அனுபவங்கள் பேசுகின்றன!
##~## |
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
பெட்ரோல் போடப் போறீங்களா... உஷார்!
என்னுடைய பிறந்த நாளன்று, கணவர் எனக்கு 'ஸ்கூட்டி பெப்’பை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்தார். நீண்ட நாள் கனவு நிறைவேறியதால், மனசு முழுக்க சந்தோஷத்துடன், பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்குக்கு ஸ்கூட்டியில் சென்றேன். ''200 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க'’ என்றதும், அங்கிருந்த பெட்ரோல் போடும் இளைஞர் ''மேடம், வண்டி புதுசுங்களா... ரெடி கேஷா... லோனா.. கலர் நல்லாயிருக்கு...'' என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, பதில் சொல்லியவாறே பெட்ரோல் போட்டுக்கொண்டு வந்தேன். இரண்டு நாட்களிலேயே பெட்ரோல் 'ரிசர்வ்' அளவுக்கு வந்துவிட்டது. நடந்தவற்றை கணவரிடம் கூறியபோது, ''பெட்ரோல் போடும்போது மெஷினில் '0’ உள்ளதா என்று பார்த்தபிறகே போட அனுமதிக்க வேண்டும். இல்லைஎன்றால், ஏற்கெனவே ஏதேனும் வண்டிக்கு போட்ட கணக்கிலிருந்து கூட்டி போட்டுவிடுவார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றார் சிரித்துக்கொண்டே.
இப்போதெல்லாம் பெட்ரோல் பங்க் சென்றால்... என் முதல் வேலை, 'ஜீரோ’ செக் செய்வதுதான்!
- சித்ரா சிவகுமார், பரங்கிப்பேட்டை

'மொய் கவர்’ தவிப்பு!
சமீபத்தில் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. திருமணம் முடிந்தவுடனேயே அன்பளிப்பு (மொய்) கொடுக்கும் நேரம் வந்தது. அதுவரை அரட்டை அடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜாலியாக இருந்தவர்களில் சிலர் அன்பளிப்பு கவரை எடுத்து அதனுள் தொகையை வைப்பதும், ஒரு ரூபாய் நாணயத்தை தேடுவதுமாக இருந்தனர். வேறு சிலரோ, 'உன்கிட்டே கிப்ஃட் கவர் இருக்கா?’ என்றுகூட விசாரித்தனர். வீட்டிலிருந்து புறப்படும் முன்பு ஆடை அலங்காரத்துக்கு

ஒதுக்கிய நேரத்தில் 'துளியூண்டு’ நேரத்தை 'கவர்’ ரெடி பண்ண செலவிட்டிருக்கலாமே? புது மண தம்பதிகளுக்கு நாம் இந்த அளவுகூட முக்கியத்துவம் தரக்கூடாதா?
- மீனாட்சி ரகுபதி, சென்னை-78
சினிமா சீரியல் இயக்குநர்களே... இதையும் கவனிங்க!
சென்னையில், இந்த ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தும் விஷயத்தை வைத்துக் கொண்டு, கடந்த சில மாதங்களாக அத்தனை களேபரங்கள் நடந்தன. 'மீட்டர் கட்டணத்துக்கு மேல் வாங்கினால் கடும் நடவடிக்கை' என்கிற எச்சரிக்கைகள் வேறு பறந்தன. ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதாகக்கூட செய்திகள் வருகின்றன. ஆனால், ஆட்டோ ஓட்டுபவர்களில் பலர், இன்னமும் வாயில் வந்த தொகையைத்தான் கேட்டு கெடுபிடி செய்கிறார்கள்.
இதுதான் பல ஆண்டுகளாக நிதர்சனம். இந்த லட்சணத்தில் சினிமாக்கள், சீரியல்கள் பலவற்றில் ஆட்டோவில் பயணிப்பவர்களாக நடிப்பவர்கள்... ஆட்டோவை விட்டு இறங்கியதும், அவசர அவசரமாக பெரிய ரூபாய் நோட்டை நீட்ட, ஆட்டோ ஓட்டுநர் ''பாக்கி...'' எனும்போது, ''நீயே வெச்சுக்க'' என்று கூறுவது போன்ற காட்சிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இதனால், சரியான தொகை கொடுப்பவர்கள், ஆட்டோக்காரர்களுக்கு இளக்காரமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். சினிமா, சீரியல் இயக்குநர்களே... ''மீட்டர் என்ன காட்டுகிறதோ அந்தத் தொகையை மட்டும்தான் கொடுப்பேன்'' என்று சொல்வது போன்ற காட்சிகளை நீங்கள் அமைக்கக் கூடாதா?!
- ஏ.ரங்கநாதன், நெசப்பாக்கம்