மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 8

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

##~##

லீஸ், மனம் தளரவில்லை. எண்கள், எழுத்துகள் என எல்லாவிதமாகவும் வார்த்தைக் கோப்புகளையும் முயன்று பார்த்தாள். ஜி.எல்.581 ஜி, அம்மா, பூமி, 581123, 123581, 20 எல்.ஒய்... ம்ஹூம். கதவு எதற்கும் அசையவில்லை. ஒவ்வொரு நாளும் மூன்று தவறுகளுக்குப் பிறகு வாய்ப்புகள் மூடப்பட்டுவிடும். மறுநாள் மீண்டும் முயற்சி செய்வாள். நான்காவது நாளில் மற்ற மூவரும் நம்பிக்கை இழந்து, பாஸ்வேர்டு க்ராக் செய்வது அத்தனை சுலபம் இல்லை என்றும், கிடைத்தாலும் என்ன செய்துவிட முடியும் என்றும் பேச ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு நாள் இரவும் ஆலீஸ் மூன்று வார்த்தைகளை யோசித்தாள்.

ஜன்னலுக்கு வெளியே ரம்மியமான இரவு அநாதையாகக் கிடந்தது. வெறும் மரங்கள், மலைகள், காற்று, கடல். கொஞ்சமே கொஞ்சம் விலங்குகள். ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்திருக்கும் என்பதைக் கண்ணாரக் காண முடிந்தது. பேனாவும் பேப்பரும் எவ்வளவு முக்கியம். கண்ணாமூச்சி காட்டும் காலத்தைக் கவிதையாக வடிக்கலாம். பேப்பர் பேனா இல்லை. சென்ட்ரல் யூனிட் கதவைத் திறக்க ஒரு தடவை முயற்சி செய்த வார்த்தையை மறுபடியும் வீணாக்காமல் இருக்க, எழுதி வைத்துக்கொள்ள முடியாமல் தவித்தாள். ப்ரூட் ஃபோர்ஸ் க்ராக்கிங் செய்வதற்கு கம்ப்யூட்டரின் உதவி தேவை. அதற்கு சான்ஸே இல்லை.

ஜி.எல்., அம்மா... என பல தடவை வெவ்வேறு அடைமொழிகளோடு சொல்லிப் பார்த்துவிட்டாள். மறுநாளுக்கான மூன்று புதிய வார்த்தைகள் வேண்டும். கான்ஸ்டலேஷன் லிப்ரா... ஓகே. சொல்லிப் பார்க்கலாம். லிப்ராவின் ஜோடியாக் சைன்... தராசு.. கான்ஸ்டலேஷன் லிப்ரா, தராசு இரண்டும் ஓகே. இன்னும் ஒரு வார்த்தை... நாளைய கோட்டா முடிந்துவிடும். மூன்றாவது வார்த்தை சிக்கவில்லை. க்ரீனி, வண்டு... இதெல்லாம் நாம் வந்த பிறகு சூட்டப்பட்ட பெயர்கள். வேறு... வேறு ஒரே ஒரு வார்த்தை. களைப்பு கண்களைச் சொக்கியது. தூங்கிப்போனாள்.

ஆபரேஷன் நோவா - 8

கேபின் 24-ல் இருந்து சுமார் 4,000 மைல் தூரத்தில் இருந்தது மத்தியக் கேந்திரம். கேபினில் இருந்து அங்கு போக ஒரு விநாடி நேரம்கூட ஆகாது. எல்லாமே ஒளிவேகம். நேரத்தை ஏமாற்றும் ஒளிவித்தை. மத்தியக் கேந்திரம் சென்று மீண்டும் திட நிலையை அடையும்போது அப்படியே மடிப்புக் கலையாமல் - கலோரி குறையாமல் - இறங்கி வேலை பார்க்க முடிந்தது.

அக்ரோ வேலையில் நல்ல முன்னேற்றம். ஒன்றிரண்டு தாவரங்கள் பூக்கத் தொடங்கியிருந்தன. காய்க்கும்... கனியும்... புதிய விதைகள் கிடைக்கும். லெனினை நேரில் பார்த்த மாதிரி சந்தோஷப்பட்டான் வஸீலியேவ்.

அம்மாவுக்கு மூக்கில் வியர்த்திருக்க வேண்டும். நால்வரின் முன் தோன்றினார். தாவரங்களைத் தொட்டுப் பார்த்தார். புன்னகைத்தார். ''வயிற்றுக்குச் சோறிட வேண்டும்... இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்'' என்றார் அகிலனைப் பார்த்து.

''பாரதியார் தெரியுமா?'' என்றான் சந்தோஷம் பொங்க.

தெரியும் என்றது அவருடைய கவர்ச்சியான கண்ணசைப்பு. ''விரைவில் வெளியே மண்ணில் நட்டுப் பரிசோதிக்கலாம்'' என்றார். நால்வரையும் பாராட்டி மின் முத்தம் கொடுத்து மறைந்தார்.

அம்மா ஒரே நேரத்தில் 100 இடங்களில் தோன்றி, 100 பிரச்னைகளை கூலாகக் கையாள்வது பிரமிப்பாகத்தான் இருந்தது.

'அம்மாவுக்குத் தெரியாத விஷயம் இல்லை’ என அகிலன் பாராட்டுப் பத்திரம் வாசித்துக்கொண்டிருந்தான்.

''ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்போறியா?'' என்றாள் கேதரின்.

அம்மாவின் சாதுர்யங்கள் எல்லாம் தந்திரமானவை. தமிழனைச் சந்திக்கும்போது அவனை சென்டிமென்ட்டாகத் தாக்க அவர்களின் ஊர் கவிதையைச் சொல்கிறார். அடுத்து சந்திக்கப்போகிறவருக்கான தயாரிப்புகளைச் செய்துதர அவருக்கு ரோபோக்கள் உதவி செய்கின்றன என்பதில் உறுதியாக இருந்தாள் ஆலீஸ். ''அவர் எல்லாம் தெரிந்தவர் இல்லை; எப்படி ஏமாற்ற வேண்டும் என்று தெரிந்தவர்'' - தீர்மானமாகச் சொல்லிவிட்டு சென்ட்ரல் யூனிட் நோக்கிப் போனாள்.

வண்டு, 'அனுமதி இல்லை’ என்ற பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தது. நீண்ட, வெளிச்சம் குறைந்த, அமானுஷ்ய காரிடார். ஆலீஸுக்கு ஐந்தாவது நாளாக நடந்து நன்றாகப் பழகிவிட்டது.

''கான்ஸ்டலேஷன் லிப்ரா'' என்றாள்.

''ராங் செக்யூரிட்டி கோட்'' என்றது சிந்தசைஸ்டு குரல்.

''தராசு'' என்றாள்.

''ராங் செக்யூரிட்டி கோட்''

ஆபரேஷன் நோவா - 8

மூன்றாவது வார்த்தை... இன்னமும் யோசிக்கவில்லை. மூன்றாவது வாய்ப்பு... வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை.

''இரண்டு நிலவுகள்'' என்றாள்.

பழக்கதோஷத்தில் அக்ரோவுக்குத் திரும்ப எத்தனித்தவள், 'ராங் செக்யூரிட்டி கோட்’ என்ற அலுத்துப்போன பதில் கிடைக்காமல் ஆச்சர்யமாகக் கண்ணாடிக் கதவைத் தொட்டாள். அங்கே கண்ணாடியே இல்லை. கை சாதாரணமாக தடுப்பைக் கடந்தது.

வெற்றி... யுரேகா... மற்ற மூவரையும் நோக்கி ஓடினாள். ''திறந்தது கதவு'' என்றாள் கம்பன் காட்டிய அனுமன் போல.

யாராலும் நம்ப முடியவில்லை. முட்டைக்குள் இருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு மாதிரி விழித்தனர். ஆலீஸைத் தொடர்ந்து மூவரும் சென்டரல் யூனிட்டுக்குள் அடி எடுத்து வைத்தனர். அத்துமீறும் அச்சம். இனம்புரியாத திகில் என்ற வார்த்தைக்கு ஏதோ ஓர் 'இனம்’ புரியத்தான் செய்தது. கோட்டைச் சுவர்களைக் கடந்து நகருக்குள் நுழைவதுபோல அப்படி ஒரு மிரட்சியான பிரமாண்டம். எங்கே போய் எதை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. 100 யானைகளை ஓட்டப்பந்தயம் விடலாம் போல அகலம். இந்த நால்வரும் உள்ளே வந்த அறிகுறியே இல்லாமல் சில ரோபோ பெண்கள் கடமையாற்றினர்.

நடுவே பெரிய கண்ணாடி கனசதுரம். டேபிள் போல இருந்தது. ஆலீஸ் அதைத் தொட்டாள். அவள் யூகித்தது சரிதான். மேசைத் திரை ஒளிர்ந்தது. கேபின் ஒன்று முதல் கேபின் 1000 வரை எண்களாகக் காட்டின.

அகிலன், ''கேபின் 52'' என்று அழுத்தினான். அங்கே இருந்த 40 பேரின் பெயர்கள் ஒளிர்ந்தன.

அகிலன், ''மைக்கேல்'' என்று அழுத்தினான்.

நால்வரும் ஆர்வமாகத் திரையை நோக்கினர். அதில் மைக்கேல் தெரிந்தார், ஏறக்குறைய பிணமாக.

லண்டனில் சர்ச் ஹவுஸ் கான்ஃபெரன்ஸ் சென்டர். மனித மேம்பாட்டுக் குழுவின் அவசரக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. டீன்’ஸ் யார்டு என்ட்ரன்ஸ் படுபாதுகாப்பு ஏற்பாட்டுடன் இருந்தது. தலைக்கு ஒரு டஜன் ஸ்காட்லாந்து போலீஸ் போடப்பட்டிருந்தது. பத்திரிகை, கேமரா ஆசாமிகளை ஒரு கிலோமீட்டருக்கு முன்னரே வடிகட்டினர். ம.மே.கு. கூட்ட முடிவுகள் எப்போதும் ரகசியமானவை. கிளி வயிற்றில் வைக்காத குறை. 100 நாட்டு விஞ்ஞானப் பிரதிநிதிகள் வந்திருந்தனர். காரை விட்டு இறங்கியவுடன், பலான படம் பார்க்க வந்த பெருசுகள் போல குனிந்த தலை நிமிராமல் வேகமாக அரங்குக்குள் சென்றனர்.

அநாவசியமாக ஓர் எழுத்தைக்கூட பேசவில்லை. 40,000 பேரைக் கொண்டு சென்றதில் உலகின் பல நாடுகளில் சின்னச் சின்னத் தலைவலிகள் உருவாகியிருந்தன. போரும் வன்முறையும் பெருக்கெடுத்த நாடுகளில் மனித உயிர்களின் மதிப்பு ரூபாய் நோட்டுக்கு நிகராக இறங்கியிருந்தது. அதனால் அங்கெல்லாம் போரைச் சொல்லிச் சமாளிக்க முடிந்தது. மந்தமாகத் தேடிப் பார்த்துவிட்டு சீக்கிரமே போட்டோவுக்கு மெழுகுவத்தி ஏற்றிவிட்டனர். காணாமல்போனவர்களில் 398 பேர் பெரும் தொல்லை நபர்களாகப் பட்டியலிடப்பட்டார்கள். அவர்களை வம்படியாகத் தேடிக்கொண்டிருப்பவர்களை மட்டும் கொத்தி எடுத்துச் சென்று 581 ஜி-யில் இறக்கிவிட்டுவிடலாம் என ஒரு யோசனையைச் சொன்னார் ஒரு வழுக்கை விஞ்ஞானி. எல்லா விஞ்ஞானிகளுக்கும் அந்த அடையாளம் பொருந்தும்தான். இருந்தாலும் அவர் ரொம்ப அநியாயம். முகத்தில் புருவங்கள் மட்டும்தான் இருந்தன.

ஆபரேஷன் நோவா - 8

ஆனால், பிரச்னைக்குரியவர்களைக் கடத்துவது பிரச்னையின் டெம்பரேச்சரை அதிகரிக்கும் என்று தவிர்த்தனர்.

''மூன்றே மாதங்களில் 40 ஆயிரம் பேர். நமக்கு அது சாதனை. ஆனால், மக்கள் பதற ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு அவசரப்பட்டிருக்கக் கூடாது.'' இதுதான் கூட்டத்தின் முக்கிய விவாதம்.

மக்களைக் காப்பாற்றத்தான் இந்த அவசரம் என்ற விஞ்ஞான அக்கறையை மக்களிடம் விளக்க அவகாசம் இல்லை. விளக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் பதற்றத்தில் உலகமே நிலைகுலையும். மக்களுக்கு நல்லது செய்வது சாதாரண விஷயம் அல்ல.

''எல்லாவற்றையும் சந்தேகப்பட்டுப் பழகிவிட்டார்கள். பொதுவாக தவறான முடிவுகள் எடுக்கிறார்கள். லிங்கன், காந்தி என்று நிறைய உதாரணங்களைப் பார்த்துவிட்டோம்'' என ஒருவர் அலுத்துக்கொண்டார்.

அதுவும் ஆளே காணாமல்போகும் இந்த நல்லதை மக்கள் புரிந்துகொள்வது கஷ்டம்தான்.

''ஒவ்வொரு நாட்டில் இருந்தும் சராசரியாக 500 பேர் காணாமல் போனால், அது அவ்வளவு பெரிய பிரச்னையா?'' இலங்கையில் இருந்து வந்த விஞ்ஞானி கேட்டார்.

'பூமியில் ஒரே ஒருவர்கூட காரணம் இல்லாமல் காணாமல் போகக் கூடாது. ரயில் விபத்து, புயல் என இயற்கை விபத்தும்கூட இப்போதெல்லாம் ஏற்கப்படுவது இல்லை. இது மனித உரிமை விவகாரம். அடுத்த ஆறு மாதங்களுக்கு யாரையும் அனுப்பிவைக்க வேண்டாம்'' எனத் தீர்மானித்தனர். தீவிரமாகத் தேடப்படுவோரை அந்தந்த நாடுகளில் இருக்கும் உடல் சிதைந்த மார்ச்சுவரி பிணங்களைக் காட்டி ஆன வரைக்கும் சமாளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆபரேஷன் நோவா - 8

''ஆனால் மார்ச்சுவரி டெக்னிக் எல்லா நேரங்களிலும் எடுபடாது. இந்தியாவில் ஒரு பெண் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறாள். முதல் செட்டில் அனுப்பப்பட்ட அகிலனின் காதலி. மீடியா, 'காவல் துறையின் காட்டுமிராண்டித்தனம்’ என்று கிழித்துக் காயப்போட்டுக்கொண்டிருக்கின்றன'' என்றார் தலைவர்.

''அவளுடைய பின்னணி?''

''வீட்டுக்கு ஒரே பெண். சாஃப்ட்வேர் இன்ஜினீயர்.''

''பத்திரிகைகளில், 'பெருகும் நரபலி, மனித உறுப்புகள் களவாடும் சர்வதேச மாஃபியா’ என அந்தந்த நாட்டு நிலவரத்துக்கு ஏற்ப விதம்விதமாக யூகிக்கின்றன. பல லட்சம் பேர் இறக்கும் நேரங்களிலேயே மௌனமாக இருக்கும் ஐ.நா. சபை, இதற்கெல்லாம் வாய் திறக்கப் போகிறதா என்று ஆவேசக் கட்டுரைகள் ஒரு பக்கம். சிக்கினால் எலும்பை எண்ணிவிடுவார்கள்'' - அச்சம் தெரிவித்தார் நார்வே விஞ்ஞானி ட்ரூமேன்.

அவருடைய அச்சம் சரிதான். மக்கள் யாரும் ஒட்டுமொத்தக் காணாமல் போனவர்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கவில்லை. தனித்தனியாகப் போராட்டத்தில் இறங்கினர். அல்லது தனித்தனியாக இரங்கினர்.

இத்தகைய உதிரிப் போராட்டங்களைத் திசைதிருப்பிவிடலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு இருந்தது. நம்பிக்கையாகக் கலைந்து சென்றனர்.

பெரும்பாலும் அந்தக் கூட்டத்தின் தீர்மானங்கள் பத்திரிகைகளில் வெளிவராது. வந்தாலும் அப்கன்ட்ரி தினசரிகளின் கவராத மூலைகளில் பணக்காரர்களின் இழப்புகளுக்கு நடுவே சிங்கிள் காலம் துணுக்காக வரும். 'உலக நாடுகளின் முன்னேற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது. முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன’ என ஒப்புக்கு சப்பாணியாக இருக்கும்.

அன்றைய தினம் விஞ்ஞானிகள் எடுத்த முடிவைச் சுருக்கிச் சொல்ல வேண்டுமானால், 'இனி நாட்டுக்கு ஒருவர்... வாரத்துக்கு ஒருவர் வீதம் போதும்’.

இந்த வாரம் இந்தியாவில் இருந்து 'வினோதினி’ என்றும் முடிவு செய்தனர்.

- ஆபரேஷன் ஆன் தி வே...