மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 31

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##

பெரிய அக்காவின் திருமணத்துக்குத்தான் முதன்முதலாக எனக்கு பேன்ட் எடுத்துக் கொடுத்தார்கள். இள நீல நிறத்தில் நான் அணிந்த முதல் பேன்ட்டின் ஸ்பரிசத்தை என்னால் இன்றுகூட உணர முடிகிறது.சுவாமி சந்நிதியில் இருந்த 'ஹைனெஸ் டெய்லர்’தான் எங்களின் ஆஸ்தான டெய்லர். கடையைப் போலவே அவரும் பழசாகத் தெரிவார். 'ம்ம்ம்... ஆடக் கூடாது... வயித்த எக்காதிய... மூச்சு விடுங்க.’ கால்களுக்கு இடையே உயரத்துக்கான அளவு எடுக்கும்போது கூச்சத்தில் நெளியும்போது சொல்வார். கடை முகவரி போட்ட அட்டையில் பெயர் எழுதி, துணியில் இருந்து ஒரு சின்னத் துண்டைக் கத்தரித்து, ஸ்டேப்ளர் பின் அடித்து, அட்டை யில் பொருத்திக் கையில் கொடுப்பார். 'பதினேளாம் தேதிக்கு இன்னும் மூணு நாளுதான் இருக்கு.’ டெலிவரி தேதியை மனதுக்குள் சொல்லிக்கொண்டே காத்துக் கிடப்போம்.

மூங்கில் மூச்சு! - 31

பெல்பாட்டம் பேன்ட்டை 'பெல்ஸ்’ என்றே அறிந்திருந்த எங்களுக்கு அதன் கீழ்ப் பகுதி அகலத்தின் அளவு குறித்த கவலை எப்போதுமே உண்டு. பொருட்காட்சிக்கு பேன்ட் அணிந்து போகும்போது எல்லாம், நானும் குஞ்சுவும் மற்றவர்கள் அணிந்திருக்கும் பேன்ட்டின் 'bottom’ பகுதியையே உற்றுப் பார்ப்போம். யாருடையதாவது அகலமாகத் தெரிந்துவிட்டால், தாழ்வுமனப்பான்மை வந்துவிடும். 'நான் அப்பமே சொன்னென், கீளெ இன்னும் கொஞ்சம் அகலம் வைக்கலான்னு. கோட்டிக்காரப் பய நீதான் கேக்கல. அந்த ஆளப் பாரு... அவன் போட்டிருக்க செருப்பே கண்ணுக்குத் தெரியல. எத்தா அகலம்?’- குஞ்சு புலம்புவான். ஒரு கோடை விடுமுறையின்போது 'தளவாய்’ ராமலிங்கம் போட்டிருந்த பேன்ட்டின் 'bottom’ பகுதியில் 'zip’ வைத்துத் தைத்து இருந்ததைப் பார்த்து எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. சுவாமி சந்நிதியில் அப்போது வெகு பிரபலமாகிக்கொண்டு இருந்த 'ப்ரின்ஸ் டெய்லர்’ கடைக்குச் சென்று, நானும் குஞ்சுவும் பேன்ட்டுக்கு அளவு கொடுத்தோம். சிறு வயதில் இருந்தே நாங்கள் முடி வெட்டிக்கொண்டு இருந்த ஜானகிராமனின் அண்ணன் சேகர்தான் 'ப்ரின்ஸ் டெய்லர்’ கடையைத் திறந்திருந்தார். ஜானகிராமன் அங்கு இருந்தது, எங்களுக்குத் தெம்பை வரவழைத்தது. 'ஜானகிராமா, என்ன செய்வியோ தெரியாது. திருநவேலில ஒரு பய இதுக்கு முன்னாடி இவ்வளவு அகலமா பெல்ஸ் போட்ருக்கக் கூடாது. ஜிப்பு சும்மா தகதகனு மின்னணும். என்னா?’

திருநெல்வேலியில் அவ்வப்போது மாறி வரும் ஃபேஷனைத் தீர்மானிப்பவன் எங்களைப் பொறுத்தவரை கணேசண்ணன்தான். அது சிகை அலங்காரமாக இருந்தாலும் சரி, உடை அலங் காரமாக இருந்தாலும் சரி... சும்மா வகிடு எடுத்துத் தலை சீவி      வந்த     எங்களை கணேசண்ணனின் ஸ்டெப் கட்டிங், ஆசை காட்டியது. மாதாமாதம் முடி வெட்டும் நாங்கள், இரண்டு மாதங்களாக முடி காதை மறைக்கும் வரைக்கும் காத்திருந்து ஸ்டெப் கட்டிங் வெட்டினோம். ஷாஃப்டர் பள்ளியில் ஸ்டெப் கட்டிங்குக்குத் தடை விதித்து இருந்தார் கள். பள்ளிக்குச் செல்லும்போது மட்டும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தடவி, காதுகளுக்குப் பின் முடியைத் தள்ளி, படிய சீவிக்கொள்வோம். அப்படி இருந்தும் சுதந்திரம் சார் கண்டுபிடித்துவிடுவார்.

மூங்கில் மூச்சு! - 31

'காத மறச்சுச் சீவுனா எங்களுக்குத் தெரியாதோல?’ திரும்பி நிற்கச் சொல்லி பிரம்பால் அடிப்பார். முன்னெச்சரிக்கை யாக இரண்டு டிராயர்கள் போட்டு இருந்தாலும் வலி தாங்க முடியாமல், ஒருமாதிரியாக பக்கவாட்டில்தான் உட்கார முடியும்.

கணேசண்ணன் அப்போது படித்து முடித்துவிட்டபடியால், தினமும் தனது ஸ்டெப் கட்டிங் தலையைப் பராமரித்து வந்தான். பார்க்கப் பார்க்கப் பொறாமை யாக இருக்கும். சாயங்காலமானால் குளித்து 'அப்ஸரா’ சலூனுக்குப் போய் தலைக்கு ஹீட்டர் போடுவான். காலையில் போட்டு இருந்த சட்டையை மாற்றிவிட்டு, புதிய சட்டை அணிந்து தலையைச் சீவியவாறே நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்வான். அவனுக்கு முன்னால் கீழப் புதுத் தெரு இளம்பெண்கள் கையில் சின்னத் தூக்குச்சட்டியுடன் 'மஞ்சன வடிவம்மனுக்கு’ எண்ணெய் ஊற்றச் சென்றுகொண்டு இருப்பார்கள்.

'நமக்கும் காலம் வரும்ல. ஸ்கூல் முடிஞ்ச வொடனெ ஸ்டெப் கட்டிங்தான்’. சபதம் போல குஞ்சு சொல்வான். ஆனால், நாங்கள் ஸ்கூல் முடிக்கும்போது 'ஸ்டெப் கட்டிங்’ காலாவதியாகி, ஏற்றி வாரப்பட்ட 'டிஸ்கோ’ ஹேர் ஸ்டைல் வந்துவிட்டது.

எனது முடி வாகுக்கு 'டிஸ்கோ’ சரிப் பட்டு வராததால் நான் என்னுடைய பழைய ரெண்டும்கெட்டான் ஹேர் ஸ்டை லையே தொடர்ந்தேன். தலைமுடியின் பெரும் பகுதியை இழந்த குஞ்சு, அவனா கவே ஒரு ஹேர் ஸ்டைலை உருவாக்கிக் கொண்டான். 'நார்த் அமேரிக்கால இதாம்ல இப்பொ ஃபேஷன்’. எப்போது கேட்டாலும் இதையே சொல்வான்.

ஒரே நிறத்தின் ஒரு பாதி மங்கலாகவும், மறு பாதி திக்காகவும் தெரிகிற 'டபிள் கலர்’ சட்டையை கணேசண்ணன்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினான். அந்தச் சமயத்தில் 'என்டர் தி டிராகன்’ புரூஸ்லீ படம் போட்ட பனியனை அணிந்து கொண்டு, சட்டை போடாமல் விறைப்பாகத் திரிந்துகொண்டு இருந்த எங்களுக்கு கணேசண்ணனின் 'டபிள் கலர்’ சட்டை பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அடித்துப் பிடித்து, வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நாங்கள் 'டபிள் கலர்’ சட்டைக்கு வந்து சேர்ந்தோம். அதற்குள் கணேசண்ணன் 'நியூஸ் பேப்பர் டிசைன்’ சட்டை அணிய ஆரம்பித்து விட்டான். கொசகொசவென்று நிறைய ஆங்கில அச்சு எழுத்துக்கள் தாறுமாறாக இடம் பிடித்து இருக்கும் 'நியூஸ் பேப்பர்’ டிசைன் சட்டை அணியாத அண்ணன் மார்களே அப்போது திருநெல்வேலியில் இல்லை.

மாறி வரும் ஃபேஷனைப்பற்றிக் கவலைப் படாமல், தங்களுக்குப் பிடித்த உடை அலங்காரத்திலேயே நின்றுவிடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

நெற்றியில் சுருட்டிவிட்ட பந்துபோல சீவிய கர்லிங் முடியுடன், உடம்பை இறுக்கிப் பிடித்த சட்டை அணிந்த, மெல்லிய நூல் மீசை மாமாக்களையும் பார்த்திருக்கிறேன். 'சத்யா தேங்காய்க் கடை’ நாராயணன் அண்ணன் ஒருபோதும் 'படகோட்டி’ எம்.ஜி.ஆர். ஜிப்பாவை மாற்றியதே இல்லை. 'நாராயண அண்ணன் துணி எடுத்துத் தைக்காருன்னா நெனைக்கெ? கர்ணன் கவச குண்டலம் மாரி அவாள் பொறக்கும்போதே ஜிப்பாவோடதானெ பொறந்தா!’

'நரசுஸ்’ காபிக் கடையில் வேலை பார்த்து வந்த 'நரசுஸ்’ ஆறுமுக சித்தப் பாவை நான் இன்றைக்குப் பார்த்தாலும் 'நெஞ்சிருக்கும் வரை’ சிவாஜியை நினைவு படுத்துகிறார்.

நண்பன் விஜயராகவனின் தகப்பனார் ஒரு தீவிர எம்.ஜி.ஆர். அபிமானி. திரைப்பட இயக்குநர் மிஷ்கின்போல இரவு நேரத்திலும் 'எம்.ஜி.ஆர். ஸ்டைல் கூலிங் கிளாஸ்’ அணிந்திருப்பார். ஆனால், குளிக்கும்போது கழற்றிவிடுவார்!

ஹேர்ஸ்டைல் மற்றும் விதவிதமான டிசைன்களில் சட்டை அணிவதுபோன்ற விஷயங்களில் எங்களுக்கு முன்னோடியாக இருந்த கணேசண்ணன், ஏனோ பேன்ட் அணிவது இல்லை. வேட்டிதான் கட்டுவான். அதனால், நாங்கள் ரொம்ப நாட்க ளாக 'பெல்ஸ்’ பேன்ட்டே அணிந்து வந்தோம். எங்களுடைய சிகை, உடை அலங்காரங்களை உலகுக்கு நாங்கள் தெரியப் படுத்தும் வாய்ப்பு, வருடத்துக்கு ஒருமுறை ஆனித் திருவிழாவின்போதுதான் கிடைக் கும். நெல்லையப்பர் கோயில் தேர்த் திருவிழாவையட்டி போடப்படும் அரசுப் பொருட்காட்சிக்குத் தினமும் செல்வோம்.  

ஒருமுறை பொருட்காட்சிக்குச் சென்ற போது, ஒரு பெண்ணைப் பார்த்தோம். மும்பையில் இருந்து கீழப் புதுத் தெருவில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு வந்திருந்த அந்தப் பெண் 'நதியா கொண்டை’ போட்டு, டைட் பேன்ட் அணிந்து, கோன் ஐஸ் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். எப்போதோ மாறிவிட்ட ஃபேஷன்பற்றிய அறிவு இல்லாமல் தொளதொளவென 'பெல்ஸ்’ பேன்ட் அணிந்து சுற்றிக்கொண்டு இருந்த எங்களை, அவள் போட்டு இருந்த 'டைட் பேன்ட்’ நொடிப் பொழுதில் அவமானப் படுத்திவிட்டது.

குஞ்சுவின் காதைக் கடித்தேன். 'அந்த பிள்ளயப் பாத்தியால?’ வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்தபடி நடந்து வந்த குஞ்சு சொன்னான். 'பாத்துக்கிட்டுத்தானெ இருக்கென். என்னா அளகா ஐஸ் சாப்பிடுதா, பாத்தியா?’ 'லூசுப் பயலெ. அவ போட்ருக்கிற பேன்ட்டப் பாருல’ - எரிச்சலில் ஏசினேன். 'பேன்ட் போட்ருக்காளா? அதப் பாக்கலியெ. இரி, பாத்துட்டு வாரேன்.’ இதைச் சாக்கிட்டு அவள் அருகில் சென்றான்.

மும்பைப் பெண் எங்கள் கண்களைத் திறக்க, 'டைட்’ பேன்ட்டுக்கு மாறினோம். நடக்கும்போது அசௌகரியமாக இருந்தாலும், பெருமையாகவே உணர்ந்தோம். அப்போது எங்களிடம் ஆளுக்கு ஒரு சைக்கிள் இருந்தது. டைட் பேன்ட்டை ஊருக்குக் காட்ட ஜங்ஷனுக்குக் கிளம்பினோம். காலைத் தூக்கிப்போட்டு ஸ்டைலாக சைக்கிளில் ஏறும்போது ஏதோ ஒரு விநோத ஒலி கேட்டது. 'ஒனக்கு ஏதாவது சத்தம் கேட்டுதா?’- இருவருமே ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டோம். கொஞ்ச தூரம் சைக்கிள் ஓட்டிய பிறகு சத்தத்தின் பலனை உணர்ந்தோம். அன்று மாலை முழுவதும் ஜங்ஷனில் சைக்கிளைவிட்டு இறங்காமலேயே சுற்றினோம்.

'அண்ணாச்சி, ஒரு டீ போடுங்க!’ சைக்கிளில் அமர்ந்தபடியே காலைத் தரையில் ஊன்றியபடி சொன்னோம். 'தொர, எறங்கி வர மாட்டேளோ?’- விவரம் புரியா மல் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் உள்ள டீக்கடைக்காரர் கோபப்பட்டார்.  'தியாகம்’ பட சிவாஜிபோல பல மணி நேரம் சைக்கிள் ஓட்டிவிட்டு, இருட்டிய பிறகே வீடு திரும்பினோம்.

சென்னைக்கு நான் வந்த பிறகு, 'வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்கள் தனக்குத் துணி எடுக்கும்போது எல்லாம் எனக்கும் எடுத்துத் தருவார். பிரியமாக அவர் எனக்கு வாங்கித் தருகிற ஜிப்பாவை யும் ஜீன்ஸையும் சில வருடங்கள் அணிந்து வந்தேன். அந்தச் சமயத்தில் தாடியும் வளர்த்து இருந்தேன். கூடவே, உதவி இயக்குநர்களுக்காகவே தயாராகும் ஜோல்னா பையும் தோளில் தொங்கும். தோராயமாக, ஓர் அறிவுஜீவிக் களையில் திரிந்த காலம். தோற்றத்தின் சகவாசம் காரணமாக மூளையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு, நான் பேசுவது எனக்கே புரியாமல்போனது. சட்டென்று ஷேவ் பண்ணி, உடை மாறி விட்டேன்.  

இன்றைக்கு நமக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதி காரணமாக, உலகெங்கிலும் உள்ள நாகரிக மாற்றங்களை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்கிறோம். பின்பற்றுகிறேனோ, இல்லையோ, திரைப்படத் துறைக்கு வந்த பின் 'ஃபேஷன்’ உலகைச் சேர்ந்த வல்லுநர்களின் அறிமுகத்தினால், அது குறித்த மாற்றங்களை உடனுக்குடன் அறிந்துகொண்டுதான் இருக்கிறேன். சிறு வயதில் இந்த விஷயத்தில் எங்களுக்கு முன்னோடியாக இருந்த கணேசண்ணன் திருநெல்வேலியில் இப்போது கசங்கிய சட்டையும், அழுக்கு வேட்டியுமாகத் திரிகிறான். ஆனால், குஞ்சு தற்போது அணியும் உடைகள் சென்னையின் மாடல் உலகம்கூட அறியாதது. ஆச்சர்யம் தாங்கா மல் குஞ்சுவிடம் கேட்டேன். 'எப்பிடில திருநவேலில இருந்துக்கிட்டு தினுசு தினுசா டிரெஸ் பண்ணுதெ? முன்னாடியாவது கணேசண்ணன் இருந்தான். இப்போ அவனும் கோட்டிக்காரன் மாரி ஆயிட்டான்?’- லேசான புன்முறுவலுடன் குஞ்சு சொன்னான். 'டிரெஸ் விஷயத்துல இப்பொல்லாம் நம்ம குரு, கௌரவ்தான்’.

கௌரவ்... ப்ளஸ் ஒன் படிக்கும் குஞ்சுவின் மகன்!

- சுவாசிப்போம்...