கிறிஸ்டல் கொலுசு... ஆர்டர்கள் அன்லிமிடெட்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்
##~## |
'கொலுசு' என்கிற வார்த்தையே... ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியது. அந்தளவுக்குப் பெண்களுக்குப் பிடித்தமான நகைகளில் ஒன்றான கொலுசு... பெரும்பாலும் வெள்ளிக் கொலுசாகவே இருக்கும். தற்போது அந்த இடத்தை தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறது... கிறிஸ்டல் கொலுசு!
கிறிஸ்டல் கொலுசு தயாரிக்கும் தொழிலில், வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கும் சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த காமாட்சி... கொலுசு தயாரிக்கும் செய்முறைகளோடு, இந்தத் தொழிலை நீங்கள் கையில் எடுப்பதற்கான வழிகளையும் காட்டுகிறார்.
''நான் கிராஃப்ட் தொழிலை ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆகுது. சொந்த ஊர், அரியலூர். படிக்கும்போதே கைவேலைப்பாடுகளில் ஆர்வம் நிறைய. காலேஜ் படிச்சுட்டு இருக்கும்போதே திருமணம் முடிய, கணவரோட சென்னைக்கு வந்தேன். 'ஓய்வு நேரத்துல எதையாவது கத்துக்கோ...’னு சொன்னார் கணவர் முருகானந்தம்.
ஏற்கெனவே கிராஃப்ட்தான் என் இஷ்டம்கிறதால, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் வகுப்புகளுக்குப் போய் கத்துக்கிட்டேன். பிறகு, வீட்ல இருந்தபடியே கைவேலைப்பாட்டுப் பொருட்களை செய்து... பள்ளி, கல்லூரிகள்ல ஸ்டால்கள், கைவினைப்பொருட்கள் கண்காட்சினு முன்னேறினேன். இதன் மூலமா நிறைய தோழிகள் கிடைச்சாங்க. அவங்களோட தொடர்பை வெச்சு, பெண்களுக்கான பொது நிகழ்ச்சிகள்ல எல்லாம் விற்பனையைத் தொடங்கினேன். நல்ல லாபமும், நிறைய அனுபவங்களும் கிடைச்சது. என்னுடைய படைப்புகள்ல, கிறிஸ்டல் கொலுசு எனக்கு இஷ்டமான ஒண்ணு. முதன் முதல்ல செய்த கொலுசை, என் பொண்ணு ரேணுகாதேவிக்குதான் போட்டுவிட்டேன். இப்படி ரொம்ப ரசிச்சு செய்றதால... இன்னிவரைக்கும் ஆர்டர்கள் அன்லிமிடெட்தான்!'' என்று பூரித்த காமாட்சி,


''வெள்ளிக் கொலுசு மாதிரி, இந்த கிறிஸ்டல் கொலுசுகளை தண்ணியில புழங்கக்கூடாது. அப்பதான் நீண்ட நாளைக்கு உழைக்கும்'' என்று ஒரு 'டிப்’ சொல்லி, செய்முறையை ஆரம்பித்தார்.

தேவையான பொருட்கள்:
கியர் ஒயர் (கொலுசுக்குத் தேவையான அளவு கத்தரித்து எடுத்துக் கொள்ளவும்), கியர் லாக் - இரண்டு, கிறிஸ்டல் மணி - விரும்பிய நிறத்தில், ஒற்றை கல் வைத்த குந்தன் கற்கள் - தேவையான அளவு, கொலுசு வளையம் (முதலில் கோக்க), தங்க நிற மணிகள் - தேவையான அளவு, இணைப்பு கொக்கி (ஜுவல்லரி ஜாயின் பின்), கட்டர், பிளேயர்.
செய்முறை:
படம் 1: முதலில் எந்த அளவுக்கு கொலுசு தேவையோ, அந்த அளவுக்கு கியர் ஒயரை அளந்து, அதற்கு ஒரு இன்ச் அதிகமாக வைத்து வெட்டிக் கொள்ளவும். இப்போது கியர் ஒயரை இணைப்பு கொக்கியில் கோத்து, கியர் லாக்கைக் கொண்டு லாக் செய்யவும்.
படம் 2: தயாராக எடுத்து வைத்துள்ள ஐந்து வெண்ணிற கிறிஸ்டல் மணிகளை கியர் ஒயரில் கோக்கவும்.
படம் 3: பிறகு தங்க நிற மணி ஒன்றைக் கோக்கவும்.
படம் 4: மெரூன் கலர் கிறிஸ்டல் மணி, ஒற்றை கல் வைத்த குந்தன் மணி என கோக்கவும்.
படம் 5: மீண்டும் ஒரு தங்க நிறமணி, வெண்ணிற கிறிஸ்டல் மணிகள் ஐந்து, தங்க நிற மணி, மெரூன் கலர் கிறிஸ்டல் மணி, குந்தன் மணி என முதலில் கோத்த வரிசைப் படியே கோக்கவும்.

படம் 6: முழுவதுமாக கோத்து முடித்த பிறகு, கியர் லாக்கையும் கோத்து லாக் செய் யவும். இணைப்பு கொக்கியையும் சேர்க்கவும். மீதம் உள்ள கியர் ஒயரை கட்டர் கொண்டு வெட்டிவிடவும்.
கொலுசை செய்து முடித்து கைகளில் எடுத்துக் காட்டி அசரடித்த காமாட்சி, ''ஒரு ஜோடி கிறிஸ்டல் கொலுசோட ஆரம்ப விலை, ரூபாய் 150. நம்மளோட கற்பனை திறனுக்கு ஏத்த மாதிரி குந்தன் கற்கள், சக்ரி, முத்துக்கள் எல்லாத்தையும் பயன்படுத்தி, ரெண்டு மடங்கு விலை வைத்தும் விற்கலாம். வளமான வாடிக்கையாளர் வட்டம் கிடைச் சுட்டா... மாசம் ஐயாயிரத்திலிருந்து பத்தா யிரம் ரூபாய் வரை லாபத்தை அள்ளக்கூடிய இந்த தொழில்ல, நம்மளோட கற்பனை திறனும், வாய் வார்த்தை விளம்பரமும் சேர்ந் துடுச்சுனா... கால் கொலுசு, உங்க கையில லாபத்தை அள்ளிக் கொட்டும்!'' என்று நம்பிக்கை பொங்கச் சொன்னார்!
கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...