மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 3

தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்

##~##

 வ்வளவு பச்சையாக ஒரு ஜந்துவா? ஆக்டோபஸ் போல உடம்பில் இருந்து அலைபாயும் நீட்சிகள். சின்னதும் பெருசுமாக தும்பிக்கைகள் போன்ற, சற்றே பிழிந்துவிட்ட காண்டாமிருகம் போல இருந்தது. கண், காது, மூக்கு போன்ற அவயங்கள்... தனியாக தலைபோன்ற பாகத்தில் இல்லாமல் இஷ்டப்பட்ட இடத்தில் இருந்தன. ஒருவிதமாக பல்டி அடித்து நகர்ந்தது. போரிஃபெரா வகையா, எலும்பு உள்ளவையா என்பதைச் சட்டெனத் தீர்மானிக்க முடியவில்லை.

அனைவரும் அச்சமும் ஆர்வமுமாக ஜன்னல்களில் முட்டிமோதிப் பார்க்க, ''இப்படியே ஸ்பெக்ட்ரா இமேஜ்ல பார்க்கலாமே?'' என்றது குரல்.

குரல் கேட்டுத் திரும்பிய அனைவரும் அலறினர்; பதறி ஓடினர். வெளியே இருந்த அந்த ஜந்து, நட்டநடுக் கூடத்தில் தன் துதிக்கைகளை வீசிக்கொண்டிருந்தது.

''இது பொய் பிம்பம்'' என்றது குரல்.

பிரமாண்டமான பொய்!

நேரில் இருப்பதுபோல அத்தனை தத்ரூபம். இது ரிப்ளிகா என மனதைத் தேற்றிக்கொள்ள சில நிமிடங்கள் ஆனது. மியூட்டேஷன் கோளாறால் குறைப்பிரசவத்தில் பிறந்த குட்டி யானையா? துதிக்கைகளுக்குத்தான் கணக்கே இல்லை. இஷ்டப்பட்ட இடத்தில் எல்லாம் முளைத்திருந்தன. துதிக்கை முனைகளில் பார்க்க, கேட்க, கடிக்க, நுகர எனப் புலன்கள் இருக்கக்கூடும். சில முனைகளில் ஊசிகளும் சில முனைகளில் நகங்களும் போன்ற வினோதம்.

ஆபரேஷன் நோவா - 3

அகி, பதறி ஓடிவந்து, ''வெளிய ஒரு...'' என்று ஆரம்பித்தவள், ''ஐயய்யோ உள்ளயே வந்துடுச்சா?'' என்று துள்ளினாள்.

''வெளியே இருப்பதுதான் உள்ளே... உள்ளே இருப்பதுதான் வெளியே... எல்லாம் மாயை!'' என்றாள் ஆலிஸ்.

''கவிதாயினியை எல்லாம் எதற்குக் கூட்டிவந்தார்கள் என்று தெரியவில்லை. அகி, இது வெளியே இருப்பதன் பிம்பம். பயப்படாதே'' என்றான் லூசூன்.

''இது என்னது?'' என்றாள்.

''இனிமேதான் பெயர் வெக்கணும்!''

''நான் வெக்கட்டுமா?'' - ஆசை யாகக் கேட்டாள் ஆலிஸ்.

''பெயர் வெக்கறவங்களைத் தான் மொதல்ல சாப்பிடும் பரவால்லயா? குடிக்குமா, உறிஞ்சுமா, பொரியல் பண்ணிச் சாப்பி டுமானு ஒண்ணும் தெரியலை..!''

''யாரும் பயப்பட வேண்டாம். இது ஸ்டார்ச் தயாரிக்கிற விலங்கு. இதன் ஆகாரம் எல்லாம் கொஞ்சம் ஜி.எல். வெளிச்சம். கொஞ்சம் கார்பன் டை ஆக்ஸைடு. நமக்கு ஆக்ஸிஜனும் தரும். இவற்றின் உற்பத்தியைப் பெருக்கினால், நாம் ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. நேச்சர் ஃப்ரெண்ட்லி!''

''அட! வெளிய போய் பார்க்கலாமா?'' என்றாள் அகி.

''வெளியே செல்வதற்குப் பயிற்சிகள் இருக்கின்றன!''

''பயிற்சி?''

''நாம் வந்திருக்கும் 581 ஜி, பூமியைவிட சுமார் ஒண்ணே கால் மடங்கு பெருசு. ஈர்ப்புவிசை கொஞ்சம் அதிகம். வெளிய போனீங்கனா கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இருப்பீங்க. கொஞ்சம் பழகணும். வெளியே ஆக்ஸிஜன் 12 பெர்சென்ட்தான் இருக்கு. மூச்சுத் திணறுவீங்க. அல்ட்ரா வயலட் கதிர்களை வளிமண்டலத்துக்கு முன்னாடியே ஃபில்டர் பண்ற வேலைகள் நடந்துட்டு இருக்கு. அதனால...'' என்றபடி, உருண்டு திரண்டு நட்ட நடுவே புரண்டுகொண்டிருந்த பச்சைய விலங்கை அணைத்துவிட்டு...

''அதனால... நீங்க எல்லாரும் கொஞ்ச நாள் ஸ்பேஸ் சூட் அணியணும்...''

ஆபரேஷன் நோவா - 3

''நீல் ஆம்ஸ்ட்ராங், சுனிதா வில்லியம்ஸ்..?'' என்றாள் அகி. 40 பேரில் பயம் வடிகட்டப்பட்டவள்.

''அதே. ஆனால், இந்த ஸ்பேஸ் சூட் நீங்களாக அணியக் கூடாது; அணிவிக்கப்படும்.''

''தெரியுமே... அதுதானே இங்கே வழக்கம்''

- போட்டிருந்த உடையைக் காட்டினான் அகிலன்.

சிலர் பயம், சோகம், ஏமாற்றம், ஏக்கம் போன்ற சகல எதிர் எண்ணங்களும் ஒன்றாகக் குவிக்கப்பட்டு, மந்தமாக இருந்தனர்.

''பயிற்சி அறைக்குப் போகலாம்'' என்றது குரல், கடமை உணர்ச்சியுடன்.

''குரலே... உன் பெயர் என்ன?'' என்றாள் ஆலிஸ்.

''இன்னைக்கு யாருக்காவது பெயர் வெக்கிறதா பிரார்த்தனையா?'' - கேத்ரின் கிண்டலாகக் கேட்டாள்.

''எனக்கு எண்தான். ஹெக்சா டெசிமல்  111762FA89 ஈகியம் பிட் பிராசஸர்!''

''உவ்வே... அதெல்லாம் வேண்டாம். உனக்கு நான் வைக்கிறேன் சூப்பர் பெயர்... வண்டு. எப்படியிருக்கு?''

''ஆலிஸின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டோம்.''

''வண்டு... நாங்க என்ன பண்ணணும்?''

''பயிற்சி அறைக்குப் போகலாம். டாக்டர் மைக்கேல், டாக்டர் கார்ட்டர்... நீங்கள் இவர்களை வழிநடத்தலாம்.''

''இவனுங்களா?'' என்றான் அகிலன்.

''அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. இங்கு வந்திருக்கும் 60 கேபின்களில் ஒவ்வொன்றிலும் இவர்களைப் போல இரண்டு விஞ்ஞானிகள் உள்ளனர். இஸ்ரோவில் இருந்துகூட இரண்டு பேரை அழைத்து வந்திருக்கிறோம்.''

இஸ்ரோவுக்கெல்லாம் மயங்காமல், ''அழைத்து வரவில்லை; இழுத்து வந்திருக்கிறீர்கள்'' என்றான்.

''மனோகரா வசனமா?'' என்றது வண்டு.

ஆபரேஷன் நோவா - 3

''அட... அந்த அளவுக்குத் தெரியுமா? வசனம் எல்லாம் இல்லை. ஏதோ ஃப்ளோவில் வந்துடுச்சு.''

கார்ட்டரும் மைக்கேலும் அகிலனின் கோபத்தைப் புறக்கணித்து, இருபுறமும் நீண்டிருந்த எலெக்ட்ரானிக் வஸ்துகளைக் கடந்து ஓர் இடத்தில் நின்றனர்.

கார்ட்டர், ''ஆர்.எஸ்.என். 24 க்யூபிக்'' என்றார்.

மந்திரம் போட்டது மாதிரி, அந்த இடத்தில் மேலிருந்து 40 பேருக்குமான பிரமாண்ட ஜாடி போல ஒரு மூடி, எல்லோரையும் கவ்விக்கொள்ள, இதுவரை இல்லாத திடீர் தடுமாற்றம் எல்லோருக்கும். 'கொஞ்சம் வெயிட் போட்டது மாதிரி இருக்கும்’ என்று வண்டு சொன்னது நினைவுக்கு வந்தது.

''வித்தியாசம் புரிகிறதா? இதுதான் 581 ஜி-யின் ஈர்ப்புவிசை. ஓரங்களில், கண்ணாடியில் குழிவாக இருக்கும் இடங்களில் போய் நில்லுங்கள். உங்களுக்கு சூட் அணிவிக்கப்படும்.''

பலரும் போய் ஆளுக்கு ஒன்றில் பதுங்க, ''உங்க எட்டு பேருக்கு என்ன ஆச்சு?'' என்றார் மைக்கேல்.

ஒரு சட்டம் போட்டால் அதை உடனே மீற வேண்டும் என்ற தாகம், அகிலனுக்கு சின்ன வயதில் இருந்தே உண்டு. ஒரு வயசுப் பிராயத்தில் ஜட்டி போட்டதும் அதைக் கழற்றிவிட்டு சுதந்திரமாகச் சுற்றுவதில் ஆரம்பித்த மீறல். ரஃப் நோட் இல்லாமல் ஸ்கூலுக்கு வருவது, ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டுவது, 10 மணிக்கு மேல் ஆபீஸ் போவது எனச் சின்னதாக மீறினால்தான் தூக்கம் வரும். 'இந்தக் கிழவன் என்ன சொல்வது?’ என்ற இயல்பான சுபாவமும், ஏமாற்றி அழைத்துவந்துவிட்ட அவமானமும் அவனை எதிர் அணிக்குத் தலைமை தாங்கவைத்தது. எட்டு பேரும் ஆழ்ந்த மௌனமும் கோபமுமாக நின்றனர்.

யாராவது ஆரம்பித்துவைக்கட்டும் என்று எல்லோரும் காத்து நிற்க, ''எங்களை எல்லாம் என்ன பண்றதா உத்தேசம்?'' எனப் பொங்கிய கேத்ரின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

அகிலன், ''இவனுங்க ரெண்டு பேரையும் போட்டுத்தள்ளினா, எல்லாம் சரியாகிடும்'' என்று அவர்களை நோக்கி முன்னேற, குழிவுகளில் போய் நின்றிருந்த மீதி 30 பேரும் மனசு மாறி, அகிலனின் பின்னால் திரண்டனர். கூடுதலாகச் செயல்பட்டுத்தான் நகரவேண்டியிருந்தது. ஒவ்வொருவரும் தோராயமாக ஒன்றே கால் பங்கு கனத்து இதிருந்தனர். சிறிய புரட்சிக்கான சூழல். கார்ட்டரும் மைக்கேலும் பூமியிலேயே செத்திருக்கலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக டாக்டர்களுக்கும் அகிலனுக்கும் இடையில் சின்ன சுறுசுறு... ஏதோ மின்னோட்டம் பாய்ந்தது மாதிரி இருந்தது. அந்தக் கணத்தில் அங்கே ஒரு திரட்சியான பெண் தோன்றினாள். ரத்தமும் சதையுமாக என்றால், வழக்கமாக இருக்கும். ரத்தம், சதை, எலும்பு எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உடம்போடு ஒட்டிய கறுப்பு டைட்ஸ், விரிந்த கூந்தல். பிரம்மாண்ட வைர மோதிரம் போல இருந்தது அவள் தலையில் வைத்திருந்த கிரீடம். டாக்டர்கள் உள்பட எல்லோரும் பதறித்தான் போனார்கள். ஹாலோகிராம் பிம்பமா? நிஜமா? 25-க்கும் 26-க்கும் இடையில் வயது. ''மற்ற 59 கலங்களிலும் பயிற்சி நடைபெறுகிறது. இங்கு மட்டும்தான் இப்படிப் பிரச்னை.'' - அந்தப் பெண், சற்றே விலகி தனக்கு இடது புறத்தில் நோக்க, அங்கே மற்ற 59 கலங்களில் என்ன நடக்கிறது என்று 59 திரைகளில் தெரிந்தன.

ஆபரேஷன் நோவா - 3

மற்ற கலங்களில் எப்போதோ ஸ்பேஸ் சூட்டுக்கு மாறியிருந்தனர். அடுத்த கட்டமாக இன்ஃப்ரா ரெட் இமேஜிங்... தெர்மல் எலெக்ட்ரோ கன்டக்டிவிட்டி... பயோ பிசிக்ஸ்... இன்டகரேட்டட் நானோ... ஜீனோம் என பல்வேறு ஆய்வுகளில் சிரத்தையாக இருந்தனர்.

அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, ''நான் அம்மா. இந்தக் கிரகத்தின் தலைவி''- கனிவான புன்னகையோடு சொன்னாள். 581 ஜி-யின் மிகச் சிறிய அம்மா. பேச்சை, அத்தனை சுலபத்தில் மீற முடியாது போன்ற மெஸ்மரிஸ மேனரிஸம்.

''சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். இது பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கும் ஜி.எல். என்ற நட்சத்திரத்தைச் சுற்றிவரும் ஒரு கோள். இதன் பெயர் ஜி.எல். 581 ஜி. இங்கே ஒரு நாள் என்பது 30 மணி நேரம். 15 மணி நேரம் இரவு. மீதி நேரம் பகல். நமக்கு இரண்டு நிலவுகள் உள்ளன. இங்கே உயிரினம் வாழ்வதற்கான சூழல் ஓரளவுக்கு இருக்கிறது. மதம் இல்லை, பணம் இல்லை, நாடு இல்லை, ஊழல் இல்லை, எல்லை இல்லை, மொழி இல்லை, நோய் இல்லை, லோன் கட்ட வேண்டியது இல்லை... யாரும் பயப்பட வேண்டாம். அஞ்சி அஞ்சி வாழ்ந்த வாழ்க்கை முடிந்துவிட்டது.  

பூமியை மறந்துவிடுங்கள். அது செத்துப்போய்விட்டது. அங்கு 'டோபா’ என்ற சூப்பர் வல்கனோ இன்னும் சில லட்சம் வருடங்கள் கழித்து வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டெக்டானிக் பிளேட் கால்குலேஷனில் இயற்கை செய்த பிழை. சீக்கிரமே நாள் குறித்துவிட்டது. அதனால் இங்கே தப்பி வந்திருக்கிறோம். எல்லோருக்கும் இந்த உண்மையை விளக்கிச் சொல்லி அழைத்துவருவதற்கு அவகாசம் இல்லை. மற்றபடி 'நடந்தால் நல்லது, நடக்காவிட்டா மிகவும் நல்லது’ எங்கே சொல்லுங்கள்''

40 பேரும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போலச் சொன்னார்கள்.

உதடுகளைத் தொட்டுப் பறக்கவிட்டாள். சுமார் 12 வோல்ட் மின்சாரத்தோடு அபின் கலந்த மாதிரி இருந்தது முத்தம்.

ஸ்விக் என புள்ளியாகி மறைந்துபோனாள் அம்மா!

38 பேரும் மறு பேச்சு இல்லாமல் குழிவுகளில் அடங்க, அனைவருக்கும் ஸ்பேஸ் உடைகள் பூட்டப்பட்டன. அகி, ஆலிஸ் உள்பட எல்லோர் கண்களிலும் அச்சம். அவசரப்பட்டு நகர்வதற்கு ஆசைப்பட்ட சிலர் மிதக்க ஆரம்பித்தனர்.

இந்தக் கிரகத்தில் கடவுள், நியாயம், கலாசாரம் போன்ற மனித ஆதாரங்களுக்கு இடம் இல்லை எனத் தெரிந்தது. ஒரு பெண்ணின் விசும்பல் கேட்டது. அவள் யாரென்று பார்த்து உதவுவதற்கு, மற்றவருக்குத் தெம்பு இல்லை.

''வசமா சிக்கிட்டோம்'' - அனிச்சையாக முனகினான் ஹென்ரிச்.

- ஆபரேஷன் ஆன் தி வே...