மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 5

ஒளியிலே தெரியுது... லாபமே!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்

##~##

 கிறிஸ்துமஸின் ஹைலைட்... மெழுகு தீபங்கள். அந்த மெழுகுவத்தி தயாரிப்பு முறை பற்றி, இங்கே நம் வாசகிகளுக்கு வகுப்பெடுக்கிறார்... சென்னை, அடையாறு 'ஆர்ட் ஜோன்’ நிறுவனத்தின் உரிமையாளர் தஸ்னீம் இல்யாஸ், கடந்த நான்கு வருடங்களாக 'ஆர்ட் அண்ட் கிராஃப்ட்'டில் நிறைய கற்றுக் கொண்டிருப்பதுடன்... மற்றவர்களுக்கும் அதைக் கடத்துகிறார்!

''சொந்த ஊர் திருநெல்வேலி. சின்ன வயசுலயே குடும்பத்தோட அபுதாபியில செட்டில் ஆயிட்டோம். ஒன்பதாம் வகுப்பு வரை அங்கே படிச்சுட்டு, சென்னைக்கு வந்தாச்சு. சின்ன வயசுல தொடங்கின கிராஃப்ட் ஆசை, கல்யாணத்துக்கு அப்புறம் தொழில் செய்யுற அளவுக்கு வடிவெடுத்துடுச்சு. நிறைய கிராஃப்ட் வகுப்புகள்ல கலந்துகிட்டு மெருகேத்திகிட்ட நான், இதையே ஒரு பிசினஸா கையில் எடுத்தேன். என்னோட வெற்றியைப் பார்த்து, பதினோராம் வகுப்புப் படிக்கும் தங்கை ஹசீனாவும் பெயின்ட்டிங், ஆர்ட் வொர்க், டெகரேஷன்னு நம்பிக்கையோட களமிறங்கியிருக்கா. கிராஃப்ட், கிளாஸ்... இதுதான் இப்போ என்னோட முழுநேர வாழ்க்கையா மாறிடுச்சு!'' என்று பூரிக்கும் தஸ்னீம், இந்த நான்கு வருடப் பயணத்தில், மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். மெழுகுவத்தி தயாரிப்பு, ஸ்கிரீன் பெயின்ட்டிங், பேப்பர் கிராஃப்ட், மியூரல் வொர்க், க்வில்லிங் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்லரி, கிரீட்டிங் கார்ட் என பலவற்றையும் தயாரித்து விற்பதுடன், பிறருக்குக் கற்றும் தருகிறார்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 5
கைகொடுக்கும் கிராஃப்ட்! - 5

''எங்கிட்ட கிராஃப்ட் படிச்ச பல பெண்கள், இப்போ தனியா பிசினஸ் பண்றாங்க. இதைவிட சந்தோஷம் வேறென்ன..?!'' என்று சொல்லும் தஸ்னீம், மெழுகுவத்தியிலேயே ஜெல் மெழுகுவத்தி, வோட்டிவ் மெழுகுவத்தி (Votive Candle - கண்ணாடிக் கோப்பைக்குள் மெழுகை சுற்றி செய்யப்படும் முறை), வாட்டர் மெழுகு வத்தி, பலூன் மெழுகுவத்தி என்று பல வகை களில் அசத்துகிறார்.

இங்கே கிறிஸ்துமஸ்ஸுக்காக, தண்ணீரில் மிதக்கவிட்டு எரியும் மெழுகுவத்தி செய்வது எப்படி என்று உங்களுக்குக் கற்றுத்தருகிறார்.

தேவையானவை: பாரஃபின் மெழுகு, ஸ்டவ், பாத்திரம், திரி, வேக்ஸ் கிரையான் (விருப்பமான நிறங்களில்), ஷேப் கட்டர், ஐஸ்கிரீம் குச்சி, பல்குத்தும் குச்சி, சில்வர் பிளேட்.

செய்முறை:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 5

படம் 1: ஸ்டவில் வைத்த பாத்திரம் சிறிது சூடானவுடன், தேவைக்கேற்ற மெழுகை அந்த பாத்திரத்தில் சேர்த்து, ஐஸ்கிரீம் குச்சி கொண்டு நன்கு கலக்கிவிடவும்.

படம் 2: உருகிய மெழுகில் வேக்ஸ் கிரையானை போடவும். நறுமணம் வேண்டும் என்றால், இதனுடன் விருப்பமான நறுமண திரவத்தை சில துளிகள் கலக்கவும்.

படம் 3: படத்தில் உள்ளதுபோல இப்போது மெழுகும், வேக்ஸ் கிரையானும் நன்றாக உருகி எண்ணெய் போல இருக்கும்.

படம் 4: சில்வர் பிளேட்டில் வைத்திருக்கும் ஷேப் கட்டருக்குள், உருகிய மெழுகை ஊற்றவும்.

படம் 5: சிறிது நேரம் கழித்து கட்டரை நீக்கினால், விரும்பிய வடிவத்தில் மெழுகுவத்தி வார்க்கப்பட்டிருக்கும்.

படம் 6: பல் குத்தும் குச்சியைப் பயன்படுத்தி மெழுகின் நடுவில் திரியை நுழைக்க, இப்போது அழகான கிறிஸ்துமஸ் மெழுகுவத்தி தயார். இதனை கற்கள் ஒட்டி அலங்கரித்து, தண்ணீரில் மிதக்கவிடலாம். தீப ஒளியில் அழகாக ஜொலிக்கும்... கூடவே, நறுமணத்தால் வீடு மணக்கும்.

''தண்ணீரில் மிதக்க வேண்டும் என்றால், தட்டையாகவும், அதிக எடை இல்லாததாகவும் தயாரிக்க வேண்டும. இதேபோல் தேவையான வடிவங்களில், நிறம் மற்றும் நறுமணங்களில் பலவிதமான மெழுகுவத்திகளைச் செய்து வீட்டை அலங்கரிக்கலாம்... மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம்'' என்று சொல்லும் தஸ்னீம்,

''கொஞ்சம் மெனக்கெட்டால் குறைந்த முதலீட்டில் நிறைவான லாபத்தை தரும் தொழிலாகவும் இதைக் கையில் எடுக்கலாம்!'' என்று கட்டைவிரல் உயர்த்துகிறார்!

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...