மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

மலைக்கோட்டையின் வயது?

##~##

அ.குணசேகரன், புவனகிரி.

எழுச்சியும் வீழ்ச்சியும் எதைக்கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன?

பிற்பாடு ஏற்படும் விளைவுகளைக்கொண்டு!

'300’ படம் பார்த்தீர்களா? லியோனிடாஸ் தலைமையில் ஸ்பார்ட்டா நாட்டு வீரர்கள் 300 பேர், ஸெர்க்ஸஸ் மன்னனின் லட்சக்கணக்கான பாரசீக வீரர்களை எதிர்த்து நின்று போரிட்டு உயிர்த் தியாகம் செய்வார்கள். அதன் விளைவாக, பிற்பாடு ஸ்பார்ட்டா நாடு வீரத்துடன், புத்துணர்ச்சியுடன் நிமிர்ந்து நிற்க... பிறகு, பாரசீக மன்னனால் அந்த நாட்டை வெல்லவே முடியாமல் போய்விட்டது. இது எழுச்சியா, வீழ்ச்சியா?!

வெ.கா., கடையநல்லூர்.

பொதுவாக நல்லவர்கள் எல்லோரும் தமது மனைவிக்குச் சற்று பயப்படுவார்கள்தானே?

அது நல்லவர்களாக இருப்பதால்தான் என்பதை இந்த மனைவிமார்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் உங்க வருத்தமாக்கும்!

நா.சுரேஷ், சென்னை-92.

திருச்சி மலைக்கோட்டை தோன்றி 230 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அப்படி என்றால், பூமியின் உண்மையான வயதுதான் என்ன?

கோட்டை அல்ல. கோட்டை இருக்கும் பாறை!

ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, அன்டார் டிகா இணைந்து இருந்த, 'சூப்பர் கண்டம்’ என்று அழைக் கப்பட்ட கோண்டுவானாலேண் டில் ஒரு பகுதியாக இருந்த இந்தியா பிரிந்து, ஆசிய கண்டத்தை நோக்கி, 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நகர ஆரம்பித்தபோதே மலைகளும் பாறைகளும் தோன்றிவிட்டன. அதில் திருச்சி மலைக்கோட்டையின் பாறைகளும் அடக்கம்.

25 கோடி ஆண்டுகளாக மத்திய-தென் இந்திய மலைகளும், பாறைகளும் அப்படியே மாறாமல் இருப்பதாகக் கூறுகிறார் கள். அப்போது முதல் ஆறு கோடி வருடங் களுக்கு முன்பு வரை, திருச்சி மலைக் கோட்டை உள்ள பகுதிகளில் 'ஜுராசிக்பார்க்’ பட ஸ்டைலில் டைனோசர்கள் உலவிய தற்கான ஆதாரம் உண்டு.

மனுஷன் என்பவனே அப்போது கிடையாது. அவனுக்கு மூதாதையர்களான 'ஹோமோ எரக்டஸ்’ மனிதர்களே ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தென் இந்தியாவில் உலவினார்கள் - கூர்மைப்படுத்தப்பட்ட கல் ஆயுதங்களோடு. கற்களைக் கூர்மைப்படுத்தாமலேயே வீசுவது இப்போ தைய மனிதன்! (மொத்தமாக பூமி உருவா னது 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். நியாயமாக இந்த இரண்டு வரிகள்தான் உங்களுக்குப் பதிலாக இருந்து இருக்க வேண்டும் இல்லையா?! எங்கியோ போயிட்டேன்!)

கண்.சிவகுமார், திருமருகல்.

நடிகைகளின் 'பொற்காலம்’ எது நண்பா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

ரஜினி, ஷாரூக் கான், மோகன்லால், மகேஷ்பாபு நான்கு ஹீரோக்களும் ஒரு நடிகையை (ஹீரோயின் ஆக) ஒரே சமயத்தில் புக் செய்தால், அதுவே அவருடைய பொற்காலம்!

இதில் மூன்று படங்கள் ஊத்திக்கொண்டால்கூடப் போதும். அதோடு ஆரம்பிக்கும் நடிகையின் கற்காலம்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

'விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது’ என்று எழுதினார் கண்ணதாசன். ஆனால், விளம்பரம் இருந்தாத் தானே எதுவுமே பளிச்சிட முடிகிறது?

விளம்பரத்தால் மட்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும். கவிஞர்கள் முழுசாக எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள்!

சுப்பிரமணி லட்சுமணன், சென்னை-15.

நடிப்புதான் என்றாலும் தொலைக்காட்சி மெகா தொடர்களில் 'நெகட்டிவ் ரோல்’ பண்ணும் பெண்கள், நாளா வட்டத்தில் 'மென்ட்டல்’ ஆக மாட்டார்களா? அவரவர் குடும்பச் சூழலில் அவர்களால் இயல்பாக இயங்க முடியுமா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஆக மாட்டார்கள். அந்தப் பாத்திரத்தின் குணாதிசயங்கள் அவர்களுடைய ஆழ் மனது வரை ஊடுருவாது. உதட்டு அளவில் வசனங்கள், முகம் வரை உணர்வுகள் என்பதோடு நடிப்பு என்கிற திறமை (Talent) நின்றுவிடும். ரொம்பப் பக்குவம் இல்லாத பெண்களுக்குச் சற்று பாதிப்பு ஏற்படலாம். ஆனால், அநேகமாக சினிமா, டி.வி-க்கு வந்த நடிகைகள் பக்குவம் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்!

என்.பாலகிருஷ்ணன், மதுரை-1.

வனத்தின் புனிதத்தைக் காப்பவர்கள் ஆதிவாசிகள்தானே..?

அவர்கள் மட்டுமே!