தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா
##~## |
''சாத்தான் ஓதும் வேதத்தில், எது உண்மை... எது பொய் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். உங்கள் அம்மாவின் அக்கறையும் அப்படித்தான் இருக்கிறது''-மைக்கேல், விரக்தியாகச் சொன்னார். கேபின் 52-ல் அவர் தனிமையாக அடைக்கப்பட்டிருந்தார்.
வண்டு, அவரை எவ்வளவோ தேற்றிப் பார்த்தது. அம்மாவின் அடிச்சுவட்டில் செல்வதுதான் இப்போது மனித இனம் தழைப்பதற்கான ஒரே வழி என்பதுதான் அந்த பிரசாரத்தின் மொத்த சாராம்சம். ஆனால், மனித மேம்பாட்டுக் குழுவில் மைக்கேல் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டவர் என்பதால், பேராசிரியர் ஒருவருக்குப் பச்சைக் குழந்தை பாடம் நடத்துவதுபோல இருந்தது அது.
அவர் அநியாயத்துக்கு மெலிந்திருந்தார். எவ்வளவோ உற்சாகமும் உணவும் ஊட்டியும் அவருடைய வருத்தத்தைக் களைய முடியவில்லை. எப்போது கேட்டாலும், 'ரோஸி உயிரோடு இருக்கிறாள்’ என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால், எங்கே? பூமியிலா, இங்கா? இதுவரை 40 ஆயிரம் பேரை அழைத்து வந்திருக்கிறார்கள். அதில் அந்த ஓர் உயிருக்கு இடம் இல்லையா? நம்பிக்கைத் துரோகம்!
சொல்லப்போனால் எந்த உலகமும் அவருக்குப் பிடிக்கவில்லை. ரோஸிதான் அவருடைய உலகம். புத்திசாலி. தந்தையின் மகளாக வளர்ந்தாள். அவளுடைய ஒவ்வொரு மைக்ரோ வளர்ச்சியும் அவருக்கு அத்துப்படி. மகள் காணாமல் போனதுமே அவர் இறந்துவிட்டார். இப்போது இருப்பது வெறும் உடல். 'இரண்டாவது முறை இறப்பதை நான் வெறுக்கிறேன். அது ரொம்ப அலுப்பானது’ என்று தன் குருவான ரிச்சர்ட் ஃபெயின்மேன் சாகும்தறுவாயில் சொன்னது நினைவு வந்தது.

மைக்கேல், கண்ணாடித் திரைகளின் வழியே 581ஜி-யைச் சலனமற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். இது வாழ உகந்ததுதானா என்பதற்கு எத்தனை ஆராய்ச்சிகள், மனிதர்கள் வந்து இருப்பதற்காக எத்தனை முன்னேற்பாடுகள், எத்தனை திட்டங்கள், வழிமுறைகள்... எல்லாவற்றிலும் ரோஸி இருந்தாள். எல்லாம் நடைமுறைக்கு வந்தபோது, அவள் இல்லை!
''அட, அது என்ன?'' கேபினுக்கு வெளியே சில கரிய உருவங்களை அவர் எதேச்சையாகக் கவனித்தார். அகிலனும் கேத்ரினும் பார்த்து அதிர்ந்த அதே உயிரினம். அவர்கள் ஒன்றைத்தான் பார்த்தார்கள்... இங்கே நான்கு இருந்தன. அவை பறந்துகொண்டிருப்பதாகத்தான் முதலில் நினைத்தார். கூர்ந்து பார்த்தபோது, மிதப்பதாகத் தோன்றியது. அவருக்கு, அவை வினோதமாக இருந்தன.
'இந்தக் கோளில் இப்படி ஒரு ஜந்துவா!?’ என்று யோசித்தார். 'ஆபத்தானதா, க்ரீனி போலவா?’ - அவர் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் நான்கும், சிவிக் என வானில் பறந்து அவர் இருந்த கேபினை ஒரு வட்டம் அடித்துவிட்டு தூரம் கடந்து மறைந்தன. அவற்றின் பிடியில் இருந்த கருவி... 'ஓ, அது ஆயுதம்..!’ அதிர்ந்துபோனார். அவை இந்தக் கிரகவாசி அல்ல!
வண்டுவிடம் பதற்றமாக, ''உனக்கு அடையாளம் தெரிகிறதா?'' என்றார்.
''இல்லை. இது எதிர் உயிரி. அம்மாவுக்குத் தகவல் சொல்லிவிட்டேன்'' என்றது.
மைக்கேல் சந்தோஷமாகச் சிரித்துக்கொண்டார். ''உங்கள் அம்மாவுக்கு முடிவு நெருங்கிவிட்டது'' என்றார்.
அந்த எதிர் உயிரி பருந்து போல இருந்தது என்பது மனித மூளை சொல்லும் அவசர அடையாளம்தான். அவை சிவிலைஸ்டு உயிரினங்கள். மனித நாகரிகத்தோடு ஒப்பிடுவது அத்தனை சரியல்ல. நெற்றியடியாகப் புரியவைக்க வேண்டுமானால், அவை ஏசெக்ஸுவல்ஸ். அநாவசிய ஆண்-பெண் பேதம் இல்லை. குடும்பம், தனிச் சொத்து, விவாகரத்து, கள்ளக்காதல் போன்ற எந்த சுவாரஸ்யமும் இல்லாதவை.

உணவு, உறையுள் என்ற இரண்டு அடிப்படைத் தேவைகள் மட்டுமே. உடை, அவற்றுக்குத் தேவைப்படவில்லை. தம் உயிரினம் தழைக்க வேண்டும் என்ற நேரடியான கோட்பாடு மட்டும் அவற்றுக்கு உண்டு. அதை நோக்கிய வறட்சியான விஞ்ஞான வளர்ச்சி. கேலக்ஸி விட்டு கேலக்ஸி மாறும் அளவுக்குத் திறன் அடைந்தவை. மேலும், அவற்றை வர்ணிப்பது அத்தனை எளிதானது அல்ல.
பூமியில், 'கெப்ளர் 78பி’ என்று நாம் பெயரிட்டு வைத்திருக்கிற ஒரு கோளின் பிரஜைகள். 400 ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து அவை வந்திருந்தன. அவற்றின் கவனமெல்லாம் 581 ஜி-யில் இருந்த நைட்ரஜன் மீது. அதுதான் அவற்றின் உயிர். அதாவது அவை புசிப்பது அதைத்தான்.

அவை பேசும் மொழி... எழுத்துகளின் சேர்க்கைகளால் ஆனவை அல்ல. எண்களால் ஆனவை. கவிதை எழுதினாலும் எண்களால்தான். நம் தசம பாணி எண்ணாக இல்லாமல் 16-ன்ம எண்களாக இருந்தன. அவை பேசுவதை தமிழில் கணிபெயர்த்தால்... சத்தியமாக யாருக்கும் புரியாது. உதாரணமாக, நைட்ரஜனுக்கு அவற்றின் மொழியில் பவுசா. கெப்ளர் என்று நாம் குறிப்பிடும் அந்தக் கிரகத்தின் பெயரை, அவை 'சிகுஜு’ என்றன.
நான்கும் வேகமாகத் திட்டமிட்டன. 'இந்தக் கிரகத்தில், ஒன்று நாம் இருக்க வேண்டும்; இல்லை என்றாலும் நாம்தான் இருக்க வேண்டும்’ என்று தீர்மானித்தன. நான்கும் நிற்கவும், மிதக்கவும், பறக்கவும் கூடியவை. படுக்கை, நெடுக்கை, கிடக்கை என எல்லா வசத்திலும் அவை தவழ்ந்தபடி இருந்தன. ''இங்கு நைட்ரஜன் நிறைய இருக்கிறது. எதிரிகளும் நிறைய...'' என்றது அதில் ஒன்று.
''எல்லா எதிரிகளையும் கொன்றுவிடுவோம்'' - இது இன்னொன்று.
அவற்றுக்கு வாய்தான் கேட்கும் பகுதியாகவும் இருந்தது. கேட்கும்போது பேசவோ, பேசும்போது கேட்கவோ அவற்றுக்கு வசதி இல்லை. எதிர் ஈர்ப்பு முறையில் மிதந்தன. பெட்ரோல் செலவு இல்லை. உடலில் இருந்து இயற்கையான எரிவாயு பீறிட்டது. எல்லாவற்றுக்கும் நைட்ரஜன் போதும். மண்ணில் இருந்து எதையும் விளைவித்து உண்ணவேண்டிய அவசியம் இல்லை. மண்ணே உணவு. எல்லாமே டைரக்ட். ரசனை, ருசி, தரம், கலை நயம், இசை, அழகு போன்ற மனித இச்சைகளை அவை கடந்திருந்தன. அதற்கான தேவை இல்லாமலேயே வாழ முடிகிற ஜீவ அமைப்பு. விலங்கு விஞ்ஞானிகள். சயின்டிஸ்ட் சிங்கம் போல.

அவை ஒவ்வொன்றிடமும் ஓர் ஆயுதம் இருந்தது. பாரம் காரணமாக அதைக் கீழே பாதுகாப்பான இடம் தேடி வைத்தன.
''நிறைய எதிரிகள் இருக்கின்றன... நம் ஆயுதங்கள் போதாது!''
''முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொன்றால் போதும். மற்றவர்கள் தானாகவே மடிந்துபோய்விடுவார்கள். இந்த இனம், தலைமையைச் சார்ந்து வாழ்கிற இனம். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை யார் என்று பார்த்து அதைத் தீர்த்துக்கட்டினால் போதும்''- தெளிவாக இருந்தது அவற்றின் திட்டம்.
வினோதினிக்கு ராயப்பேட்டை மருத்துவமனை பிண அறையில் ஒரு பிணத்தைக் காட்டி, ''இதுதான் அகிலன்'' என்று ஆதாரங்கள் காட்டினார் இன்ஸ்பெக்டர். ''குடி போதையில் ஆட்டோ பிடித்து வீடு திரும்பும்போது தண்ணீர் லாரி அடித்துவிட்டது'' என்றார்.
முகம் சுத்தமாகத் தெரியவில்லை. உருக்குலைந்து இருந்தது. சட்டையின் நிறம்கூட தெரியவில்லை. ஒரே அடையாளம் கறுப்பு நிற ஜீன்ஸ் பேன்ட். ரொம்பக் கேள்வி கேட்கவிடாமல் டீகம்போஸான உடலின் குமட்டல் நாற்றம் துரத்த, வெள்ளைத் துணியில் புனல் போல சுருட்டிக் கொடுத்த உடம்பை அப்படியே தகனம் செய்துவிடச் சொல்லிவிட்டனர்.
வினோதினிக்கு வேறு வழி தெரியவில்லை. சந்தைக்கு ஓட்டிச் செல்லும் பசுவின் கன்று போல பின்னாடியே ஓடினாள். கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் அகிலனின் பிணத்தைக் கிடத்தி, கடைசியாக ஒருதரம் அழுதுகொண்டிருந்த எல்லோருடனும் சேர்ந்து அழுதாள். 'ஒரு வாரத்தில் வீட்டில் அனுமதி வாங்கிவிடுவேன். அடுத்தது குலுமணாலி. ரெண்டு பேரும் சேர்ந்து குளிரை ஜெயிக்கணும்’ என்று சொன்னவனை, இப்படி ஐஸ் பெட்டியில் கொண்டுவந்து போட்டுவிட்டார்கள்.
எல்லாம் முடிந்துவிட்டது. அவர்கள் குடும்ப வழக்கப்படி சாஸ்திரத்துக்குக் குளிப்பாட்... இடக்கையில் அந்த டாட்டூ எங்கே?
காணாமல்போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் ஆளுக்கொரு டாட்டூ பதித்தனர். காதல் சின்னம். ஆளுக்கொரு டால்பின். சந்தேகம் வலுத்து அவளே அவளுடைய இடக்கையை முழுக்க ஆராய்ந்தாள். அகிலனின் இடது கையில்..? 'ஐயோ இது அகிலன் இல்லை’ மனதில் சொல்லிப் பார்த்த போதே அதிர்ச்சியாக இருந்தது.
அகிலனின் அம்மாவை அணுகி, ''இது அகிலன் இல்லை'' என்றாள் கிசுகிசுப்பாக.
''என்னம்மா சொல்றே இந்த நேரத்தில?''
''இப்பத்தான் தெரிஞ்சுது... அவர் கையில டால்பின் இருக்கும்.''
''என் பையனுக்கு நான் எப்பவும் பச்சை குத்தலையே... என்னம்மா உளர்றே?'' என்றார் அகிலனின் அப்பா.

''ஐயோ... காணாமபோன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் நானும் அவரும் வரைஞ்சுக்கிட்டோம்... இந்த மாதிரி!''
வினோதினியின் கையைப் பார்த்துவிட்டு... ''விட்டா பொண்டாட்டினு சொல்லிடுவே போலருக்கே... சொத்துல பங்கு கேட்கலாம்னு பார்க்கிறீயா?'' என்றார் யாரோ ஒருவர்.
இவர்களிடம் பேசிப் புண்ணியம் இல்லை. தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு போன் போட்டாள். ரைட்டர்தான் எடுத்தார்.
''ஏதோ அநாதைப் பிணத்தைக் காட்டி ஏமாற்றிய குற்றத்துக்காக உங்க இன்ஸ்பெக்டர் மேல வழக்குப் போடுவேன். அகிலனை என்ன பண்ணீங்கனு தெரிஞ்சாகணும்'' என்று ஆவேசமாகக் கொட்டித் தீர்த்தாள்.
அவள் எதிர்பார்த்தது சரிதான். பந்து மாதிரி வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர்.
வினோதினியிடம் வந்தார். அவர் முகம் இறுகி இருந்தது. ''பெத்தவங்களே ஏத்துக்கிட்டாங்க... உனக்கு என்ன?'' என்றார்.
''அவர் என்னோட லவ்வர்.''
''ஊர் மேயற உன்னைப் போல ஆளுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல... ரொம்ப ரப்சர் பண்ணா உள்ள தள்ளிடுவேன் ஜாக்கிரதை. நீங்க நடக்கவேண்டியதைப் பாருங்க சார்'' என உத்தரவிட்டார்.
வினோதினி கண்களைத் துப்பட்டாவில் துடைத்தபடி மயானத்தைவிட்டு வெளியே வந்தாள். ஆட்டோ பிடித்தாள். அந்த தினசரி அலுவலகத்தின் முன் இறங்கினாள். ஒற்றைச் சிலம்புடன் மதுரை கோட்டையின் முன் இறங்கிய கண்ணகியின் கண்கள் போல அவள் விழிகள் சிவந்திருந்தன!
- ஆபரேஷன் ஆன் தி வே...