தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்
##~## |
''இங்கு கடவுள் எல்லாம் உண்டா, இல்லையா?'' - நேராக விஷயத்துக்கு வந்தான் வஸிலியேவ். ''எங்கள் நாட்டில் ஏற்கெனவே 60 ஆண்டுகள் கடவுளுக்கு லீவு கொடுத்துப் பழக்கப்பட்டிருக்கிறோம். அப்படி ஏதாவது இருந்தால், முன்னாடியே சொல்லிவிடலாம்.''
''கடவுள் என்ற பெயரில் யாரையும் அழைத்து வரவில்லை. 2,400 பேரில் அப்படி யாரும் இல்லை. நாளை ஒரு ஸ்பேஸ் ஷிப்பில் 100 கேபின்கள் வருகின்றன. அதில் அப்படி யாராவது இருந்தால் சொல்கிறேன்'' என்றது வண்டு.
''ரொம்பத்தான் ஆடுறீங்க... உங்களுக்கெல்லாம் ஒருநாள் இருக்குடி. கடவுள்னா ஏதோ டவுண்லோடு செஞ்ச பைரசி படம் மாதிரி கலாய்க்கிறியா... நிஜமா கடவுள் யார்னு தெரியாதா?'' - அகிலன் கேட்டான்.
''நீங்கள் கேட்பது அம்மாவையா? இங்கு உச்சம் அம்மாதான். ஜி.எல்., கிரீனி, கேலக்ஸி, எல்.ஒய்., எல்லாமே அவருக்கு அடக்கம்'' - வண்டு வாசித்தது.
''இதுதான் நீங்கள் பூமியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வந்த லட்சணமா? யார் அம்மா? அவர் எங்கிருந்து முளைத்தார்?'' - கேத்ரின் ஆரம்பத்தில் இருந்தே கோபமாகத்தான் இருந்தாள்.
''அம்மா என்பவர் வழிகாட்டுபவர். 30 மணி நேரமும் நம்மைப் பற்றியே சிந்திப்பவர். 'முளைத்தார்’ என்றெல்லாம் சொல்லக் கூடாது!''
ஆச்சுபி ஆள்தான் கொஞ்சம் முரட்டுத் தோற்றமே தவிர, புதிதாகப் பள்ளியில் விடப்பட்ட குழந்தை மாதிரி அடக்க மாட்டாமல் அழுதபடி இருந்தான். சரக்கு அடித்துவிட்டு கிரகம்விட்டுக் கிரகம் தாவ வேண்டும்போல இருந்தது அவனுக்கு. முக்கியமாக... பூமிக்கு.

வண்டு உஷார். யாரும் வேறு சிந்தனைக்கு மாறினால் இழுத்துவந்து பழையபடி நிறுத்தியது.
''எதிர்பார்த்ததைவிட சிறப்பாக முடிந்தது பயிற்சி. இந்தக் கிரகத்தில் எங்கும் உங்களை நம்பி அனுப்பலாம். நடப்பதில் தொடங்கி பெர்முட்டேஷன் புரோபாபிலிட்டி அனாலிசிஸ் வரை ஒரே நடையில் புரிந்துகொண்டீர்கள். ஆன்டி கிரா விட்டி புரொப்பல்லர் கையாள்வதில்தான் சிலருக்குக் கொஞ்சம் சிக்கல். தடுமாறுகிறீர்கள்; மிதக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். நாளைக்கும் பயிற்சி வேண்டும் என்பவர்கள் கையைத் தூக்குங்கள்'' என்றது வண்டு.
''மொக்கை'' என்றாள் கேத்ரின்.
அகிலன் பேச வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், ''ஃபிரெஞ்சு மொழியில் மொக்கைக்கு என்ன?'' என்றான் மொக்கையாக.
''மொ... க்... கை...''
அவள் உதட்டுக் குவிப்புகள் வேறு ஏதோ சொல்ல, கேட்பது மட்டும் தமிழில் அப்படிக் கேட்டது.
''எழுதிக் காட்டு.''
அவள் விகல்பம் இல்லாமல் அவன் தொடையின் மீது எழுதினாள். அவள் புள்ளிவைத்த தருணங்களில் தவறுக்குத் தூண்டும் அக்குபிரஷர் புள்ளிகள் உயிர்த்தன.
''நான் தமிழில் எழுதிக் காட்டவா?'' என்றான்.
அவள் ஆர்வம் இல்லாமல், ''பிளிச்'' என்றாள்.
டாக்டர் மைக்கேல், ''இன்னும் 100 கேபின்களா? அதில் என் ரோஸி வருவாளா?'' என்றார் ஆர்வம் பொங்க.
மெல்லிய டேட்டா ஸ்கேனர் ஆய்வுக்குப் பின், ''அந்த 4,000 பேரில் கடவுளும் ரோஸியும் இல்லை'' என உறுதிப்படுத்தியது.
''நன்றாகப் பார். ரோஸி... வயது 28'' சில விநாடிகள் கிரிக்... கிரிக்... என்ற சப்தம். ''அப்படி யாரும் ஜி.எல்.581 ஜி-யில் இல்லை. நிகழ், எதிர் இரண்டிலும் தேடிப் பார்த்துவிட்டேன். பூமியில் மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 245 ரோஸிகள் இருக்கின்றனர். வேறு ஏதாவது தகவல் வேண்டுமா?''
''இல்லை. என் ரோஸி இங்குதான் இருக்கிறாள். அதற்காகத்தான் 20 எல்.ஒய். கடந்து வந்தேன். என் மகள் பூமியிலும் இல்லை. இங்கும் இல்லை. பாவிகளா... அவளை என்ன செய்தீர்கள்?'' வெட்டவெளியை நோக்கி ஆவேசமாகக் கேட்டார்.
அகிலன் அவரருகே சென்று, ''எதற்கு இப்படித் துள்றே? ரோஸி என்ன உன் லவ்ஸ்ஸா? நாங்க எல்லாருமே எங்கள் உறவுகளை விட்டுட்டுத்தான் வந்திருக்கிறோம். இங்கே நீ மட்டும்தான் பாசக்காரன் கிடையாது!'' என்றான்.
மைக்கேல், தன் ஒல்லி விரல்களால் அகிலனைப் பிடித்துத் தள்ள முயன்றார்.
மைக்கேலின் நாசா நண்பர் கார்ட்டர் என்ன நினைத்தாரோ, அகிலனிடம், ''இந்தக் கிரகத்தைத் தேர்வுசெய்து இங்கு வாழ்வதற்கான சகல திட்டங்களையும் வகுத்தது மைக்கேலும் அவளுடைய மகள் ரோஸியும்தான். திடீரென்று ரோஸியை ஒருநாள் நயவஞ்சகமாக அப்புறப்படுத்தி விட்டார்கள். பூமியில் தேடும்போது 'இங்கு இருக்கிறாள்’ என்றனர். இப்போது 'இல்லை’ என்கிறார்கள். எங்களை வைத்து நடந்த முயற்சியில், எங்களையே கழற்றிவிட்டுவிட்டார்கள். இதெல்லாம் உங்களுக்கு இப்போது புரியாது!''

அகிலன், ''என்னடா நினைக்கிறீங்க ரெண்டு பேரும்? நீங்கதான் எல்லாத்துக்கும் மையமா? நாங்க யாருமே முக்கியம் இல்லையா? உங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன். கார்ட்டர், இனிமே நீ ஏதாவது ஏடாகூடமாப் பேசினா மைக்கேலை எடுத்து அடிச்சுடுவேன்'' என்றான். (மைக்கேல் பிரம்பு மாதிரி இருந்ததனால் கிண்டல்.)
எல்லோரும் ஆர்ப்பாட்டமாகச் சிரித்தனர்.
''உங்களுக்குச் சிறிய விளக்கம் தர வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவரும் சொந்த விருப்பம் இல்லாமல் வந்தீர்கள். நான் மட்டும்தான் ஒரு காரியமாக வந்திருக்கிறேன். பூமியில் இருந்திருந்தால் வால்கனோ வெடிப்பதற்குள் நானாகவே இறந்திருப்பேன். அதற்கு முன்னால் எனக்கு இங்கே ஒரு வேலை இருக்கிறது. என் மகளைக் காப்பாற்றியாக வேண்டும். அவள் உதவியால் உங்கள் எல்லோரையும் காப்பாற்ற முடியும். அதைத் தவிர வேறு ஒரு நோக்கமும் இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.''
கிழவன் சொல்வதை நம்பத்தான் வேண்டியிருந்தது. நாசாவில் இருந்து திட்டம் தீட்டிய ஹார்ட்கோர் கிழவன், ஜி.எல்-லில்தான் வந்து சாவேன் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு ஏதோ ரகசிய முடிச்சு இருக்கிறது. எதற்காகவோ கிழவனைக் கழற்றிவிட்டிருக்கிறார்கள். அவர் மகள் ரோஸி யார்? அவள் பின்னணியில் ஏதோ வில்லங்கம் இருப்பதைப் பொறுமையாகக் கேட்டால்தான் புரியும்.
''அகிலனைத் தவிர மற்ற அனைவரும் நான் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.''

எல்லோரும் அகிலனைப் பார்த்தனர். மன்னிப்புக் கேட்கலாமா, கோபப்படலாமா என அவன் முடிவு செய்வதற்குள், மைக்கேல் பேச ஆரம்பித்தார்.
''உலகுக்கு ஆபத்து ஏற்படப்போவது தெரிந்ததும் அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளாக ஆஸ்ட்ரோ பிஸிசிஸ்ட், நானோ சயின்டிஸ்ட், ஜீனோம் ரிஸர்ச் ஸ்காலர், ஜியாலஜிஸ்ட் எல்லோரும் கூடினோம். அதில் நானும் என் மகளும் இருந்தோம். என் மகளுக்கு உலகைக் காப்பதில் மிகுந்த ஆர்வம். அவள்தான் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டாள். உதாரணத்துக்கு, ஜி.எல்-லுக்கு அனுப்பப்படும் மக்களின் ஆயுளைக் கொஞ்ச நாள் அதிகரிக்கச் சொன்னவள் அவள்தான். நிலைமை சரியாகும் வரை தாக்குப்பிடிக்க வேண்டுமல்லவா? சராசரியாக எல்லோரும் 300 ஆண்டுகள் வாழும்படி செய்யச் சொன்னாள். இப்படி நிறையப் புத்திசாலித்தனங்கள்...''
''என்னது 300?!'' - யாரோ அதிர்ந்தார்.
''ஆமாம். உங்க ஜீன் ஏணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. லாங்வேஜ் கன்வெர்ட்டரிலும் தீவிரம் காட்டினாள். இத்தனைக்கும் அவள் ஆஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்தான். ஆனால், புதிய உலகில் என்னென்ன தேவை என்பதில் அத்தனை முயற்சியும் அவளுடையதுதான். இரண்டே வருடங்களில் இங்கு வந்து வாழ்வதற்கான அத்தனை சாத்தியங்களையும் ஏற்படுத்தினாள். ஆனால்...'' அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.

''அவளை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருநாள் மனித மேம்பாட்டுக் குழு கூட்டத்துக்குப் போனவள் திரும்பி வரவே இல்லை. அவள் பூமியில் இல்லை. அவளை இங்கேதான் கடத்தினார்கள். அவளால் அவர்களுக்கு நிறையக் காரியங்கள் ஆகவேண்டி இருக்கின்றன. இந்த ஸ்பேஸ் கேபின்கள், ஸ்பேஸ் ஷிப்கள், இங்கு பூமியின் தாவரங்களை உருவாக்குவது... என எல்லா முயற்சிகளும் அவளிடம் இருந்தன. எதனாலோ அவளை மறைக்கிறார்கள். அவளைத் தேடித்தான் வந்தேன். அவள் இங்கும் இல்லை என்கிறார்கள். ஏன் எனத் தெரியவில்லை!''
''அவளை அவசியம் பார்க்க வேண்டுமா?'' என்றது வண்டு.
''இங்குதான் இருக்கிறாளா?'' - டாக்டர் மைக்கேலின் கண்களில் ஆச்சர்ய பல்ப்.
''கேபின் 52-ல் இருப்பதாகத் தகவல்!''
''நான் உடனே பார்க்க வேண்டும்.''
''ஆணை கிடைத்துவிட்டது. உடனே கிளம்பலாம்.''
டாக்டர் மைக்கேல் ஒரு சில்லாகச் சிதைந்து ஜிவ்வென இழுக்கப்பட்டு ஒரு விநாடியில் மறைந்துபோனார். அனைவரும் உறைந்துபோய் நிற்க, பயத்தில் சற்றே சிறுநீர் உணர்ச்சி ஏற்பட்டு மறைந்தது.
அதே சில்லு பாணியில் அங்கே வேறு ஒருவர் புதிதாகத் தோன்றினார். அதற்கும் ஒரு விநாடிதான். உள்ளே இருந்து எழுந்தவர் நிச்சயமாக டாக்டர் இல்லை; மார்ஃபிங் இல்லை; இவர் புதியவர்.
எழுந்ததும் அங்கிருந்த அனைவரையும் பார்த்தார். குறிப்பாக அகிலனை. பிறகு நிதானமாகத் திரும்பி கேத்ரினை.

'தொடர்ந்து இங்கே பிரச்னை செய்து வருவது நாம்தான்’ என்பதை அவர்களே சுயமாக உணரும்படி இருந்தது அந்தப் பார்வை. விஷயம் அம்மா வரைக்கும் போய்விட்ட அச்சத்தில், டிஃபென்ஸ் மெக்கானிஸமாக பவ்யமாக நின்றனர்.
அந்தச் சிவப்பு, இந்தியாவுக்குத் வடக்கே, மேற்கே இருப்பவர்களுக்கானது. ஒல்லியும் உயரமும் சேர்ந்து அவரை ஓரளவுக்கு வளைத்திருந்தது. பணி ஓய்வு பெற்றவருக்கான வயது.
அகிலன், கேத்ரின் இருவரின் தோளின் மீதும் உரிமையாகக் கையைப் போட்டுக்கொண்டு, ''நான் மைக்கேலுக்குப் பதிலாக இடம் மாற்றப்பட்டிருக்கிறேன். என் பெயர் கேப்ரியல். ஜீனோம் துறை. உங்கள் உதவி கொஞ்சம் வேண்டும்'' என்றார்.
இருவரையும் அவர் நகர்த்திச் செல்கிறாரா? அவர்களாக நகர்ந்தார்களா?
''வெல்... நீங்கள் இருவரும் ஆளுக்கு 23 குரோமசோம்கள் தரவேண்டியது இருக்கும்!''
''எதற்கு?''
''ஒரு குழந்தையைச் செய்யவேண்டியது இருக்கிறது!''
அதே நேரத்தில் பூமியில் ஃபிரெஞ்சு கயானா லைட் வேவ் ஸ்பேஸ் லாஞ்ச் ஸ்டேஷனில் இருந்து 100 கேபின்கள் அடங்கிய பிரமாண்டமான கலம் ஒன்று எல்.டபிள்யூ. மாற்றத்துக்குத் தயாராக இருந்தது. அதில் 4,000 பேர் இருந்தனர். அதன் வெளியே அதிமுக்கியமான விஞ்ஞானிகள் கடைசி நேர ஆட்டோ சர்ச் செக் லிஸ்ட்டிங் பணிகளில் இருக்க, கை பிசைந்துகொண்டிருந்தார் ஆடம்.
''ஒரு லட்சம் மக்களையாவது அனுப்பியாக வேண்டும். மைக்கேல் அங்கு இருப்பது ஆபத்து. அவரை இங்கே திருப்பிவிட முடியுமா?''
''இப்போதைக்குச் சிரமம். பூமிக்குத் திரும்புவதற்கான எல்.டபிள்யூ. சேம்பர் அங்கு உருவாக்கப்படவில்லை. பூமியே இல்லாமல் போகும்போது, அது தேவையா?'' என்றார் ரிச்சர்ட்.
''அடுத்த கலத்தில் சேம்பரை இணைத்து அனுப்புவோம். ரோஸி அதை பலமுறை வலியுறுத்தினாள், தேவைப்படும் என்று. அப்போது உறைக்கவில்லை!''
ரிச்சர்ட், ''இப்போதைக்கு மைக்கேலை அணைத்துவிடலாமா?'' என்றார் தயவுதாட்சண்யம் இல்லாமல்.
ஆடம், சிறிது யோசித்து, ''ஒரு வாரம் பார்க்கலாம்'' என்றார் தாராள மனதுடன்.
- ஆபரேஷன் ஆன் தி வே...