மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 10

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 10

பாம்பும் பார்ப்பானும்!

##~##

'அப்பல்லோ’வில், அடியேனுக்கு Angio செய்தவர் -

கே.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் டாக்டர் திரு.கே.சுப்ரமணியன்; மகா கெட்டிக்காரர்.

'மிஸ்டர் வாலி! உங்களுக்கு மூன்று இடங்களுக்கு மேல் பிளாக் இருக்கு; அதைத் தவிர பல வருஷங்களாப் புகையில போட்டதால, Carodit-ல் அடைப்பு இருக்கு! இரண்டுக்குமான சர்ஜரியை ஒரே Anesthesia-வில செய்யலாம். எந்த சர்ஜன் வேணும்?- சொல்லுங்க!’ - கேட்டார் கே.எஸ்.

'டாக்டர் கிரிநாத்’ என்றேன் நான்;

இருபத்தையாயிரம் இதயங்களுக்கு மேல் திறந்து பழுது பார்த்தவர் திரு.கிரிநாத்!

கே.எஸ்; டாக்டர் கிரிநாத்; இவ்விருவரின் கைவண்ணம் - புது இதயம் பெற்றதென் மெய் வண்ணம்.

பின்பலமாக - கலைஞர் இருந்தார், கடவுள் மாதிரி. அது ஊரறிந்த விஷயம்; ஊரறியாத விஷயம் ஒன்று உண்டு!

பைபாஸ் சர்ஜரி  முடிந்து - I.C.U-வில்இருந்து மீண்டு -

என் Suite-ல் படுத்திருந்தேன். Artificial Respiration - க்காக, என் வாய்வழி விடப்பட்ட Ventilator Apparatus,

ஒரு Vocal Cord தனைப் பாதித்துவிட - நான் பேச்சிழந்தேன். முக்கால் மூகம் எனலாம்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 10

முதல்வர் முதல் - பல பிரமுகர்கள் வந்து நலம் விசாரித்தனர். சைகையாலேயே நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அவர் வந்தார். ஒரு மணி நேரம் உடனிருந்து, ஊமைத்தனத்தால் உளமொடிந்திருந்த எனக்கு, ஆறுதல் கூறினார்.

'வாலி! அமெரிக்கால, நானும் பைபாஸ்  பண்ணிக்கிட்டவன்தான். எனக்கும் Vocal Cord பாதிக்கப்பட்டு முழு ஊமையாஆயிட்டேன். என் மனைவி மக்கள் விழி எல்லாம் கண்ணீர்!

மெல்ல மெல்ல எனக்குப் பேச்சு வந்திடுச்சு. அது மாதிரி உங்களுக்கும் வரும். இன்னும் மூணு மாசத்துல நீங்க மேடையேறிப் பேசுவீங்க; என் வாக்குப் பொய்க்காது!’ என்றார் அவர்.

என்ன ஆச்சரியம்! அவர் வாக்குப் பலித்தது; நான் மேடையேறிப் பேசினேன்!

என்னளவில் அவர் வாக்கு தெய்வ வாக்கு; ஆனால், அவர் தெய்வத்தை ஏற்காத தீவிர நாத்திகர்!

1946.

நானும் நடராஜ சுந்தரமும், பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளியில்.

பள்ளியில்தான் ஒரே வகுப்பு; படைப்பில் வேறு வேறு வகுப்பு.

நான் அந்தணன்; நடராஜ சுந்தரம் இசை வேளாளர். இருப்பினும், இருவரும் சாதிகளைத் தகர்த்து, ஒருவருள் ஒருவர் போய் உட்கார்ந் தோம்.

அவன் மழையில் நனைந்தால், எனக்கு ஜலதோஷம் பிடிக்கும்; நான் வெயிலில் அலைந்தால், அவன் மேனி வேர்வை வடிக்கும்.

கிரௌஞ்சப் பட்சிகள்போல் நாங்கள் இணை பிரியாதிருத்தல் கண்டு, எங்கள் ஆங்கில வாத்தியார் ஆராவமுத அய்யங்கார் ஒருநாள் கேட்டார்.

'ஏண்டா! நீங்க ரெண்டு பேரும் காவேரிக்குப் போனாலும், கச்சேரிக்குப் போனாலும் கட்டிப் புடிச்சுண்டே போறேளே - Are You Guys? or Gays?

Gay என்பது ஓரினச் சேர்க்கையாளனைக் குறிக்கும்; நானும் நடராஜ சுந்தரமும் Homo Sexuals என்று-ஆராவமுத அய்யங்கார் அய்யப்பட்டார். ஆனால், அது உண்மையல்ல; அந்த அளவு பரஸ்பரம் ஒருவர் தோளில் ஒருவர் பின்னிப் படர்ந்தோம்!

னக்கு இன்று இருக்கும் நயா பைஸா சங்கீத ஞானம் - நடராஜ சுந்தரம் இட்ட பிச்சை.

அவன் அருமையாகப் பாடுவான்; ரவை ஜாதி சாரீரம். 'பிலஹரி’யை அவன்கிட்டே கேட்கணும்.

'சரஸ்வதிக்கும் வாசஸ்பதிக்கும் உள்ள வித்தியாசம்; காகலி நிஷாதம்; கைசிக நிஷாதம்; தாளத்தில் ரூபகம்; மிஸ்ர சாபு; விரிபோணி வர்ணத்தை, அட தாளத்திலும் பாடலாம்; ஆதியிலும் பாடலாம்!’

- இப்படி என்னுள் இசைப் பயிரை வளர்த்த புண்ணியவான் நடராஜ சுந்தரம். அவன் தாத்தா, பெரியவர் துரைக்கண்ணு மஹாப் பெரிய நாதஸ்வர வித்வான்.

அவர் வாசித்தால் - ஆலத்தூர் சகோதரர்கள்; சாத்தூர் சுப்ரமணியம் முதலானவர்கள் எல்லாம் மணிக்கணக்காக நின்று கேட்பார்கள்!

நடராஜ சுந்தரம், சீவாளியைச் சூப்புவதை விட்டுவிட்டு, நாலாங் கிளாஸிலிருந்து முழு நேரப் படிப்பாளி ஆகிவிட்டான்!

ந்தப் பதினாறு வயதில் - நான் எழுதும் நாடகம், பாட்டு இவற்றைப் பார்த்துவிட்டு, 'வாலி! நீ ஒருநாள் பெரிய ஆளா வருவேடா!’ என்றுஎன்னை அவன் நாளும் போதும் வாழ்த்திக் கொண்டேயிருப்பான்; தாயினும் மேலாய் என்னைத் தாங்கியவன் நடராஜ சுந்தரம்!

ஸ்ரீரங்கம் கழுதை மண்டபத்தில், ஒருநாள் மாலை நானும் அவனும் பேசிக் கொண்டிருக்கையில்

'டேய் வாலி! அசையாதே, அப்படியே இரு!’ என்று மெல்லச் சொல்லிவிட்டு - நடராஜ சுந்தரம் அருகில் இருந்த ஒரு மூங்கில் தடியால், என் பின்னால் ஊர்ந்து வந்த கோதுமை நாகத்தை அடித்துக் கொன்றான்!

பாம்பைக் கொன்றுவிட்டு, 'நல்லவேளை; உன்னைக் காப்பாத்திட்டேன்; உன்னைக் கடிச்சிருந்தா, எனக்கு உசுரே போயிருக்குண்டா!’ என்று என்னை அணைத்துக்கொண்டான்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 10

நான் நன்றியோடு அவன் கைகளைப் பிடித்து முத்தமிட்டுவிட்டு மெல்ல நகைத்தேன்; அதற்குக் காரணம்...

நேற்றுதான் கீழ அடையவளஞ்சான் வீதியில் நடந்த திராவிடர் கழகக் கூட்டத்தில் கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு -

வக்கீல் திருச்சி திரு.வேதாசலம் அவர்கள் தலைமையில், நடராஜ சுந்தரம் பேசினான் -

'பாம்பையும் பாப்பானையும் கண்டால், முதலில் பாப்பானை அடி!’ என்று.

டராஜ சுந்தரம் சொன்னான். 'வாலி! நான் பெரியார் பக்தன்; அவர் சொன்னதை மேடையில் பேசினேன். அது வேறு; உன்னைக் காப்பாத்தினது வேறு. நான் கடவுளை நம்பாதவன். ஆனா, நீ சினிமாவுல பெரிய ஆளா வரணும்னு - நீ நம்புற கடவுள் கிட்ட நான் வேண்டிக்கிறவன்.

நான் நாத்திகன்; நீ ஆத்திகன்! அதனால என்ன? நான் நானாகவும், நீ நீயாகவும் நெடுங்காலமா நண்பர்களா இருப்போம்! இப்பவும் சொல்றேன் -

நீ சினிமாவுல ஒரு பெரிய ஆளா வருவே! என் வாக்குப் பொய்க்காது!’

நடராஜ சுந்தரத்தின் வாக்கு, தெய்வ வாக்காகப் பலித்தது; நான் சினிமாவில் பெரிய கவிஞனாக வளர்ந்துவிட்டேன்.

அதைப் பார்க்க அவன்தான் இல்லை!

நாணயமான ஒரு நாத்திகன், நாணயமற்ற ஓர் ஆத்திகனைவிட -

நூறு மடங்கு மேலானவன் என்பதை நடராஜ சுந்தரத்தின் நட்பில் ஓர்ந்தேன்!

'அப்பல்லோ’வில் என்னைச் சந்தித்து எனக்குப் பேச்சு வரும் என்று சொல்லி, அவர் சொன்ன சொல் பலித்தது என்று ஆரம்பத்தில் சொன்னேனே -

அவரும் ஒரு நாணயமான நாத்திகர்; அவர்தான் திராவிடர் கழகத் தலைவர், மானமிகு திரு.வீரமணி அவர்கள்!

- சுழலும்...

ஒவியம் : மணி, படம்:கே.ராஜசேகரன்