொன்னது யாரை?'' - தத்துவவிசாரம் போன்ற கேள்வியை சாதாரணமாகக் கேட்டான் ஹென்ரிச்.

''நான் ஒரு புரோக்ராம். உங்களை எல்லாம் வழிநடத்துவதற்காக பூமியில் 10 ஆண்டுகளாக எழுதப்பட்ட ஆணை. உங்களுக்கு எழும் அத்தனைச் சந்தேகங்களும் முன்னரே யூகிக்கப்பட்டு விடைகள் எழுதப்பட்டுள்ளன.

விதி நான்கு: உணவு தேவையாயின் அவரவர் இருக்கையில் இருக்கும் பட்டன்களை அழுத்தி நிரப்பிக்கொள்ளலாம். நேற்று இரவு அகிலனும் அகியும் உணவு நிரப்பியுள்ளனர்.

ஆபரேஷன் நோவா - 2

ஐந்தாவது விதி: இனி இதுதான் நமது பூமி. பயிர் செய்வோம்... தொழில் செய்வோம். பூமியில் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்வோம். உதாரணமாக பணம், பிளாஸ்டிக், புகைமயம், பகைமயம்...

ஆறாவது இறுதி விதி: இது நம் கிரகத்தின் தாரக மந்திரம், 'நடந்தால் நல்லது. நடக்காவிட்டால் மிகவும் நல்லது’. எங்கே... எல்லோரும் உரக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.''

யாரும் சொல்லவில்லை. ''பரவாயில்லை. நாளை சொன்னால் போதும்.''

''ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக்கொள்வது முதல் நாள் பணி. படுத்திக்கொள்ளுங்கள்... அழுதுகொண்டிருப்பவர்கள் கடைசியாக அறிமுகமாகலாம். அவசரம் இல்லை.''

'யார் ஆரம்பிப்பது?’ என்ற தயக்கம்.

''என் பெயர் என்.ஹென்ரிச். நான் ஒரு கட்டடப் பொறியாளன். ஜெர்மானியன்.''

அவனுக்கு அடுத்து இருந்தவளும் கட்டுப்பட்டவளாகச் சொன்னாள்.

''என் பெயர் அகி. ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. வரும் ஒலிம்பிக்கில் தேர்வாகியிருந்தேன். ஜப்பான்''

''ஜிம் கார்ட்டர். அமெரிக்கன். விண்வெளி விஞ்ஞானி. நாசாவில் பணிபுரிகிறேன்.''

''தேஷ்மி. ரேடியோ இன்ஜினீயர். சிங்களம்...''

அகிலன் ஏனோ அவளை திரும்பிப் பார்த்தான்.

''என் பெயர் லூசூன். சீனன். மருத்துவன்.''

''பெயர் அகிலன். விவசாயத்தில் ஆய்வுசெய்கிறேன். இயற்கை முறையில் விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிப்பதில், விவசாயக்கழகத்தில் தங்கம் வென்றேன். இந்தியன்.''

''என் பெயர் கேத்ரின். இங்கிலாந்து. ஜெனட்டிக் இன்ஜினீயரிங்.''

அகிலனைப் பார்த்து, ''சூடோமோனாஸ் ஃபுளோரஸன்ஸ் இல்லாமல் எப்படி விதை நேர்த்தி செய்வீர்கள்?''

''அதற்குத்தான் தங்கம் கொடுத்தார்கள்.''

கேத்ரின் அவனுடைய வெடுக் பதிலுக்கு ஒரு புயல் மூச்சுவிட்டாள்.

மொத்தத்தில், 'நாட்டுக்கு ஒருவர்... துறைக்கு ஒருவர்’ என்பது மட்டும் தெளிவானது. ஜியோகெமிஸ்ட், சாஃட்வேர், வரலாறு, கவிஞன் என.

மீண்டும் குரல்.

''அரை மணி நேரம் கலந்துரையாடுங்கள்.''

''அரசாங்க இன்ஜினீயர் உருவாக்கிய புரோக்ராம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை திராபையாக எழுத அவர்களால்தான் முடியும்'' - எவனோ புலம்பினான்.

ஆபரேஷன் நோவா - 2

அகி, ஏதோ இன்டர்வெல் விட்டதுமாதிரி இருக்கையில் இருந்து எழுந்தாள். ஆர்ட் எக்ஸிபிஷனுக்கு வந்தவள் போல நின்று நின்று அங்கிருந்த திரைகளை ஓர் அலட்சியப் பார்வை பார்த்தாள். சாதாரணமாகவே அவளுடைய பார்வை 10 டிகிரி மேல் நோக்கி இருந்தது. அழகாக இருப்பதாக நினைக்கும் சிலருக்கு தானாக வரும்போல. அவள் சுற்றிவந்த இடத்தில் ஒரு கண்ணாடி, திடீரென சொர்க்கவாசல் போல வழிவிட்டது. விண்கலத்தின் உள்ளே ஒரு கணினி ராஜாங்கமே நடப்பது தெரிந்தது. அகி, தைரியமாக அதனுள்ளே பிரவேசிக்க, மீண்டும் கண்ணாடித் திரைபோட்டது.

''பார்ரா...'' என வியந்த அகிலனிடம், ''அவளுடைய ஜோடியாக் சைன் ஜெமினி. அவங்களுக்குத்தான் இப்படி ஒரு துணிச்சல் வரும்'' என்றான் ஹென்ரிச். அகிலன் கலந்துரையாட இடது பக்கம் திரும்பினான். சீனன், தேஷ்மியிடம் பேச ஆரம்பித்திருந்தான்.

வலது புறம் கேத்ரின், ''எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை. வேற்று கிரக செட் போட்டு எதற்காகவோ ஏமாற்றுகிறார்கள். புதிதாக மருந்து கண்டுபிடித்து எலிகள் போல நம்மைப் பரிசோதிக்கிறார்கள்.''

அகிலன், இதை எதிர்பார்க்கவில்லை. ''கண்ணாடி வழியாகப் பாருங்கள். எத்தனை சுத்தம்? இது நம் கிரகம் இல்லை'' என்று மட்டும் சொன்னான்.

''இது எல்லாமே செட்-அப். இங்கே எது கொடுத்தாலும் சாப்பிடாதீர்கள்.''

''நான் எதையும் சாப்பிடவில்லை. உணவு என்றதும் மூன்று நாளைக்கானதை நிரப்பிவிட்டார்கள்.''

''பரவாயில்லை. நாம் இங்கிருந்து தப்பிக்க வேண்டும். நம்மைக் கடத்தி வந்தவர்கள், ஏதோ மருந்து கம்பெனிக்காரர்கள். அவர்கள் கண்டுபிடித்த மருந்தைச் செலுத்தி சோதிக்கப்போகிறார்கள். நடந்தால் நல்லது. நடக்காவிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் சொல்லும் தாரக மந்திரத்தைக் கேட்டீர்கள் அல்லவா? மருந்து தோல்வி அடைந்து, செத்தால் நல்லது. இதோடு அந்த மருந்தை நிறுத்திவிடலாம். சாகாவிட்டால், மிகவும் நல்லது. அதுதான் விஷயம்.''

''நாம் ஒட்டுக்கேட்கப்படலாம்'' என்றான்.

''கேட்காது. தப்பித்தாக வேண்டும். 40 பேரும் சேர்ந்து முயன்றால், தப்பிக்க முடியும்.''

''ஒருவேளை நாம் வேற்றுக்கிரகத்தில் இருந்தால்?''

கேத்ரின் தன் ப்ரௌன் நிற விழியால் அவனைச் சுட்டாள். ''அப்படி இருந்தாலும் தப்பிப்போம். புரிகிறதா?'' வினோவைவிட வயது குறைவுதான். கோபம் அதிகம்; அவசரம் அதிகம்; துறுதுறு அதிகம்; நிறம் அதிகம்; உயரம் அதிகம்; அகலம் அதிகம்; அதிகம் அதிகம்.

''இந்தியர்கள் எதையும் கொஞ்சம் ஆறப்போட்டு யோசிப்போம். சகிப்புத்தன்மையும் அதிகம். ஆனால், முடிவு எடுத்துவிட்டால் தீவிரமாக இருப்போம்'' என்றான்.

''அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.''

''நீங்கள் கவலைப்படுவதற்காக இதைச் சொல்லவில்லை.''

''சரி நீங்கள் ஆறப்போட்டு முடிவெடுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்றாள், அவளுடைய வலது புறம் இருந்தவனை அணுகி. ஆறடி உயரமும் ஆரஞ்சு கலந்த சிவப்புமாக இருந்த அவன், கண்ணீர் மல்க, 'ஜீஸஸ்... என்னைக் காப்பாற்று!’ என்று கதறினான்.

ஆபரேஷன் நோவா - 2

கேத்ரின் அவசரமாக அகிலன் பக்கம் திரும்பி, ''இந்தியர்களே மேல்'' என்றாள்.

''தப்பிப்போம். ஆனால், இந்த உடையில் இருக்கும்போது பேசக் கூடாது.''

''ஆமாம். எல்லாக் கருவிகளும் இதனுள் இருக்கின்றன. முதலில் உடையைக் கழற்ற வேண்டும்''  - அகிலனுக்கு மிகவும் நெருங்கி, ரகசியமாகச் சொன்னாள். அகிலன் உடம்பில் ஒரு சந்தோஷ நரம்பு அதை எதிர்பார்த்தது.

அகிலன், சீனன் பக்கம் திரும்பினான். ஒருவழியாக இருவரும் புத்தருக்கு வந்திருந்தார்கள். ''உங்களுக்கு இது வேற்றுக்கிரகம் என்பதில் சந்தேகம் ஏற்படவில்லையா?'' அகிலன் கேட்டான்.

''இது வேற்றுக்கிரகம்தான். அதில் என்ன சந்தேகம்?''

''உங்களுக்குப் பயமாக இல்லையா?''

''இல்லை. எங்கள் கன்ஃபூசியஸ் ஒரு தத்துவம் சொல்லியிருக்கிறார். 'பெண்ணே, உன்னை ரேப் பண்றவனை எதிர்த்துப் போராடு. முடியாது என்று தெரிந்துவிட்டால் என்ஜாய் பண்ணு’ என்று. அதைத்தான் தேஷ்மியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இனிமேல் நம்மால் ஆவது ஒன்றும் இல்லை. அவர்கள் சொல்கிற மாதிரி வாழ்ந்து பார்க்க வேண்டியதுதான்.''

''கேத்ரினுக்குப் பக்கத்தில் ஒரு ஆஸ்திரியாக்காரன் கதறிக்கொண்டிருக்கிறான். அவனைத் தேற்ற முடியுமா பார்.''

''நான்கைந்து பேரைத் தவிர மற்றவர்கள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள். உனக்குப் பயம் இல்லையா அகிலன்?''

''இல்லை. எங்கள் ஊரில் கன்ஃபூசியஸ் மாதிரி நிறைய பேர் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.''

''ஒன்று சொல். இந்த நேரத்தில் தெம்பாக இருக்கும்.''

பி.எஸ்சி-யில் படித்த மனப்பாடக் குறள் சட்டென நினைவுக்கு வந்தது.

''எங்கள் வள்ளுவர், 'காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்’னு சொல்லியிருக்கார். உலகத்தையே ஆளணும்னு நினைக்கிறவர், அதற்கான டயம் வர்ற வரைக்கும் பொறுமையா இருப்பார்னு அர்த்தம்.''

''சூப்பர்... ஆனால், உலகத்திலேயே நாம் இல்லையே?''

''ஜி.எல். இருக்கிறதே? அதற்காக 'கலங்காது ஜி.எல். கருதுபவர்’ என்றா எழுத முடியும்?''

''முடித்துவிட்டீர்களா?'' என்றது குரல்.

கலைந்திருந்தவர்கள் நிமிர்ந்தார்கள். ''ஒருமுறை ஸ்டீபன் ஹாகின்ஸ் எச்சரித்தார். 'பூமி, இயற்கை வளங்களை இழந்துவருகிறது. பெட்ரோல், நிலக்கரி, குடிநீர் எல்லாமே பற்றாக்குறை. இதையெல்லாம் நாம் புதிதாகச் செய்ய முடியாது. பாதி நாடுகளில் உணவுப் பஞ்சம். எல்லா நாடுகளிலும் அணுகுண்டும் நியூட்ரான் குண்டும் தாராளமாக இருக்கின்றன. உலகத்தை யார் முதலில் அழிப்பது என்று ஆவலாகக் காத்திருக்கிறார்கள். விஞ்ஞானிகள் விரைவில் வேறு ஒரு பிளானட் கண்டுபிடிப்பதுதான் மனித இனத்துக்குப் பாதுகாப்பு’ என்றார்.

ஆபரேஷன் நோவா - 2

அந்த வேறுக்கிரகம்தான் ஜி.எல்... ஊழிக் காலத்தில் எல்லா ஜீவராசிகளையும் காப்பாற்ற, ஒரு ஜோடியைச் சேகரித்த நோவா செய்ததைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். அதாவது, உலக அமைதி அமைப்பு. இதில் 142 நாடுகள் அங்கம்.

இன்னும் 10 ஆண்டுகளில் பூமி அழியும். சுமத்ரா பகுதியில் சூப்பர் வல்கனோ டோபா வெடிக்க இருக்கிறது. 70-ன் பக்கத்தில் 12 சைபர் போடுங்கள். அத்தனை டன் மேக்மாவை அது வெளியேற்றும். பூமியே உருகி ஓடும். 3,000 கனசதுர கிலோமீட்டர் சாம்பலைக் கக்கும். காற்றில் சல்ஃபர் பரவும். மனிதன் தப்பிப்பது அரிது. பூமியில் எந்த உயிரினமும் தப்பிப் பிழைப்பது கஷ்டம்.''

''போதும் நிறுத்து உன் பொய்க் கதையை'' என்று கத்தினாள் கேத்ரின்.

''பொய் அல்ல... அத்தனையும் உண்மை'' - 40 பேரில் ஒருவர் தனக்கான குடுவையில் இருந்து கீழே இறங்கி எல்லோருக்கும் முன்பாக வந்து நின்றார். 60 வயதாக இருக்கலாம்.

''என் நாடு கனடா... ரெனால்ட் மைக்கேல். மொத்தம் 60 விண் கப்பல்கள் இந்தக் கிரகத்துக்கு வந்துள்ளன. ஒவ்வொன்றிலும் 40 பேர். நாம் எல்.ஒய். வேகத்தில் பயணம் செய்து இங்கே வந்து சேர்ந்தோம்.''

''வாயை மூடு பெருசு. எரிமலையாம். உலகமே அழிஞ்சுடுமாம். என்ன... நீயும் அவங்க ஆளா?'' என்றான் அகிலன் ஆத்திரமாக.

பிரம்பு போன்று இருந்தார் மைக்கேல். ''நான் ஒரு விஞ்ஞானி. உங்களையெல்லாம் காப்பாற்றத்தான் இந்த நடவடிக்கை.''

''எப்படி நம்புவது?''

''கார்ட்டரும் என்னுடன் நாசாவில் பணிபுரிந்தார். ஒரே வித்தியாசம், நான் நானாக விருப்பப்பட்டு வந்தேன். அவருக்கு இங்கு வந்த பிறகுதான் தெரியும்.''

கார்ட்டர், ''படுபாவி. என்னை ஏமாற்றிவிட்டாயே'' என்று கத்தினான்.

''கூட்டுக் களவாணிகளா... ரெண்டு பேரும் சேர்ந்து டிராமாவா போடுறீங்க?'' அகிலனுக்கு எதிரிகள் யாரென்று தெரிந்துவிட்ட ஆவேசம். மற்றவர்களும் அவர்கள் மீது பாய்வதற்குத் தயாரான நேரத்தில்...

ஸ்பேஸ் ஷிப்பின் கண்ணாடி வழியே அதைக் கண்டான் வஸிலியேவ். கன்டெய்னர் லாரியில் அடிபட்ட காண்டாமிருகம் போல உருக்குலைந்திருந்தது அது. பச்சை நிறத்தில் அத்தனை பிரமாண்டமான க்ரியேச்சர். அவனுடைய அலறல் எல்லோருடைய ஆவேசத்தையும் ஒரு கணத்தில் அச்சமாக மாற்ற... ஆயுத உதவியை எதிர்பார்த்தனர்.

- ஆபரேஷன் ஆன் தி வே...