தமிழ்மகன், ஓவியம்: ஸ்யாம்
##~## |
மூன்று மாதங்களில் 40 ஆயிரம் பேர் சேகரிக்கப்பட்டிருந்தனர். அனைவருக்கும் தினந்தோறும் பயிற்சிகள்; அம்மாவின் அறிவுரைகள். புதிய உலகில் பூமியின் சகல வசதிகளோடும் வாழ்வதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்படும் வரை பொறுத்துக்கொள்ளுமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டனர்.
கேபினுக்கு வெளியே பருவகால மாற்றம் தெரிந்தது. மழை பெய்தது; வெயில் அடித்தது. தற்கொலைக்கு முயன்ற 120 பேர் அதிநம்பிக்கை கேபினுக்கு மாற்றப்பட்டு, உற்சாகமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக வண்டு தினசரி தகவல் அறிக்கை வாசித்தது.
மிகச் சிலர் மட்டும் தினமும் மத்திய கேந்திரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசேஷப் பிரிவில் செயல்பட்டனர். ஜி.எல்.581 ஜி-யில் மருத்துவமனைக்கு வேலை இல்லை. சினிமாவும் மதமும் வெளியில் சென்று வாழும் தகுதி வந்த பிறகு அமலுக்கு வரும். மக்களின் சுவாரஸ்யங்கள் கெடக் கூடாது என்பதில் அம்மா கவனமாக இருந்தார். அப்படியும் மக்கள் பொழுதுபோகவில்லை என்றால், அடுத்த ஆண்டில் எலெக்ஷனும் வைக்கலாம் என்றார். மற்றபடி ஹைட்ரோபோடிக் இமேஜிங், ஜி.எல். எனர்ஜி பேனல் போன்ற அத்தியாவசியப் பகுதிகளில் மட்டும் ஆட்களுக்கு வேலை இருந்தது. மற்றவர்கள் அவரவர் கேபின்களில் பயிற்சியில் மட்டும் இருந்தால் போதும்.
கேபின் 24-ல் வஸிலியேவ், ஆலீஸ், கேத்ரின், அகிலன் ஆகியோர் வெர்டிக்கல் அக்ரோ பிரிவில் திசு கல்ச்சர் செய்தனர். தினமும் 10 மணி நேரப் பணி. புறம்பேச வாய்ப்பு இல்லை. அகம்பேசுவது அவரவர் விருப்பம். ஆட்கள் குறைவாக இருக்கும் இடத்தில் ஆலீஸ், தப்பிக்கும் தன் எண்ணத்தைப் பரிமாற விரும்பினாள்.
அக்ரோ பணிக்கு நடுவே, ஆலீஸ் இரண்டு விரல்களில் ஒன்றைத் தொடுமாறு கேத்ரினிடம் சொன்னாள். அந்த இரண்டு விரல்களுக்கான ரகசியத்தைக்கூட கேட்காமல், ஆலீஸின் ஆள்காட்டி விரலைத் தொட்டாள் கேத்ரின். ஆலீஸின் திட்டம் பலிக்கும். சந்தோஷமாகப் புன்னகைத்தாள். கேத்ரின் அப்போதும் என்ன என்று கேட்கவில்லை.

வாயைவிட்டு வந்துவிட்டால், அது வண்டுக்கும் அம்மாவுக்கும் தெரிந்துவிடும். இங்கேயே வாழப் பழக வேண்டும்; அல்லது பூமிக்குச் செல்ல வேண்டும். இதுதான் ஆலீஸின் இரண்டு விரல்கள். ஆள்காட்டி விரல்... பூமிக்குச் செல்ல வேண்டும்!
ஒளியின் வேகத்தை நெருங்கிப் பிரயாணிக்கும்போது காலம் இறந்துவிடும் என்கிறது கணிதம். பூமியில் இருந்து ஜி.எல்-க்கு வரவழைக்கப்பட்டவர்கள் எல்லோரும், அதே வயதில் வந்து சேர்ந்திருப்பதைப் பார்த்தால் காலத்தை ஏமாற்றியிருப்பது தெரிந்தது. 20 ஆண்டுகளைத் தூங்கி எழுந்ததுபோல கடந்திருக்கிறார்கள். இங்கிருந்து போவதற்கும் வழி இருக்கும். கடைசியாக வந்த கலத்தில் ஆன்டி-கிராவிட்டி எல்.டபிள்யூ. சேம்பர் வந்திருப்பதாக வண்டு செய்தி வாசித்ததை எத்தனை பேர் கவனித்தார்களோ!? வழி இருக்கிறது. ஆனால், வழியை அடைய, வழி தேட வேண்டும்.
எதிர்ப்புக்குணம் கொண்டவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். வண்டுக்குத் தெரியாத பாஷை ஒன்று வேண்டும். சங்கேத பாஷை.
ஆலீஸுக்கு ஃபிங்கர் ஸ்பெல்லிங் தெரியும். பேச முடியாதவர்களுக்கான மொழி. பத்து விரல்களால் ஆன மொழி. அது வண்டுக்குத் தெரியவில்லை. ஆனால், மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்கும் சிரமம் இருந்தது. சின்னச் சின்ன இடைவெளிகளில் வஸிலியேவிடம் பேச முயன்றபோது, 'ஒண்ணுமே புரியலை’ என்று சிரித்தான்.
வேறு சங்கேதத்தை முயன்றுபார்த்தாள். ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு வார்த்தை... பத்து வார்த்தைகளை வைத்துக்கொண்டு பேசுவது சிரமம். கம்ப்யூட்டர் கீ போர்டு மாதிரி பத்து விரல்களால் வெறும் மேஜையில் டைப் செய்து காண்பித்தாள். ம்ஹூம்... எல்லாமே சிரமமாக இருந்தது. கேத்ரின் ஒருமுறை 'மொக்கை’ என்று அகிலனின் தொடையில் எழுதிக்காட்டியது நினைவு வந்தது. வஸிலியேவின் தொடையில் 'தப்பிக்க வேண்டும்’ என்று எழுதினாள். 'எப்படி?’ என்று பார்வையால் கேட்டான். நிதானமாக எழுதினாள். 'மத்திய கேந்திரத்தைக் கைப்பற்ற வேண்டும்.’
வஸிலியேவுக்கு திக் என்றது!
மத்திய கேந்திரம். அங்கிருந்த 1,000 கேபின்களின் மூளை. அங்குதான் எல்லா கட்டுப்பாடுகளும் இருந்தன. ஒரு நகரத்தையே வளைத்துக் கட்டியதுபோல மகா மெகா. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் முதற்கொண்டு, அதை யாருக்கு எப்போது நிறுத்த வேண்டும் என்பது வரை அங்குதான் கன்ட்ரோல். தீர்மானிப்பது, அம்மா. பூமியில் மனித உரிமை என்று எதற்கெல்லாம் கொடி பிடிப்பார்களோ, அது அத்தனையையும் மீறுவது இங்கே சுலபமாக இருந்தது.
ஒருநாள் நால்வருக்கும் சிறப்பு அனுமதியாக கேத்ரின் குழந்தையின் வளர்ச்சியைக் காட்டியது வண்டு. செயற்கையான 'தாய் வயிற்றில்’ குழந்தை கதகதப்பாக இருந்தது. 'அந்தரங்கம் எல்லாம் டிரான்ஸ்பரன்ட்டாக மாறிவிட்டது’ வஸிலியேவ் சொல்ல நினைத்து, தவிர்த்துவிட்டான்.
கேத்ரின், சற்றே நெருங்கிச் சென்று பார்த்தாள். யாருடைய ஜாடை? உட்கார்ந்து யோசிப்பது போல இருந்தது. இளஞ்சிவப்பில் மிருதுவாகத் துடித்தது. காற்று, ஆகாரம், உஷ்ணம் எல்லாமே செயற்கை. தாய்மை, குழாய்கள் மூலமாகச் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அறையில் ரோபோ பணிப் பெண்கள் சில(ர்) நடமாடின(ர்). உயிருக்குப் பதிலாக மின் துடிப்பு. மற்றபடி 'அர்’ விகுதியில் இலக்கணப் பிழை இல்லை. மொத்த கேந்திரத்தையும் பராமரிக்கும் பணி அவற்றுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.
''பூமியில் மனிதன்தான் பரிணாமத்தின் உச்சம். இங்கே... மனிதனைச் செய்துவிட்டு மற்ற உயிரினங்களைக் கொண்டுவருவதாக உத்தேசம். மனிதன் இல்லாமல் மற்ற உயிரினங்கள் வாழும். மற்ற உயிரினங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. ஏனென்றால், அம்மா உருவாக்க நினைப்பது, இயற்கையான இன்னொரு பூமி'' என்றது வண்டு.
'இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை’ - இதையும் வஸிலியேவ் சொல்லவில்லை.
அம்மாவின் கருணை ஐந்து நிமிடங்கள்தான். நால்வரும் உடனடியாக அக்ரோ பிரிவுக்குச் செல்ல வேண்டும் என்று வண்டு கட்டளை இட்டது.
ஆலீஸ், நிதானமாக எல்லாவற்றையும் கவனித்தாள். அகிலன், கேத்ரின் போல எதிர்க்குரல் எழுப்பாமல் கிரகித்தாள். பக்கா புரோக்ராம். யார் எத்தனை மணிக்கு உச்சா போனார்கள் என்பது வரை கவனிக்கப்பட்டது. அம்மாவின் அறை, கேந்திரத்தின் உச்சாணி மாடியில் இருந்தது. அதை எப்படி அடைவது என்று தெரியவில்லை. படிக்கட்டு, லிஃப்ட், கன்வேயர் பெல்ட் போன்ற எதுவுமே இல்லை. அவராகத் தோன்றினால்தான் உண்டு.
கீழ் தளத்தில் சென்ட்ரல் யூனிட். மூவரும் அக்ரோ பிரிவுக்குத் திரும்ப, ஆலீஸ் மட்டும் கீழ் தளத்தை ஒரு தரம் போய் பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். போக வேண்டாம் என்று தடுத்த வஸிலியேவின் கையை உதறிவிட்டு கீழே இறங்கினாள்.
மரண அமைதி. யாருமே எப்போதுமே வந்திருக்க வாய்ப்பு இல்லை. மனித வாசனைபடாத இடம். மெல்லிய வெளிச்சம். நீண்ட காரிடார். பூனை நடையாக நடந்தாள். யாராலோ கண்காணிக்கப்படுவோம் என்று தோன்றினாலும், அவள் கவலைப்படவில்லை. ஆனால், பயம் இருந்தது. 'சென்ட்ரல் யூனிட்’ என்று பொரிக்கப்பட்ட கண்ணாடிச் சிறையை நெருங்கினாள். கிரகத்தையே கட்டுப்படுத்தும் மெகா சிஸ்டம். வண்டு, 'அனுமதி இல்லை’ என்றது. மீறிச் சென்றால் என்ன நடக்கும்? வேறு கேபினில் தூக்கிப் போடுவார்கள்... போடட்டுமே என்ற துணிச்சல்!
பல கண்ணாடிப் பிரிவுகள் தெரிந்தன. அம்மா மட்டும் வந்து போவாரோ? கண்ணாடித் தடுப்பைக் கைகளால் அழுத்தித் திறக்க முயற்சி செய்தாள். மீண்டும் 'அனுமதி இல்லை’ என்றது வண்டு. சாவி துவாரம். கைரேகைப் பதிவு, பார்வைப் பதிவு எதற்கான வாய்ப்பும் இல்லை.
'அன்டா கா கஸம்’ என்றாள் வெறுப்பில்.
'ராங் செக்யூரிட்டி கோட்’ என்றது கண்ணாடித் திரை. அட!
'அம்மா’, 'ஜி.எல்.581’, 'ஆபரேஷன் நோவா’ என சொல்லிப் பார்த்தாள். அசையவில்லை. அவசரம் இல்லை... கண்டுபிடிக்கலாம். அக்ரோவுக்குத் திரும்பினாள்.
அங்கு மூவரும் அவள் உயிரோடு திரும்பி வந்த திருப்தியில் ஆசுவாசமாகினர். ஆலீஸ், 'செக்யூரிட்டி கோட் வேண்டும்’ என்று அகிலனின் கையில் எழுதிக் காட்டினாள். மூவரின் மௌனமும் 'கண்டுபிடிப்போம்’ என்றது.
ஹைட்ரோபோனிக் வெர்டிக்கல் அக்ரோ முறையில் வஸிலியேவ் ஒன்றிரண்டு பரீட்சார்த்தங்கள் செய்ய ஆரம்பித்தான். உறக்கத்தில் இருந்த விதைகளைச் சுறுசுறுப்பாக்கும் நுட்பங்களில் அகிலன் முனைப்பாக இருந்தான். இன்னும் ஆறு மாதங்களுக்குள் பசுமைப் புரட்சி நடைபெற்றாக வேண்டிய நெருக்கடி அவர்களின் தலையில் இருந்தது.
'ஒரு நெல்லில் இருந்து 100 நெல்’ என்பதுதான் பல்கலைக்கழகத்தில் கேத்ரின் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கை. அவளுக்கும் சவாலாகத்தான் இருந்தது. அகிலனிடம், ''இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதாக சொன்னாயே?'' கேத்ரின் கேட்டாள்.
''சூடோமோனாஸ் ஃபுளோரஸன்ஸ் மூலம்தான் இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்ய முடியும். பெயரைப் பார்த்துவிட்டு ஏதோ கெமிக்கல் என்று நினைத்துவிட்டாய். உண்மையில், அது ஓர் ஒரு செல் உயிரி. அறிமுக நாளில் கிண்டலுக்காகச் சொன்னேன்'' என்றான்.
''இன்னொன்று கேட்கட்டுமா?''
''கேள் மனைவி... வெல்கரோ இணைப்பா?''
''ச்சீ... உன்னுடைய ட்விட்டர் பாஸ்வேர்டு என்ன? பெண்கள் எல்லாம் காதை மூடிக்கொள்ளுங்கள் சொல்கிறேன் என்று வண்டு சொன்னதே!''
பதிலுக்கு அவனும் 'ச்சீ’ என்றான்.

அகிலன், கேத்ரின்... இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கத்தை ஆலீஸ் கவனித்தாள். கணவன்-மனைவி சொந்தம் கொண்டாடுவதற்கோ, ஒரு வாரம் ஒருவரையே தொடர்ந்து காதலிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டிருப்பதை அவர்கள் அலட்சியம் செய்தனர். ரோஸி... அவளைத் தேடிவந்த மைக்கேல் எல்லாம் என்ன கதி ஆனார்கள்? காதல் அவர்கள் கண்ணை மறைத்தது. ''வண்டு சொன்னது நினைவில்லையா?'' என நினைவுபடுத்தினாள்.
வண்டின் உளவுத் திறனை மழுங்கடிப்பதுதான் இங்கிருந்து தப்பிப்பதற்கான முதல் படி. அதற்குத் தெரியாமல் சில ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தால் போதும். அடுத்த கட்டம், கேபின் 24-ஐ கைப்பற்றுவது. அதன் பிறகு மத்திய கேந்திரம். கடைசியாக, அம்மா. அத்தனை பேரின் விதி அம்மாவின் கையில்தான் இருந்தது.
வந்து சேர்ந்தவர்களும் இனி வரப்போகிறவர்களும் இனி இங்குதான் வாழ வேண்டும். அகிலன்-கேத்ரின் குழந்தையை இன்னும் மூன்று மாதங்களில் எதிர்பார்ப்பதால், அதன் பிறகே இனப்பெருக்கத்துக்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்று அம்மா நேற்று தோன்றியபோதும் சொன்னார்.
என்ன கொடுமை... எவ்வளவு செயற்கை?
ஆலீஸ், கண்ணாடித் திரைக்கு வெளியே பார்த்தாள். ஊசியாக மலைகள். தாவரங்கள் அதிகமில்லாத கூர் தீட்டப்பட்டது போன்ற மலை. கீழே பூமியில் பார்த்திராத சில வினோத மரங்கள். பட்டைகள் இல்லாத அடிமரங்கள், சிவப்பும் நீலமுமான கீற்று இலைகள். மரங்களில் பெரிய பெரிய பூக்கள். வலது ஓரத்தில் கடலா, ஏரியா என கணிக்கமுடியாத பிரமாண்ட நீர்த் திட்டு. நுரை புரளும் கரை. பூமியின் 50 சதவிகித சாயல் இருந்தது.
ஆலீஸுக்கு பூமி மீது கொள்ளை ஆசை ஏற்பட்ட நேரத்தில், கன்னங்கரிய ராட்சஸப் பருந்து ஒன்று திரைக்கு வெளியே சிவிக் எனக் கடந்துபோனதைக் கவனித்தாள். இதெல்லாம்கூட இங்கே இருக்கிறதா என ஆச்சர்யத்தில் மற்றவரையும் அழைக்க, ஐந்தடி நீளத்தில் இருந்தது அது. பருந்தின் கையில் ஓர் உலக்கை இருப்பதாக முதலில் அகிலன் சந்தேகப்பட்டான். இன்னொரு முறை நெருங்கி வந்த அதன் முதுகில் ஏதோ கருவி பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்தான். அது பருந்து அல்ல. அதன் கையில் இருந்தது உலக்கை அல்ல; ஆயுதம்.
''என்னது அது?'' - நான்கு பேருமே கேட்டனர்.
வண்டு, ''என்னுடைய டேட்டாபேஸில் பொருந்தவில்லை. எதிர் உயிரினம். இமேஜ் அம்மாவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது'' என்றது!
- ஆபரேஷன் ஆன் தி வே...