மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 5

தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்

##~##

பூமியில்...

இரண்டு நாட்களாக அகிலனிடம் இருந்து ஒரு போனும் வராத ஏக்கத்தில் வினோதினி பொய்க்கோபம் கொண்டு, 'நீயாகப் பேசுகிற வரை நானும் பேச மாட்டேன்’ என்றுதான் இருந்தாள். ஃபேஸ்புக்கில் மெசேஜ் போடுவதும்கூட தன் காதலின் தன்மானத்துக்கு இழுக்கென நினைத்தாள்.

இரண்டாம் நாள் இரவு, அகிலன் எண்ணுக்கு மிஸ்டு கால் ஒன்றைப் பிரயோகித்தாள். 'அந்த எண் உபயோகத்தில் இல்லை’ என்ற விவரம் அப்போதுதான் அவளுக்குத் தெரியவந்தது. முதலில் கோபமும் அடுத்து குழப்பமும் ஏற்பட்டன. காலை, அகிலனின் அலுவலக எண்ணுக்கு அழைத்து டோஸ் விடத் தயாரானபோது, 'இரண்டு நாட்களாக அகிலன் வரவில்லை’ என்றனர். மிகவும் தயங்கி, அகிலனின் நண்பன் சேகருக்கு போன் போட்டாள்.

அவனும் தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னான். அலுவலகம், நண்பர் வட்டாரம், சொந்த பந்தம்... என எல்லோரும் ஒரு ரவுண்டு தேடி முடித்துவிட்டனர் என்பது தெரிந்தது. அவன் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் அகிலன் இல்லை என்ற விஷயம் சில நிமிடங்களில் பரவி, பயப் பிரவாகத்தைத் தோற்றுவித்தது. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், ஒரு புகார் பதிந்துவைத்தால் நல்லது என்ற முடிவுக்கு வந்தபோது மாலை மணி ஐந்து!

ஆபரேஷன் நோவா - 5

காவல் நிலையத்தில், வினோதினி கண்களில் நீரைத் தேக்கிவைத்துக்கொண்டு நிற்க, அப்போதுதான் அவளைப் பார்த்த அகிலனின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இரண்டாவது அதிர்ச்சி தாக்கியது. மகனைக் காணாத குழப்பத்துக்கு இடையே, வினோதினியை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பதில் சாதி, அந்தஸ்து குழப்பங்கள் இடித்தன.

''நீ எந்த ஊரும்மா?'' என்று பேச்சுக் கொடுத்தார் அகிலனின் அப்பா.

''பொன்னமராவதி... இங்க சாஃப்ட்வேர் கம்பெனில வேலை செய்றேன்.''

''நீ எதுக்குமா இங்க வந்தே? அவன் வந்ததும் பேசச் சொல்றேன். நீ கிளம்பு'' என்றார்.

''இருக்கட்டும்... எதாவது க்ளூ கிடைக்கும்!'' என்று அப்பாவை அதட்டிய இன்ஸ்பெக்டர், ''சனிக்கிழமை அன்னைக்கு அவன்கிட்ட  நீ கடைசியா எத்தனை மணிக்குப் பேசினே?'' என்று வினோதினியைப் பார்த்துத் திரும்பி உட்கார்ந்தார்.

''அஞ்சு மணிக்கு... சத்யம் தியேட்டர்ல படம் பார்க்கப் போறதா சொன்னார்.''

சேகர் குறுக்கிட்டு, ''படத்துக்கு நானும் அவனும்தான் சார் போனோம்'' என்றான். குறுக்கிட்டதற்காக அவனை முறைத்தவர், ''படம் பார்த்துட்டு எங்கே போனீங்க?'' எனக் கடுப்பாக அவனிடம் விசாரணையைத் திருப்பினார்.

''படம் பார்த்துட்டு இருக்கும்போதே அவனைக் காணோம் சார். 'படம் போர்’னு சொல்லிட்டு இருந்தவன், பாதிலயே எஸ்கேப் ஆகிட்டான்னு நினைச்சேன். அப்ப நான் போன் பண்ணப்பவே, 'நாட் ரீச்சபிள்’னுதான் வந்தது!''

ஆபரேஷன் நோவா - 5

''பைக்லதான் போனாரா?''

''ஆமா சார்.''

''ஏதாவது ஆக்சிடென்ட்டானு விசாரிக்கச் சொல்றேன். எதுக்கும் ராயப்பேட்டை ஜி.ஹெச். மார்ச்சுவரில ஒரு தடவை பார்த்துடுங்க...''

''சார்...'' என வினோதினி அலற, ''எதுக்கு சார் இப்படி அபசகுனமாப் பேசறீங்க?'' என்று குரலை உயர்த்தினார் அகிலனின் அம்மா.

இன்ஸ்பெக்டர் அலுத்துக்கொண்டார். போலீஸுக்கு எல்லா சகுனமும் ஒன்றுதான். சத்யம் தியேட்டரில் இருந்து தேனாம்பேட்டை வரும் வழியில் ஒருவன் எப்படித் தொலைந்துபோக முடியும்? அதுவும் இரண்டு நாட்களாக! நியாயமான சந்தேகத்தைக்கூட மக்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பாதாள ரயிலுக்கான பள்ளத்தில் சரிந்துவிட்டானா? பைக் நம்பரை வாங்கி, 'விபத்தில் சிக்கியதாகத் தகவல் உண்டா?’ என ரிஜிஸ்டரில் பார்க்கச் சொன்னார். ''இந்த வாரத்துல எதுவும் இல்லை சார்'' என்ற ரைட்டரின் பதிலில் வருத்தம் தொனித்தது.

''ரிஜிஸ்டர்லயும் இல்லைனா... தனபாலு... சத்யம் தியேட்டருக்கு போன் போட்டு இந்த பைக் அங்க இருக்குதானு கேளு...'' - தனபால், சத்யம் தியேட்டருக்கு முயன்ற வேளையில், வினோதினியோடு சேர்ந்து அகிலனின் அம்மாவும் அழ ஆரம்பித்திருந்தார்.

''பொழுதோட வீட்டுக்கு வாங்கடானா கேட்டாதானே...'' என்று சேகரிடம் அறிவுரையாகப் புலம்பினார் அகிலனின் அப்பா.

''சார், அந்த பைக் அங்கதான் இருக்காம்...'' என்றார் தனபால்.

''தியேட்டர்லயே ஆவி ஆகிட்டானா? பாத்ரூம்ல மட்டையாகிட்டானா?'' என்றார் இன்ஸ்பெக்டர்.

''ட்ரிங்க் பண்ணா, அங்கே உள்ளே அலோ பண்ண மாட்டாங்க சார்'' லாஜிக்காக மறுத்தான் சேகர்.

வீட்டில் ஏதாவது சண்டையா என்ற கோணத்திலும் துருவினார் இன்ஸ்பெக்டர். பல ரவுண்ட் விசாரணைக்குப் பிறகு, 'தகவல் கிடைத்தால் சொல்லி அனுப்புகிறோம்’ என்று அனுப்பிவைத்தார்கள்.

போலீஸ் ஸ்டேஷனைவிட்டு வெளியே வரும்போது, தெருமுக்கில் இருந்த பிள்ளையாரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, 'அவன் வந்ததும் சீக்கிரமே கல்யாணத்தை வெச்சுப்போம்’ என்ற அகிலனின் அம்மாவின் தோளில் பாந்தமாகச் சாய்ந்துகொண்டாள் வினோதினி!

ஜி.எல். 581 ஜி கிரகத்தில்...

அகிலனிடமும் கேத்ரினிடமும் நட்டநடு ஹாலில் 40 பேர் மத்தியில், '23 குரோமோசோம்கள் வேண்டும்’ என்று கேப்ரியல் கேட்டது ரொம்பப் பச்சையாகவும் கொச்சையாகவும் இருந்தது.

''என்ன சொல்றீங்க கேப்ரியல்?''

''இருவரிடமும் இருந்து தலா 23 குரோமோசோம்கள் வேண்டும் என்கிறேன்.''

''அதற்கு?''

''நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் இருவரையும் வைத்து நாங்களே ஒரு குழந்தை செய்துவிடுவோம். கற்பில் ஒரு சேதமும் ஏற்படாது. உங்கள் இருவரின் சட்டையின் கை பகுதியில் ஒரு 'சேர்ப்பி’ பட்டன் இருக்கிறது. இருவரின் சேர்ப்பிகளை ஒரு நிமிடம் இணைத்தால் போதும்.''

இருவரின் வலது கையின் இறுதியில் இருந்த பட்டன் போன்ற பகுதியைக் காட்டினார். இரண்டையும் வெல்கரோ மாதிரி ஒட்ட, கொஞ்ச நேரத்தில் இரண்டு பேரும் உதறியபடி விலகினர்.

''ஜி.எல்-லின் முதல் எக்ஸ்-ஒய் கலவை. பையன் சூல் கொண்டிருக்கிறான். வெரிகுட். புரொடக்டிவிட்டி டெர்மினலை இந்த வெல்கரோ டைப் பட்டனுக்கு மாற்றிப் பார்த்தோம்... நன்றாக வேலை செய்கிறது'' என்றார் கேப்ரியல்.

''எது?'' என்றான் அகிலன் பதற்றம் தெளியாமல்.

''பட்டனைத்தான் சொன்னேன். இவ்வளவு சீக்கிரம் அம்மா உங்கள் மீது கருணை வைத்தார். கிரகத்தில் வேறு யாருக்கும் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை, தெரியுமா?''

கேத்ரின், தனக்கு என்ன நடந்தது என்பதைக் கிரகிக்கக் கொஞ்ச நேரம் ஆனது. அகிலனை நோக்க, அவனும் நோக்கினான். மோதிரம் இல்லை, மாலை இல்லை, மேளம் இல்லை, கையெழுத்து இல்லை, வேதம் இல்லை.

ஆபரேஷன் நோவா - 5

அகிலனுக்கு நினைவின் ஒரு மூலையில், புன்னகைக்கும் வினோதினியின் முகம் மின்னி மறைந்தது. மத்திய கேந்திரத்தில் சேகரிக்கப்பட்டு இருக்கும் எம்ப்ரியோ பாதுகாப்பாக இருப்பதாகவும் இன்னும் ஏழு மாதங்களில் பையனை எதிர்பார்ப்பதாகவும் பெருமையாகச் சொன்னார் கேப்ரியல்.

''என்னது ஏழா?'' என்று அதிர்ந்த கேத்ரின் முகத்தில், தாய்மையின் பதற்றத்தை அகிலன் கவனித்தான்.

''இங்கே ஒரு நாளுக்கு 30 மணி நேரம்... கூட்டிக் கழித்துப் பாருங்கள்... கணக்கு சரியாக இருக்கும்.''

கேத்ரின் தமக்கு நேர்ந்தது அத்துமீறலா, அற்ப விஷயமா என்பது புரியாமல் அகிலனை நெருங்கி நின்றாள். கேப்ரியல் 'சும்மானாச்சும் உளறுகிறான்’ என நிராகரிக்க முடியவில்லை.

மற்றவர் டாக்டர் மைக்கேல் மறைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. பெற்ற பெண்ணைக் காணவில்லை என்று கதறிய தகப்பனை அத்தனை சல்லிசாக அப்புறப்படுத்திவிட்டார்கள். ரோஸியை ஆய்வு அறையில் வைத்து கசமுசா பண்ணி காலி பண்ணிவிட்டார்களா? தட்டிக்கேட்டால் சில்லுச் சில்லாகச் சிதறடிக்கிறார்கள். மைக்கேல் இப்போது வேறு இடத்தில் இருப்பாரா? சும்மா நின்றுகொண்டிருந்த அகிலனைத் தீண்டி, 'சாந்திமுகூர்த்தம் முடிந்துவிட்டது’ என்கிறார்கள். தலைசுற்றியது. கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்கவைத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களாகவே அவரவர் குமிழ் படுக்கையை அணுகினர்.

ன்னலுக்கு வெளிப்பக்கம் இருட்டு சூழ ஆரம்பித்தது. 'இங்கு கணவன், மனைவி சிஸ்டம் வேண்டாம்’ என அம்மா சொல்லிவிட்டதாக வண்டு சொன்னது. வேறு என்ன சிஸ்டம்தான் இருக்கிறதோ? 'காதல் மட்டும் உண்டு எனவும், ஆனால் ஒருவரையே ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்து காதலித்தால், வேறு வேறு கேபினுக்கு பிரித்து அனுப்பிவிடுவார்கள்’ எனவும் அச்சுறுத்தியது. கேபின் மாற்றுவதுதான் இங்கே அதிகபட்சத் தண்டனையா அல்லது அதுதான் ஆரம்பமா?

ஆபரேஷன் நோவா - 5

இந்த லூஸுத்தனமான சட்ட திட்டங்களால் எல்லோருடைய எதிர்க்குரலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கட்டளைகளால் பின்னப்பட்ட வாழ்க்கை. யாரோ சொல்கிறபடி ஒரு 300 வருஷம் வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று மெஜாரிட்டி பேர்வழிகள் முடிவெடுத்துவிட்டனர்.

இந்த லட்சணத்தில் குழந்தை செய்கிறார்கள். ஒருவகையில் பணம், நேரம், வன்மம், ஏக்கம், கற்பு எல்லாமே மிச்சம். உருப்படியாக வேறு வேலைகளைப் பார்க்கலாம். 10 செகண்ட் பரவசம். உலகத்தின் முக்கால்வாசி சண்டைக்கான ஆதாரம் அழிந்தது. உலகமே அழியப்போவதாகச் சொல்லும்போது எது அழிந்தால் என்ன?

ன்று இரவு ஸ்பேஸ் கேபின் மௌனத்தால் நிரம்பி வழிந்தது. ஜன்னலுக்கு வெளியே இரண்டு நிலவுகள் தங்கத்தட்டுகள் போல பிரகாசித்தாலும், ஆலீஸ் உள்பட யாருக்கும் கவிதை எழுதும் மனநிலை இல்லை. மீண்டும் பூமிக்குப் போய் சொந்தமாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் கடைசி மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.

குழப்பங்களை நீடிக்கவிடாமல், குமிழ் ஷெல்ட்டர்களில் படுக்கவைத்து எல்லோருக்கும் 10 மணி நேர உறக்கமும், ஒருநாள் உணவும், ஒரு யூனிட் நம்பிக்கையும் செலுத்தப்பட்டன. கண்ணை மூடிய கணத்தில் எல்லோரும் அந்தரத்தில் வீசப்பட்டதுபோல இருந்தது.

ரவு ஆலீஸ் ஒரு கனவு கண்டாள். சற்று தூரத்தில் பச்சை ஜந்துவான க்ரீனி மந்தையாக மல்லாந்து படுத்துக்கிடந்தது. வெகு சீக்கிரத்திலேயே அவளிடம் அவை பழகிவிட்டன. கேபினைவிட்டு இறங்கினால் அவளைப் பார்த்தாலே ஆசையாகத் துள்ளிக்குதித்து ஓடிவரும். இப்போதும் திடீரென்று அவை எதிர்கொண்டு ஓடிவர, திடுக்கிட்டு விழித்தாள்.

அவளுக்குக் கவிதையும் கணிதமும் பிடிக்கும். மனம் லேசாக இருக்கும் தருணங்களில் கவிதை எழுதுவாள். கனமாக இருந்தால் கணிதம் போடுவாள். அவள் ஒரு கணக்குப் போட்டாள். 20 ஒளி ஆண்டு என்றால் எத்தனை கிலோமீட்டர் என. அது பூமிக்கு செல்வதற்கான கணக்கு. அவளிடம் ஒரு திட்டம் உதித்தது!

- ஆபரேஷன் ஆன் தி வே...