மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 42

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியம் : மணி, படம் : கே.ராஜசேகரன்

தலைப்புச் செய்தி!

##~##

'ஸ்வாமிநாத -
பரிபாலயமாம்!’

- சவுக்க காலத்தில் பாடப்பெறும் சாஹித்யம் இது; மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றியது.

நாட்டை ராகம்; நல்ல பாட்டு. கேட்கும்போதே, நம் அகக் கண் முன் ஆறிரு கரத்தனாய் ஸ்வாமிமலை ஸ்வாமிநாதன் பிரத்தியட்சமாய் நிற்பான், பிரசன்ன வதனத்தோடு!

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 42

இந்தப் பாட்டைப் பாடித்தான் - இசைஞானி இளையராஜா அவர்கள், என்கூட வரும் ஸ்வாமிநாதனைக் குசலம் விசாரிப்பார்!

ஸ்வாமிநாதன் இல்லாமல் ஸ்டூடியோவிற்கு நான் சென்றது கிடையாது. முப்பத்தைந்து ஆண்டுகளாக, என்னுடைய இயக்கம் அவனைச் சார்ந்துதான்; நீண்ட இரவிலும் என்னை நீங்கா நிழலவன்!

உறவு முறையில் மைத்துனன்; உத்தியோக முறையில் என் முதல் நிலை உதவியாளன்.

ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவைத்து, ஒரு வருடம் கழித்து வாங்கிக்கொள்ளலாம்; அதே நோட்டுகள் அப்படியே இருக்கும். அவ்வளவு கை சுத்தம் DETTOL  போட்டுக் கழுவினாற்போல்!

என் குணத்திற்கு எவனும் என்னோடு எட்டு நாள் சேர்ந்தாற்போல் இருப்பதரிது; 'போய்யா; நீயுமாச்சு, உன் சோறுமாச்சு!’ - என்று நான் வளர்த்த நாய்கூட, வெறுத்துப்போய் வீட்டைவிட்டே ஓடிப்போன கதை எல்லாம் உண்டு.

'வாழ்க்கைப்பட்டுத் தொலைச்சுட்டேன்; வேற போக்கிடம் ஏது? எனக்குத்தான் இப்படி! என் தம்பிக்கென்ன தலையெழுத்தா - உங்க வசவை வாங்கிண்டு இங்க இருக்கணும்னு?’ - என்று என் மனைவியே, தலையிலே அடித்துக்கொண்டு, ஸ்வாமிநாதனுக்காகத் தாபந்திரியப்பட்டதுண்டு!

என்னுடைய கல்யாண குணங்களை எண்ணுமிடத்து, எனக்கே என் மேல் கோபம் வரும்; என் செய்ய? என் வார்ப்படம் அப்படி!

'இன்னது செய்யலாம்; இன்னது செய்யக் கூடாது’ - என்றெல்லாம் ஸ்வாமிநாதன், ஒரு BIG BROTHER ஸ்தானத்திலிருந்து எடுத்துக் கூறுவான்.

அவன் சொல்லைப் புறம் தள்ளுவேன்; அடுத்த அரை மணி நேரம் கழித்து; அவன் சொன்னதுதான் அறம் எனக்கொள்ளுவேன்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 42

ஆனால் - அந்த அரை மணி நேரத்திற்குள் அவனுக்கு நான் நடத்தும், அஷ்டோத்தர அர்ச்சனை இருக்கிறதே -

அதை, மானமுள்ள எவனும் கேட்டுக் கொண்டு ஒரு நொடி என் வயின் நிற்க மாட்டான்; ஸ்வாமிநாதன் நிற்பான்! ஏன் தெரியுமா? அவனுக்குத் தன்மானம்விட, என் மானம் பெரிது!

ஒரு சீனக் கதை நினைவிற்கு வருகிறது.அடிக்கடி கோபம்கொண்டு - தன் மகனை ஒரு தந்தை அடிப்பதுண்டு. தந்தை பால் உள்ள அளப்பரும் அன்பால், வலியைப் பொறுத்துக்கொண்டு மகன் வாளா விருப்பான்.

ஒருநாள், தந்தை வெகுண்டு மகனின் தாடையில் அறைகையில் -

மகன் 'ஓ’ வென்று அழுதான்; தந்தை வியப்பு மேலிட்டு -

'மகனே! நான் எவ்வளவு அடித்தாலும் அழாதவன் நீ; இன்று அழுகிறாயே? மிகவும் வலித்துவிட்டதா?’ என்று வினவினான்.

அதற்கு மகன், தந்தையின் கரங்களை அன்போடு பற்றிக்கொண்டு -

'அப்பா! முன்புபோல் வலிக்கவில்லையே என்றுதான் நான் அழுதேன்; உங்கள் பலம் குறைந்து, நீங்கள் பலவீனமாகிவிட்டீர்களே அப்பா!’ என்று விக்கி விக்கித் தொடர்ந்து அழலானான்.

அந்த மகன்போல், ஸ்வாமிநாதன்; நான் சினந்து சீறுகையில், எங்கே எனக்கு BLOOD PRESSURE ஏறிவிடுமோ என்று வலியை, வசவுகளைப் பொறுத்து நிற்பான்!

'அகலகில்லேன் இறையளவும்’ என்று திருவேங்கடத்தானைத் தழுவி நிற்கும் அலர் மேல் மங்கைத் தாயார் போன்றவன் அவன்!

முதல்வரோடு மேடையில் அமர்ந்துஇருப்பேன்; என் பின் ஸ்வாமிநாதன் நிற்பான். காவல் துறை அதிகாரிகள் அறிவார்கள் -

கலைஞருக்கு ஷண்முகநாதன்போல்; இந்த கவிஞருக்கு ஸ்வாமிநாதன் என்று!

ஸ்டூடியோவில் ஸ்வாமிநாதனைக் கண்டால், 'வாலி சார் வந்திருக்கிறாரா?’ என்று வினவுவர் - கமல், ரஜினி முதலானோர்.

அருளாளர் திரு.ஆரெம்வீ சொல்லுவார்; 'ஸ்வாமிநாதன் மாதிரி ஒரு ஆள் வாய்க்கிறது ரொம்ப அபூர்வம்!’ என்று.

எவரோடும் எளிதாகப் பேசும் இயல்பு உடையவரல்ல திரு.இளையராஜா. எவ்வளவு பெரிய தனவந்தர் வீட்டுத் திருமணமாயினும், அவரது வருகையை ஆராலும் உறுதி செய்ய முடியாது.

அப்படிப்பட்டவர் -

பழைய மாம்பலத்தில் நடந்த ஸ்வாமிநாதன் திருமணத்திற்கு, எனக்கு முன்னதாகச் சென்று பரிசுப் பொருள் வழங்கி ஆசீர்வதித்தார் எனில் -

ஸ்வாமிநாதனின் சற்குணங்களே, அதற்குக் காரணம்; அவனுக்கு வாய்த்த மனைவி திருமதி சீதாவும் ஓர் அருங்குணவதியே!

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 42

ஸ்வாமிநாதனுக்கு ஒரு கண் இல்லை; ஸ்வாமிநாதன் இல்லையெனில், எனக்கும் ஒரு கண் இல்லையென்றாகும்!

'ஸ்வாமிநாத பரிபாலயமாம்’ பாடி - ஸ்வாமிநாதனைக் குசலம் விசாரிக்கும் -

இசைஞானி இளையராஜாவைப்பற்றி இந்த இடத்தில் என் சிந்தனை சிறகடித்து அவரோடு பழக நேர்ந்த ஆரம்ப நாள் களை நோக்கிச் செல்கிறது.

'பிரியா விடை’ என்றொரு படம். முத்துராமன்-பிரமீளா நடித்தது. பிரசாத் ஸ்டூடியோ தயாரித்தது.

அமரர் திரு.G.K.வெங்கடேஷ் அவர் கள்தான் இசை. அங்கு பாட்டெழுதப் போகையில்தான் இளையராஜாவை ஒரு GUITAR PLAYER ஆக COMPOSING - ல் சந்திக்கிறேன்.

பாட்டுக்கான பல்லவியே -

'ராஜா! பாருங்க! ராஜாவைப் பாருங்க!’ என்று எழுதுகிறேன்.

பின்னாளில், தன் இசையால் திசைகளை அளக்கப்போகும் ஒரு நபரை, முன் கூட்டியே முகமன் கூறி நான் வரவேற்பதுபோல் வாய்த்திருந்தது அந்தப் பல்லவி.

அதுதான் நிமித்தம் என்பது!

பின் இளையராஜா வளர்ச்சியும் வாழ்வும் வையம் அறிந்ததே. நான் இப்போது எழுதப் புகுவது யாதெனில் -

இளையராஜாவின் வரலாறு இவ்வுலகிற்கு விடுக்கின்ற செய்தி என்ன என்பதுதான்!

ஓர் உயிர் - விண்ணினின்றும் ஒரு பெண்ணில் இறங்குகின்றது; பின், பெண் ணினின்றும் மண்ணில் இறங்குகின்றது. இறுதியில், மண்ணினின்றும் அது விண்ணில் ஏறுகின்றது.

இந்தச் சுழற்சியில் -

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - எனும் பெரு வழக்குதான், பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் கலவாத பரிசுத்தமான உண்மை.

'வர்ணாஸ்ரம தர்ம’மும்; 'மனுதர்ம’மும் - வந்தவன் போனவன் வகுத்தவையேஅல்லாது, வல்லான் வகுத்தவையல்ல.

இன்னணம் இருக்கையில் -

எவர் எழுச்சியை எவர் தடுக்க ஏலும்? காற்றுடைய கைப் பந்தை, ஆழ நீரில் நெடு நேரம் அமுக்கிவைக்க ஆரால் ஆகும்?

முட்களுக்கிடையே முகை விரிக்கும் ரோஜா மலர்போல் -

முடை நாற்றமெடுத்த மூடத்தனங்களைத் தகர்த்துத் தலையெடுத்துத் தகத்தகாயமாய்த் துலங்க -

ஓர் உயிர் முனையுமாயின், அதன் வெற்றியை அது வடிக்கும் வியர்வைதான் தீர்மானிக்கிறது!

ளையராஜாவை, முப்பத்தைந்தாண்டுகளாக, அருகிருந்து அணு அணுவாகப் பார்த்தவன் நான்.

நான் - சினிமாவில் புகுங்காலை, எப்படி பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் களத்தில் இருந்தார்களோ -

அப்படி இளையராஜா இசையமைக்கப் புகுங்காலை - விஸ்வநாதன் அவர்களும்; கே.வி.மகாதேவன் அவர்களும் - கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.

ஓர் 'அன்னக்கிளி’யால் மட்டும்,

ஆகாயத்தை அளாவி நிற்க முடியுமா என்ன?

இளையராஜா - இரவும் பகலும் தன்னைத்தானே வருத்திக்கொண்டு இசை யின் சகல பரிமாணங்களையும் உள்வாங்கி நிற்கலானார்!

அதிகாலை சேவற் கோழி கூவுமுன் விழித்தார்; சாமக்கோழி கூவியபின் துயின்றார்.

இடைப்பட்ட நேரங்களில் -

சம்ஸ்க்ருதம் கற்றார்; சாஸ்த்ரீய சங்கீதத் தைக் கற்றார்; 'பீத்தோவ’னையும் 'மொஸாட்’ டையும் தன் பியானோவின் மடியில் மீட்டும் பிறப்பெடுக்கச் செய்து -

காலவெள்ளத்தால் -

சற்றே துருப்பிடித்திருந்த அவர்களது தூய இசைக்குத் துலாம்பரமாகச் சாணை பிடித்துக் கூர் ஏற்றினார்.

தேம்ஸ் நதி தீரத்திலே -

வெள்ளை உரோமங்கள் வியப்பில் புளகம் எய்த -

பண்ணைப்புரத்தை பக்கிங் ஹேம் கை குலுக்கி கவுரவிக்க -

SYMPHONY செய்தார்!

ழுபத்திரண்டு மேளகர்த்தாக்களையும்; ஜன்யங்களையும் - கற்று, பலவற்றைப்    

படப் பாடல்களில் -

அவற்றின் ஆரோகண அவரோகண ஸ்வரங்கள் - அதனதன் ஸ்தானங்களில் சௌக்யமாய் எழுந்தருளியிருக்க -

இடம் பெறவைத்து இசைபெற இசைத்து -

சங்கீதப் பிதாமகர் செம்மங்குடியின் விரல்களை அவர் மூக்கின் மேல் அமர்த்திய - இளையராஜாவை முழுமையாய்ப் பாராட்ட, தமிழுக்கு நானெங்கு போவேன்?

'வருஷம் 16’-ல், CLIMAX SONG; 'தோடி’ ராகத்தில் அதைத் தோய்த்தெடுத்த ராஜாவின் வித்தகம் - ராப்பகலாக உழைத்தாலும் பிறிதொருவருக்கு வசப்படுமா?

'ரீதிகௌளை’; 'பிலஹரி’; 'தர்பாரி கானடா’; 'மலய மாருதம்’; 'நளினகாந்தி’; 'நாட்டக்குறிஞ்சி’ - சொல்லிக்கொண்டே போகலாம்!

'தமிழ்’ - என்று எடுத்துக்கொண்டால், எனக்கே வெண்பா இலக்கணம் கற்பித்தவர் இளையராஜாதான்!

திருவரங்கம் கோபுரம் கட்டும் திருப்பணிக்கும்; தாய் மூகாம்பிகைக்கு வைர அபய ஹஸ்தம் அணிவிப்பதற்கும்; திருவண்ணாமலைக் கோயில் கோபுரப் பராமரிப்புக்கும்...

பல லட்சங்களை மனமுவந்து தந்த வண்மைக் குணம், இசைஞானியல்லாது எவர்க்கு வரும்?

அவர் -

கண்மூடித்தனமாய்க் கை கூப்பிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆன்மிகவாதியல்ல.

தன்னுள் தன்னைத் தேடி அந்தத் 'தன்’னிலேயே தன்னைக் கரைத்துக்கொண்ட சித்தர் அவர்!

ஒரு நூற்றாண்டு காலம் அருள்பிலிற்றி நின்ற காஞ்சிப் பெரியவாளால், பெரிதும் போற்றப்பட்டவர் இளையராஜா.

ரமணாஸ்ரமத்தின் உள்ளேயே இளையராஜா தங்கித் தியானிக்க ஒரு குடில் இருக்கிறது.

தீவிர சைவம்; அவரது வீட்டில், மாதத்தில் பல நாள்கள், வேதபாராயணம் நடக்கும். நவராத்திரி ஒன்பது நாள்களும், செந்தழல் வளர்த்தோம்பும் ஓமம் உள்பட -

ஓர் அம்மன் சந்நிதிபோல் சங்கீத வித்வான்களின் 'சதஸ்’ நடக்கும்!

இசைஞானி இளையராஜாவிற்கு இணையாக இன்னோர் அந்தணர் இலர் என்பேன்!

மூகத்தையும், சாதி அமைப்பையும் சாடி நிற்காமல் -

அதை அறவே புறக்கணித்து, மெய் வருந்த முயற்சித்தால், எவரும் மேன்மையுறலாம் என்பதுதான் -

இளையராஜாவின் வரலாறு இவ்வுலகுக்கு வழங்குகின்ற - தலையாய செய்தி! தலைப்புச் செய்தி!

- சுழலும்...