தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா
##~## |
''டாக்டர் மைக்கேல்... டாக்டர் மைக்கேல்...’ ஒளி ஆண்டுகளைக் கடந்து ஒலித்தது குரல். அவரால் இமைகளை அசைக்க முடியவில்லை. அசைக்க விருப்பம் இல்லை என்பதுதான் சரி. ''சார், நான் அகிலன்... எழுந்திருங்க...'' என்றான் மீண்டும்.
வியப்புடன் திறந்த கண்கள், விரோதமாக மாறின. முதுகில் குத்திய ஆபரேஷன் நோவா விஞ்ஞானிகளைவிட, அகிலன் மீதுதான் அவருக்குக் கோபம் அதிகமாக இருந்தது. ஒவ்வொருதரமும் தவறாகப் புரிந்துகொண்டு சண்டைக்கு வந்த அவசரப் புத்திக்காரன் என்று அவனை நினைத்தார்.
''சார்... நாங்கள் சென்ட்ரல் யூனிட்டில் இருந்து பேசுகிறோம். அம்மாவை மீறி உள்ளே நுழைந்திருக்கிறோம். அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும்?''
நான்கு பேர் முகங்களும் ஹோலோ திரையில் பதற்றமாகத் தெரிந்தன. விரக்தியாகப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டார். ''சார்... நாங்கள் பேசுவது கேட்கிறதா? பூமிக்குத் தப்பிக்க வழிகாட்டுங்கள். உங்கள் ரோஸியைக் கண்டுபிடிப்பது எப்படி? ஏதாவது சொல்லுங்கள்... கேந்திரத்தைக் கைப்பற்ற என்ன செய்ய வேண்டும்?'' - ஆலீஸ் பதறினாள்.
ஆலீஸின் குரல் அவருடைய இரக்கச் சுரப்பிகளைத் தூண்டியிருக்க வேண்டும். மீண்டும் கண்களைத் திறந்தார். ரோஸி வயதுதான் அவளுக்கும்.
''உங்களால் கேந்திரத்தைக் கைப்பற்ற முடியாது ஆலீஸ். வேண்டாம்... வந்துவிடுங்கள்'' என்றார்.
நான்கு பேரும் சட்டென வாடிப்போக, மைக்கேல் அவர்களுக்கு உதவ முடியாமையை நினைத்து, தாடியைத் தடவிக்கொண்டார். ''மத்தியக் கேந்திரத்தில் இப்போது என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற லட்சிய நோக்கம் திசை மாறிவிட்டது. அதற்கு ஆதாரங்கள்... இதோ தனிமைச் சிறையில் இருக்கும் நான். காணாமல்போன என் மகள் ரோஸி'' என்றார்.

''நாங்கள் உயிருக்குப் பயப்படவில்லை. திசை மாற்றியவர் யார் என்று இரண்டில் ஒன்று பார்த்துவிடத் தயாராக இருக்கிறோம்'' - கேத்ரினுக்கு எங்கிருந்து அவ்வளவு துணிச்சல் வந்ததோ?
மைக்கேல் சிரித்தார். ''உயிர்!? ஹா... ஹா'' என்றார். ''உயிரைப் பணயம் வைக்கும் உரிமை நமக்கு இருப்பதாக நினைக்கிறாயா கேத்ரின்? நம் உயிர் இப்போது நமக்குச் சொந்தமானது இல்லை.''
''அப்படியானால் எதற்குமே பயப்பட வேண்டியது இல்லை'' என்றான் அகிலன்.
''நீ அவசரக்காரன். ஆலீஸ், நான் சொல்வதைக் கேள். பூமியில் இருப்பவர்களோடு தொடர்புகொள்வதற்கு காமா டிரான்ஸ்மீட்டர் இருக்கிறது. அதை அடைவது அத்தனை எளிதல்ல. ஹெக்ஸா டிஜிட் கோட் வேண்டும். ஆல்ஃபா நியூமரிக்கல் கோட் அது. எண்ணும் எழுத்தும் கலந்து உருவாக்கப்பட்டது. 16 டிஜிட் எண்ணெழுத்து என்றால் எத்தனை லட்சம் பெர்முடேஷன் காம்பினேஷன்? பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரை பத்து எண்களையும் ஆங்கிலத்தின் 26 எழுத்துகளையும் வைத்து உருவாக்கும் 16 ஸ்தான எண். சான்ஸே இல்லை. உங்கள் முன்னூறு வருட ஆயுளையும் செலவிட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. 'இரண்டு நிலவுகள்’ போல அத்தனை சுலபம் இல்லை அது. அங்கே போனால்தான் பூமிக்குத் தொடர்புகொள்ள முடியுமா என்பது தெரியும். அங்கே நியாயவான் யாராவது மிச்சம் இருந்தால், நம்முடைய நிலைமையைச் சொல்ல முடியும். தப்பிக்கும் வழியை அவர்கள் சொன்னால்... அதை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்தால்... ப்ச்... எத்தனை 'ஆல்’?''
''ஒரு பெர்முடேஷன் காம்பினேஷன் ரன் செய்து பார்க்க ஒரு கம்ப்யூட்டர் இருந்தால்..?'' அகிலன் கேட்டான்.
டாக்டரின் புருவம் நெருங்கி நின்றன.
''கரெக்ட். கம்ப்யூட்டர் இங்கே இருக்கிறது. நான் இங்கே நிகழ்தகவு ரன் செய்கிறேன். உங்களில் யாராவது ஒருவர்... உங்கள் முழங்கைகளில் ஒரு சென்சர் இருக்கும். ஆலீஸ்... நீதான் சரி. உன் முழங்கையைக் கண்ணாடித் திரையின் முன்பு காட்டினால் போதும். ஓடுங்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரம் முன்னேறுங்கள். இடது புறத்தில்...'' - டாக்டர் விவரிக்கும்போதே, ''டாக்டர் அதையெல்லாம் சொல்லக் கூடாது'' என்றது வண்டு. ''எனக்குத் தெரியும் புத்திசாலி முட்டாளே... இடது புறத்தில் வட்ட வடிவில் ஒரு பாதரசக் கண்ணாடி இருக்கும். அதன் மையத்தில் இருக்கும் சென்சரிடம் முழங்கையைக் காட்டு. நீ அங்கே கையை வைத்ததும் நான் ரன் செய்வேன். எண் மேட்ச் ஆனதும் கதவு திறக்கும். உள்ளே செல்... முதலில் ஓடுங்கள்.''

வட்ட பாதரசத் திரை தெரிந்தது. அதன் மையம்... ம்ம்ம் மையம்... ஓகே. ''ஆலீஸ் முழங்கையை அருகே கொண்டுசெல்'' - அகிலன் அவசரப்படுத்தினான்.
சென்சர் மானிட்டரில் எண்ணும் எழுத்துமாக ஓட ஆரம்பித்தன. ''கமான்... கமான்... மேட்ச் ஆனால் கதவு திறந்துவிடும்'' -அகிலன் அவசரப்படுத்தினான். 20 நிமிடங்களுக்குத் தலை கிறுகிறுக்கும் அளவுக்கு எண்ணெழுத்துகள் ஓடின. நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மானிட்டரைப் பார்த்தபடி
சராசரியாக இரண்டு நிமிஷத்துக்கு ஒரு முறை மூச்சு விட்டனர். கால்குலேட்டரில் இருக்கும் டிஸ்ப்ளே அளவே இருந்தது அந்த சென்சர் மானிட்டர். அந்தப் பதினாறு டிஜிட்... தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் எழுத்து... எண்ணெழுத்து. டக். பக்... பக்... லப்... டப்!
சொர்க்கத்துக்கு வழிவிட்டது போல கதவு மறைந்தது. நால்வரும் காலடி எடுத்துவைக்கும் முன் அதிர்ந்து நின்றனர். உள்ளே இருந்து அம்மா அவர்களை புன்முறுவலுடன் வரவேற்றார்.
''நீங்களும் உள்ளே போகணுமா?'' என்றார் இரட்டுற மொழிதலாக.
ஃபேஸ்புக், ட்விட்டர், சேஞ்ச் டாட் ஆர்க், சேனல்கள், துப்புத் துலக்கும் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் வினோதினி ஒரு கலக்கு கலக்கியிருந்தாள். 'அன்று சத்யவான் - சாவித்திரி... இன்று அகிலன் - வினோதினி’ என்று வாரப் பத்திரிகை ஒன்று அட்டைப்படம் போட்டு பேட்டி வெளியிட்டது. இன்ஸ்பெக்டரைக் கொலைகாரன் என்றே முடிவுகட்டி, ஒளிய இடம் கொடுக்காமல் விரட்டின மீடியா.
காலையில் அலுவலகம் வரும்போதே, வினோதினியைப் பார்க்க மஃப்டியில் காத்திருந்தார் இன்ஸ்பெக்டர். வினோதினியின் காலில் விழாத குறை. டி.ஜி.பி-யைக் கண்டதுபோல பதறி எழுந்தார். அவர் சொன்ன ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருந்தது.
''எனக்கு எதுவும் தெரியாது. மேலிடத்தில் இருந்து தகவல் வந்தது... அகிலன் காணாமல்போனதைக் கிளறவேண்டாம் என்று.''
ரகசியத்தைச் சொல்ல ஆபீஸ் வரை வந்தவரைப் பார்த்து அவளுக்குப் பாவமாகத்தான் இருந்தது. அவரிடம் நானோ அளவில் நடுக்கம் தெரிந்தது.
''மேலிடம் என்றால்?''
''மத்திய உளவுத்துறை லெவலில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ரகசிய ஆணை. யார், எதற்காக ஆணை பிறப்பித்தார்கள் என்று தெரியவில்லை. இதைத் தெரிந்துகொண்டதே என் உயிருக்கு ஆபத்தாகலாம். இந்தியா முழுக்க என்னைப் பந்தாடுவதால், உயிரைப் பணயம்வைத்துக் கண்டுபிடித்த தகவல் இது. அகிலனுக்கு ஏற்பட்ட நிலை நாளை எனக்கோ, உங்களுக்கோ ஏற்படலாம்'' என்றார்.
வினோதினிக்கு இப்போதுதான் அச்சம் ஏற்பட்டது.
''எங்கேயும் தனியாகப் போகாதே'' என்றார் போகும்போது.
''அகிலனைக் கொன்றுவிட்டார்களா?''
''மறைத்து வைத்திருக்கிறார்களா? கொன்றுவிட்டார்களா? எதற்காக? யார்? - அதெல்லாம் எனக்குத் தெரியாது. அதைக் கண்டுபிடிக்கக் கூடாது என்பதும் எங்களுக்கு ஆணை!''
'

'யார் ஆணையிடுகிறார்கள்?''
''அதுதான் தெரியவில்லை என்கிறேனே! உள்துறையிடம் இருந்து உளவுத்துறைக்கு ஆணை. பி.எம்.ஓ., சி.பி.சி.ஐ.டி. ஆசீர்வாதத்தோடு நடக்கிறது. நம் தகுதிக்கு அப்பாற்பட்டது.''
வினோதினி, சற்றே யோசனையில் இருந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் வேகமாக விடைபெற்றார்.
அகிலனைக் கடத்துவதற்கு மேலிடத்தில் இருந்து ஆணை வருகிறது என்றால்... அவ்வளவு பெரிய ஆளா அகிலன்? இன்ஸ்பெக்டர் தப்பிப்பதற்காக அளக்கிறாரா?
ஹாஸ்டலில் ஒவ்வோர் அறையிலும் நான்கு படுக்கைகள். தனியாக இருக்கப்போவது இல்லை. அலுவலகத்தில், தெருவில், பேருந்தில்... ஜாக்கிரதையாகப் பயணித்தாள். கூட்டம் இருக்கும் இடங்களில்... அதுவும் தோழிகளின் துணையோடுதான் நடந்தாள்.
இரண்டாவது நாளில் தேவை இல்லாமல் பயப்படுகிறோமா என சந்தேகமாக இருந்தது.
ஹாஸ்டலுக்குப் போகிற வழியில் ரங்கநாதன் தெருவில் ஒரே ஒரு சுடிதார் வாங்கிக்கொண்டு திரும்பிவிடலாம் என்று திட்டம். சுமியுடன்தான் சென்றாள். இரண்டாவது மாடியில் சுடிதார் செக்ஷன். போன வேகத்தில் ஒரு சுடிதாரை எடுத்தாள். பில் போடத் திரும்பினாள். ''டிரையல் ரூம் அங்க இருக்கு'' என்றார் சஃபாரி போட்ட ஒருவர். கடைச் சிப்பந்தியாக இருக்கலாம்.
''எவ்வளவு நேரம் ஆகப்போகிறது போட்டுத்தான் பாரேன்'' என்றாள் சுமி.
ட்ரையல் ரூமுக்குள் நுழையும் போது, ''நானும் கூட வரணுமா?'' என்றாள் சுமி கிண்டலாக.
வினோதினி வருகிற வரை என்ன செய்வது என்று தெரியாமல், ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த சுடிதார்களை ஜோதிடக் கிளி சீட்டுகளை நிராகரிப்பதுபோல தள்ளிவிட்டுக்கொண்டே வந்தாள் சுமி. ஒரு வரிசை முழுக்கப் பார்த்துவிட்டு வந்த பின்பும் கதவு மூடியே இருந்தது.
குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். உட்கார்ந்தாள். தண்ணீர் குடித்தாள். பத்து நிமிடங்கள் ஆனது. பதினைந்து... பதினாறு... எழுந்து கதவை நெருங்கி, ''போதும்... வெளிய வாடி'' என்றாள். கதவின் மறுபுறம் அமைதியாக இருக்க, லேசாகத் தட்டினாள். கதவு திறந்துகொண்டது. உள்ளே வினோதினி இல்லை.
அதற்குள் எங்கே போனாள்? இங்கேதானே நிற்கிறேன்? கதவைத் திறந்து கதவுக்குப் பின்னால் நின்று விளையாடுகிறாளா என்று பார்த்தாள். 100 சதவிதம் அங்கே அவள் இல்லை.
வினோதினி புதிதாக வாங்கிய சுடிதார், அவள் அணிந்திருந்த சுடிதார் இரண்டுமே அங்கு அநாதையாகக் கிடந்தன. பதறி அடித்துக்கொண்டு அலறலோடு வெளியே ஓடி வந்தாள் சுமி!
- ஆபரேஷன் ஆன் தி வே...